COFFEE TABLE



பவர் பேங்க்

ஸ்மார்ட்போன் பயனாளிகள் முன்வைக்கிற முக்கியமான குற்றச்சாட்டே ‘பேட்டரி அதிக நேரம் நிற்பதில்லை’ என்பதுதான். நாம் போகின்ற இடங்களுக்கெல்லாம் சார்ஜரை எடுத்துக்கொண்டு போக முடியாது. அதே நேரத்தில் நினைத்த இடத்தில் எல்லாம் சார்ஜரை பயன்படுத்த முடியாது.

இந்தக் குறையை நிவர்த்தி செய்யவே பல நிறுவனங்கள் போட்டி போட்டு பவர் பேங்கை அறிமுகம் செய்கின்றன. இதில் புதுவரவு ஷியோமி நிறுவனத்தின் 10000Mah திறனுள்ள பவர் பேங்க்.

ஒரே நேரத்தில் இரண்டு போன்களை இதில் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இன்னும் சில தினங்களில் அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வரப்போகும் இந்த பவர் பேங்க்கின் விலை ரூ.799.

டாப்ஸி ஹேப்பி

இந்தி, தெலுங்கு என ரவுண்ட் கட்டி அடித்து வரும் டாப்ஸி, ஃபிட்னஸில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் வெளியான ‘ஜத்வா 2’வில் பிகினி காஸ்ட்யூமில் கலக்கியவர், தொடர்ந்து நீச்சலுடைக்கான உடல்வாகை பராமரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் தனது ஜிம் ஒர்க் அவுட்டை குட்டியூண்டு வீடியோவாக இன்ஸ்டா கிராம் பக்கத்தில் தட்டிவிட, இரண்டு லட்சம் ரசிகர்கள் பார்த்து வைரலாக்கிவிட்டனர். சந்தோஷத்தில் மிதக்கிறார் டாப்ஸி.

நியூ ரூல்ஸ்

இங்கிலாந்து இளைஞர்களின் கனவுக்கன்னி டுயா லிபா. லண்டனில் வசிக்கும் அல்பேனியா பெற்றோர்களுக்குப் பிறந்தவர். தனது 14வது வயதிலேயே மாடலிங், பாடகி, பாடலாசிரியர் என பல பரிமாணங்களில் அசத்தியவர். லிபாவின் யூடியூப் பக்கம் போனால் அவரது லேட்டஸ்ட் வரவான ‘New Rules’ மியூசிக்  வீடியோ கலர்ஃபுல்லாக மின்னுகிறது. இதற்கு முந்தைய மியூசிக் வீடியோவான ‘Lost in Your Light feat. Miguel’ஐ 24 லட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.

ஆனால், ‘New Rules’ முந்தைய ஆல்பத்தின் சாதனையை ட்ரிப்பிள் மடங்காக்கி விட்டது. யூடியூப்பில் மட்டுமே 65 லட்சம் பார்வையாளர்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியான லிபாவின் பாடலை ரசித்துள்ளனர்!

இடதுசாரிகள்!

வலது கையை விட, இடது கை பழக்கமுள்ளவர்கள் விளையாட்டில் கில்லாடி கிங்காக இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அதிலும் ‘‘கிரிக்கெட் மாதிரி நின்று விளையாடும் விளையாட்டைவிட, உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டிய டேபிள் டென்னிஸ் போன்ற அதிரடி விளையாட்டுகளில் இடது கை பழக்கமுள்ளவர்கள் மிகுந்த சாமர்த்தியசாலிகளாக இருக்கின்றனர்.

மட்டுமல்ல, வலது கை பழக்கமுள்ளவர்களைவிட இரண்டரை மடங்கு அதிக திறமை வாய்ந்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்’’ என்கிறது அந்த ஆய்வு. கில்கிறிஸ்ட், கெய்ல் போன்ற இடது கை பேட்ஸ்மேன்களின் சிக்ஸர்களை ஆச்சர்யத்துடன் அண்ணாந்து பார்த்த நமக்கு இதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

சினிமா மியூசியம்

நாம் பார்த்து, ரசித்து, கொண்டாடிய திரைப்படங்களைப் பற்றிய நம் பார்வையை, சிலாகிப்பை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவோம். நல்ல படங்களுக்கான அறிமுகத்துக்காக காத்துக்கிடப்போம். இந்த இரண்டையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது முகநூலில் இயங்கிவரும் குழுமமான ‘World Movies Museum’.

சினிமா காதலர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது இந்தக் குழுமம். உள்ளூர் முதல் உலக சினிமா வரை அனைத்தும் இங்கே விவாதிக்கப்படுகின்றன. இதில் உறுப்பினராக இணைந்து கொண்டால் நீங்கள் பார்த்து, ரசித்த திரைப்படங்கள் பற்றிய உங்களுடைய பார்வையை இதில் பதிவு செய்யலாம். சினிமா காதலர்களுடன் கலந்துரையாடலாம். இப்போது 26 ஆயிரம் பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.