விஜய் சேதுபதியின் தசாவதாரம்!



ஒரு நல்ல நாள் பாத்து  சொல்றேன் ஸ்பெஷல்

‘‘விஜய்சேதுபதி சார் என்னோட நீண்ட கால நண்பர். அவரோட ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ல நான் இணை இயக்குநர். அன்று முதல் எங்க நட்பு ரொம்ப ஸ்டிராங் ஆகிடுச்சு. அவருக்காக நான் ரெண்டு கதைகள் ரெடி பண்ணினேன். அதில் ஒண்ணுதான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. 

இதோட டீசர் ரிலீஸ் ஆன அன்னிக்கே நல்ல ரெஸ்பான்ஸ். நிறைய பேர், ‘இது ஃபேன்டஸி படமா... டிராமா சீன்ஸ் நிறையா இருக்குதா? எதுக்காக அவர் இவ்ளோ கெட்டப்?’னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.

இது நிஜமாகவே வித்தியாசமான ஜானர். பழங்குடி இன மக்களின் பின்னணியில் ஒரு ரியாலிட்டி காமெடி படம்...’’ நம்பிக்கை மின்ன பேசுகிறார் பி.ஆறுமுககுமார். விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் என அதகள காம்பினேஷனில் உருவாகி வரும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் அறிமுக இயக்குநர்.

‘‘படத்தோட பின்புலமா பழங்குடி இன மக்கள் வாழ்வியலை சொல்லியிருக்கோம். ஸ்கிரிப்ட்டுக்காக ஆந்திராவில் செஞ்சூல், லம்பாடிஸ்... ஊட்டியில் தோடர்கள், இருளர்கள்னு நிறைய மக்களை சந்திச்சேன். அவங்களோட கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் அத்தனையும் நமக்கு புதுசா இருக்கும்.

சில படங்களைப் பார்க்கும் போது ஏதாவது ஒரு படத்தோட இன்ஸ்பிரேஷன்ல பண்ணியிருப்பாங்கனு சொல்லுவோம். ஆனா, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ சினிமாவை அப்படி சொல்லிட முடியாது.

பழங்குடி தொடர்பான படம்னு சொன்னதால அவங்க ஏழ்மை, சோகம், சென்டிமென்ட்னு எதிர்பார்த்துடாதீங்க. கலகலக்கும் காமெடி படம் இது. குக்கிராமம், கிராமம், நகரம், மாநகரம்னு எல்லா இடங்களிலும் இந்த கதை ட்ராவல் ஆகுது. காமெடியோட ரொமான்ஸ், ஆக்‌ஷனும் இருக்கு...’’ உற்சாகமாக பேசுகிறார் ஆறுமுககுமார்.

விஜய்சேதுபதி - கௌதம் கார்த்திக்... காம்பினேஷனே வித்தியாசமா இருக்கே?
தேங்க்ஸ். படத்தில் அவங்க கூட்டணி பேசப்படும். ஹீரோ, வில்லன்னு வழக்கமான ஒரு ஃபார்முலாவை இந்தப் படத்துல எதிர்பார்க்க முடியாது. விஜய்சேதுபதியின் கதையில் கௌதம் பயணிக்கிறார். ஒன் லைனா அப்படித்தான் சொல்ல முடியும்.

ஒரு பக்கம் பழங்குடி மக்கள். இன்னொரு பக்கம் நகரம்னு ஒரு கான்ட்ராஸ்ட்டான சப்ஜெக்ட் இது. விஜய்சேதுபதி இதில் தசாவதாரம் எடுத்திருக்கார். அவரோட கெட்டப் ஒவ்வொண்ணும் அசத்தும். எதுக்காக அவருக்கு அத்தனை கெட்டப் என்பதை படம் பார்த்து தெரிஞ்சுக்குவீங்க. கௌதம் கார்த்திக், நிகாரிகா கோனிடேலா, காயத்ரி, ரமேஷ் திலக், ராஜ், டேனியல், விஜி சந்திரசேகர்னு அத்தனை நடிகர்களும் கேரக்டராகவே வாழ்ந்திருக்காங்க.

என்ன சொல்றார் விஜய்சேதுபதி?

அவர் ஸ்பாட்டுல இருந்தாலே பாசிட்டிவ் எனர்ஜி அள்ளும். சீன் நல்லா இருந்தா ‘செம ஜி... சூப்பர் ஜி...’னு உற்சாகமாகிடுவார். இன்னும் சூப்பரான ஐடியாக்களும் கொடுப்பார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ல ஷூட்டிங் பிரேக்ல செட்ல எப்படி ஜாலியா சிரிச்சு பேசிட்டிருந்தோமோ அப்படித்தான் இதிலும் அவர் பழகினார்.

இந்த படம் ஷூட்டிங் நடக்கும் போது ‘கருப்பன்’ ஷூட்டிங்கும் போயிட்டிருந்தது. ஆனா, இரண்டு கேரக்டர்ஸையும் போட்டு அவர் குழப்பிக்கலை. நடிக்கும் போது மானிட்டர்ல வந்து செக் பண்ண மாட்டார். சில கெட்டப்களுக்கு ரொம்பவே மெனக்கெட்டார்.

வெறும் உடம்பில் ரெண்டு கிலோ தங்க நகையுடன், தலையில் விக், கிரீடம்னு வித்தியாசமான ஒரு கெட்டப் உண்டு. தொடர்ந்து நாலு நாட்கள் ராத்திரி பகலா அதை ஷூட் பண்ணினோம். விஜய்சேதுபதி அந்த நகைகள் அணிந்திருக்கிறப்ப அவரால சேர்ல கூட உட்கார முடியாது. விக், கிரீடத்தை கழற்றி வைச்சா ஷாட் continuity மிஸ் ஆகும்னு பேக்கப் சொல்ற வரை அப்படியே இருந்தார்.

அதே மாதிரி கௌதம் கார்த்திக்கை நாங்க கமிட் பண்ணும் போது அவர் புதுமுகமா இருந்தார். இப்ப அவரும் பிசி ஹீரோ. நூறு சதவிகிதம் உழைச்சிருக்கார் அவர்.அது யாரு நிகாரிகா கோனிடேலா?

விஜய்சேதுபதியோட கதாபாத்திரம் எந்தளவு வலுவானதோ, அப்படி ஒரு வலுவான கேரக்டருக்கு ஹீரோயின் தேடினோம். இன்ஸ்ட்ராகிராமில் பார்த்த பொண்ணுதான் நிகாரிகா கோனிடேலா. விசாரிச்சா, சிரஞ்சீவி சாரோட தம்பி நாகபாபு சாரோட பொண்ணுனு தெரிஞ்சுது.
அவங்ககிட்ட கதை சொன்னதே வித்தியாசமான அனுபவம். நான் யார்கிட்ட கதை சொன்னாலும் அவங்க ஃபேஸ் ரியாக்‌ஷன் எப்படினு கவனிச்சிட்டே சொல்லுவேன்.

நிகாரிகா இந்த கதையை கேட்கும் போதே, அவங்க எக்ஸ்பிரஷன்ஸ் எல்லாம் அவங்க கேரக்டரை உள்வாங்கி கதையை கேட்கிறாங்கனு உணர்த்தினது. ஆடிஷன் வைக்காமயே அவர் கதைக்குள் வந்துட்டார். நடிப்பிலும் ரொம்பவே சின்ஸியர். ஒரு நாள் காலையில் ஆறு மணிக்கு தொடங்கிய ஷூட் மறுநாள் காலை வரை நடந்தது. பத்து நிமிஷ பிரேக் கூட எடுக்காம நிகாரிகா டெடிகேஷனா உழைச்சார். நிச்சயம் தமிழ்ல ஒரு ரவுண்ட் அவருக்கு காத்திருக்கு.

அதே மாதிரி இன்னொரு ஹீரோயின் காயத்ரியை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ல இருந்தே தெரியும். அவங்களோட ப்ளஸ், மைனஸ் தெரிஞ்சதால அவங்களுக்கான கேரக்டரை முதல்லயே முடிவு பண்ணி வச்சிருந்தேன். அவங்களும் இயல்பா நடிச்சிருக்காங்க.
டெக்னிக்கல் டீம் எப்படி?

இந்தக் கதைக்கு நிறைய செட் அமைக்க வேண்டியிருந்தது. காட்டுப்பகுதில ஏராளமா செட் போட்டிருக்கோம். பழங்குடி மக்களை அப்படியே கண்முன்னாடி கொண்டு வந்ததில் ஆர்ட் டைரக்டர் முத்து வுக்கு பெரும் பங்கு இருக்கு. ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ சரவணன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். நைட் ஷூட் நிறைய பண்ணினோம்.

நிறைய இடங்கள்ல நெருப்புதான் லைட்டிங். சரவணன் அதையெல்லாம் சவாலா எடுத்து பண்ணியிருக்கார். ஜஸ்டின் பிரபாகரன் இசை நல்லா வந்திருக்கு. அவர் மெலடில எக்ஸ்பர்ட். விஜய்சேதுபதியின் ஃபேவரிட் எடிட்டர் கோவிந்த்ராஜ், இதிலும் இருக்கார். இப்படி நல்ல டெக்னீஷியன் டீமும் நல்ல தயாரிப்பாளர்களும் கிடைச்சிருக்கறது எங்க பலம். உங்க குரு பாலாஜி தரணீதரன் படத்தை பார்த்துட்டாரா?

இன்னும் இல்ல. ஆனா அவருக்கு இந்தக் கதை, சீன்ஸ் எல்லாம் தெரியும். அவர் டைரக்டராகறதுக்கு முன்னாடியே நாங்க ஃப்ரெண்ட்ஸ். அந்த பழக்கம்தான் ‘ந.கொ.ப.கா’ல என்னை ஒர்க் பண்ண வச்சது. என் சொந்த ஊர் காரைக்குடி பக்கம் திருப்பத்தூர்.

இங்க விஸ்காம் படிக்கிறப்பவே டைரக்‌ஷன்தான் டார்கெட்டா இருந்தது. விளம்பரப் படங்கள், ஷார்ட் ஃபிலிம் பண்ணும்போதுதான் பாலாஜி தரணீதரன் நட்பு கிடைச்சது. அவரோட ஸ்கிரிப்ட்டையும் என்கிட்ட ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லுவார். என்னோட ஸ்கிரிப்ட்ல சில விஷயங்கள் சரியில்லைன்னா, அதையும் வெளிப்படையா சொல்லிடுவார். அப்படி ஒரு கெமிஸ்ட்ரி எங்களுக்குள் இருக்கு!           

மை.பாரதிராஜா