பெண்கள் நாட்டின் கண்கள்!



பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது இங்கு ஆண்களின் பிறப்புரிமை போல் கருதப்படுகிறது. குடும்ப வன்முறை ஒருபக்கம் என்றால், அத்துமீறுவது, பாலியல் தொல்லை தருவது, அவமதிப்பது என நீளும் பணியிட மற்றும் பொது இடத் தொல்லைகள் இன்னொரு பக்கம்.

இப்படி, உலகம் முழுதுமே தொடர்ந்து வருவது நம் மனிதத்தன்மைக்கே அவமானகரமான விஷயம். இப்போது பெண்களுக்கு ஆதரவான அமைப்பு
களின் எண்ணிக்கை பெருகி வருவது ஆரோக்கியமான அறிகுறிகளில் ஒன்று.

அப்படி இயங்கிவரும் அமைப்புகளில் ஒன்றுதான் மேற்கு வங்காளத்தின் ‘சக்திவாஹினி’.  இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான A to Z வன்முறைகளுக்கு எதிராகச் சட்ட உதவிக்கரம் நீட்டி உதவுகிறது சக்தி வாஹினி. 2001ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் ரவிகாந்த், நிஷிகாந்த், ரிஷிகாந்த் எனும் மூன்று காந்த் சகோதரர்களின் தன்னார்வம் இது.

‘‘எங்களது ஏரியாவில் சுரங்கப் பணியாளர்கள் அதிகம். இங்குள்ள ஆண்கள் தினசரி குடித்துவிட்டு வந்து பெண்களை அடித்து நொறுக்கி சண்டையிடுவதைப் பார்த்து, அந்தப் பெண்களைக் காக்க உருவானதுதான் சக்திவாஹினி...’’ என்று பூர்வ கதையைச் சொல்கிறார் ரிஷிகாந்த். இந்த மூன்று சகோதரர்களும் தம் தந்தையின் ஓய்வூதியத் தொகையை வைத்தே இந்த அமைப்பைத் தொடங்கியுள்ளனர். பின்னர் நிதிச் சிக்கல்கள் ஏற்பட்டாலும் மனம் தளராது அமைப்பை வழி நடத்திச் சென்ற மூவரின் மன உறுதி ஆச்சர்யமானது.

பொதுவாக, கிராமங்களில்தான் பெண்கள் தமக்கு நேர்ந்த வன்முறைக் கொடுமைகளை சொல்லத் தயங்குவார்கள். எனவே அவர்களுக்கு முதலில் உதவி தேவை எனக் கருதி கிராமத்தில் இருந்தே தொடங்கினார்கள். 2004ம் ஆண்டு HIV/AIDS பாதிப்பு கொண்ட பெண்களுக்கு ஆதரவு அளித்தல், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகப் போராடுதல், பெண் குழந்தைகள் கடத்தல், கௌரவக் கொலைகள் போன்ற அநீதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் எனப் பல்வேறு அநீதிச் செயல்பாடுகளுக்கு எதிராக நெஞ்சுறுதியுடன் போராடத் தொடங்கினர்.

‘‘சக்திவாஹினியின் லட்சியமே குரலற்றவர்களுக்குக் குரலாக ஒலிப்பதுதான். பாலியல் சுரண்டலால் உடலும் மனமும் புண்பட்ட, பாதிக்கப்பட்ட பெண் தன் உணர்வுகளை எப்படி வெளிக்காட்டுவாள்? அத்தகைய பெண்களுக்கு ஜனநாயக வழியில் நீதி தேடித்தர முயற்சிக்கிறோம்...’’ என்கிறார் ரிஷி.
இன்று சக்திவாஹினி தொடங்கப்பட்டு 17 ஆண்டுகளாகின்றன. இப்போது, இவ்வமைப்பு ஆறு மாநிலங்களில் கிளை விரித்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைக்குள்ளான பெண்களின் துயரக் கண்ணீரைத் துடைத்து 600க்கும் மேற்பட்ட கௌரவக் கொலைகளைத் தடுத்து ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறது.

2013ம் ஆண்டு சக்திவாஹினியின் சமூகப் பணிகளுக்கு மணிமகுடமாக அமெரிக்காவின் வாஷிங்டனில் Vital Voices Global Awards விழாவில், சாலிடரிட்டரி விருது கிடைத்தது. ‘‘இந்த அமைப்பு உருவானதற்கு எங்கள் பெற்றோர்தான் காரணம். கல்விச் செல்வத்தை எங்களுக்கு அளித்தவர்கள், பெண்கள் மீதான அக்கறையை எங்கள் மனதில் ஊட்டியது இன்றைய எங்கள் செயல்பாட்டுக்கு உற்சாக உரம்...’’ என நெகிழ்ச்சியாகிறார் நிஷிகாந்த்.

அமைப்பு தொடங்கியபோது அரியானாவில் ஆண், பெண் பாலின விகிதம் கடுமையாக சரிவடைந்திருந்தது. பெண் குழந்தைகளை கருக்கொலை செய்வது இயல்பானதாக இருந்ததையும், பெண் குழந்தைகளைப் பாலியல் தொழிலுக்குக் கடத்துவதையும் தடுப்பதை முக்கியப் பணியாகக் கொண்டு குழுக்களை இணைத்துச் செயல்பட்டிருக்கிறது சக்திவாஹினி.

‘‘கடுமையான கேலிகளை, புறக்கணிப்புகளைச் சந்தித்தாலும் கிராமப்புறங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சிறுவர்கள், ஆண்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் பின்வாங்கவில்லை. ஏனெனில், பின்வரும் தலைமுறைக்கு ஒளி விளக்காக பெண்கள் இருப்பார்கள். எங்களைத் தொடர்ந்து இயக்குவதும் இந்த அக்கறையே...’’ என உறுதியான குரலில் பேசுகிறார் ரிஷிகாந்த். தங்கள் செயல்பாட்டின் முக்கிய நிகழ்வாக, 15 ஆயிரம் காவல்துறையினருக்கு பயிற்சியளித்து சாதித்துள்ளனர். தேசம் முழுதும் சக்திவாஹினிகள் பெருகட்டும்.

பெண்களின் குரல்

வைடல் வாய்ஸ் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெண்களுக்கு மட்டுமேயான ஸ்பெஷல் விருதுகள். இதில் மனித உரிமைகள், அரசியல் சீர்திருத்தம், பெண்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்குப் பாடுபடும் அமைப்புகள், தனிநபர்களுக்கு வாஷிங்டனில் உள்ள கென்னடி ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெறும் விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப் படுகிறது.

ஹாலிவுட் நடிகர் பென் அஃப்ளெக், ஹிலாரி கிளிண்டன், ஜோர்டான் அரசி ராணியா ஆகியோருக்கு வைடல் வாய்ஸ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் தாய் நிறுவனமான சாரிட்டி நேவிகேட்டரில் 13,870 ஸ்பான்சர்கள் இணைந்து, 8.9 மில்லியன் டாலர்கள் தொகையை அளித்துள்ளனர். இதில் 58,726 பேர் பொருட்களாகவும், 7,907 பேர் கல்வி, மருத்துவம் என சேவையாகவும் உதவிகளை வழங்கியுள்ளனர்.