விஜயனின் வில் 55



தொடர்பிருக்கிறது. ஆனால், ஆதித்த கரிகாலன் கொலைக்கும் விஜயனின் வில்லுக்கும் அல்ல. மாறாக பாண்டிய இளவரசர் இருவருக்கு இடையில் நடந்த தாயாதி சண்டையில் ஒருவரையொருவர் படுகொலை செய்ய முற்பட்ட நிகழ்வுக்கும் அர்ஜுனனின் வில்லுக்குமே சம்பந்தம் இருக்கக் கூடும் என்ற ஐயம் கிருஷ்ணனின் மனதில் மெல்ல மெல்ல எழுந்தது.

அதற்குக் காரணம், ‘எது சொல்லப்பட்டிருக்கிறதோ அது அல்ல. மாறாக எது சொல்லாமல் விடுபட்டிருக்கிறதோ அதுதான்...’ என்ற பொன்மொழிதான்.இப்படியொரு முடிவுக்கு கிருஷ்ணன் வந்ததற்குக் காரணம், ஸ்ரீரங்கத்துக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் மாறி மாறி, தான் உயிருடன் இருந்த காலத்தில் கார்க்கோடகர் பயணப்பட்டதாக அவன் அறிந்த தகவல்தான்.

எனில், ரங்கம் சோழப் பேரரசையும்; மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் பாண்டியப் பேரரசையும் அல்லவா குறிக்கிறது..? இவ்விரு அரசுகளுக்கும் ஏதோ ஒரு கனெக்‌ஷன் இருந்துதானே ஆகவேண்டும்..?

அவன் படித்திருந்த கிரிப்டாலஜி படிப்பு இப்படித்தான் முடிச்சுப் போட்டது.இந்த திசையிலேயே மாஸ்டருக்கோ, அடியாட்களுக்கோ... ஏன் ஆதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கூட சந்தேகம் வராதபடி சுரங்கத்துக்குள் நடந்தபடியே மனதுக்குள் அசைபோட ஆரம்பித்தான்.

ஆதித்த கரிகாலன், சோழ இளவரசர். படுகொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வுகளே திரும்பத் திரும்ப சுரங்க சுவர்களில் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றன.
எனில், இதேபோன்ற சம்பவம் பாண்டியர்களின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறதா?

‘ஹாய் மதன்’ கேள்வி பதில் பகுதியில் எப்பொழுதோ மதன் இதுகுறித்து எழுதியிருக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை விட அட்டகாசமான ப்ளாட் இது. ஏனோ, தமிழ் சரித்திர எழுத்தாளர்கள் இந்த பாண்டிய இளவரசர்களுக்குள் நடந்த சண்டை / கொலை குறித்து நாவலே எழுதாமல் இருக்கிறார்கள்... என்ற அர்த்தத்தில் மதன் அளித்த விடையின் சாராம்சம் கிருஷ்ணனின் மனதில் ஃப்ளாஷ் அடித்தது.

இதுகுறித்து பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார், தனது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலில் பதிவு செய்திருக்கிறாரா..?

நிதானமாக யோசிக்கத் தொடங்கினான். ஐஸ்வர்யாவின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு - தமிழகத்துக்கு ஃப்ளைட்டில் வரும்போது அந்நூலைத்தான் படித்தான். எனவே சட்டென்று ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ புத்தகத்தின் பக்கங்கள் அவனது நினைவின் அடுக்கில் இருந்து உயிர்பெற்று எழுந்தன.

‘சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பின் பாண்டியப் பேரரசை ஆண்டவர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் I (1268 - 1311). பிற்கால பாண்டியப் பேரரசருள் இறுதியானவர் இவரே. ‘கோனேரின்மைக் கொண்டான்’; ‘புவனேக வீரன்’ உள்ளிட்ட விருதுப் பெயர்கள் இவருக்கு உண்டு.

வெளிநாட்டுப் பயணிகளான மார்க்கோ போலோவும் இஸ்லாமிய வரலாற்று ஆசிரியரான வசப் ஆகியோரும் மாறவர்மன் குலசேகர பாண்டியன் I குறித்து தங்கள் குறிப்பில் எழுதியிருக்கிறார்கள்.

ஆரியச் சக்கரவர்த்தி என்ற தன் படைத்தலைவருடனும் தம்பிகளில் சிலருடனும் இலங்கையின் மீது இந்த மன்னர் போர்தொடுத்தார்.காரிக்களப் போரிலும் மற்றும் பல போர்களிலும் இலங்கை மன்னர் தோல்வியுற்றார்.

பல நகரங்களையும், கோட்டைகளையும் பாண்டியர் படைகள் சூறையாடின. விலையுயர்ந்த பல பொருட்களைக் கைப்பற்றிக் கொண்டு பாண்டிய நாடு திரும்பினார்கள்.அப்படி கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஒன்று புத்தரின் பல்..!’

இந்த இடத்தில் கிருஷ்ணனின் சிந்தனை அறுபட்டது. ‘புத்தரின் பல்’ என்ற பெயரில் மிஷ்கின் இயக்கத்தில் கமல் நடிப்பதாக இருந்த படம் குறித்த செய்திகள் ஹைப்பர் லிங்க் ஆக வந்துபோனது.புன்னகையுடன் அதை டெலிட் செய்துவிட்டு மீண்டும் அப்பாத்துரையாரின் நூலுக்கு கிருஷ்ணன் வந்தான்.‘மற்ற பொருட்களின் இழப்பை விட புத்தரின் பல்லை பறிகொடுத்ததையே பெரும் இழப்பாக இலங்கை மக்கள் கருதினர்; வருந்தினர்.

அதை மீட்க பாண்டியருடன் போர் தொடுக்க வேண்டும். வெற்றி பெற வேண்டும். இது இயலாத காரியம் என்பதால் இலங்கை வேந்தன் மூன்றாம் பராக்கிரமபாகு 1304ம் ஆண்டு பாண்டியரிடம் அடிபணிந்து புத்தரின் பல்லைப் பெற்றுக் கொண்டதாக இலங்கை வரலாறு கூறுகிறது.

பாண்டியர் படைத்தலைவரான ஆரிய சக்கரவர்த்தி - யாழ்ப்பாணத்தில் இருந்து ஜெயவீர சிங்கை ஆரியன் என்ற பெயருடன் வட இலங்கையை ஆண்டார். தன் வாழ்நாளிலேயே இலங்கை முழுவதும் ஒரே ஆட்சியாக்கி, புத்தப் பற்சின்னத்தை பாண்டியன் அளித்த சமயம், உரிமை இழந்த இளவரசனுக்கு முழு ஈழ ஆட்சியையும் அளித்தார்...

இவை எல்லாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் I ஆட்சியில் நடந்த சம்பவங்கள்.இப்படிப்பட்ட மாறவர்மன் குலசேகர பாண்டியனுடன் பாண்டிய மரபு முடிவுறவில்லை. ஆனால், பாண்டியப் பேரரசு இவருடன் முடிவுறுகிறது...’என்று பதிவு செய்திருக்கும் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார், இதற்கான சான்றுகளை இஸ்லாமிய வரலாற்றாசிரியர் எழுதியதில் இருந்தே முன்வைக்கிறார்.

இந்தப் பகுதியையும் சரசரவென்று தன் ஞாபகத்துக்கு கிருஷ்ணன் கொண்டு வந்தான்.‘மாறவர்மன் குலசேகர பாண்டியன் Iக்கு இரு புதல்வர்கள். இவர்களில் சுந்தரபாண்டியன், உரிமை மனைவியின் மகன்.

வீரப்பாண்டியன், துணைப் பெண்டிரின் புதல்வன்.என்றாலும் வீரப்பாண்டியனுக்கே இளவரசு பட்டத்தை சூட்டினார் மாறவர்மன் குலசேகர பாண்டியன்.இதனால் கோபம் கொண்ட சுந்தரபாண்டியன், தன் தந்தையைக் கொலை செய்தார். ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். எதிர்பார்த்தபடி ஆட்சி கிடைக்காததால் நாமக்கல் சென்று அங்கிருந்து ஆண்டார்.

இதனைத் தொடர்ந்துதான் தமிழக சரித்திரத்தின் இருண்ட பக்கங்களாக அறியப்படும் ‘தலைச்சிக் குளங்கரைப் போர்’ நடைபெற்றது.சுந்தர பாண்டியனும் வீரப்பாண்டியனும் தத்தம் படைகளுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டார்கள்.இப்போரில் வீரப்பாண்டியன் படுகாயமுற்று நினைவு தப்பினார்.இதைக் கண்ட சுந்தரபாண்டியன், அவர் இறந்துவிட்டார் என்று கருதி மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.

ஆனால், வீரப்பாண்டியன் மாளவில்லை. பிழைத்து எழுந்தார். தந்தையைக் கொன்றது சுந்தரபாண்டியன்தான், என உறவினர்களிடமும் மக்களிடமும் பிரசாரம் செய்து, அனைவரையும் ஒன்று திரட்டி பாண்டிய நாட்டைக் கைப்பற்றினார்.நாடிழந்த சுந்தரபாண்டியன், நேராக அலாவுதீனிடம் சென்று உதவி கோரினார்.இதற்காகவே காத்திருந்த அலாவுதீன், தன் படைத்தலைவரான மாலிக்காபூரின் தலைமையில் பெரும் படையை தென்னாட்டுக்கு அனுப்பினார்...

(தொடரும்) 

கே.என்.சிவராமன்

ஓவியம் : ஸ்யாம்