78 வயதில் சதிராட்டம்



 விராலிமலை முருகன் கோயிலின் கடைசி தேவரடியார்  இவர்தான்

விராலிமலை ரா.முத்துக்கண்ணம்மாள்... அணைந்துவிட்ட தீபங்களுக்கு நடுவில் இன்றும் ஒற்றைத் திரியில் ஒளிவீசிக்கொண்டிருக்கும் சதிராட்டச் சுடர்.
எழுபத்தெட்டு வயதிலும் எப்படியாவது தன் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று சதா ராடிக்கொண்டிருப்பவர். சிறு வயதிலேயே ஆடல், பாடல், சதிராட்டத்தைக் கற்று மகாராஜாவின் முன்னிலையில் அரங்கேற்றியவர்.

‘‘சதிராட்டம்னா சாதாரணம் இல்ல. பாடிக்கொண்டே ஆடணும். அதனாலதான் இவ்வளவு வயசான பிறகும் அப்ப பாடுனது இன்னும் ஞாபகத்துல இருக்கு. அதுமட்டுமல்ல, மனசு, உடம்பு, சிந்தனை எல்லாம் ஆட்டத்துலயே இருக்கணும். நம்முடைய ஒவ்வொரு அசைவும் முக்கியம். கொஞ்சம் பிசகினால் கூட ஆட்டமே மாறிப்போயிடும்...’’ கைவிரல்கள் நடனமாட, எந்தவித தடையும் இல்லாமல் கம்பீரமான குரலில் பேச ஆரம்பித்தார் முத்துக்கண்ணம்மாள்.

‘‘பொறந்தது வளர்ந்தது எல்லாமே இந்த விராலிமலையிலதான். அப்பா ராமச்சந்திர நட்டுவனார்தான் என் குரு. அன்பான தந்தையாவும், கண்டிப்பான ஆசானாகவும் இருந்து என்னை வளர்த்தெடுத்தார்.

அவர்கிட்ட இருந்துதான் சதிராட்டத்தை முறைப்படி கத்துக்கிட்டேன். அப்பாவோட அம்மா அம்மணி அம்மாள், அவங்க சகோதரி நாகம்மாள்... எல்லாருமே சதிராட்டக் கலைஞர்கள். எங்க குடும்பத்தையே சதிராட்டக் குடும்பம்னுதான் சொல்லுவாங்க. ஏழு வயசா இருக்கும்போதே சதிராட வந்துட்டேன்...’’ என்கிற முத்துக்கண்ணம்மாள் என்றைக்கும் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார்.

‘‘உண்மையிலுமே அந்தக் காலத்தை மறக்க முடியாதுங்க. விராலி மலை முருகன் கோயில்ல என்னுடன் சேர்ந்து 32 பேர் கோயிலுக்கு சேவை செஞ்சிட்டு இருந்தோம். கோயில்ல சேவை செஞ்சுகிட்டு அங்கேயே இருந்ததால எங்களை தேவரடியாருன்னு சொல்வாங்க.

அப்ப புதுக்கோட்டை மகாராஜா ராஜகோபால தொண்டைமான்தான் கோயிலை நிர்வகிச்சிட்டு இருந்தார். எங்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் மகாராஜா செஞ்சு தருவார். எல்லோருமே எங்களை மரியாதையா நடத்துவாங்க. திருவிழா காலத்துல நாங்க 32 பேரும் சதிராடுவோம். ஊரே கொண்டாட்டமா இருக்கும். எங்க ஆட்டத்தைப் பார்க்க மகாராஜாவும் கோயிலுக்கு வந்துடுவார்.

வீதியில கோலாட்டம், கும்மி ஆடுவோம். என்னுடன் ஆடுற 31 பேருக்கும் எங்கப்பாதான் சதிராட்டத்தைக் கற்றுக் கொடுத்தார். தினமும் கோயிலுக்குப் போவோம். சேவை செய்வோம். சதிராடுவோம். சிவ ராத்திரி அன்னைக்கு இரவு முழுவதும் குறவஞ்சியைப் பாடி, ஆடுவோம்.

இப்ப நினைச்சாலும் ஆச்சரியமாவும் நேத்து நடந்த மாதிரியும் இருக்கு. 12 வயசு வரைக்கும் கோயில்ல ஆடினேன். புதுசு புதுசா சட்டங்கள் வந்துச்சு. கோயில்ல ஆடக்கூடாதுனு சொன்னாங்க. மகாராஜாவோட ஆட்சியும் முடிஞ்சுபோச்சு. அவரு போன பிறகு மனசும் விட்டுப்போச்சு.

ஆரம்பத்துல ஆட முடியலைங்கிற வருத்தம் இருந்துச்சு. அதுக்கப்புறம் முப்பது வயசு வரைக்கும் ஊர் ஊராய் போயி ஆடினோம். நிறைய ஊர்ல மெடல் எல்லாம் கொடுத்தாங்க. கொஞ்சம் வருமானமும் கிடைச்சுச்சு. சினிமா வந்த பிறகு பரதநாட்டியத்தை எல்லோரும் கொண்டாட ஆரம்பிச்சாங்க.

மகாராஜாவும் இல்லாததால சதிராட்டத்தை யாரும் கண்டுக்கல. சதிரை முறையா பயின்று ஆடறவங்களும் யாரும் இல்ல. சதிராட்டம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா காணாமல் போயிடுச்சு. கோயில்ல என் கூட சேர்ந்து சதிராடுன 31 பேரும் இப்ப உயிரோட இல்ல...’’

சொல்லும்போதே முத்துக்கண்ணம்மாளின் முகம் சுருங்கு கிறது. கண்களில் சக பயணிகளை இழந்து தனியாக வாழ்ந்து வருகின்ற வருத்தம் வெளிப்படுகிறது. அவருக்கு இருபது வயதில் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள், இரண்டு மகன்கள்.

கணவர் இறந்தபிறகு மகளின் வீட்டில் வசித்து வருகிறார். அரசின் இயல், இசை, நாடக மன்றம் சார்பாக நலிவடைந்த கலைஞர்களுக்கு வழங்கப்படுகிற பென்ஷன் தொகையான ரூ.1,500ல் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார். அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்ற கோரிக்கையையும் நம்மிடம் வைத்தார்.

தை, வைகாசி மாதத்தில் நகரத்துச் செட்டியார்கள் விராலி மலையில் இருக்குற முருகனை விராலூர் கிராமத்துக்குக் கொண்டுவந்து விழா எடுப்பார்கள். விழா நடக்கின்ற எட்டாவது நாளில் முத்துக்கண்ணம்மாளைச் சிறப்பிக்கும் வண்ணம் அவரது சதிராட்டமும் இடம்
பெறும். இப்போதும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

‘‘மாசி மாசம் ஆச்சுன்னா பொள்ளாச்சியில் இருக்குற மாரியம்மன் கோயிலுக்குப் போவேன். மூணு நாளைக்கு வெள்ளி தேர் வரும். அங்க எஸ்.எஸ்.குமார் நட்டுவனார் நட்டுவாங்கம் வாசிக்க நான் பாடிகிட்டே ஆடுவேன். இப்பவும் அங்க போயிக்கிட்டு இருக்கேன்.

யாராவது சதிராட்டத்தைக் கத்துக்க வந்தா சொல்லிக்கொடுக்க தயாரா இருக்கேன். என்னைப் பத்தி கேள்விப்பட்ட தரணி அடுத்த தலைமுறைக்கு சதிராட்டத்தை கொண்டு சேர்க்கிற நிகழ்வை கோவையில் ஏற்பாடு செஞ்சார். எட்டு பேருக்கு சதிராட்டத்தைக் கத்துக்கொடுத்தேன். அவங்களும் ஆர்வமா கத்துக்கிட்டு ஆடுனாங்க.

என் கலையை இந்த உலகத்துல விட்டுட்டு போகணும். நான் இந்த உலகத்துல விட்டுட்டு போறதுக்கு அது மட்டும்தான் என்கிட்ட இருக்கு...’’ என்று உற்சாகத்துடன் முடித்தார். உடனே கோவையைச் சேர்ந்த தரணிதரனைப் போனில் பிடித்தோம். அழிந்து வரும் கலையையும், கலைஞர்களையும் மீட்டெடுக்கும் முயற்சியாக ‘உடல்வெளி’ என்ற அமைப்பை நடத்தி வரும் நாடகக் கலைஞர் இவர். சதிராட்டத்தை இளம் தலை
முறையிடம் கொண்டு சேர்ப்பதற்காகப் போராடி வருகிறார்.

‘‘இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிராட்டம் என பல பெயர்களில் பரத நாட்டியத்தை அழைத்திருக்கிறார்கள். சதிராட்டத்தில் சில மாற்றங்கள் செய்து வடிவமைக்கப்பட்டதுதான் பரதநாட்டியம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். 

சதிராட்டத்தை தேவரடியார்கள் என்று குறிப்பிடப்பட்ட பெண்கள் முறைப்படி பயின்று ஆடி வந்தனர். இவர்கள் இறைப்பணியாளராகக் கருதப்பட்டு, தனிப்பட்ட முறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற திறமை வாய்ந்த நடனக்கலைஞர்கள். இவர்களில் ரொம்பவே முக்கியமானவர் விராலி மலை இரா.முத்துக்கண்ணம்மாள் அம்மா.

நான் இந்த விஷயத்தில் இவ்வளவு ஈடுபாட்டுடன் இருக்க முக்கிய காரணம் என் பாட்டி நாச்சம்மாள்தான். அவரும் ஈரோட்டில் இருக்குற ஒரு கோயிலில் தேவரடி யாராக இருந்தவர். தேர் வரும்போது ஆடியவர். வேர்களைத் தேடிப்போகும்போது, ஒரு இசைக் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்பது தெரிந்தது. எனக்கு முந்தைய மூன்று தலைமுறைகளில் யாருமே கலை பக்கமே வரவில்லை. பேசுவதற்குக் கூட யாரும் தயாராக இல்லை. அதனால் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதற்கான ஒரு முயற்சிதான் இது.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் என்னுடைய பாட்டி நாச்சம்மாளின் வேலைகளைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன். வரலாற்று ஆய்வாளர் கே.டி.காந்திராஜன் மூலமாக நாலைந்து வருடங்களுக்கு முன்பு முத்துக்கண்ணம்மாளின் அறிமுகம் கிடைத்தது. அவரைப் பார்த்தவுடனே பெரிய இன்ஸ்ப்ரேஷன் ஆகிவிட்டேன்.

இப்போதைக்கு இவரை விட்டுவிட்டால் சதிர் ஆடுபவரே கிடையாது. விராலி மலையின் மரபுகளை வெளிப்படுத்துகிற அவரின் பாடலையும், ஆடலையும் எப்படியாவது அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது.

பத்து பதினைந்து பரத நாட்டியக் கலைஞர்களுக்கு சதிராட்டத்தைச் சொல்லித் தரலாம் என்று நினைத்தேன். இந்த பரத நாட்டியக் கலைஞர்களிடம் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்தக் கலைஞர்கள் மூலமாக பலருக்குப் போய்ச்சேரும் என்று நம்பினேன். ஆறு மாதத்துக்கு முன்பு போய் அம்மாவிடம் பேசினேன். ‘தாராளமாக பண்ணிக்கலாம்’னு சொன்னார். இப்பத்தான் அது நிறைவேறியிருக்கு...’’ என்கிறார் தரணி.

த.சக்திவேல்