மீன லக்னம் குரு - ராகு சேர்க்கை தரும் யோகங்கள்கிரகங்கள் தரும் யோகங்கள் 119

வேதங்களுக்குரிய குருவும், நிழல் கிரகமான ராகுவும் சேரும்போது குரு வழக்கமான தன் இயல்பு நிலையிலிருந்து மாறுவார். முதலில் சுயநலமே முக்கியம் என்று இருப்பார்கள். இனிப்பு தடவிய விஷ வார்த்தைகளை உதிர்ப்பார்கள். மெல்லிய நயவஞ்சகத்தனமும் இருக்கும். அதனாலேயே இவர்கள் என்ன நல்லது செய்தாலும் கெட்ட பெயர் வந்தபடியே இருக்கும்.

சிறுவயதிலிருந்தே யாரையும் சார்ந்திருப்பது பிடிக்காது. படிப்பைவிட விளையாட்டிற்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். நாலு பேருக்கு மத்தியில் அவமானப்படுத்தக்கூடாது. மிகவும் பாதிக்கப்பட்டு விடுவார்கள். இவர்கள் பேசுவதைப் பார்த்தால் எங்கேயோ இருக்க வேண்டியவர் என்றும் நினைப்பார்கள்.

ஆனால், செயலளவில் ஒன்றுமில்லாமல் வற்றிய பாலைவனமாக இருப்பார்கள். புழுவுக்குப் பின்னால் தூண்டில் முள் இருக்கும் என்பதை அறியாதவர்கள் இவர்கள். ராகுவானவர் சட்டென்று தூக்கிவிட்டு அப்படியே அதல பாதாளத்தில் விடவும் செய்வார். அதேசமயம் அசாத்தியமான அறிவுத்திறன் இருக்கும். உடலில் சிறிய குறைபாடு இருக்கும். உறவாடிக் கெடுக்கும் சுபாவமிருக்கும்.

மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் லக்னாதி பதியான குருவும் ராகுவும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா?

மீன லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே குருவும் ராகுவும் சேர்ந்திருந்தால் அக்கு வேறு ஆணி வேறாக எதையும் அலசுவார்கள். அடிப்படையான வாழ்க்கை விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்துவிடும்.

உடலில் கரும் பச்சை மச்சத்தோடு பிறப்பார்கள். ஆறு விரல் இருக்கும். எப்போதும் படபடப்போடு காணப்படுவார்கள். உடைகளிலெல்லாம் அவ்வளவு அக்கறை செலுத்த மாட்டார்கள். ஆனால், உலகை மிகுந்த அழகியல் நோக்கோடு எதிர்கொள்வார்கள்.

இரண்டாம் இடமான மேஷத்தில் குருவும் ராகுவும் நின்றால் இரட்டை நாக்கு கொண்டவர்களாக இருப்பார்கள். உதடு ஒன்றும், நெஞ்சம் வேறொன்றும் பேசும். இடது கண் பாதிப்பு இருக்கும். அட்ரினல்,தைராய்டு பிரச்னை வந்து நீங்கும். மறந்துபோயும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடக்கூடாது.

அன்னிய பாஷையில் நல்ல புலமை பெற்றிருப்பார்கள். குழந்தைப்பருவத்தில் திக்குவாய் பிரச்னை இருந்து பின்னர் சரியாகும்.பள்ளிப் படிப்பை முடிப்பதில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். யாருடைய சொல்பேச்சையும் கேட்க மாட்டார்கள். அடங்காதவன் என்று பெயரெடுப்பார்கள். இவர்கள் சுமாராக படித்த படிப்பே மிகுந்த உதவியைத் தரும். பணவரவிற்கு பஞ்சமிருக்காது.

மூன்றாம் இடமான ரிஷபத்தில் குருவும் ராகுவும் இருந்தால் இவர்களுக்குப் பிறகு பிறக்கும் சகோதரரோ அல்லது சகோதரியோ மிகப் பெரிய அளவில் சாதிப்பார்கள். தன்னைத்தானே மிகைப்படுத்தி பேசிக்கொண்டிருக்கும் சுபாவமிருக்கும்.

இவர்களின் இன்னொரு பக்கத்தை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. சரீர பலம் குறைவாகவும், புத்தி பலம் மிகுதியாகவும் இருக்கும். அதீத தன்னம்பிக்கையோடு இருப்பார்கள்.

நான்காம் இடமான மிதுனத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தாயாருக்கு அவ்வப்போது ஆரோக்கியத்தில் பிரச்னை இருந்துகொண்டே இருக்கும். தாயே தெய்வம் என்றிருப்பார்கள். இவர்கள் தெருக்குத்து வீட்டை தவிர்ப்பது நல்லது.

இந்த அமைப்பில் பிறந்தவர்கள் மறந்துபோயும் புகை பிடிக்கக்கூடாது. எப்போதுமே வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் பெயரில் இடத்தை வாங்குங்கள். அதற்குப்பிறகு வேண்டுமானால் உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளுங்கள். நேரடியாக உங்கள் பெயரில் வாங்கினால் தங்காது.

ஐந்தாமிடமான கடகத்தில் குருவும் ராகுவும் நின்றிருந்தால், பூர்வீகச் சொத்து விஷயத்தில் பிரச்னைகள் வந்து நீங்கும். மாந்த்ரீகம், மந்திரம் ஜபித்தல், ஆவிகளோடு பேசுதல், அருள்வாக்கு சொல்லுதல் என்று ஈடுபாடு கொண்டிருப்பார்கள். ரத்தக் குழாய் அடைப்பு பிரச்னை வந்து சரியாகும். குழந்தைகளை விடுதியில் சேர்த்து படிக்க வைக்காமல் இருப்பது நல்லது. தாய்மாமன் உறவுகளில் கூட அவ்வப்போது ஏதேனும் சிக்கல்கள் வந்தவண்ணம் இருக்கும்.

ஆறாம் இடமான சிம்மத்தில் குருவும் ராகுவும் இருந்தால் பங்குச்சந்தையில் ஈடுபட்டு பெரியதாக சம்பாதித்தல் என்றிருப்பார்கள். ஆறாம் வீட்டில் சென்று ராகு இங்கு மறைகிறார். எனவே, எதிரிகள் இருக்க மாட்டார்கள். வழக்கில் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள். வேற்று மதத்தவரால் அனுகூலமான விஷயங்கள் நடைபெறும். மூதாதையர்களைக் குறித்து ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள்.

வேலை செய்யும்போது மேலதிகாரிகளோடு பிரச்னை ஏற்பட்டு சமாளிப்பார்கள். உயரதிகாரிகளோடு நீங்கள் எப்போது பேசினாலும் ஆணையிட்டதுபோல பேசுவதாக நினைத்துக் கொள்வார்கள். அரசியல்வாதிகள் உங்களோடு நட்பாக இருப்பார்கள். ஏனெனில், உங்கள் லக்னாதிபதியான குருவிற்கு சத்ரு ஸ்தானாதி பதியாக வரும் சூரியன் நட்பு கிரகம் ஆகும்.

ஏழாம் இடமான கன்னியில் குருவும் ராகுவும் இருந்தால் ஏதேனும் சிறு குறையுள்ளவரை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணைவர் வழியே நிறைய உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் சுருக் சுருக்கென்று பேசுவார். பல சமயங்களில் பாம்புபோல சீறுவார். பொருத்தம் இல்லையெனில், வெளியில் மனம் தேடத் துவங்கும். வேலைக்காரி வீட்டுக்காரியாகும் நிலை ஏற்படும். ரெண்டாவது வீடு, மூணாவது வீடு என்று எண்ணிக்கை கூடிவிடும்.

எட்டாமிடமான துலா ராசியில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் தீவிரவாத இயக்கங்கள் மீதும் இவர்களுக்கு மென்மையான போக்கு இருக்கும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தபடி இருப்பார்கள்.

எப்போதும் புத்தியில் தூக்கம், அதீத உணர்ச்சி வசப்படுதல், எதற்கெடுத்தாலும் கோபித்துக்கொள்ளுதல் என்றிருப்பார்கள். சிறு பிரச்னையாக இருந்தாலும் இவர்கள் அதை பூதாகரமாக எடுத்துக்கொண்டு நிலைகுலைந்து போவார்கள்.
ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தன்னைத்தானே நெறிப்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள்.

தன் தந்தையாரின் தவறைக்கூட தட்டிக் கேட்டு மாற்றுவார்கள். புராதனச் சொத்து, பாட்டன் சொத்தையெல்லாம் காப்பாற்றி வைத்துக் கொள்வார்கள். தந்தையே தன் சொந்த கருத்துத் திணிப்பின் மூலம் இவர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட வண்ணம் இருப்பார். இவர்கள் மருத்துவத்தில் கேன்சர் நோய்க்கான ஆராய்ச்சியில் ஈடுபடலாம். விஸ்காம், விலங்கியல், ஏரோனாட்டிகள் இன்ஜினியரிங் என்று படிக்கலாம்.

பத்தாம் இடமான தனுசில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் தான் யாரென்று காட்டிக் கொள்ளாமல், ஆர்பாட்டமில்லாமல் கனகச்சிதமாக காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். பத்திரிகையாளர், விமர்சகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றுபவர், பங்குச்சந்தை அலுவலகம், தபால் துறை, மக்கள் தொடர்பு அதிகாரி, உளவியல் நிபுணர் என்று பல துறைகளில் வேலை பார்ப்பார்கள்.

அயல்நாட்டுப் பணிக்கு ஆட்கள் அனுப்பி வைக்கும் ஏஜென்ட், தங்க நகை வேலை செய்தல், வறுகடலை நிலையம், முந்திரிப் பருப்பு, நெய், அடகு வியாபாரம், பப்ளிகேஷன்ஸ், சர்க்கஸ் கம்பெனி, மரம் இழைப்பகம் என்று பல்வேறு துறைகளில் சம்பாதிப்பார்கள்.

குருவின் ஆதிக்கத்தில் உங்கள் மாமியார் ஸ்தானம் வருவதால், எல்லா விஷயத்திற்கும் தத்துவரீதியாக பதில்களைக் கொடுத்துக் கொண்டிருப்பார். ஆனால், வெளியிடங்களில் உங்களை ஒருபோதும் மாமியார் விட்டுக் கொடுக்க மாட்டார்.

பதினோராம் இடமான மகர ராசியில் குருவும் ராகுவும் சேர்க்கை பெற்றால் ஏஜென்சி, புரோக்கரேஜ் போன்ற தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள். மூத்த சகோதரர்களை விட சகோதரிகள் மிகுந்த அனுசரணையாக இருப்பார்கள். இவர்கள் யாரையுமே ஓங்க விடமாட்டார்கள். மெல்லியதாக அழுத்தியே வைத்திருப்பார்கள்.

பன்னிரண்டாம் இடமான கும்ப ராசியில் குருவும் ராகுவும் இருந்தால் இவர்களில் சிலர் யோகா மாஸ்டர்களாகவும் இருப்பதுண்டு. பெரும் வேதாந்தியாகவும் திகழ்வார்கள். பழைய எதிரிகளை மறக்காமல் இருப்பார்கள். அதனாலேயே தூக்கம் கெடும். மறைமுகமாக ஏதேனும் சின்ன கெட்டபழக்கம் இருக்கும். இந்த குருவும் ராகுவும் சேர்ந்தால் தெரிந்தே தவறு செய்பவர்களாக இருப்பார்கள்.

பிறரது விமர்சனங்களுக்கு கவலைப்பட மாட்டார்கள். தன் தவறுக்கு சுலபமாக மற்றவர்களை காரணம் காட்டுவார்கள். எனவே, இந்த சேர்க்கையின் எதிர்மறை கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து விடுபட நீங்கள் செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரம் ஆகும். இங்கு காஞ்சி குமரக்கோட்டம் எனும் கோயிலில் அருளும் நாகசுப்பிரமணியரை தரிசியுங்கள். வள்ளி தெய்வானையின் தலையில் மூன்று தலை நாகமும், முருகனுக்கு ஐந்து தலை நாகமும் குடை பிடிப்பதை இங்கு தரிசிக்கலாம்.

(கிரகங்கள் சுழலும்)

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்