பார்வதி தாண்டவம் ஹன்ஸா ஹன்ஸா



“தே... பசங்க... பீயத் தின்ற நாயே... அறிவில்ல? முண்டம். !@#$%^&^ கூமுட்ட. என்ன நெனப்புடா ஒனக்கு? வேர்வயோட மாரக் காட்னா பொம்பளைங்க மடிஞ்சிருவாங்கன்னு நெனப்பா? செருப்பெடு... நா...கூ...’’இன்று என்னவோ என் குரல் அதிக கொடூரமாக எனக்கே திரும்பக் கேட்டது. எனக்குக் கோவமான கோவம். நான் லுலூ. என் குடும்பத்தோடு இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது.

வந்தது முதலே பார்க்கிறேன். அந்த ஆள் எப்போது பார்த்தாலும் பெண்கள் இருக்கும் பக்கமாகவே சுற்றுகிறான். அவன் மட்டும்தான் என்றில்லை. அங்கே ஆண்கள் அனேகருமே பெண்கள் புழங்க அசெளகரியமாக, பெண்களை நோட்டம் விட்டபடி, சும்மாவேனும் பம்படியில் நின்று பேசுவது, சத்தம் போட்டுச் சிரிப்பது... தவிர பக்கத்து கடைத்தெரு குட்டிச் சுவற்றில் வேறு சில நாய்கள் பெண்கள் புழங்கும் பக்கமாகவே நோட்டம் போட்டுக் கொண்டிருக்கும்.

கடைத் தெருவை ஒட்டியே அமைந்த எட்டு குடும்பங்கள் கொண்ட முடுக்கு வீடு இது. நடுவில் கிணறும், அடிபம்பும். சுற்றி ‘ப’ வடிவத்தில் எட்டு வீடுகள். எல்லோரும் புழங்கும் பொது புழக்கடை. கடை கண்ணிக்குப் போக சுலபமாக இருக்கும் என நினைத்துதான் எல்லோருமே இந்தக் குடியிருப்புக்கு போட்டி போட்டு குடி வருகிறார்கள். இங்கே குடி இருக்கும் ஆண்கள் அநேகரும் கடைகளிலோ, தொழிற்சாலைகளிலோ மாத சம்பளம் வாங்குபவர்கள்.

வருகிற சம்பளத்தில் இந்த வீடுதான் சாத்தியம். அநேகமாக பெண்கள் எல்லோரும் வீடுகளிலேயே மெழுகுவர்த்தி, அப்பளம் என தயார் செய்து விற்பவர்கள். சுமாரான சம்பாத்தியக்காரர்கள்தான். நான் மட்டும்தான் ஒரு ப்யூட்டி பார்லரில் வெளி வேலைக்குப் போகும் பெண்.

அங்கே குடியிருக்கும் பெண்களும் இவன்களைக் கண்டு ஏன் பம்முகிறார்கள் எனத் தெரியவில்லை. எல்லோருமே இங்கே குடியிருப்பவர்கள்தானே? அட அந்த மாரைக்காட்டும் மம்முதன் நேரு... அவனைக் கூட எதிர்க்கத் துப்பில்லை. ஏன் பயப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை.

இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என அதிகாலையிலேயே பொது புழக்கடைக்கு குளிக்கக் கிளம்பினேன்.அந்தப் பெண் குடிவந்து ஒரு வாரம்தான் இருக்கும். பெயர் என்னமோ லுலூ என்றார்கள். முதல் வீட்டில் அவள். ஏதோ பார்லரில் வேலை செய்கிறாளாம். வந்து ஒரு வாரமிருக்கும். கெட்ட வார்த்தைகள் எல்லாம் அநாயாசமாக வந்து விழும். இவள் புழக்கடைக்கு வந்தால் நிற்கும் ஆண்களை கையிலிருக்கும் வாளியால் நகர்த்தியபடி, கெட்ட வார்த்தையில் திட்டுவாள். 

அவளுக்கும் புருசன் பிள்ளைகள் உண்டு. நல்லவளாகத்தான் தெரிகிறாள். ஆனால், எப்போதும் கெட்ட வார்த்தைகள் வாய் விளிம்பில். எல்லா வார்த்தைகளும் பேசுவாள். பெண்களிடம் அதிகம் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டாள். எல்லாமும் ஆண்களோடுதான். ஆனால், அவர்களோடு எப்பொழுதும் சண்டை சண்டை சண்டைதான்.

கடைக்காரன் ஒரு முறை வேண்டுமென்றே இவள் கையைப் பிடித்து பாக்கி சில்லறை கொடுத்தான் என அப்படியே கொத்தாக அவன் சட்டையைப் பிடித்து அடி வெளுத்து விட்டாள். உண்மையில் அவன் ஒரு மாதிரிதான். வேணும்தான் அவனுக்கு. கொஞ்சம் பெண்களிடம் வம்பு செய்தாலும் போதும் இவளுக்கு. சண்டைக்குக் கிளம்பிவிடுவாள். சரியான பஜாரி. 

எங்களால் சமாளிக்க முடியாத இன்னொரு ஜீவனும் உண்டு. அவன்தான் நேரு. அரசாங்க சம்பளக்காரன். ஒரு ஐம்பது, ஐம்பத்தைந்து வயது இருக்கும். எல்லா பெண்களும் அவன் மீதே மையல் கொண்டு அலைவது போல அவனுக்கே ஒரு எண்ணம்.

அழகான பெண்களிடம் இவனாகப் பேசிவிட்டு ஊருக்குள் ‘பட்சி மடிஞ்சிருச்சு’ என மார்தட்டுவான். சுமாரான பெண்கள் எனில், ‘‘சனியன், அலையுறா எவண்டா கெடப்பான்னு...” என்பான். அதனாலேயே எந்தப் பெண்ணும் அவனைச் சந்திப்பதையே தவிர்த்து வந்தோம். எவரும் எழும் முன்பே பெண்கள் புழக்கடையில் குளித்துவிடலாம் என்றால், இல்லாத பழக்கமாக அந்த வேளையிலேயே எக்ஸசைஸ் செய்வதாகச் சொல்லி ஸ்லீவ்லெஸ் பனியனும் முட்டி தெரியும் அரைபேண்டுமாகச் சுற்றுவான்.

அந்த நேரத்தில் அங்கே புழங்க வேண்டாம் என மென்மையாக பலமுறை அவனிடம் நாங்களே சொல்லியாயிற்று. அவன் கேட்பதாக இல்லை. காலையில் காய் வாங்க பெண்கள் காய் வண்டி முன் நிற்கையில் காய் விலை பேசுவது போல வியர்வை நாற்றத்தோடு வந்து நிற்பான். அவன் அரசு உத்யோகஸ்தன். எதற்கு வம்பு என ஒதுங்கிக் கொண்டிருந்தோம்.

நான் ராஜி. அன்னிக்கு அப்படித்தாங்க. எங்க வீட்டுக்காரர அந்த பஜாரி பொம்பள வாளியால இடிச்சுத் தள்ளிட்டு அடிபம்புல தண்ணி புடிச்சிட்டிருந்திருக்கா. நாங்கல்லாம் ஆம்பளைங்க அடிபம்புகிட்ட இருந்தா போகக்கூட மாட்டம். இவரு பாவம். பச்ச மண்ணு. அவள எல்லாம் எதுத்து பேசுறது கேவலமின்னு வீட்டுக்கு வந்திட்டார்.

நேத்து அடுத்த வீட்டு அக்காகிட்ட கூட அவளப் பத்தி பேசிக்கிட்டிருந்தாரு. ‘அவளை மாதிரியானவங்க ஏதோ கூட்டத்தைச் சேர்ந்தவங்களாம். சண்டை போட காரணம் கிடைக்கலேன்னா புரச்சி பேசுவாங்களாம். அக்கா நீங்கல்லாம் எவ்ள பண்பா பேசுறீஹ? சின்னப்பிள்ள மாதிரி என்னை தம்பி தம்பின்னு எப்டி அன்பா பேசுறீய? அண்ணம் பேச்சுக்கு மறு பேச்சி உண்டுமா? குடும்பப் பொண்ணுன்னா இப்டி இல்ல இருக்கோணும்!’
அக்காக்கு கூட அந்த புது பொம்பிள மேல கோவம்தான்.

‘சின்னப்பிள்ள மாதிரி, குடும்பப் பொண்ணு’ என ராஜி புருசன் என்னைச் சொன்னது எனக்கு சந்தோசமாகவே இருந்தது. வீட்டில் ஆண்கள் எல்லோரும் அந்த பார்லர்காரியை ‘ஈயம்’ எனக் கிண்டலாகக் குறிப்பிடுவார்கள். அவள் பேசுவது ‘பெண்ணியமாம்’. ஆண்களாக சொல்லிக் கொள்வார்கள். நமக்கென்ன தெரிகிறது அது பற்றியெல்லாம்?

‘அதானே, அதென்ன பொம்பிளையளுக்கு ஈயமும் பித்தாளையும். நம்மள மாதிரி இருந்திட்டு போக வேண்டியதுதானே?’ என எங்களுக்குள்ளாக பேசி சிரித்துக் கொண்டோம். ஆண்களின் முன் அவளைப் பற்றி புரணி பேசி மகிழ்ந்தோம்.

இல்லாத அதிசயமாக அந்த அதிகாலையில் லுலூவும் புழக்கடைக்கு குளிக்க வந்திருந்தாள். இவளை கவனிக்காமலோ, அல்லது எங்கள் பேச்சை எதிர்த்தோ என்னவோ, நேருவும் அங்கே ஆஜராகி இருந்தான். கையைக் காலை ஆட்டி குதித்துக் கொண்டிருந்தான். எக்சசைசாம்.
என்னவோ நடக்கப்போகிறது என எங்களுக்குள் சாடை செய்து கொண்டோம். அந்த அதிகாலை அவள் குளிக்கும் நேரமும் அல்ல. அவளின் இடமும் இது இல்லை. வேண்டுமென்றேதான் அவள் இன்று இங்கே வந்து எங்களோடு குளிக்கிறாள். 

‘‘மயிராண்டி, பொம்பளைங்க குளிக்கிற இடத்துல, நேரத்திலதான் வந்து நிப்பான். செருப்பெடு...” வீடுகளிலிருந்து ஆண்கள் எட்டிப்பார்த்து பதுங்கிக் கொண்டார்கள். அது அவனுக்கு மட்டுமான திட்டாகத் தெரியவில்லை. எல்லா ஆண்களையும் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டாள் லுலூ.

மறுபடி ஆரம்பித்தாள், ‘‘தே... பசங்க...”கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த நேரு, நாங்கள் எதிரே பார்த்திராதபடி பதில் ஏதும் சொல்லாமல், தலை கவிழ்ந்தபடி நகர்ந்தான். இருந்த ஒன்றிரண்டு ஆண்களும் முணுமுணுத்தபடி வெளியேறினார்கள். பார்க்கிற எங்களுக்கு சிரிப்புதான் வந்தது.
‘என்ன பாடு படுத்தினே எங்கள?’ மனசுக்குள் கேட்டுக் கொண்டோம்.

எங்கள் வீட்டு ஆண்கள் முன்னிலையில், ‘‘பாரேன் இந்த பஜாரிய, நேருதான் தப்பானவன். இவ அவனுக்கு மேல இருக்குறா பாரேன். நம்ம வீட்டு ஆம்பளைங்களையும் விடுறதில்ல. அன்னிக்கி அப்டித்தான ராஜி புருசன திட்டினா...” எனப் புரணி பேசினோம். நாங்கள் குடும்பப் பெண்கள் அல்லவா? லுலூ அல்லவே?

ஆனால், எங்களுக்குள் பேசிக்கொள்ளாமல் ஒன்றை மட்டுமே அத்தனை பேரும் கவனித்தோம். புன்னகைத்துக் கொண்டோம்.
லுலூ வந்த பிறகு இப்போதெல்லாம் ஆண்களின் அடாவடித்தனம் கொஞ்சம் குறைந்தே இருக்கிறது. புழக்கடையில் சும்மா நிற்பதெல்லாம் இல்லை.
ஆணின் மொழி பேசினால்தான் அவர்களுக்குப் புரிகிறது போல. தன் கோவத்தை வெளிக்காட்டுவதற்கும், அதன் மூலம் தன்னை தற்காத்துக் கொள்வதற்கும் சொல்லப்படும் கெட்ட வார்த்தைக்கும், தன் திமிரைக் காட்டவும், அடுத்தவரை இழிவு செய்யவும் மட்டுமே சொல்லப்
படும் கெட்டவார்த்தைக்கும் எத்தனை எத்தனை வித்தியாசம்?

கெட்ட வார்த்தை எதுவாகவும் இருக்கட்டும், கோவத்தை வெளிப்படுத்துதலே இப்போது முக்கியம்.இல்லாத அதிசயமாக தன் புருசனைத் திட்டிய கோவத்தையும் மறந்து ராஜி ஏதோ தீனி ஒன்றைக் கிண்ணத்தில் மூடி எடுத்துக் கொண்டு லுலூ வீடு நோக்கி போய்க் கொண்டிருந்தாள்.

பார்வதியுடனான போட்டி தாண்டவத்தில், சிவன் ஒரு காலைத் தூக்கி நின்றாடினாராம். அந்தரங்கம் வெளித் தெரிய, பார்வதி கூசிக் கூனிக்குறுகி, ஸ்தம்பித்து நின்றாளாம். போட்டியில் சிவனே வென்றதாக அறிவிக்கப்பட்டதாம். இது கதை. இப்போது பார்வதிகளும் பதிலுக்கு தாண்டவமாட ஆரம்பித்துவிட்டார்கள் போல. சிவன்கள் கூசிப்போகட்டுமே! குறைந்த பட்சம் இனியும் பார்வதி இதற்கெல்லாம் கூச மாட்டாள் என்றாவது
உணரட்டுமே!இதுதான் ‘பெண்ணியம்’ என்றால் அட இருந்துவிட்டுத்தான் போகட்டுமே.

வாய்பிளக்கும் சாதனை!

ஒடிஷாவின் மனோஜ்குமார் மகாரானா, வாய்பிளக்கும் கின்னஸ் சாதனையை வெறும் 459 ஸ்ட்ராக்களை வைத்தே செய்திருக்கிறார். யெஸ்! ரப்பர் பேண்டால் ஸ்ட்ராக்களைக் கட்டி வாயில் திணித்து பத்து நொடிகள் விழாமல் வைத்திருந்த மகாரானாவின் சாதனைதான் இன்று டாக் ஆஃப் தி வேர்ல்ட்!

நண்பேன்டா குரங்கு!

வியட்நாமிலுள்ள ஹாடின் பண்ணையில் வளர்க்கப்படும் குரங்குகளுக்கும் நாய்களுக்கும் அப்படியொரு நட்பு. ஸ்ட்ராங்க் நட்புக்கு சாம்பிள், நாய் பிரியமாக தலையைக் கொடுத்து நிற்க, கூண்டிலுள்ள குரங்கு பேன் பார்ப்பதுதான். வெளியாகியுள்ள நண்பேன்டா வீடியோ இணையத்தில் ஹாட் ஹிட்.

ஜன்னலில் திருடி!

கொலம்பியாவில் உள்ள மெக்டொனால்ட் ரெஸ்டாரெண்டில் ஜன்னல் வழியாகவே கொள்ளையடித்த லேடியை ஹோவர்ட் கவுன்டி போலீஸ் அரஸ்ட் செய்துள்ளது. உணவு, குளிர்பானம், கூடவே 1,400 டாலர்களை சிம்பிளாகத் திருடிய பெண்ணை சிசிடிவி புகைப்படம் மூலமே போலீஸ் பிடித்துள்ளது.