விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 44

‘‘என்ன இது..?’’ ஆதி அலறினான். அவன் பார்வை அந்த ஆளுயர முட்டையின் மீதே நிலைகுத்தி நின்றது. ‘‘இவ்வளவு பெரிய முட்டையை சொல்றியா... எனக்கும் ஆச்சர்யமாதான் இருக்கு...’’ கிருஷ்ணன் அதை தொடப் போனான். சட்டென்று அவன் கையை ஆதி பிடித்து நிறுத்தினான். ‘‘தொடாத...’’ ‘‘ஏன்..?’’

‘‘சம்திங் ராங்... இந்தளவுக்கு பெரிசான முட்டை பூமிலயே கிடையாது... எந்தப் பறவையும் இப்படி முட்டை இடாது...’’  ‘‘ஒருவேளை தேவப் பறவை ஏதாவது முட்டை இட்டிருக்குமோ... ஐ மீன்... கார்க்கோடகரை சுத்தி நிக்குதே கருடன்கள்... அதுல ஒண்ணு...’’ ‘‘இட்டிருக்கலாம். நாட் ஷுயர். எதுவா இருந்தாலும் தள்ளியே நில்லு...’’ சொன்ன ஆதி முட்டையையே இமைக்காமல் ஆராய்ந்தான்.

‘‘நீ அலறினதுக்கு காரணம் இந்த ‘KVQJUFS’ எழுத்துக்களா..?’’ ஐஸ்வர்யா நிதானமாகக் கேட்டாள். ‘‘ம்...’’ ‘‘எப்படி முட்டைல இது எழுதப்பட்டிருக்குனு யோசிக்கறியா..?’’ ‘‘ஓட்டு மேல எழுதறது என்ன கஷ்டமா..? அது பத்தி சிந்திக்கலை. எங்க அமைப்போட சங்கேத சொல் இதுனு இத்தனை நாளா நினைச்சுட்டு இருந்தேன்... எங்களைத் தவிர வேற யாருக்கும் தெரியாதுன்னும்.

ஆனா, உங்களுக்கும் அது தெரிஞ்சிருக்கு... இதோ இப்ப இந்த முட்டைலயும் யாரோ எழுதி வைச்சிருக்காங்க...’’ ‘‘அப்படீன்னா அது ரகசியமில்ல...’’ கிருஷ்ணன் புன்னகைத்தான். ‘‘மாஸ்டர் கிட்ட சொல்லி சங்கேத சொல்லை மாத்து...’’ ‘‘ஷட்டப் க்ருஷ்... விளையாட நேரமில்ல. லுக் ஆதி... உன்கிட்ட மறைக்க விரும்பலை.

க்ருஷ் தடுக்க மாட்டான்னு நம்பிக்கையோட உண்மையை சொல்றேன். நம்ம கண் முன்னாடி நிக்குதே ஆளுயர முட்டை... இதை எந்தப் பறவை இட்டதுனு ஆராயறதை விட நாம அலச வேண்டியது வேற ஒண்ணு இருக்கு...’’ ‘என்ன...’ என்பது போல் ஆதி தன் புருவத்தை உயர்த்தினான். ‘‘இது வேக வைச்ச முட்டை. ஐ மீன் அவிச்ச முட்டை...’’ ‘‘வாட்...’’ ஆதிக்கு தூக்கி வாரிப் போட்டது.

‘‘எதை வைச்சு இந்த முடிவுக்கு வந்த..?’’ ‘‘எழுதப்பட்ட எழுத்துக்களை வைச்சு. இரு... முடிச்சுடறேன். முதல் விஷயம் முட்டை ஓட்டுல யாராலும் எழுத முடியாது...’’ ‘‘அப்ப நாம கண்ணால பார்க்கறது பொய்யா..?’’ ‘‘அவசரப்படாம ஐஸ்வர்யா சொல்றதை கேளு ஆதி... ஏன்னா, இதே சந்தேகத்தை அவ தாராவுக்கும் தீர்த்து வைச்சிருக்கா.

தினமும் காலைல அஞ்சு முட்டையை அவ சாப்பிடுவா. அப்படி ஒருநாள் தாரா வாங்கின முட்டைகள்ல ஒண்ணுல ‘KVQJUFS’னு எழுதப்பட்டிருந்தது. அதுக்கான சந்தேகத்தை இவகிட்ட கேட்க வந்தா...’’ ‘‘அதுலேந்துதான் நீங்க ரெண்டு பேரும் நூல் பிடிச்சீங்களா..?’’ ஆதியின் கேள்விக்கு மற்ற இருவரும் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றார்கள்.

இருவரையும் மாறி மாறி பார்த்தான். ‘‘ஓகே... நீ சொல்ல வந்ததை முடிச்சுடு ஐஸ்...’’ ‘‘சாதாரண முட்டை ஓட்டுல எழுத முடியாது. இது தொடர்பா கூகுள்ல...’’ ‘‘எதுக்கு என்னைப் பார்க்கற ஐஸ்? கூகுள்னா என்னனு தெரியும். ஆண்ட்ராய்ட் போனை நானும் பயன்படுத்தறேன். மேல சொல்லு...’’ ‘‘கூகுள்ல இதைப் பத்தி தேடினா Giovanni Porta இதைப் பத்தி எடுத்த பாடம் வரும்.

Code ஹிஸ்டரில அவரோட கண்டுபிடிப்பு முக்கியமானது. அதனாலதான் இதை பால பாடங்கள்ல ஒண்ணா சிலபஸ்ல வைச்சிருக்காங்க...’’ ‘‘ம்...’’ ‘‘சாதாரண முட்டை மேல எதையும் எழுத மாட்டாங்க. பளிச்சுனு தெரிஞ்சுடுமே... அதனால ஓட்டுக்குள்ளதான் எழுதுவாங்க. அப்பதான் ரகசியம் காக்கப்படும்...’’ ‘‘...’’ ‘‘வெறும் முட்டைக்குள்ள வெள்ளையும் மஞ்சள் கருவும் கொழ கொழனு இருக்கும்.

எந்த எழுத்தும் அது மேல படியாது. அதுக்கு வாய்ப்பும் இல்ல. ஸோ முட்டை வெந்த பிறகுதான் அந்த ஓட்டு மேல படிகாரம் ப்ளஸ் வினிகர் கலந்த கலவையால கிறுக்குவாங்க. சம்பந்தப்பட்ட நபர்கிட்ட அவிச்ச முட்டையை தருவாங்க. அந்த ஆளு தனியா போய் வெந்த முட்டையோட ஓட்டை உடைப்பாரு. உள்ள எழுதப்பட்ட ரகசியம் பளிச்சிடும்...’’ ‘‘...’’

‘‘நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைனா ‘How to Write in Boiled Egg’ அப்படீன்னு அடிச்சு யூ டியூப் கிட்ட கேளு. அஞ்சு நிமிஷம் 29 செகண்டுக்கு ஒரு வீடியோவை அது காட்டும். அதைப் பாரு. தெளிவா படங்களோட இடம் சுட்டி பொருள் விளக்கம் தந்திருப்பாங்க...’’ ‘‘ஆனா...’’ ‘‘சந்தேகப்படாத ஆதி. இதுதான் ஃபேக்ட். நம்ம முன்னாடி நிக்கறது வெந்த முட்டை.

உத்துப் பாரு... ஓடு இல்லாம முட்டை இருக்கறது புரியும். யாரோ ஓட்டு மேல ‘KVQJUFS’னு எழுதிட்டு போயிருக்காங்க. வேறு யாரோ அவிச்ச முட்டையோட ஓட்டை பிரிச்சிருக்காங்க. இந்த எழுத்துக்களைப் பார்த்திருக்காங்க...’’ ‘‘அதாவது யாரோ யாருக்கோ செய்தியை கடத்தியிருக்காங்க. தாராவுக்கு கார்க்கோடகர் தெரியப்படுத்தின மாதிரி... அப்படித்தானே?’’ ‘‘ஆமா...’’ ‘‘இதுல ‘யாரோ’ யாருனு நமக்குத் தெரியாது. ஆனா, ‘யாருக்கோ’ என்பது கருடன்களா இருக்கலாம்.

ஏன்னா அவங்களைத் தவிர இங்க வேற யாரும் இல்ல...’’ ஆதி இப்படி சொன்னதும் கிருஷ்ணனும் ஐஸ்வர்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘வாய்ப்பிருக்கு...’’ என்றபடி ஆதியின் பக்கம் கிருஷ்ணன் திரும்பினான். ‘‘கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியா வருது. கருடன்களுக்கு ‘KVQJUFS’ பத்தியும் தெரிஞ்சிருக்கு... கார்க்கோடகர் உடம்புல கைரேகை இருப்பதும் புரிஞ்சிருக்கு.

அதனாலதான் ரேகையை கேப்சர் பண்ண அவரையே டார்கெட் பண்றாங்க...’’ ‘‘யா... யூ ஆர் ரைட்...’’ ஐஸ்வர்யா ஆமோதித்தாள். ‘‘இதெல்லாம் சரினா அர்ஜுனன் வில் கருடன்களுக்கும் தேவைப்படுது...’’ கிருஷ்ணன் இப்படி சொல்லி முடித்ததுமே அங்கு சில நொடிகள் அல்லது நிமிடங்களா..? ஏதோ ஒரு காலம். மயான அமைதி நிலவியது.

ஆதிதான் அதை கலைத்தான். ‘‘இப்ப என்ன செய்யலாம்?’’ ‘‘கருடன்களுக்கு முன்னாடி நமக்கு ரேகை கிடைச்சிருக்கு... அவங்களால கார்க்கோடகர் உடம்புலேந்து அந்த ரேகைகளை எடுக்க முடியுமான்னு தெரியலை. ஒருவேளை எடுத்துட்டாங்கனா ஆபத்து. வில் நமக்குக் கிடைக்காமயே போயிடும். ஸோ...’’ ‘‘இங்கேந்து வெளியேறணும். அதைத்தானே சொல்ல வர்ற?

கார்க்கோடகரும் அப்படி சொல்லித்தான் நம்மை விரட்டினார். ஆனா, வழி தெரியலையே...’’ இழுத்த ஐஸ்வர்யா சுற்றிலும் ஆராய்ந்தாள். க்ரிக்... சத்தம் வந்த திசையை நோக்கி மூவரும் திரும்பினார்கள். அதிர்ந்தார்கள். ஆளுயர முட்டை கொஞ்சம் கொஞ்சமாக உடையத் தொடங்கியது. அவிச்ச முட்டை உடையுமா?

(தொடரும்)

ஓவியம் : ஸ்யாம்