களைகட்டும் கலம் காரி!
- ஷாலினி நியூட்டன்
கலம்காரி... பெண்களின் சமீபத்திய ஃபேஷன் ட்ரெண்டு. ப்ளவுஸ், துப்பட்டா, சல்வார், ஸ்கர்ட், க்ராப் டாப்ஸ், புடவை என சகல உடைகளையும் ஆக்ரமித்திருக்கிறது கலம்காரி. ‘கலம்’ என்றால் பாரசீக மொழியில் பேனா என்று பொருள். ‘காரி’ என்றால் கலைவடிவம். பாரசீகத்தில் இருந்து ஆந்திராவுக்கு இறக்குமதியான நுண்கலை இது. கைகளாலோ, அச்சுகள் மூலமோ சுத்தமான பருத்தி ஆடைகளில் ஓவியங்கள் வரைவதுதான் கலம்காரி.
கோயில் சிற்பங்கள், மெஹெந்தி, கோலங்கள் என விதவிதமான ஓவியங்களைத் துணியில் வரைந்தும் அச்சிட்டும் அசத்துகிறார்கள். ஃபேஷன் உலகில் பழைய ட்ரெண்டு மீண்டும் ஒரு ரவுண்டு வருவது புதிதல்ல. இப்போது மறுமலர்ச்சி அடைந்திருக்கும் கலம்காரியில் ட்ரெண்டியாக என்ன இருக்கு?
‘‘நிறைய சொல்லலாம்...’’ என்று ஆரம்பித்தார் ஃபேஷன் டிசைனரான நந்தினி. ‘‘கலம்காரியில் எப்படி டிசைன் பண்ணினாலும் நாம என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே தைக்க முடியும். இதுதான் ஸ்பெஷல். முக்கியமா பெரிய பெரிய பூக்கள், சிலைகள் மாதிரி டிசைன்களா இருக்கும். இப்போது புது ட்ரெண்டா புத்தரின் தலை மட்டும் ப்ரிண்ட் செய்கிறார்கள்.
கறுப்பு, சிவப்பு, பச்சை, வெள்ளை என நேரடியான கலர்ஸ்தான் கலம்காரி துணிகளின் சாய்ஸ். முன்பு, கொஞ்சம் பருமனாக உள்ளவர்கள் இந்த உடைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். பெரிய டிசைன் இன்னும் உடல் அளவை பெரிதாகக் காட்டும்னு பயந்தாங்க. ஆனா, இப்ப இதுதான் ட்ரெண்ட்! கொஞ்சம் பருமனான பெண்கள் சின்னச் சின்ன டிசைன்களாவும், உயரமான ஒல்லியான பெண்கள் பெரிய டிசைன்ஸும் குறுக்கும் நெடுக்குமா போடப்பட்ட டிசைன்ஸும் பயன்படுத்தினா எடுப்பாகத் தெரியும்.
மேக்கப்பும் அணியற நகைகளும் ப்ரைட்டா இருக்கக் கூடாது. சிம்பிள் மேக்கப், ஆண்டிக் வகை ஆக்ஸிடைஸ்ட் அல்லது பட்டு நூல் நகைகள் பயன்படுத்தலாம்...’’ என்கிறார் நந்தினி. இந்நிலையில் ‘விக்ரம் வேதா’ படத்தில் நாயகியின் உடையாக கலம்காரி புடவையைப் பயன்படுத்தியிருந்த அப்படத்தின் இயக்குநரான (புஷ்கர்) காயத்ரியை தொடர்பு கொண்டோம்.
‘‘படத்தோட காஸ்ட்யூம் டிசைனரும் நான்தான். கேரக்டர்படி ஹீரோயின் ஷ்ரத்தா நாத் கொஞ்சம் ஸ்ட்ராங்கான பெண். அதே சமயம், தான் பெண்ணாக இருக்கறதுல பெருமையும் கொள்பவர். ஓவர் மேக்கப், காஸ்ட்யூம்னு அலட்டாம இயல்பாக பெண்மையைக் கொண்டாடுபவர். அதனாலதான் கலம்காரி புடவைகளை பயன்படுத்தினோம். ஒரு சீன்ல மாதவன் வெள்ளை சட்டையும், விஜய் சேதுபதி கறுப்பு சட்டையும் அணிந்திருப்பாங்க. அப்ப ஷ்ரத்தா கறுப்பு - வெள்ளை கலம்காரி சேலைல இருப்பார்.
எனக்கு இந்த கலம்காரி பேட்டர்ன்ஸ் ரொம்பப் பிடிக்கும். பொதுவா கலம்காரி வொர்க்ஸை சுரிதார், டாப்ஸ், பிளவுஸில்தான் அதிகமாகப் பயன்படுத்துவாங்க. நாங்க புடவைல இது கிடைக்குமானு தேடினோம். கடைசியா பெங்களூர்ல கிடைச்சது. கலம்காரி சேலைகள் கட்ட அதிகமாக மெனக்கெட வேண்டாம். எப்படித் தூக்கிப் போட்டாலும் அப்படியே பாந்தமா நிற்கும். கசங்கினாக் கூட அழகாகத் தெரியும். பெரிய அளவுல அக்ஸெசரிஸ் தேவைப்படாது.
ஷ்ரத்தா, படத்துல வக்கீல். அது மாதிரியான பொண்ணுக்குத் தன்னை அலங்காரம் பண்ணிக்கிற அளவுக்கு நேரம் இருக்காது. அதே சமயம் ட்ரெண்டியா காட்டிக்கவும் விரும்புவாங்க. இதுக்கு கலம்காரியே நல்ல சாய்ஸா பட்டது. எங்க நம்பிக்கை வீண்போகலை. படம் வந்த பிறகு நாயகியின் காஸ்ட்யூமை எல்லோரும் பாராட்டினாங்க. ஒரு கிரியேட்டருக்கு இதைவிட ஹேப்பியான விஷயம் வேறென்ன இருக்கு..?!’’ என மகிழ்கிறார் (புஷ்கர்) காயத்ரி.
|