6 வது படிச்சப்ப ஒயின்ஷாப்புல வேலை பார்த்தேன்...



தான் கடந்து வந்த பாதையை விவரிக்கிறார் பி.எல்.தேனப்பன்

- நா.கதிர்வேலன்

தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் இப்போ நடிகர். ‘குரங்கு பொம்மை’யில் சைலண்ட் வில்லனாக ரெளத்திரம் காட்டிய வேகம் பார்த்து எல்லோரும் திரும்பினார்கள் தேனப்பன் பக்கம். மளமளவென கால்ஷீட் டைரி நிரம்புகிற அவரது ஆதி வாழ்க்கை துயரமும் தரிசனமும் கொண்டது. பொருள், கல்வி, பிழைப்பு என தாய் நிலம் பிரிந்து அலைந்த கால்கள் அவருடையவை. அவருடைய வாழ்க்கையே பெரும் நாவலின் கூறுகளோடு இருக்கிறது. வாழ்வின் விசித்திரங்களையும அற்புதத்தையும் தேனப்பனின் வாழ்வில் பார்க்க முடிகிறது. இனி அவரைப் பற்றி அவரே...

எங்க அப்பா இங்கே பிழைக்க முடியாமல் கேரளாவிலிருக்கிற பெரும்பாவூரில் நூல் ஃபேக்டரியில் வேலை பார்த்தார். நான் ஒரே பையன்தான். என் வீட்டிற்குப் பக்கத்தில்தான் நடிகர் ஜெயராம் வீடு. ஃபேக்டரி மூடிவிட்டதால் அப்பா சென்னைக்கு வந்திட்டார். ‘பணம் அனுப்புறேன்’னு சொல்லிட்டு வந்தவர், அவர் செலவுக்கே திண்டாட்டமாகி அனுப்ப முடியவில்லை. அம்மா 56 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சாகப் பார்த்தாங்க. நான் ஸ்கூல்ல்ல இருந்து ஓடிப்போய் பார்த்தேன். கடைசி நிமிஷத்தில் அம்மாவை சாவிலிருந்து மீட்டிட்டு வந்தோம்.

எனக்கு என்ன செய்யறதுன்னு புரியலை. நான் 6வது படிச்சிட்டு இருந்தேன். அப்பாவிற்குத் தெரிந்த ஒயின்ஷாப்ல வேலைக்குப் போனேன். அங்கே வேலை முடிய ராத்திரி 12 ஆகும். அங்கிருந்து அஞ்சு மைல் தூரம் எங்க வீடு. அப்போ சம்பளம் 125 ரூபாய். அடுத்தடுத்த வருஷங்களில் பையன்கள் கேலி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. மனசுக்கு ரொம்ப சங்கடமாகப் போச்சு.

அப்புறம் அந்த வேலையை விட்டுட்டு வீடியோ கேசட்டுகளை வாங்கி கொஞ்சம் அதிகப்படியாக விலையை வைச்சு கொடுப்பேன். பத்து கிேலா மீட்டர் ஸ்கூல் முடிச்சு சுத்துவேன். தினமும் இருபது ரூபாய் வரைக்கும் கிடைக்கும். பிறந்தது காரைக்குடி. தமிழனாக இருந்தாலும், படிச்சது எல்லாம் மலையாளம். எங்க நகரத்தார் சமூகம் சொல்லிக் கொடுத்த தமிழ்தான் எனக்குத் தெரியும்.

இப்போ உலக நாடுகளில் பாதி வரைக்கும் போயிட்டு வந்திட்டேன். இந்த டெலிகிராம் பேச்சைப் பேசியே சமாளிச்சு வந்திடுவேன். அம்மாவோட அண்ணன் சென்னையில் பேங்க் மானேஜராக இருந்தார். என்னை பியூன் வேலைக்கு சேர்த்துவிட ஆசைப்பட்டார். அதுக்கு பத்தாவது ஃபெயில் ஆவதுதான் தகுதி. நான் இரண்டு மார்க் அதிகம் எடுத்து பாஸ் ஆகிட்டேன். அந்த வாய்ப்பும் போச்சு.

எங்க அம்மாவோட தம்பி கேரளா எஸ்டேட்டில் வேலை பார்த்தார். அங்கே போய் வேலை செய்தால், குளிர் ஆளை தூக்குகிற மாதிரி அடிக்கும். காரைக்குடி பஸ்ஸ்டாண்டில் லாட்டரி சீட் வித்திருக்கேன். வெயில் காலத்தில் பஸ்ஸில் சர்பத் வித்திருக்கேன். கடைசியில் சென்னைக்கு வந்திட்டேன். மயிலாப்பூரில் சாரதா நிவாஸ் ஹோட்டல் இருந்தது. அதற்கு வெளியே படுத்திருப்பேன்.

அங்கேயிருந்து தினசரி வடபழனி போறதுக்கு கையில் காசு இருக்காது. எப்போதும் நடைதான். காலையில் சாப்பிட பைசா இருக்காது. மதியம் ரூம்களுக்கு கொடுத்து அனுப்பிய கேரியரில் இருக்கிற மீதி சாப்பாட்டை பிரிச்சு சாப்பிடுவோம். அங்கே தங்கியிருக்கிற டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு சென்ட்ரலுக்குப் போய் கால்கடுக்க நின்று டிக்கெட் வாங்கிக் கொடுப்பேன்.

அதுக்கு சர்வீஸ் சார்ஜ் கேட்டு வாங்கிக்குவேன். அப்புறம் நிறைய இடத்தில் வேலை பார்த்தேன். இராம.நாராயணன் அப்பா மெடிக்கல் ஷாப் வைச்சிருந்தார். அதிலே போய் கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். மாதம் 300 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. கடுமையான வேலை. ஒரு நிமிஷம் உட்கார முடியாது. அப்புறம் மவுண்ட் ரோடு ராஜ் வீடியோ விஷனில் ஆபீஸ் பாயாக வேலை பார்த்தேன்.

‘சத்யா’ படம் பார்க்கும்போது கமல் சாரை பார்க்க போவேன். அவரோட மேனேஜர் டி.என்.எஸ். கிடைப்பார். வேலை கேட்பேன். ‘அபூர்வ சகோதரர்கள்’ எடுக்கும்போது சொல்லி அனுப்பிச்சார். அதுக்கு முன்னாடி டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சார் பழக்கம். அண்ணன், தம்பி மாதிரி ஒண்ணா பைக்கிலே திரிவோம். அவருக்கு ‘புரியாத புதிர்’ வாய்ப்பு வந்தது.

என்னை ஆர்.பி.செளத்ரிகிட்டே கூட்டிட்டுப் போய் ‘என்னை எந்த அளவு நம்பறீங்களோ, அதைவிட 200 சதவீதம் இவனை நம்பலாம்’ என்று அறிமுகப்படுத்தினார். அவங்ககிட்டே 24 படம் மேனேஜராக வேலை பார்த்தேன். நடுவில் கமல் சார் என்னை விடவில்லை. ‘தேவர் மகனு’க்கு கூப்பிட்டார். அங்கே போய்விட்டேன். பிரபு எனக்கொரு கால்ஷீட் குடுத்திருந்தார். அது தள்ளிப்போச்சு.

இதைப் பத்தி கமல் சார்கிட்ட பேசினேன். ஆனால், அவரே அதில் நடிக்க ‘காதலா காதலா’னு வந்துச்சு. தேனப்பனுக்கு கொடுத்த கஷ்டம் போதும்னு கடவுள் நினைச்சிட்டார் போல.  நான் செட்டிலாகிட்டேன். என்னோட பொண்ணு பெயர் ராஜலெட்சுமி. கமலோட அம்மா பெயர் அதுதான். அப்புறம் ரஜினி கூப்பிட்டு ‘படையப்பா’ பண்ணச் சொன்னார். பெரிய தொகையும், நல்ல மரியாதையும் கொடுத்தார். இத்தனைக்கும் நடுவில் சினிமாவில் நடிக்கணும்னு ஆசை இருக்கும்.

கல்யாண சீன் எடுத்தால் கூட்டத்தோடு கூட்டமாய் போய் உட்காருவேன். பாலா, ‘பிதாமகனி’ல் மகாதேவன் கேரக்டருக்கு கூப்பிட்டான். அப்ப நான் ரொம்ப பிஸி. ‘பஞ்சதந்திரம்’ முதற்கொண்டு, நிறைய படங்கள் இருந்தது. அப்புறம் பாலா கோபக்காரன், ஒரு அளவு நடிப்பை எதிர்பார்ப்பான், அதுக்குப் பிறகு பொறுமையை இழந்திடுவான்னு பயந்து, மாட்டேன்னு சொல்லிட்டேன். ஆனால் பிறகு வருத்தப்பட்டேன். அந்த கேரக்டரில் நடிச்சிருந்தால் பெரும் புகழ் அடைஞ்சிருப்பேன்.

இப்போ நித்திலன் ‘குரங்கு பொம்மை’க்கு கூப்பிட்டார். நான் நடிச்சிருக்கேன்னா அதுக்கு நித்திலனுக்கே பெயர் போய்ச் சேரணும். இந்தப் படம் எடுத்தபோதே கேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘மதுர வீரன்’லயும் கூப்பிட்டாங்க. நல்ல வேஷம். என்னுடைய வெற்றியே கமல், ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் தொடங்கி அத்தனை பேரின் நம்பிக்கையை பெற்றதுதான்.

சோதனை கொஞ்சமாக வரும்போது சோகம் வரும். அதுவே அதிகமா வந்தா ஞானம் வரும். பணம் வரும்போது தெரிஞ்சுக்கிட்டதை விட, ஞானம் வரும்போது தெரிஞ்சுக்கிட்டதுதான் அதிகம். நிகழ்வது எதுவாக இருந்தாலும் சந்தோஷமாக இருக்கப் பழகிட்டால் அதைவிட சௌகரியம் எதுவும் இல்லை. எனக்கு இந்த வாழ்க்கை படிப்பினைகளை மட்டுமில்லை, பக்குவத்தையும் கொடுத்திருக்கு. நேர்மையாக இருந்தால் என்ன கஷ்டப்பட்டாலும் முன்னால் வந்திடலாம்.

சொன்ன வார்த்தையையும், நேரத்தையும் கடைசி வரை கடைப்பிடிப்பேன். என்னை இவ்வளவு தூரம் நொந்துபோய் விடாமல் கொண்டு வந்தது அப்பா, அம்மா, மனைவிதான். வறுமையிலும் என்னை என்னிக்கும் கிணற்றை நாடி போகச் சொன்னதில்லை. எவ்வளவு குறைவா குடுத்தாலும் அதை வச்சு வீட்டை பார்த்துக்கிட்டாங்க.

இன்னிக்கும் அவங்களை நான் பெரிசா மதிக்கிறேன். இன்னிக்கும் அம்மா சொன்னதை கேட்பேன். தாய், தந்தையிடம் எதையும் கேட்க விரும்பாதவன் குணப்படுத்த முடியாத முட்டாள். வார்த்தைகளை அளந்து பேசுவதால், இன்றைக்கும் நிறைய நண்பர்களை வைச்சிருக்கேன். ஒரு சொல்லை தவறாக உச்சரித்துவிட்டால், அதை திரும்பப் பெற முடியாது. அதான் நான் சினிமாவில் படிச்ச பாடம்.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்