தமிழ்ப் பாரம்பரிய அடையாளங்கள் அண்ணாதுரைல இருக்கு...
கம்பீரமாக அறிவிக்கிறார் விஜய் ஆண்டனி
- நா.கதிர்வேலன்
தானாக வளர்ந்தவர், தன்னை வளர்த்துக் கொண்டவர் என்ற இரண்டு கட்டத்திலும் இருக்கிறார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக ஆரம்பித்தவரை இன்று தமிழ்த் திரையுலகமே நடிகராகக் கொஞ்சுகிறது. விஜய் ஆண்டனியின் அடுத்த அவதாரம் ‘அண்ணாதுரை’. தயாரிப்பாளர்களின் ஹாட் ஃபேவரிட்டான ஆண்டனி, திருவிழா முடித்த சாமி மாதிரி உட்கார்ந்திருக்கிறார். எங்களுக்கு நடுவே ஆவி பறக்க அமர்ந்திருக்கிறது பிளாக் டீ!
‘‘குடும்பத்தில் எல்லோருக்கும் படம் பிடிக்கணும். அதற்கான முைனப்புதான் எனக்கு எப்போதும் இருக்கும். குடும்ப நேசம், காதல், நல்உணர்வுகள், ஆக்ஷன்னு அடுத்தடுத்துப் போகும் ‘அண்ணாதுரை’. சினிமா எப்பவும் யதார்த்தத்திலிருந்து விலகிப் போயிடக் கூடாதுன்னு நினைப்பேன். சினிமாங்கிறது அப்படியே வாழ்க்கையைத் திருப்பிப் போட்ட ஜாடைதான். நல்லதாகவே இதுவரைக்கும் பண்ணியிருக்கேன். ஆனால், கணக்கை இன்னும் நேர்பண்ண வேண்டியிருக்கு. அதுதான் இப்போ ‘அண்ணாதுரை’ படம்...’’ நிதானமாகப் பேசுகிறார் விஜய் ஆண்டனி.
எப்படி வந்திருக்கு படம்? அண்ணாதுரை தமிழில் முக்கியமான பெயர்... ஒரு நல்ல ஒத்திசைவை, அலைவரிசையை கொண்டு வருகிற பெயர். அந்தப் பெயருக்கு மேலே படத்தில் எந்த அரசியலும் இல்லை. அறிமுக இயக்குநர் சீனிவாசன் கதை சொன்னபோது என்னை உள்ளே போய் உட்கார வைச்சது. இதில் வித்தியாசம் காட்ட முடியும். வேற ஓர் இடத்தை அடைய முடியும்னு பட்டது.
இரட்டை வேடம். வாழ்க்கையில் போட்டதில்லை. ஆனால், சினிமாவில் செய்து பார்க்க ஆசை. ஒரு ஸ்கிரிப்டாகவே சீனிவாசன் பிரமாதப்படுத்தியிருந்தார். அவர் கொண்டு போகிற பாதையில் போனாலே போதும். ஒன்லைனில் சொன்னால் கொஞ்சம் கொஞ்சமாய் நாம் இழந்து கொண்டிக்கும் உறவுகள்... உணர்வுகளை நமக்கு நிச்சயம் நினைவாய் மீட்டுத் தரும். இதில் அண்ணன், வாழ்க்கையை அவன் போக்குக்கு இழுத்திட்டுப் போவான். தம்பியை, வாழ்க்கை தன் போக்குக்கு இழுத்திட்டுப் போகும். அப்படிப் போகிற தம்பியை விதியைத் தாண்டி மதியால் அணணன் எப்படி முறியடித்தான் என்பதுதான் கதை.
எனக்கு ‘அண்ணாதுரை’ ஸ்கிரிப்ட்டைப் படிக்கும்போதே ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்த திருப்தி இருந்தது. சினிமா ஒரு ஜனநாயகக் கலை. பெயிண்டிங் மாதிரி கேன்வாஸ் ஆச்சு, ஓவியம் ஆச்சுனு ஒதுங்கிட முடியாது. எல்லாமே சேர்ந்தது. உணர்ச்சிகரமாகவும், மனசை உலுக்கவும், மனித உணர்வுகளைத் தேடித் தருகிற படமாகவும் இருக்கும். என் இயல்பில் இயக்குநரின் வழிகாட்டுதலில் இரட்டை வேடத்திற்கான வித்தியாசப்படுத்தலை செய்திருக்கேன்.
இது என் படம், விற்பனையாகணும், வெற்றி பெறணும் என்ற ஆசைகள் போக... சில சினிமாக்கள்லதான் எல்லார் நடிப்பும் பிரமாதமாக இருக்கும். கட்டுக்குள் அடங்கியிருக்கும். அப்படி ஒரு படமாகவும் ‘அண்ணாதுரை’ இருக்கும். இதில் தமிழ் பாரம்பரியத்தின் அடையாளங்களும் இருக்கு. டைரக்டர் சொல்லும்போதே நிறைய எமோஷன் வந்தது. நான் கவனம் செலுத்துவது நல்ல கதை... நல்ல டைரக்டர். பெரும்பாலான இடங்களில் என்னை இந்த காம்பினேஷன் காப்பாத்தி வந்திருக்கு. கதையோட கையைப் பிடிச்சிட்டுப் போற இயக்குநருடன் சேர்ந்து நடக்க வேண்டியது மட்டுமே என் கடமை.
உங்க பட லைன் - அப் ரொம்ப நல்லாயிருக்கு... இதில் உறுதுணையா இருக்கிறது என் மனைவி. இந்த ஸ்கிரிப்ட்டைக் கூட நான் முதலில் கேட்கலை. அவங்கதான் முதலில் கேட்டுட்டு ‘இதைக் கேளுங்க. இதுவரைக்கும் நீங்க டாக்டர், IT ஆளுனு இப்படித்தான் நடிச்சிருக்கீங்க. இதில் இருக்கிற எமோஷன் அவ்வளவு நல்லாயிருக்கு. இந்த ஸ்கிரிப்ட்டின் பவர் அப்படியிருக்கு’னு சொன்னாங்க. அப்புறம் வெளியே ஊர்ப்பக்கமாகப் போய் ஒரு படம்னு இருந்தால் நல்லாயிருக்கும்னு அபிப்ராயப்பட்டாங்க. அவங்க கணிப்பு நல்லா இருந்தது.
ஹீரோயின்...? டயானா சம்பீசா, மகிமா, ஜுவல் மேரின்னு மூணு பேர் இருக்காங்க. அவரவர்களுக்கான இடங்கள் நல்லா வந்திருக்கு. டயானா பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி. மும்பையிலிருந்து கூட்டி வந்து தமிழ் சொல்லிக் கொடுத்து பாடுபடணும்னு அவசியமெல்லாம் இல்லாமல் இயல்பா நடிச்சாங்க.
எங்க இரண்டு பேரையும் யூனிட்டில் பார்த்தால் ஜோடிப் பொருத்தம் நல்லாயிருக்குனு எல்லோரும் சொல்றாங்க. நானே அதைச் சொன்னால் சரியா இருக்குமான்னு தெரியலை. நீங்கதானே ‘தேர்ட் அம்பயர்’, நீங்கதான் சொல்லணும். திருக்கோயிலூரில் 58 நாட்கள் எடுத்தோம். கடைசி 15 நிமிடங்கள் மிக முக்கியமானதாக அமைஞ்சிருக்கு. ஐந்து வில்லன்கள்... ஒவ்வொருத்தரும் தனக்கான இடத்தை நிறைவு செய்து கொடுத்திருக்காங்க. காளிவெங்கட் ஒரு அருமையான இடத்தில் வருகிறார்.
நீங்களே மியூசிக்... இன்னும் கவனமா செய்யலாமே... அதான்! விடாப்பிடியான பிடிவாதம் எல்லாம் கிடையாது. நாலே பாடல்கள். மிகவும் அவசியமான இடங்களில் வந்திருக்கு. இனிமேல் சினிமாவில் பாடல்களே இல்லாமல் போயிடுமோ என்ற கட்டம் அருகில் வந்துகிட்டே இருக்கு. ஒவ்வொரு படம் பண்ணும்போதும் உண்மையில் எனக்கு பயமிருக்கு. இந்த இடத்தைக் கொடுத்ததற்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள்.
ரொம்ப யதார்த்தமாக ‘கருவிலே திருவுடையான்’னு சொல்வாங்களே, அது மாதிரி, எதுவும் இல்லாமல் வந்தவன் நான். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் அது மக்களுக்கான விஷயமாக இருக்கணும்னு நினைக்கிறேன். அதுதான் சந்தோஷம். இந்த படத்தின் திரைக்கதையில் அதிகம் இன்வால்வ் ஆனதில் படத்தொகுப்பையும் நானே ஏற்றிருக்கிறேன்.
அதனால் ஷூட்டிங் முடிஞ்ச கையோடு இயக்குநரோடு உட்கார்ந்து அன்னன்னிக்கு பார்த்து எடிட் செய்துவிடுவதும், ேதவைப்பட்டால் மறுபடியும் சுவை கூட்டுவதும் எளிதாக இருக்கிறது. நல்ல சுவாரஸ்யமான சினிமா எது என்பதில் உங்களுக்கு ஒரு கருத்திருக்கும். எனக்கு ஒரு கருத்திருக்கும். ஆனால், நாம இரண்டு பேரும் ஒத்துப்போகிற ஓர் இடம் வருமில்லையா? அந்த இடத்தில் ‘அண்ணாதுரை’ இருக்கும்.
இவ்வளவு வெற்றிக்குப் பிறகும் அதிகம் வெளியில் வரமாட்டேங்கிறீங்க... எப்பவும் நடிச்சுக்கிட்டு இருக்கிற சினிமா மட்டுமே முழு கவனத்தில் இருக்கு. எனக்கு எந்தச் செய்தி அவசியமோ, அந்த விஷயம் என் காதுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. வீட்டிற்குப் போனதும் தொழிலிலிருந்து எப்படி துண்டித்து மற்றவர்கள் இருக்கிறார்களோ அதுதான் எனக்கும்.
இது சௌகரியமா இருக்கு. என் பிழைகளைத் திருத்திக் கொள்வதுதான் என் கேரியர். வீடு, மனைவி, மக்கள்னு ஒரு சேர இருக்கிறது, அடுத்த நாள் அவசர வேலைக்கு ஏதுவாக இருக்கு. என் வாழ்க்கை இப்படி கடந்துபோவதுதான் எனக்கும் சம்மதமா இருக்கு. சந்தோஷமா இருக்கேன். அது நீடிக்கணும் என்பதுதான் என் ஆசை. மிகப் பிரபலமானவரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைவிட, என்னோடு இருந்தவர்களின் விஷயங்களுக்கு முன்னுரிமை தருகிறேன். அதுவே எனக்குப் பிடிச்சிருக்கு.
|