ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 42

முதல் சந்திப்பிலேயே பிடித்துவிடக்கூடிய முகவெட்டும் தாடியும் கம்பீரமும் அண்ணன் வீர.சந்தானத்துடையது. வாக்கியங்களை விட்டுவிட்டு உதிர்த்தாலும் அவற்றுக்கு இடையே விரவிவரும் கவிநயம் யாரையும் வசீகரித்துவிடும். இயக்குநர் பாலுமகேந்திரா அந்த வசீகரத்தால்தான் ‘சந்தியாராக’த் தில் அவரை நடிக்கவைத்தார். அவரைத் தொடர்ந்து பல இயக்குநர்கள் தங்கள் படங்களில் அவரைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள்.

இளவயதில் எம்.ஜி.ஆர். ஆகவேண்டும் என ஆசை கொண்டிருந்தாலும், அவர் நடிக்க வந்தபோது அந்த ஆசையிலிருந்து வெகுதூரம் விலகியிருந்தார். எந்த பாத்திரமானாலும் ஏற்று நடிக்கும் ஆவலை அவர் அறவே தவிர்த்திருந்தார். முழுநேர நடிகனாக தன்னை நிறுவிக்கொள்ள அவரால் முடிந்திருக்கும். என்றாலும், வர்த்தக சினிமா வலையில் சிக்கிக்கொள்ள அவர் துளியும் விரும்பவில்லை.

எத்தனையோபேர் வற்புறுத்திக் கேட்டபொழுதும்கூட எண்ணிச் சொல்லும் படியான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அவர் நடிக்க ஒப்புக்கொண்ட படங்கள், ஓரளவுக்காவது தமிழ் வாழ்வியலைச் சொல்லும்படியான படங்களாக இருந்தன. இயக்குநர் வ.கெளதமன் இயக்கிய ‘மகிழ்ச்சி’ திரைப்படத்திலும் அவர் நடித்திருக்கிறார். எழுத்தாளர் நீல.பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ நாவலைத் தழுவி எழுக்கப்பட்ட அப்படத்தில் நடிக்க வேண்டுமென கெளதமன் கோரிக்கை வைத்தபோது, “அன்புகொண்ட உனக்காக தொழுநோயாளியாகவும் நடிக்கத் தயார்” என்றிருக்கிறார்.

கெளதமன் கேட்கப்போனதும் அப்படியான கதாபாத்திரத்திற்காகத்தான். சொல்லத் தயங்கிக்கொண்டிருந்த வேளையில், அவராகவே அப்படிச் சொன்னதை ஆச்சர்யத்தோடு அப்படம் வெளிவந்த சமயத்திலேயே ஒரு நேர்காணலில் கெளதமன் நெகிழ்வோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். தொழுநோயாளி கதாபாத்திரத்தில் நடிக்க, வீட்டிலிருந்தே அந்த வேசத்தைப் போட்டுக்கொண்டு படப்பிடிப்புத் தளத்திற்குப் போயிருக்கிறார். கிழிந்த, அழுக்கான, பார்க்கவே சகியாத கோலத்தில் படப்பிடிப்புக்குப்போன அவர், தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் வி.எஸ்.ராகவனின் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் போய் அமர்ந்திருக்கிறார்.

தொழுநோயாளி வேடத்திலிருந்தாலும் திமிரும் செருக்கும் நிரம்பிய அவருடைய உடல்மொழி யாரையும் அச்சுறுத்தும். தனது அருகில் வந்து அமர்ந்திருக்கும் தொழுநோயாளியைப் பார்த்த பழம்பெரும் நடிகரான வி.எஸ்.ராகவனுக்கோ அந்தக் கோலமும் அவர் செய்கைகளும் அசூயையாகப் பட்டுவிட்டன. உடனே, தனக்கு அருகில் யாரோ ஒரு பிச்சைக்காரன் வந்து அமர்ந்திருக்கிறான் என குய்யோ முய்யோ என சத்தம் போட்டிருக்கிறார்.

அப்போதும் வீர. சந்தானம் தன்னை யாரென்றே சொல்லாமல் பராக்குப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். “முதலில் இந்த ஆளை வெளியே அனுப்புங்கள். இல்லையென்றால் நான் நடிக்க மாட்டேன்” எனவும் ராகவன் ஆதங்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகு கெளதமன் வந்து விவரத்தை விளக்கிய பிறகுதான் படப்பிடிப்பு அமைதியாகத் தொடர்ந்திருக்கிறது.

வேசம் எதுவென்றாலும் பொருந்திப்போகக்கூடிய சாயலை அவர் முகம் கொண்டிருந்தது. எதையும் உள்வாங்கிக்கொண்டால் அதுவாகவே மாறிவிடும் அற்புதமான கலைஞராகவும் அவரிருந்தார். அவர் நடிகராக வேசமேற்ற பல படங்களுக்கு நான் பாடல் எழுதியிருக்கிறேன். ஒலிநாடா வெளியீட்டு விழாக்களில் சந்திக்கும்போது, “கேட்டேன், நல்லா இருந்துச்சு’’ என இறுக அணைத்துக்கொள்வார்.

“நீ வருவேன்னு தெரியும். ஆனா ஊடக அரசியலையும் திரைத்துறை சவால்களையும் எதிர்கொண்டு நீச்சலடிக்கிறியே அதுதான் பெரிய சாதனை” என உச்சிமோர்ந்து அவர் நெற்றியில் இட்ட முத்தக் கறைகளை, தற்போதைய மரணக் கண்ணீர் வந்து அழித்துக்கொண்டிருக்கிறது. அண்ணன் வீர.சந்தானம் நடிப்பிற்கான தேசிய விருதையும் ஒருமுறை பெற்றிருக்கிறார். அரிதாரம் பூசிக்கொண்டு திரையில் தோன்றுவதன் மூலம் அதிகமான மக்களிடம் தம்முடைய குரலும் ஓவியங்களும் பரவும் என்பதற்காகவே நடிக்க ஒப்புக்கொண்டதாக ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.

இயக்குநர் மீராகதிரவனின் ‘அவள் பேர் தமிழரசி’ என்னும் திரைப்படத்தில் தோற்பாவைக் கூத்துக் கலைஞராக நடித்திருக்கிறார். இயல்பிலேயே அண்ணன் வீர. சந்தானம் தோற்பாவைகளின் வண்ணங்களையும் வடிவங்களையும் உட்செரித்தவர். இன்னும் சொல்லப்போனால், தோற்பாவைகளை நவீனஓவிய மரபாக்கிய பெருமையும் அவருக்குண்டு.

‘பீட்சா,’ ‘கத்தி,’ என அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் ‘சந்தியாராக’த்திற்குப் பிறகு மனதில் பதிந்த கதாபாத்திரமாக அதைத்தான் சொல்ல முடியும். நலிந்த கூத்துக்கலைஞனின் குரலை மீராகதிரவன் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருப்பார். படம் வெகுவாக சிலாகிக்கப்படவில்லை. என்றாலும், அண்ணன் வீர.சந்தானத்தின் நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது.

அவர் நடிக்கவில்லை, அப்படியே வாழ்ந்திருக்கிறார் எனவும் சில பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தன. உண்மையிலேயே அவர் கூத்துக் கலையை உள்வாங்கியவர் என்பது பலருக்குத் தெரியாது. கே.சி.எஸ்.பணிக்கர், எஸ்.தனபால், ஏ.பி.சந்தானராஜ் ஆகிய ஓவிய, சிற்ப மேதைகளை ஆசியராகக் கொண்டிருந்த அவர், தனக்கான ஓவிய பாணியை தஞ்சாவூர் மரபு ஓவியங்களிலிருந்து உருவாக்கிக் கொண்டதாகக் கருத இடமுண்டு.

பிற்காலச் சோழர்களால் உருவாக்கப்பட்ட தஞ்சாவூர் ஓவிய மரபு, நாயக்கர், மராட்டியர் வருகைக்குப்பின் உச்சத்தை அடைந்தது. சிற்பக்கலை, கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்கள் ஒன்றிணைந்த மரபே தஞ்சாவூர் பாணி ஓவிய மரபு. தஞ்சாவூர் பாணி என்பது தனித்த தன்மையுடையதல்ல. அது ஏனைய கலை வடிவங்களின் கூட்டுக்கலவையே. தோற்பாவைகள், திரைச்சீலைகள், சுதைச் சிற்பங்கள், வெண்கலம் சார்ந்த தஞ்சாவூர் தட்டுகள், சுவரோவியங்கள் ஆகியவற்றையே தஞ்சாவூர் பாணி என்கிறோம்.

அண்ணன் வீர.சந்தானம், தென்னிந்திய தோற்பாவை மரபையும் பாரம்பரிய வண்ண மரபையும் சுவரோவியக் கோடுகளையும் தன்னுடைய ஓவியங்களில் கொண்டுவந்தவர். நம்முடைய பெண்கள் வாசலில் இடும் கோலங்களையும் மரச்சிற்பங்களில் பதியப்படும் பல்வேறு விதமான உருவங்களையும் இணைத்து ஒரு புதிய மரபை உருவாக்கிக் காட்டியவர். சின்னதும் பெரியதுமாக நீளும் அவருடைய கோடுகள், உருவத்திலிருந்து அரூபங்களைச் சமைத்தன.

அதனால்தான் வீர.சந்தானத்தின் ஓவியங்கள் “உள் மனதில் தாக்கங்களை நிகழ்த்தும் மந்திர சக்தி மிக்கவை” என பேராசியர் வீ.அரசு எழுதியிருக்கிறார். தாந்திரிக மரபையும், கலை கலைக்காக என்னும் பார்வையையும் ஆரம்பத்தில் கொண்டிருந்த அண்ணன் வீர.சந்தானம், ஒரு காலத்திற்குப் பிறகே தன்னுடைய பாதை எதுவென்று வரையறுத்திருக்கிறார்.

“ஒரு நடன மாதையோ, ஒரு தெய்வத்தின் நிலையையோ அல்லது இயற்கை எழிலையோ வரைந்தால் ஓவியமென்று கொண்டாடுபவர்கள் தன் சகல பலத்தையும் ஒன்று திரட்டி, கழுத்து நரம்பு புடைக்க ரிக்‌ஷா இழுப்பவனை வரைந்தால் ஓவியமில்லை என்கிறார்களே” என வருந்திய அவர், வாழ்க்கைக்கும் ஓவியத்திற்குமுள்ள இடைவெளியைக் குறைக்க விரும்பினார்.

குறைக்க விரும்பினார் என்பதுகூட சரியில்லை. இடைவெளியே இருக்கக்கூடாது என்பதுதான் அவர் எண்ணமாயிருந்தது. ஈழத்தில் தொடங்கிய இனப்படுகொலைக்கு எதிராக ஆரம்பித்த அவருடைய ஓவியப் பயணம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், அப்போரின் அவலங்களைக் கல்லில் சிற்பங்களாக வடிக்கும்வரை நீண்டது. தஞ்சையை அடுத்த விளாரில், அப்பணியில் அவர் ஈடுபட்டிருந்த நேரத்தில் ஒருமுறை அவரைப் பார்க்கப் போயிருந்தேன். கனல் கக்கும் கண்களுடன் இரவுபகலாக அப்பணியை அவர் செய்துகொண்டிருந்தார்.

“சோழர் கால கல்வெட்டுகளில் தமிழனின் வீரத்தைக் காண்கிறோம். இதோ நான் செய்து கொண்டிருக்கும் இந்தக் கல்வெட்டுகள், தமிழனின் சோகத்தைச் சொல்லப் போகின்றன” என வானத்தைப் பார்த்து கையுயர்த்தினார். ஈழம் விடுதலை அடைவதைப் பார்க்காமல் நான் கண்மூட மாட்டேனென சொல்லிக்கொண்டிருந்தார்.

அதையே என் நூல்கள் வெளியீட்டிலும் பேசினார். நம்பிக்கை பொய்த்துப் போவதில்லை என எத்தனையோ பேர் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும், நிஜம் எப்போதும் நம்பிக்கையின் எதிர்த் திசையைத்தான் கலைஞர்களுக்குக் காட்டுகிறது. உலகமே கூடி நின்று ஓர் இனத்தை அழித்தொழிக்கும் காரியத்தில் ஈடுபடுகையில் அதை எதிர் கொள்ள ஆயுதங்களாலேயே முடியாதபோது, காகிதங்களாலும் தூரிகைகளாலும் என்ன செய்துவிட முடியும்?

தோற்கக்கூடியவர்களை நான் தம்பிகளாகப் பெறவில்லை என மேடைதோறும் அவர் முழங்கிவந்தாலும், காலத்தால் தோற்கடிக்கப்பட்ட அண்ணனுக்காக அவருடைய தம்பிகள் கண்ணீர் வடிக்கும் நிலையே ஏற்பட்டிருக்கிறது. அண்ணன் வீர.சந்தானம், அமைப்புகளின் அளவைப் பார்க்காமல் தன்மையைப் பார்த்தே ஆதரவளிப்பவர். லட்சம்பேர் கூடியிருக்கும் மேடையானாலும் பத்துபேர் மட்டுமே கூடி ஆலோசிக்கும் அரங்கமானாலும் தன்னுடைய பங்களிப்பை தமிழ் தேசிய நலனுக்காக செய்து கொண்டிருந்தவர்.

ஓவியம் மூலம் அவர் ஈட்டிய தொகையை பல சிற்றிதழ்களுக்குக் கொடையாகக் கொடுத்தவர். ‘அரங்கேற்றம்,’ ‘இனி,’ ‘தோழமை,’ ‘நந்தன்,’ ‘தமிழர் கண்ணோட்டம்’ ஆகிய இதழ்களில் அவர் தொடர்ந்து ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார். ஓவியர் ஆதிமூலம் சோழ மண்டல ஓவிய கிராமத்தை உருவாக்கியதைப் போல தாமும் தாம்பரத்தை அடுத்த படப்பையில் ஓவிய கிராமம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டார்.

எழுத்தாளர்களும் ஓவியர்களும் ஒன்றிணைந்து செயலாற்றும் தளமாக ஓர் இடத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஓரளவு சாத்தியப்படுத்தினார். மனைகளை வாங்கி மிகக் குறைந்த விலைக்குப் பகிர்ந்தளித்தார். இப்போதும் ஓவியர் விஸ்வம், நெடுஞ்செழியன், ராமன் போன்றவர்கள் அங்கிருந்தே தனது ஆக்கங்களை உருவாக்கி வருகிறார்கள்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்