‘‘கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமா கொடுங்கன்னா ஃபேனையும், மிக்ஸியையும் கொடுக்கிறாங்க...’’
விஷால் ஓபன் டாக்
- நா.கதிர்வேலன்
‘துப்பறிவாளன்’... இதோ திரையைத் தொடுகிறது. இப்படத்துக்காக மிஷ்கின் ‘பெண்டு’ நிமிர்த்திய களைப்பெல்லாம் போய் பளிச்சென இருக்கிறார் விஷால். தமிழ் சினிமாவின் துயரங்களைப் போக்கிவிட துடிக்கிற கனவுகளோடு இருக்கிற நடிகர். அத்தனை வேலையிலும் ‘‘பேசலாமா’’ என புன்னகையோடு சொன்னார். ‘‘என் கேரியரில் ‘துப்பறிவாளன்’ முக்கியமான படம்.
என் பயோ-டேட்டாவில பெருமையாக எழுதிக்க முடிகிற படம். ஒரு நல்ல டிடெக்டிவ் ஸ்டோரியை தமிழில் பார்த்த ஞாபகம்கூட தூரத்திலதான் இருக்கு. சீட்டு நுனியில் உட்கார வைக்க முயற்சி நடந்திருக்கு. எட்டு வருஷமாக நாங்க இரண்டு பேரும் சேர்ந்து படம் செய்யணும்னு முயன்றோம்.
அது இப்ப நடந்திருக்கு. என் தோற்றம், பேசுகிற விதம், ஆக்ஷன்ஸ்னு வழக்கமான நடைமுறை பழக்கங்களைக்கூட மாத்தியிருக்கார். இதுக்கு முன்னாடி நான் நடிச்ச எந்தப் படத்தையும் மிஷ்கின் பார்த்ததில்லை. எங்காவது ஒரு காட்சி, ஒரு விளம்பரம், ஒரு போட்டோ பார்த்திருக்கலாம். அவ்வளவுதான். இதனால் அவருக்குத் தேவையான விஷாலைக் கொண்டு வர முடிஞ்சிருக்கு...’’ சிரிக்கிறார் விஷால்.
மிஷ்கின்னா காட்சிகளை ஒழுங்குக்கு கொண்டு வர நிறைய மெனக்கெடுவாரே... என்னோட இந்த தோற்றம், நடிப்பு, ஃபைட் இப்படி எல்லாத்தையும் தீர்மானிச்சு வடிவமைச்சது மிஷ்கின்தான். மத்த யுனிவர்சிட்டியில் படிக்கிறதுக்கும், ஹார்வர்டு யுனிவர்சிட்டியில் படிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கில்லையா... அதுதான். ஒரு நாள், ஒரு காட்சினு இல்லை, தினந்தோறும் கற்றுக் கொள்ளுதல் நடக்கும். இந்த நேரத்தில் இப்படி ஒரு படம் எனக்குத் தேவைப்பட்டது. ஒரு மாற்றம் அவசியம். புதுப்பித்துக் கொள்வது நடந்தேற வேண்டிய காரியம்தான்.
பேக்ரவுண்ட், திரைக்கதை, casting இப்படி எல்லாமே புதுசா இருக்கு. ஒரு வழக்குன்னு வரும்போது அதை நான் கைக்கொள்கிற விதம் யூகிக்க முடியாதபடிக்கு இருக்கும். நுண்ணறிவோடு இருக்கிற ‘துப்பறிவாள’னைக் காட்டியிருக்கார். ஒரு ஸ்டோரி போர்டு வரைஞ்சு, அத்தனை தீர்மானமாக திட்டம் போட்டு எடுத்திருக்கிறார். இப்ப வரக்கூடியவங்க இந்த மாதிரி செய்தால் ரொம்ப நல்லா இருக்கும். முதல் நாளிலேயே படத்தைப் பத்தி தெளிவு வந்திடுது.
VFFங்கிற கம்பெனிக்கும் எனக்கும் இது தரமான படம். என் கூடவே இருக்கிற பிரசன்னா, நான் பார்த்து சரி பண்ண வேண்டிய பாக்யராஜ், வினய், தீரஜ், ஆண்ட்ரியா... இன்னும் ஒருத்தர்னு ஐந்து பேர். நிறைய சவால்கள் இருக்கு. கொடுஞ்செயல்கள் புரிகிற மனிதர்களைப் பார்த்து ஒடுக்க வேண்டியிருக்கும். நிச்சயம் மக்களுக்கு புதுசா இருக்கும்னு நம்புகிறேன்.
அரோல் கரோலி பின்னணி இசை எப்படி? இதுவரை கண்டிராத இசையமைப்பு. இப்ப இங்கே வித்தியாசமான படங்களையும் ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதில் பாடல்களுக்குக்கூட அவசியமில்லாமல் போச்சு. இதில் பாட்டு இருந்தால் தொந்தரவாக இருக்கும். மீறியும் பாட்டு வச்சால் ரசிகர்கள் என்னைத்தான் திட்டித் தீர்த்திருப்பாங்க. விஷால்தான் மிஷ்கின்கிட்டே வற்புறுத்தி பாட்டு வைச்சிருப்பார்னு சொல்லியிருப்பாங்க. யாருக்கு பாராட்டு வருதோ இல்லையோ கரோலி பெரிய அளவில் கவனிக்கப்படுவார். அவ்வளவு உழைப்பு.
உங்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசுகிறார் மிஷ்கின்... அவரை நான் ஒரு அண்ணனாகவே பார்க்கிறேன். இந்தப் படம் மூலமா கிடைச்ச பொக்கிஷம் அவர். என்னைக் கேட்டால் என்னோட, அவரோட கேரியர் முழுவதும் புக் ஆகிவிட்டது. அவர் படம் எடுத்தால் நான் தயாரிப்பேன். அவர் படங்களில் நானே ஹீரோவாக இருக்க ஆசைப்படுகிறேன். மிஷ்கினை பங்கு போட்டுக்க விரும்பலை. மிஷ்கின் என்னோட சொத்து. யாரோடயும் ஷேர் பண்ணிக்க மாட்டேன். மிஷ்கின் ஒரு அண்ணனா எனக்குத்தான் சொந்தம். அதுல ஒரு சுயநலமும் இருக்கு. அவரது புத்திசாலித்தனத்தை வைச்சு நிறைய நல்ல படங்கள் பண்ணலாம். அவரை நான் விடுவதாக இல்லை. அதுதான் உண்மை.
தயாரிப்பாளர் சங்கத்தில் துணிந்து முடிவுகள் எடுக்கிறீங்க... எத்தனை நாள்தான் வேடிக்கை பார்க்கிறது. ஊழல் ஏதோ ஓர் இடத்தில் சின்ன அளவில் இருக்குன்னா பொறுத்துப் பேசலாம். எல்லோரும் சேர்ந்து தயாரிப்பாளர்களை ஏமாற்றுவதாக இருந்தால் எப்படி பார்த்துக்கிட்டு இருக்கிறது! தயாரிப்பாளர் சங்கத்தை சுத்தமாக்கவே நாலு மாசம் ஆச்சு. இனிமேல்தான் டெவலப்பிங் ஸ்டேஜ்.
தயாரிப்பாளர் அவ்வளவு கஷ்டப்பட்டு படம் தயாரித்தால் அதை பலபேர் கூறுபோட்டு சம்பாதிக்கிறாங்க. படம் வெளிவந்த மூணாவது நாள் யூடியூப்பில் போட்டு அவனவன் பணம் சம்பாதிக்கிறான். படம் செய்தவர்கள் நிலை குலைந்து போய்விடுகிறார்கள். யாருமே நின்னு, உட்கார்ந்து யோசிக்கலை! என்ன இது, எங்கே போகுது, காசை யார் ஆட்டையப் போடுறது, இதை எப்படி சரிபண்ணலாம்னு யோசிச்சோம். பிரச்னையை பொதுவில் வைச்சால்தான் ஏதாவது நல்லது நடக்கும்னு இப்ப ஒண்ணு சேர்ந்திட்டோம். இனிமேல் ஏமாத்த முடியாது. கேபிள் டி.வி.க்காரங்க சம்பாதிக்கிறது எல்லாம் அநியாயம். அதில் ஒரு பகுதியைத்தான் கேட்கிறோம். சாமி சத்தியமா எனக்கு நடிகர் சங்கத்திற்கு வரணும்னு ஐடியாவே கிடையாது. கேள்வி கேட்டேன். பதில் வரல.
இங்க வந்து உட்கார வைச்சிட்டாங்க. தயாரிப்பாளர் சங்கத்திலே கேள்வி கேட்டால், அங்கேயும் பதில் வரல. இங்கேயும் வந்து உட்கார வைச்சிட்டாங்க. இது ப்ளான் பண்ணி வந்த பாதை இல்லை. உள்ளே இருக்கிற தடங்கல்களை நீக்க இப்பத்தான் எல்லாமே கூடிவருது. ஜிஎஸ்டி கொண்டு வந்து சாகடிக்கிறாங்க.
மறுபக்கம் கேளிக்கைவரி போட்டும் சாகடிக்கிறாங்க. பேங்குல லோன் கிடைக்காது, வட்டிக்கு கடன் வாங்கித்தான் தயாரிக்கணும். இந்தத் தொழிலுக்கு வந்தவங்களுக்கு இதை விட்டால் வேறு தொழில் தெரியாது. இதுக்குள்ளே வந்திட்டால் புலி வாலை பிடிச்ச மாதிரி. அதுமாதிரி சினிமாவுக்கு பிரியத்தால் வந்திட்டு விட்டுப்போறது அவ்வளவு சுலபத்தில் முடியாது.
அனிதா தற்கொலையிலும் அரசை ரொம்ப கடுமையா சாடியிருந்தீங்க... சக்திக்கு ஏற்ற மாதிரி, வருமானத்திற்கு ஏற்ற மாதிரி நானே ஒரு ட்ரஸ்ட் நடத்துறேன். அதுக்கே அவ்வளவு அப்ளிகேஷனஸ் வருது. இவ்வளவு மார்க் எடுத்திட்டு சீட் கொடுக்காமல் இருந்தால், அதற்கான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் எப்படி? இதுக்கு மேலே அந்தப் பெண் அனிதா எவ்வளவு மார்க் எடுத்திருக்கணும்! இதை கவர்மென்ட் உணராமல் இருக்கிறதே, எப்படி? ரூபாய் நோட்டை மதிப்பிழக்க வைச்சீங்க... ஓகே. கருப்புப் பணம் காணாமல் போச்சா... இல்லை.
பல அரசியல்வாதி களிடம் கோடி கோடியாக பணம் இருந்து பிடிச்சாங்க. விவசாயிகள் டில்லிக்குப் போய் என்னென்னவோ செய்து பார்த்தாங்க. ஒண்ணும் நடக்கலை. கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமா கொடுங்கன்னா ஃபேனையும், மிக்ஸியையும் கொடுக்கிறாங்க. இங்கே யாரும் சரியா இல்லை. இருக்கவிடாது போலிருக்கு இந்த அரசியல்.
|