ஆறு பெண்கள்... 43 நாட்கள்... 38 ஆயிரத்து 892 கி.மீ தூரம்... கடல் ராணிகள்!
- ச.அன்பரசு
கடல் பயணமே ஒரு சாகசம்தான். தொடக்கத்தில் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். அது ஓரிரு நாட்கள்தான். பிறகு எல்லாமே போரடிக்கும்; அயர்ச்சியாக இருக்கும். நிலம் தெரியவே தெரியாது. எங்கு பார்த்தாலும் சுற்றிலும் தண்ணீர்... உடலெங்கும் பிசுபிசுக்கும் உப்புக் காற்று.மேலே நீல வானம்; கீழே நீலக் கடல். சூரியனும் நிலவும் வந்து வந்து போகும். மனிதர்களையும் நிலத்தையும் காணாமல் கண்கள் ஏங்கும்.
ஒரு சில நாட்கள் கடலில் இருந்தாலே இப்படி என்றால்... மாதக்கணக்கில் படகில் மிதக்க வேண்டும் என்றால் எப்படி இருக்கும்? இப்படி உயிரைப் பணயம் வைக்கும் சாகசத்துக்குத் தயாராகிறார்கள் இந்திய கடற்படையைச் சேர்ந்த வர்திகா ஜோஷி, பிரதிபா ஜாம்வால், ஸ்வாதி, விஜயாதேவி, ஐஸ்வர்யா, பாயல்குப்தா ஆகிய ஆறு பெண்கள்.
நவிகா சாகர் பரிக்ரமா எனும் திட்டத்தில்தான் இந்தியப் பெண் கடற்படை வீராங்கனைகள் கோவா டூ கேப்டவுன் வரை 38 ஆயிரத்து 892 கி.மீ தூரத்தை 43 நாட்கள் பயணித்து கடக்கப் போகிறார்கள். உலகிலும், ஆசிய அளவிலும் பெண் கடற்படையினர் இப்படி பயணம் செய்வது இதுவே முதல் முறை. நவிகா சாகர் பரிக்ரமா எனும் கடற்படை நிகழ்வில் இது மூன்றாவது பயணம்.
முதல் பயணம் முன்னாள் கேப்டனான திலீப் தோண்டேவுடையதும் (2009 - 10), இரண்டாவது பயணமாக, கமாண்டர் அபிலாஷ் டாமியினுடையதும் (2012 - 2013) சாதனைகளாக பதிவாகியுள்ளன. ‘‘இந்த நெடும் பயணத்தில் மனநிலையை சீராக வைத்துக் கொள்வதே பெரிய சவால். இந்தப் பயணத்துக்காக நாங்கள் ஆறு பேரும் இரண்டு ஆண்டுகள் கடுமையாக பயிற்சி எடுத்துள்ளோம்...’’ என உற்சாகமாகப் பேசுகிறார் பிரதிபா ஜாம்வால்.
முதலில் மூன்று பெண்களை மட்டும்தான் படகு பயணத்துக்கு கப்பல் படை தேர்வு செய்திருந்தது. பின்னர்தான், அதனை ஆறு பேராக மாற்றியது. இதில் இருவர் கப்பல் பொறியாளர்கள், இருவர் போக்குவரத்து அதிகாரிகள், இருவர் கடற்படையின் கல்வித்துறை சார்ந்தவர்கள். ‘‘மணிப்பூர் பெண்ணான எனக்கு இதைவிட சிறந்த வாய்ப்பு வாழ்வில் கிடைக்காது...’’ என்று மகிழ்ச்சியில் துள்ளும் விஜயாதேவி, தன் இருபது வயதில் கடற்படைக்குத் தேர்வானவர்.
‘‘எங்களுடைய பயணம் அச்சுஅசல் கேப்டன் தோண்டேவின் 2009ம் ஆண்டு ட்ராவல் பிளான்தான். அதன்படி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபாக்லாந்து தீவுகள், தென் ஆப்பிரிக்கா எனச் செல்வோம்...’’ என்கிறார் ரிஷிகேஷைச் சேர்ந்த முதல் கப்பல் படை பெண் வீரரான வர்திகா ஜோஷி. கப்பல் படையில் ஜோக்குகளை அடிக்கடி அள்ளிவிட்டு ரகளைக் கச்சேரி செய்யும் ஐஸ்வர்யா, போடபட்டி பங்கி ஜம்பிங், ஆழ்கடல் நீச்சல் என அதிரடிக்கும் லேடி.
‘‘எல்லாமே ட்ரெய்னிங்தான். எதுக்கு டென்ஷன்?’’ என கூலாக தோள்களைக் குலுக்கிப் புன்னகைக்கிறார் ஒட்டுமொத்த டீமுக்கும் ஜாலி பேபிம்மாவான பாயல் குப்தா. ‘‘பெண்களுக்கு லிமிட் எல்லாம் கிடையாது. நான் பெண்ணாக இருந்து இந்தப் பயணம் செய்வதைப் பெருமையாக நினைக்கிறேன்...’’ காலரைத் தூக்கிவிட்டுச் சொல்கிறார் ஸ்வாதி.
கடந்த 10ஆம் தேதி ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்த பயணம். சாதகமான வானிலையைப் பொறுத்து மார்ச் 2018க்குள் முடிக்க வேண்டும் என்பது திட்டம். ‘‘படகில் செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த பயண வழியில் உள்ள நாடுகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது பாதுகாப்பான பயணம்தான். ஆனால், கடல் என்பது இயற்கையின் தாய்மடி. இயற்கையை நாம் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் இந்தப் பயணத்தில் உள்ள சவால், சாகசம், த்ரில் எல்லாம். நமது பெண்கள் இதைச் சாதிப்பார்கள்...’’ எனப் பெருமிதமாகப் புன்னகைக்கிறார் அட்மிரல் அனில் சாவ்லா.
INSV தாரிணி
பிப்ரவரி 2017ல் கடற்படையில் சேர்க்கப்பட்டது தாரிணி. 6 பேர் பயணிக்க ஏற்றபடி 55 அடி நீளம் கொண்ட பாய்மரப் படகு இது. கோவாவின் அக்வாரியஸ் கப்பல் கட்டும் இடத்தில் உருவான இதில், ஒரு மணி நேரத்துக்கு 30 லிட்டர் குடிநீர் தயாரிக்கும் ஆர்.ஓ வசதி உண்டு. கடலில் சீறிப்பாய 130php வால்வோ பெண்டா டி5 எஞ்சின் துணை. நெட்வொர்க் வசதிக்கு Inmarsat உதவுகிறது. கப்பலை தொடர்புகொள்ள HF/VHF ரேடியோ வசதியும், கப்பலை கண்காணிக்கும் தனித்துவ வசதியும் உள்ளன.
|