கும்ப லக்னம் சனி - சுக்கிரன் சேர்க்கை தரும் யோகங்கள்
கிரகங்கள் தரும் யோகங்கள் - 108
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
தனக்கென வாழாப் பெருந்தகைகள். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிப்பீர்கள். மேட்டுக்குடியில் பிறந்தாலும், நலிந்தோருக்கு உதவவேண்டும் என்று நினைப்பார்கள். மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டுவார்கள். ஏன், எதற்கு, எப்படி என கேள்விக் கணைகளை தொடுத்துக் கொண்டிருப்பார்கள்.
எதிர்ப்பவர்களை எதிரியாக நினைக்காமல் யதார்த்தமான பேச்சால் நண்பராக்க ஆசைப்படுவார்கள். தவறானவர்களை, தவறு செய்யத் தூண்டிய சூழ்நிலையை புரிந்து வைத்திருப்பார்கள். கரும்பைப்பற்றி பாடம் நடத்தினால் கரும்புத் தோட்டத்திற்கே அழைத்துச் செல்ல வேண்டுமென்பார்கள். அண்டமே சிதறி னாலும் அஞ்ச மாட்டார்கள். கான்சன்ட்ரேஷன் மிக அதிகமாக இருக்கும்.
பக்கத்திலே பாம் வெடித்தால் கூட மெதுவாக திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வேலையில் மூழ்கிப்போவார்கள். மனிதர்களை எப்படி அணுகுவது, நான்கு பேரிடம் எப்படிப் பழகுவது என்ற விஷயங்களில் இவர்களுக்கு இணை எவருமில்லை. மிகச் சாதாரணமான ஒரு சம்பாஷணையைக் கூட சுவாரசியமாகச் சொல்வார்கள்.
மேலே சொன்னவை பொதுவான பலன்கள். இனி, ஒவ்வொரு ராசியிலும் லக்னாதிபதியான சனியும் சுக்கிரனும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா? கும்ப லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே சனியும் சுக்கிரனும் சேர்க்கை பெற்றால் புரட்சிக் கருத்துகள், முற்போக்குச் சிந்தனைகள் இவற்றாலெல்லாம் பாதிக்கப்படாது தனக்கென கொள்கைகளை உருவாக்கிக் கொள்வார்கள்.
தன்னைச் சார்ந்தவர்கள் தன்னை மிஞ்சிவிடக்கூடாது, தொந்தரவு தந்துவிடக்கூடாது என்று சில நேரங்களில் திரைமறைவு வேலைகள் பார்ப்பதுண்டு. ‘குருட்டாம் போக்குல ஏதாவது பண்ணுவோம்’ என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது. தமக்கு பணிவிடை செய்பவர்களை முன்னுக்குக் கொண்டு வருவீர்கள்.
எல்லா விஷயமும் உங்களுக்கு பழக்கமாகி விடுவதால் புத்துணர்வு அடிக்கடி குறையும். இனிமையான ரகசியங்களை தன்னகத்தே கொண்டிருப்பார்கள். இதெல்லாம் வெளியில் சொன்னால் குழந்தைத்தனமாக அல்லவா இருக்கும் என்று நினைப்பார்கள். வாழ்வின் தொடக்கத்தில் அரிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்போதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் அமுக்கப்படுவார்கள்.
இரண்டாம் இடமான மீனத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் சிறிய வயதில் பள்ளிப்படிப்பு தடைபட்டு தேறி வருவீர்கள். ஆனால், கல்லூரிக்காலங்களில் சிறப்பாக படிப்பார்கள். பால்ய வயதிலேயே பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி என்று பரிசுகளை வெல்வார்கள். ‘எல்லாம் தெரிஞ்சு வச்சிருப்பார். ஆனா, மார்க் மட்டும் எடுக்க மாட்டார்...’ என்பார்கள்.
படித்துக்கொண்டே ஏதேனும் சம்பாதிக்கலாமா என்று எண்ணுவார்கள். ஃபேஷன் டெக்னாலஜியை படித்து வைத்தால் நல்லது. விஸ்காம், டி.எப்.டெக். போன்ற படிப்புகள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும். இசைப்பள்ளியில் படித்து அங்கேயே ஆசிரியராகும் வாய்ப்பும் உண்டு. இக்கட்டான தருணங்களில் மறதி வந்து படுத்தியெடுக்கும். மூன்றாம் இடமான மேஷத்தில் சனியும் சுக்கிரனும் இணைந்திருந்தால் மாமியார் கொஞ்சம் கறாராகத்தான் இருப்பார்.
பெரிய நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாகக் கூட உயர்பதவி வகிப்பார்கள். அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு உடையவர்களாக விளங்குவார். மரபு சார்ந்த பாரம்பரியமான விஷயங்களை விட்டுக் கொடுக்காதவராக இருப்பார். தொணதொணவென்றோ... புலம்பலாகவோ பேசப் பிடிக்காது. இளைய சகோதர சகோதரிகள் மிகுந்த ஆதரவோடு இருப்பார்கள். இவர்களுக்கு மிகச் சரியான வேலையாட்கள் அமைவார்கள்.
நான்காம் இடமான ரிஷபத்தில் சனியும் சுக்கிரனும் ஒன்றாக இருந்தால் பல வருடங்கள் தாயாரை விட்டுப் பிரிந்து வளர்வோரும் உண்டு. சொந்த பந்தங்கள் யாரும் உதவிக்கு இல்லாமல் இருப்பார்கள். தாயைப் பாராட்டிப் பேசினால் மனைவிக்குப் பிடிக்காது. மனை வாங்கிப் போட்டால் சீக்கிரம் வீட்டை கட்டவிடாது தடைகள் வரும். ‘முதல்ல காம் பௌண்ட் போட்டுடு. அப்புறமா வீட்டை கட்டிடு...’ என்று யாரேனும் சொன்னால் அதைச் செய்யாதீர்கள்.
காம்பௌண்டிற்கு பதிலாக இரும்பினால் ஆன வேலியை போடுங்கள். எப்போதுமே சுற்றுச் சுவரை முதலில் எழுப்பி விடாதீர்கள். அது கட்டிடத்தின் வளர்ச்சியை பாதிக்கும். கட்டித் தயாராக இருக்கும் வீட்டை வாங்குங்கள். அல்லது பில்டரைப் பற்றி ஒருமுறைக்கு இருமுறை நன்றாக விசாரித்து விட்டு வீட்டை கட்டி முடிக்க முயற்சி செய்யுங்கள். இவர்கள் வீட்டில் பசு வளர்க்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஆடம்பரமும், சொகுசும் கலந்த வாகனத்தை வாங்க விரும்புவார்கள்.
ஐந்தாமிடமான மிதுனத்தில் சனியும் சுக்கிரனும் சேர்க்கை பெற்றால் பெண் குழந்தை பிறந்தவுடன் அதிர்ஷ்டக்காற்று வீசும். பார்ப்பவர்களெல்லாம் பாராட்டும்படியும், திருஷ்டி சுற்றி போடுமளவிற்கு லட்சணமாகவும் இருப்பாள். சுக்கிரன், சனியுடன் சேர்ந்திருந்தால் அயல்நாடு சென்று உயர்கல்வி முடிப்பார்கள். பெரிய நிறுவனம் வைத்து நடத்துபவராகவும் இருப்பார்கள். வெள்ளி யாலான ஆபரணங்களை ஏழை கல்யாணப் பெண்ணிற்கு தானமாகக் கொடுங்கள்.
சுக்கிரன் கண் பார்வைக்கும் அதிபதியாக வருகிறார். எனவே அடிப்படை வசதியில்லாத கிராமப்பகுதிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த முயலுங்கள். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது வாழ்க்கைத்துணையின் ஜாதகத்தில் 5ம் வீட்டில் ராகு, கேது, செவ்வாய் இல்லாமல் இருப்பது நல்லது. எப்போதுமே குலதெய்வத்தை மறக்காமல் காரியத்தை செய்து வந்தாலே போதுமானது. தாய்மாமனோடு அவ்வப்போது உரசல் வந்துபோகும்.
ஆறாம் இடமான கடகத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் உங்கள் வாயைப் பிடுங்கி, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை வைத்து பேசுவதற்காகவே ஒரு கூட்டம் இருக்கும். நண்பர்களைத் தரம் பிரிப்பதில் அறிவு பூர்வமாக சில நேரம் நடந்து கொண்டாலும், சிறுபிள்ளைத்தனமாகப் பேசி சிக்கிக்கொள்வார்கள். உங்களுக்கு உடலால் ஏற்படும் நோயை விட, மனதால் உடலுக்கு நீங்களாக உண்டாக்கிக் கொள்ளும் நோய்கள்தான் அதிகம்.
உங்கள் பட்டறையிலிருந்து வெளியேறியவர்கள்தான் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். எனவே, ஒரே நபரிடம் எல்லாவற்றையும் ஒப்படைக்காமல், பிரித்துக் கொடுத்து வேலை வாங்கினால் நல்லது. பழைய வண்டியை வாங்கவே வேண்டாம். வேறு வழியின்றி வாங்கினால், வில்லங்கம் ஏதும் இருக்கிறதா எனப் பாருங்கள். ஏழாம் இடமான சிம்மத்தில் சனியும் சுக்கிரனும் இருந்தால் சிறு சிறு வாக்குவாதங்கள், மெல்லிய சமையலறை புலம்பல்கள் இருக்கும். இதை பெரிது படுத்தக் கூடாது.
சிறு சண்டைகள்தான் இயல்பான தாம்பத்ய வாழ்க்கை. இந்த அமைப்பில் ஆண்கள் பிறந்தால் மனைவிக்குத் தெரியாமல் எந்தவித பணப்பட்டுவாடாவும் செய்யக் கூடாது. உடன் பிறந்தவர்களை திருமணம் முடிந்த பின்னர் தனிக் குடித்தனம் வைத்து விட வேண்டும். வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும்போது குணத்தை மட்டும் பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது.
எட்டாமிடமான கன்னியில் சனியும் சுக்கிரனும் இடம் பெற்றிருந்தால் சாதனையாளர்களைக் கூட சாதாரணமாகப் பேசி அணுகுவார்கள். தயங்காது தான் நினைப்பதை கேட்பார்கள். எங்கு, யாரிடம் கூர்மையான அறிவும், ஞானப் பிரகாசமும் உள்ளதோ அங்கு சரணடைவார்கள். பாரம்பரியமான தொழிலைத் தொடர விரும்புவார்கள். புதுப்புது நகர்களை உருவாக்குவார்கள்.
மர்ம ஸ்தானங்களில் ஏதேனும் நோய்கள் வந்து நீங்கும். இவர்களின் தன்னம்பிக்கையை யாராவது சிறிது அசைத்துப் பார்த்தாலே பயந்து போய் விடுவார்கள். ஒன்பதாம் இடமான துலாத்தில் சனியும் சுக்கிரனும் சேர்க்கையுற்றிருந்தால் ஒன்றைப் போலவோ அல்லது வேறு யார் மாதிரியோ இவர்கள் எதையுமே செய்ய மாட்டார்கள். முன்னோர்களின் சொத்துக்கள் கிடைப்பதில் எப்போதும் இழுபறி இருந்து கொண்டேயிருக்கும்.
பத்தாம் இடமான விருச்சிகத்தில் சனியும் சுக்கிரனும் இணைந்திருந்தால் அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எப்போதுமே உயர்ந்த வேலையைக் குறிவைத்தே நகருவார்கள். எந்தெந்த ஊரில் எந்தெந்த பொருட்களுக்கு டிமாண்ட் இருக்கிறது என பார்த்துக் கொண்டே இருப்பார்கள். வியாபாரத்தை வசவச என்றும், எது எடுத்தாலும்... என்று கூவி விற்பதும் இவர்களுக்கு பிடிக்காது. எவர் சில்வர் பாத்திர வியாபாரம், வெள்ளி நகை விற்பனைகளை மேற்கொண்டால் நல்லது.
பூமியில் நீரோட்டம் பார்த்து போர் போடும் தொழில் செய்தல், விவசாயத்திற்குத் தேவையான இயந்திரங்களை விற்றல் போன்றவை பெருத்த லாபத்தைத் தரும். பியூட்டி பார்லர் வைத்து நடத்துதல், குழந்தைகளின் விளையாட்டு பொம்மை கடை, புதியதாக பிறந்த குழந்தைக்கு மட்டும் உபயோகமாகிற சோப்பு, துணி வகைகள் என்று தொழில் செய்யும்போது சிறப்பாக வளருவார்கள்.
பதினோராம் இடமான தனுசு ராசியில் சனியும் சுக்கிரனும் இடம் பெற்றிருந்தால் சேமிப்புப் பழக்கம் சிறிய வயதிலிருந்தே இருக்கும். ஆன்மிகம் மற்றும் லௌகீகம் என்று இரு தளங்களிலும் சிறப்பான இடத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள். தூக்கமின்மையால் மிகவும் அவஸ்தைப்படுவார்கள். ஏற்றுமதி இறக்கு மதியில் ஆர்வம் செலுத்தி ஏஜென்சி வைத்து நடத்துவார்கள்.
பன்னிரண்டாம் இடமான மகர ராசியில் சனியும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் கடுமையான நியமங்கள் கொண்ட ஆன்மிகம் வேண்டுமா என்கிற கேள்வி இருக்கும். ஓஷோவைப் பின்பற்றுபவர்களாகவும் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு சக்தி உபாசகராகவும் விளங்குவார்கள்.
சனி - சுக்கிரன் சேர்க்கை பெறுவதென்பது நல்லதுதான். ஆனால், கிரகங்கள் நீசமோ அல்லது பகையோ பெறும்போது பாதிப்புகள் ஏற்படும்போது அதை நேர்மறையாக மாற்ற கோயில்களுக்குச் செல்லலாம். அப்படிப்பட்ட ஒரு கோயிலே மருத்துவக்குடி எனும் தலத்திலுள்ள அபிராமி உடனுறை ஐராவதேஸ்வரர்.
மருத்துவாசுரனின் வதம் இத்தலத்தில் நிகழ்ந்ததால் மருத்துவக்குடி என்ற பெயர் பெற்றது. புராணப் பெருமைமிக்க இக் கோயிலுக்கு இடப்புறம் அம்பாள், அபிராமி எனும் திருநாமத்தோடு நின்றகோலத்தில் அருளை அமுதமாய் பொழிகிறாள். இத்தலம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆடுதுறையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
(கிரகங்கள் சுழலும்)
ஓவியம்: மணியம் செல்வன்
|