காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 23

வெளிப்பார்வைக்குத்தான் மெதிலின் நகரில் பாப்லோவின் சிம்மாசனம் இருந்தது. ஆனால் - அவருடைய சாம்ராஜ்யம் வெனிசூலா நாட்டு எல்லையில் ரகசியமாக அமைக்கப்பட்டிருந்தது. பாப்லோவின் கொடுக்கல் வாங்கல்களை கறாராக பார்த்துக் கொண்டிருந்த அவருடைய அண்ணன், தம்பிக்காக அங்கே சுமார் 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு சிறிய நாட்டையே பார்த்துப் பார்த்து உருவாக்கியிருந்தார்.

கோகெயின் விளைநிலங்கள் அங்கேதான் அமைந்திருந்தன. அங்கே விளையும் கோகெயினை அங்கேயே பவுடராக்கி பேக்கிங் செய்வதற்காக ஒரு பிரும்மாண்டமான ஃபேக்டரி. மிகப்பெரிய சரக்கு விமானங்கள் வந்து செல்வதற்கு வசதியாக நீண்ட ரன்வே ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ரன்வேயை சாட்டிலைட் மூலமாகக்கூட கண்காணிக்க முடியாத அளவுக்கு கில்லாடியான ஒரு ஐடியாவை பாப்லோ செயல்படுத்தி இருந்தார்.

அதாவது - மொத்தம் எழுபது நகரும் இல்லங்கள். மரத்தால் கட்டப்பட்ட இந்த வீடுகளுக்கு சக்கரம் இருக்கும். இந்த வீடுகள் அத்தனையையும் ரன்வே மீது பார்க்கிங் செய்து நிறுத்தியிருப்பார்கள். விமானம் ஏதேனும் வருகிறது என்றால் மட்டும் வீடுகள் ஓரமாக நகர்த்தப்பட்டு விடும்! இந்த இடத்துக்கு சரக்கு போக்குவரத்துக்காக வரக்கூடிய விமானங்கள், மிகப்பெரிய நூற்றாண்டுகால மரங்களுக்குக்  கீழே பார்க்கிங் செய்யப்படும்!

ஐரோப்பிய போதை மாஃபியாக்கள் பலரும் சொந்தமாகவே விமானம் வைத்து தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் என்பதால், அந்த விமானங்கள் வந்துபோக வசதியாக இம்மாதிரி ஏற்பாடு. அந்த நகரும் இல்லங்களில்தான் போதை வயல் மற்றும் ஃபேக்டரிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் குடும்பம் குட்டி யோடு தங்கியிருந்தார்கள்.

பெண்கள் பொதுவாக வயல் வேலை செய்வார்கள். ஆண்களுக்கு ஃபேக்டரியில் கோகெயினை பதப்படுத்தும் லேபரட்டரி வேலைகள் இருக்கும். இவர்களுக்கு டிவி உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் கொடுத்து சுகமாக வாழ வழி செய்திருந்தார் பாப்லோ. தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக ஒரு ஸ்கூலே அங்கு கட்டப்பட்டது.

உணவு, உடை, இருப்பிடம், குழந்தைகளுக்கு கல்வி அத்தனையும் இலவசமாக கொடுத்து, மேற்கொண்டு கணிசமாக சம்பளமும் கொடுக்கப்படுகிறது என்றால் யார்தான் பாப்லோவிடம் வேலை செய்ய விரும்ப மாட்டார்கள்? கொலம்பியாவில் அரசு வேலையில் பென்ச் தேய்ப்பதைக் காட்டிலும் பாப்லோ எஸ்கோபாரின் மெதிலின் கார்டெல்லில் வேலைக்கு சேருவதுதான் கவுரவமாக பார்க்கப்பட்டது.

ஆனால் - பாப்லோவிடம் வேலைக்கு சேர்ந்தவர்கள், வேலை பிடிக்காமல் வெளியே செல்ல முடியாது என்பது மட்டும்தான் பிரச்னை. அப்படியே வெளியேறியே ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் உலகத்தை விட்டே வெளியேறிவிட வேண்டியதுதான். இதற்காக அதிகம் வலிக்காமல் விடுதலை கொடுக்கும் பணியை செய்யும் ஸ்பெஷலிஸ்டுகளும் பாப்லோவிடம் இருந்தார்கள்.

பொதுவாக இந்த ரகசிய இடத்துக்கு பாப்லோ வருவதில்லை. கொலம்பிய அதிகாரிகள் அவரை கண்காணிப்பதில்லை என்றாலும், அமெரிக்காவின் உளவுத்துறை ஏஜெண்டுகள் அவரது விஷயத்தில் கண்கொத்திப் பாம்பாக இருந்தார்கள். முடிந்தால் பாப்லோவை போட்டுத் தள்ளவும் காத்திருந்தார்கள். எனினும், கொலம்பியாவில் வைத்து அவரை போடுவது சாத்தியமே இல்லை என்பதையும் உணர்ந்திருந்தார்கள்.

பாப்லோவின் நம்பிக்கைக்குரிய சகாக்களில் சிலர் இந்த ‘போதை கிராம’த்தை நிர்வகித்து வந்தார்கள். அவர்களுக்குரிய கட்டளைகள் குஸ்டாவோ மூலமாக சங்கேத மொழியில் அவ்வப்போது வரும். ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை பாப்லோ இங்கே மாறுவேடத்தில் திக்விஜயம் செய்வதுண்டு. வந்திருப்பவர் பாப்லோதான் என்று அவருடைய சகாக்களுக்கே கூடத் தெரியாமல் ஒரு முறை போட்டுத் தள்ளப் போய்விட்டார்கள்!

எப்போதாவது தன்னுடைய குட்டி விமானத்தை பாப்லோவேஓட்டிக்கொண்டு வருவார். அந்த விமானத்தின் சப்தம் கேட்டாலே தொழிலாளர்கள் அவரவர் செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படி அப்படியே போட்டுவிட்டு பாப்லோவைச் சூழ்ந்து கொள்வார்கள். கண்கள் மின்ன அவரை அன்போடு விசாரிப்பார்கள். தங்கள் தோளில் தூக்கிவைத்துக்கொண்டு ஊர்வலமாக வருவார்கள். பாப்லோவை வாழ்த்தி கோஷங்களும் ஒலிக்கும்.

மூட்டையாக பணத்தை கட்டி முதுகில் லஞ்ச் பேக் கணக்காக மாட்டிக் கொண்டு வருவார். கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் கையில் எவ்வளவு பணம் தட்டுப்படுகிறதோ அவ்வளவையும் அள்ளிக் கொடுப்பார். கணக்கு வழக்கே கிடையாது. அந்தக் காலகட்டத்தில் பாப்லோவுக்கு பணத்தின் மதிப்பே தெரியாமல் போய்விட்டது. பணம் என்பது அவரைப் பொறுத்தவரை வெறும் காகிதம்.

தொழில் என்பது அவரைப் பொறுத்தவரை பணம் சம்பாதிக்கக்கூடிய வழிமுறை அல்ல. அட்வென்ச்சருக்காகவும், அதிகாரத்துக்காகவும்தான் இதைச் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கொலம்பியா போதைத் தொழிலின் 40% வியாபாரம் எஸ்கோபாரின் மெதிலின் கார்டெல் நிறுவனத்தால் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. உலகப் புகழ்பெற்ற ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை, எஸ்கோபாரின் அருமை பெருமைகளை(!) 1987, அக்டோபரில் பட்டியலிட்டது.

அப்போது உலகின் டாப் 100 பணக்காரர் பட்டியலில் அவர் டாப்-10ல் இருந்தார். 1981ல் இருந்து 1986க்குள் 7 பில்லியன் டாலர் (இன்றைய இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.45 ஆயிரம் கோடி!) அளவுக்கு பாப்லோ மட்டுமே போதை வர்த்தகம் செய்திருக்கிறார். 1987ல் பாப்லோவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர் (இன்றைய இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.12 ஆயிரத்து 800 கோடி!) ஆக இருக்கலாம் என்றும் ‘ஃபோர்ப்ஸ்’ கணித்திருந்தது.

இவ்வளவு பெரிய பணம் புழங்கியும், அவர் ஐந்து பைசா கூட வரி கட்டவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. தன்னுடன் பணியாற்றும் சகாக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வாரி வாரி வழங்கியது போக,பொது மக்களுக்கும் கணக்கு வழக்கின்றி செலவு செய்து கொண்டே இருந்தார். இறைக்கிற கிணறு அல்லவா... ஊற்றெடுத்துக் கொண்டேதான் இருந்தது.

பாப்லோ பத்து ரூபாய் முதலீடு போட்டால் அது ஆயிரம் ரூபாயாகத் திரும்பி வந்துகொண்டே இருந்தது. எப்படியெனில், ஒரு கிலோ போதை மருந்தை தயாரிக்க பாப்லோவுக்கு ஆயிரம் டாலர் செலவாகும் என்றால், அதன் மதிப்பு அமெரிக்காவில் எழுபதாயிரம் டாலர்! தென்னமெரிக்காவில் இருந்த எந்த நாடுமே பாப்லோ மீது கை வைக்கத் துணியாத நிலையில், அமெரிக்காவின் மூன்று சட்டபரிபாலன அமைப்புகள் அவரை வேட்டையாடத் துணிந்தன.

போதை வியாபாரம், முறைகேடான பணப்பரிமாற்றம், காசு வாங்கிக் கொண்டு கொலை செய்வது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தன. எந்தவொரு சாம்ராஜ்யமுமே ஒருகட்டத்தில் வீழ்ச்சிக்கு உள்ளாகித்தானே ஆகவேண்டும்? பாப்லோவுக்கு அப்படியொரு வீழ்ச்சியை ஒரு ‘போக்கிரி’ ஏற்படுத்தினான். ஆமாம். ‘போக்கிரி’யேதான்! 

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்