செயற்கை மழை!



- டி.ரஞ்சித்

மழை வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்த காலம் மலையேறிவிட்டது. பருவங்கள் கடந்துதான் பருவ மழை பெய்கிறது. அப்படியே பெய்தாலும் போதுமான அளவுக்கு பெய்வதில்லை. அதனால் கடும் வறட்சி நிலவுகிறது. இந்த நிலையை சீர்செய்ய செயற்கை மழை வந்துவிட்டது!

சமீபத்தில் பெங்களூருவில்கூட செயற்கை மழையைப் பொழிய வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. செயற்கை மழை, அதன் அறிவியல், நம்பகத்தன்மை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனரான பாலச்சந்திரனிடம் கேட்டோம். ‘‘மழைக்காக காத்திருந்த காலம் போய் மழையை உருவாக்க வேண்டிய காலத்துக்கு வந்துவிட்டோம். மேகம் என்பது நீரும், காற்றும் கலந்த ஒரு வடிவம். பொதுவாக மேகம்தான் மழையைக் கொண்டு வருகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், எல்லா மேகமும் மழையைக் கொண்டுவரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. காரணம் பருவ நிலை. பருவ நிலை என்பது மேகத்திலுள்ள நீரின் தன்மை, காற்றின் வேகம், அதன் அளவு மற்றும் தன்மையைப் பொறுத்து மாறுபடும். மழைக்கு முக்கிய தேவை மேகத்தில் உள்ள நீர்தான். அந்த நீர் பல வடிவங்களில் இருக்கும். மேகத்தில் உள்ள சிறுசிறு நீர்த் திவளைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து பெரிய பனிக்கட்டிகளாக மாறும். மேகத்தால் அதன் சுமையைத் தாங்க முடியாது.

அப்போது அந்தப் பனிக்கட்டிகள் உருகி பூமியை நோக்கி விழும். இதைத்தான் மழை என்கிறோம். இதற்கு மேகத்தில் உள்ள நீர், அதை நகர்த்திச் செல்லும் காற்று எல்லாம் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் மேகம் வெற்று காற்றாக மட்டும் வீசிவிட்டு நம்மை ஏமாற்றிவிடும்...’’ என்று விளக்கிய பாலச்சந்திரன், மேகத்திலேயே இருவகைகள் உண்டு என்கிறார்.

‘‘ஒன்று வெப்ப மேகம். இரண்டாவது குளிர் மேகம். இந்தியா ஒரு வெப்ப நாடு. ஆகவே இந்தியாவில் அதிகபட்சமாக வெப்ப மேகங்கள்தான் உருவாகிறது. இங்கே பெய்யும் 80% மழை இந்த வெப்ப மேகத்திலிருந்து கிடைப்பதுதான். குளிர் மேகங்கள் பனிப்பிரதேசங்களில்தான் அதிகமாகத் தென்படும். இரண்டு மேகங்களுக்குமே தனித்தனியாக செயற்கை மழையைப் பொழிவதற்கான வழிமுறைகள் உண்டு.

வெப்ப மேகங்களில் ஆவியான குறைந்த நீர் திட்டுக்களிலிருந்து சிறு பனிக்கட்டிகள் வரை பல்வேறான நீர்த்தி வளைகள் இருக்கும். பொதுவாக உப்புக்கு நீரை உறுஞ்சும் சக்தி உண்டு. எனவே சோடியம் குளோரைடை இந்த வெப்ப மேகங்களுக்கு இடையில் விமானம் மூலம் தூவ வேண்டும். உடனே சிறு நீர்த்துளிகள் பெரிய பனிக்கட்டிகளாக மாறிவிடும்.

அதேபோல குளிர் மேகங்களிலும் நீரும், பனித் திவளைகளும் இருக்கும். இங்குள்ள நீர்த் திவளைகளை பனிக்கட்டிகளாக மாற்றும் திறன் சில்வர் அயோடைட் எனும் வேதிப்பொருளுக்கு உண்டு. இந்த வேதிப்பொருள் பனிக்கட்டிக்கு சமமானது. முதலில் குளிர் மேகங்களில் உள்ள நீர்த் திவளைகளை பனிக்கட்டிகளாக மாற்றி ஏற்கனவே அங்கிருக்கும் பனிக்கட்டிகளுடன் சேர்க்க வேண்டும். இதனால் இந்த மேகத்தில் உள்ள நீரெல்லாம் பனிக்கட்டிகளாக மாறிவிடும்.

பிறகு சுமை தாங்காமல் பூமியை நோக்கி மழையாக விழும். இதுதான் செயற்கை மழை. ஆனால், இந்த இரண்டு செயற்கை மழை திட்டத்துக்குமே கணிப்பு மிகத் துல்லியமாக இருக்கவேண்டும். இந்தத் துறை இப்போதுதான் வளர்ச்சியடைந்து வருகிறது. வெளி நாடுகளிலும், இந்தியாவிலும் பரிசோதனையாக மட்டுமே இந்த முயற்சியை மழை அறிவியலாளர்கள் செய்து வருகிறார்கள்...’’ என்ற பாலச்சந்திரன் செயற்கை மழை தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் எதிர்காலத்தைப் பற்றியும் விளக்கினார்.

‘‘செயற்கை மழை முயற்சியை வெற்றிடத்தில் ஆரம்பிக்க முடியாது. முதலில் மழை மேகம் இருக்கவேண்டும். அந்த மேகத்தில் போதுமான மழையைக் கொண்டுவரக்கூடிய நீர் இருக்கவேண்டும். அதேமாதிரி அந்த நீரை பனிக்கட்டியாக மாற்றி அதை பூமிக்கு கொண்டுவரும்படியான காற்று இருக்கவேண்டும். மேகத்தின் தன்மை, காற்றின் தன்மையை இந்தியாவில் உள்ள வானிலை ஆய்வு மையங்களில் உள்ள ரேடார் தொழில்நுட்பத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆனால், செயற்கை மழைக்கான திட்டங்களை இந்த ஆய்வு மையங்கள் மேற்கொள்வதில்லை. தனியார் அமைப்புகள், தனிநபர்கள் மூலம் சில மாநிலங்கள் செயற்கை மழை முயற்சியை மேற்கொள்கின்றன. இதற்கு அந்த மாநில அரசும் உதவியாக இருக்கிறது. இந்த முயற்சிக்கு பல லட்சங்கள் செலவாகும். மட்டுமல்ல, நகர்ந்துகொண்டிருக்கும் மேகங்களை செயற்கை மழைக்காக மாற்றும்போது அது பக்கத்து மாநிலங்களைப் பாதிக்கவும் வாய்ப்புள்ளது.

‘எங்களுக்கு வர வேண்டிய மழையை செயற்கையான முறையில் கலைத்துவிட்டார்கள், மாற்றிவிட்டார்கள்’ என்று அவர்கள் குற்றம் சாட்டலாம். செயற்கை மழை குறித்து துல்லியமான அறிவியல் வளரும்போது இந்த முயற்சி இந்தியாவில் வரவேற்பு பெறலாம். ஏனென்றால் கடும் வறட்சி நிலவும் சூழலில் செயற்கை மழைக்கான தேவை அதிகமாகவே உள்ளது...’’ என்று நம்பிக்கையுடன் முடித்தார் பாலச்சந்திரன்.   

படங்கள்: ஆர்.சி.எஸ்