இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?



அனுபவத் தொடர் - 12

- பா.ராகவன்


உடம்பு ஒரு ஒய்யார வாகனம். நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிற வரைக்கும் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. இடையில் என்னவாவது இசகுபிசகானால்தான் சிக்கல். ஒன்று கேட்கிறேன். வாழ்நாளில் என்றைக்காவது உங்கள் கால் சுண்டுவிரலைக் குறித்து நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? அட, இத்தனைக் குட்டியாக ஓர் உறுப்பை எப்படி ஆண்டவன் செய்திருப்பான் என்று எண்ணிப் பார்த்திருப்பீர்களா?

மற்ற உறுப்புகளைத் தனியே அசைக்க முடிவதுபோல, கால் சுண்டு விரல்களையும் காதுகளையும் மட்டும் ஏன் அசைக்க முடிவதில்லை என்று யோசித்திருப்பீர்களா? இதுவே அந்த சுண்டுவிரல் ஓரத்தில் சின்னதாக ஒரு காயம் படட்டும். அதுகூட வேண்டாம். சுண்டுவிரல் நகம் பாதியாக உடைந்து கொஞ்சம் வலிக்கட்டும். புத்தி மொத்தமாக அந்த இடத்தில் குவிந்துவிடுகிறது. இல்லையா? அந்த வலி தீருகிறவரைக்கும் வேறு ஞாபகமே இருப்பதில்லை.

இல்லையா? நமது செயல்பாட்டு வேகத்துக்கு எதிராக உடம்பு கொஞ்சம் முரண்டு பிடித்தாலும் தீர்ந்தது கதை. வயிற்றுவலியோ, தலைவலியோ, காய்ச்சலோ மற்றதோ. அது வந்து கொண்டாடிவிட்டுப் போய்ச்சேருகிற வரைக்கும் நமக்கு வேறு வேலை ஓடுவதில்லை. பிறந்தது முதல் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உணவைத் தொடரும்போதே இதுதான் நிலைமை என்றால், தடாலென்று உடம்புக்கு ஒரு மதமாற்றம் நிகழ்த்தினால் அது சும்மாவா இருக்கும்?

என் மனைவிக்கு நேர்ந்த உடல் சார்ந்த நெருக்கடிகளுக்கு அதுதான் காரணம். அறிவியல் அதை கார்ப் ஃப்ளூ என்று சொல்லும். அதாவது கார்போஹைடிரேட் வரத்து திடீரென்று கணிசமாகக் குறைந்துவிடும்போது, அதற்குக் காலகாலமாகப் பழகிவிட்ட உடம்பு மக்கர் செய்ய ஆரம்பிக்கும். மக்கர் என்றால் இன்ன விதமான மக்கர்தான் என்று சொல்ல முடியாது. எந்த விதத்திலும் தாக்கும். எல்லா விதத்திலும்கூடத் தாக்கும்.

சிலருக்குக் கடும் தலைவலி உண்டாகும். இன்னும் சிலருக்கு வயிற்றுப் போக்கு. தலை சுற்றல் சிலருக்கு. காய்ச்சல் சிலருக்கு. உடம்பெல்லாம் தடதடவென்று உதறுவது நடக்கும். நெஞ்சு படபடப்பு இருக்கும். மலச்சிக்கலும் அனைவருக்கும் பொதுவானதே. ஆனால், இதெல்லாம் ஒரு நாலைந்து தினங்களுக்குத்தான். மிஞ்சிப் போனால் ஒரு வாரம்.

அது அவரவர் தேகம், கொழுப்புணவுக்குத் தன்னை மாற்றிக்கொள்ளும் வேகத்தைப் பொறுத்தது. பிறந்தது முதல் டீசலில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு காரை சட்டென்று பெட்ரோல் வண்டி ஆக்கினால் என்ன நேரும்? அதுவேதான் இங்கும் நிகழ்கிறது. பேலியோவுக்கு மாறும்போது உடனடியாக உடலுக்கு ஏற்படும் மாற்றம் என்பது ரத்த சர்க்கரை அளவு குறைவதுதான்.

இதில் கார்போஹைடிரேட் மிகக் கணிசமான அளவுக்குக் குறைந்துவிடுகிறது என்பதால் ரத்தத்தில் கலக்கிற சர்க்கரை அளவும் சுருங்கிவிடுகிறது. இதனாலேயே இன்சுலின் சுரப்பும். தீவிரமான நீரிழிவுப் பிரச்னை உள்ளவர்கள், மருந்து மாத்திரைகளில் இருந்து விடுபடுவதற்காகப் பேலியோவுக்கு வருவார்கள். அதுவும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறவர்கள் என்றால் ரத்த சர்க்கரை தடாலடியாகச் சரியும்.

என்னடா இது நேற்று டெஸ்ட் எடுத்துப் பார்த்தபோது நூற்றி எண்பது காட்டியதே, இன்று நூறு காட்டுகிறதே என்று குழப்பமாக இருக்கும். பரிசோதனை தவறோ என்று எண்ணத் தோன்றும். சிலருக்கு நார்மலுக்குக் கீழேகூட இறங்கிப் போகும். லோ ஷுகராகி, மயக்கமே வரலாம். இதனால்தான் மருத்துவப் பரிசோதனையும் டாக்டர் உதவியும் அவசியம் என்பது. ரத்த சர்க்கரை அளவு குறையும்போது அதற்கேற்ப எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரை அளவுகளைக் குறைக்க வேண்டும்.

படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் நிறுத்திவிடலாம். ஆனால், எவ்வளவு குறைப்பது, எப்போது நிறுத்துவது என்று சுட்டிக்காட்ட டாக்டர் வேண்டுமல்லவா? பேலியோ தொடங்கிய புதிதில் என் மனைவிக்கு ஏற்பட்ட இந்தப் பிரச்னைக்கு டாக்டர் ப்ரூனோ கொடுத்த மருந்துகள் இரண்டு. ஒன்று, அரை வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

இரண்டாவது, உப்பு போட்டு எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். அரை வாழைப்பழம் என்பது மிகவும் குறைந்து போகும் சர்க்கரை அளவைக் கொஞ்சம் கூட்டி சமநிலைக்குக் கொண்டு வருவதற்கு. எலுமிச்சை ஜூஸ், உடனடி சக்திக்கு. இது பலனளித்தது. இதுவே போதுமானதாக இருந்தது. என்ன வியப்பு என்றால் மேற்படி உடல் உபாதைகள் எதுவும் நான் பேலியோ தொடங்கியபோது எனக்கு உண்டாகவில்லை. மிகவும் நார்மலாக இருந்தேன். எடைக்குறைப்பும் சீராக நிகழ்ந்துகொண்டிருந்தது.

ஆனால், ஆரம்பித்து, கொழுப்புணவுக்கு உடல் பழகி ஓரிரு மாதங்களுக்குப் பிறகு எனக்கு இது வேலையைக் காட்டியது. அன்றைய தினத்தை என்னால் மறக்கவே முடியாது. என் எழுத்து வேலைகளை முடித்துவிட்டு ராத்திரி இரண்டுக்கோ இரண்டரைக்கோ படுத்தேன். பொதுவாக படுத்த மறு நிமிடம் உறங்கிவிடுவது என் வழக்கம். அன்றைக்கு எனக்குத் தூக்கம் சற்றும் இல்லை. கண்ணை மூடவும் முடியவில்லை.

பளிச்சென்று திறந்து வைத்திருப்பதுதான் வசதியாக இருந்தது. எழுந்து உட்கார முடியவில்லை. தலை சுற்றியது. உட்காரும்போது தலைசுற்றுவதைக் காட்டிலும் படுத்த நிலையில் சுற்றும் தலை இன்னும் களேபரமாக இருந்தது. சரி, நடந்துகொண்டிருக்கலாம் என்று ஓசைப்படாமல் எழுந்து ஹாலுக்கு வந்து மெல்ல நடக்க ஆரம்பித்தேன். கால்கள் உதறின.

இது ஏதடா பேஜார் என்று மெல்ல மெல்ல பயம் கொள்ள ஆரம்பித்தேன். சில வினாடிகளில் இதயம் படபடவென துடிக்கத் தொடங்கியது. வழக்கத்துக்கு விரோதமான துடிப்பு. பயத்திலேயே எனக்கு வியர்த்துவிட்டது. சரி, நமது கதை முடிந்தது என்றே நினைத்தேன். அந்த நள்ளிரவில் மனைவி, மகளை எழுப்பி விடைபெறுவதெல்லாம் ரொம்ப நாடகத்தனமாக இருக்கும் என்று தோன்றியது.

என் கவலையெல்லாம் ஒன்றுதான். மறுநாள் மின்சார வாரியத்துக்குப் பணம் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் ஃப்யூஸைப் பிடுங்கிவிடுவான். கரண்ட் இல்லாமல் கிரைண்டர் போட முடியாது. மிக்சி ஓடாது. ஏசி இயங்காது. சனியன், கடைசி நாள் வரை தள்ளிப் போட்டுவிட்டேன். இன்றிரவு நான் மண்டையைப் போட்டுவிட்டால் இத்தனை அவஸ்தைகளையும் என் குடும்பம் சேர்த்துப் படவேண்டியிருக்கும். தவிரவும் நிறைய ராயல்டி பாக்கிகள் வசூலிக்க வேண்டியிருந்தன. சம்பள மிச்சம் வைத்திருக்கும் கலை கம்பெனிகளை வேறு கவனித்தாக வேண்டும்.

என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வீட்டில் அன்று வாழைப்பழம் இல்லை. என் நேரம் எலுமிச்சம்பழம்கூட இல்லை. கொஞ்சம் சர்க்கரை அள்ளிப் போட்டுக்கொள்ளலாமா என்று கிச்சனுக்குப் போனேன். ஒரு கணம் தயக்கமாக இருந்தது. இரண்டு மாதங்கள் சற்றும் சர்க்கரை இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்திருந்தேன். சொன்னால் நம்பமாட்டீர்கள்.

பதிமூன்று கிலோ குறைந்திருந்தேன் அப்போது! வாழ்நாளில் நான் எண்ணிக்கூடப் பார்த்திராத அளவு அது. சட்டென்று ஒரு ஸ்பூன் சர்க்கரை உள்ளே போய் இந்த எடைக்குறைப்பு யாகத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டால் என்ன செய்வது? டேய், இன்னும் சில வினாடிகளில் உன் உயிரே போய்விட்டால் அப்போது என்ன செய்வாய் என்று அந்தராத்மா அலறியது.

(தொடரும்)

பேலியோ கிச்சன்

நட் கட்லெட்


கேரட், முட்டைக்கோஸ், வெங்காயம், பூண்டு, ஏதேனும் ஒரு கீரை ஒரு பிடி. இவற்றை வழக்கமான உப்பு, மிளகாய்த்தூள், மசாலாப் பொடி வகையறாக்கள் சேர்த்து மொத்தமாகப் பொரியல் போல் சமைத்துக் கொள்ளவும். மேலுக்குக் கொஞ்சம் தேங்காய்ப் பூ. ஊறவைத்து உலர்த்திய பாதாமை வாணலியில் பொன்னிறத்துக்கு வறுத்து கொஞ்சம் ஆறவைத்து மிக்சியில் போட்டு நறநறவெனப் பொடித்துக்கொள்ளவும். இந்தப் பொடியை அந்தப் பொரியலுடன் கலந்தால் நமது கட்லெட் கலவை தயார்.

அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டு இந்தக் கலவையை வடைபோல் தட்டிப் போட்டு நெய் விட்டு வேகவிடவும். வழக்கமான ப்ரெட் போட்ட கட்லெட் மாதிரி இது இருக்காது. ஆனால், இதில் கிடைக்கும் அபார ருசி ஒருபோதும் அந்த கன்வென்ஷனல் கட்லெட்டுக்கு வராது.