புது இயக்குநர்களுக்கான ஸ்பேஸ் தமிழில்தான் அதிகம்!



சொல்கிறார் தமிழில் அறிமுகமாகும் மலையாள உதவி இயக்குநர்.

- மை.பாரதிராஜா


‘‘என்கிட்டயும், ஹீரோ கிருஷ்ணாகிட்டயும் எல்லாருமே ‘இது தற்காப்புக்கலை பத்தின படமா... இல்ல பீரியட் ஃபிலிமா’னு கேட்கறாங்க. அப்படி எதுவும் இல்லை. ஆக்‌ஷனும் சென்டிமென்ட்டும் கலந்த ஃபேமிலி என்டர்டெயினர். தமிழ்லயும், மலையாளத்துலயும் ‘களரி’ன்னா ‘போர்க்களம்’னு ஒரு அர்த்தம் இருக்கு.

என் முதல் படத்திலேயே அழகான உணர்வுபூர்வமான வாழ்வியல் கதை சொல்லியிருக்கேன். அதுக்கேத்தமாதிரி எங்களுக்கு பொருத்தமான டைட்டிலும் அமைஞ்சிருக்கு...’’ போஸ்ட் புரொடக்‌ஷன் ஒர்க் இடையே, ரிலாக்ஸாக பேசுகிறார் ‘களரி’ படத்தின் அறிமுக இயக்குநரான கிரண்சந்த். மலையாள இயக்குநர்கள் ‘பேரழகன்’ சசிசங்கர், ‘ஐயர் த கிரேட்’ பத்ரன், ‘ஷாந்தம்’ ஜெயராஜ் ஆகியோரிடம் பணிபுரிந்த பக்குவத்தோடு தமிழுக்கு வந்திருப்பவர்.

‘‘நேர்ல பார்த்த ஒரு சம்பவத்தைத்தான் ‘களரி’யாக்கி இருக்கேன். கிரிமினல்கள் அதிகம் உள்ள ஊர்ல, அடிதடிக்கு அஞ்சும் கோழையான அண்ணனுக்கு அழகான தங்கை இருந்தால் என்னவாகும்? இதுதான் படத்தின் ஒன்லைன். சாதாரண இளைஞனான அவன் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், பிரச்னைகள், சென்டிமென்ட்கள்தான் படத்தின் கதை. சிம்பிளா சொன்னா ‘வாழ்க்கை என்பது போர்க்களம்.

பயந்துகிட்டே இருக்காதீங்க’னு எல்லாருக்கும் தைரியம் கொடுத்திருக்கோம். கொச்சில இருக்கிற வாத்துருத்தியில் நடக்கிற கதை. அதனால கேரளப் பகுதிகள்ல தொடர்ந்து 55 நாட்கள் ஒரே ஷெட்யூல்ல படப்பிடிப்பை முடிச்சிட்டு வந்திருக்கோம்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் கிரண்சந்த்.

எப்படி பண்ணியிருக்கார் கிருஷ்ணா?
நான் நிறைய ஆர்ட்டிஸ்ட்களை பார்த்திருக்கேன். கிருஷ்ணாவோட உழைப்பு நிஜமாவே வியக்க வைச்சிருக்கு. சின்ஸியர் ஒர்க்கர். பதினாறு மணி நேரம் நான்ஸ்டாப்பா ஷூட் வச்சாலும், சலிக்காம, புலம்பாம நடிச்சுக் கொடுக்கறார். படத்துல ஆக்‌ஷன் இருந்தாலும் அவருக்கான ஹீரோயிசம் கதைல கிடையாது. ‘இதுவரை இப்படி ஒரு கேரக்டரை நான் பண்ணினதில்லை’னு அவரே சொல்லி கமிட் ஆனார்.

பாலக்காட்டுல ரயிலுக்கு முன்னாடி போய் கிருஷ்ணா நிற்கணும். அந்த சீன்ல நிஜமாவே தைரியமா போய் நின்னு யூனிட்டையே பதைபதைக்க வச்சிட்டார். இன்னொரு சீக்குவென்ஸ் வாகமன்ல நடந்தப்ப மலைஉச்சில எந்தப் பாதுகாப்பும் இல்லாம ஏறினார். இப்படி கிருஷ்ணாவைப் பத்தி சொல்ல நிறையவே இருக்கு.

படத்துல ரெண்டு ஹீரோயின்ஸா..?
கரெக்ட்டா சொல்றீங்ளே! வித்யா பிரதீப், சம்யுக்தா மேனன்னு ரெண்டு ஹீரோயின்ஸ். வித்யா தமிழ்ல கொஞ்சம் படங்கள் பண்ணியிருக்காங்க. இதுல பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணா வர்றாங்க. இப்ப அவங்க அதர்வா படத்திலும் நடிக்கறாங்க. சம்யுக்தா இதுல காலேஜ் ஸ்டூடன்ட். இதுதான் அவங்களோட முதல் படம். ஆனா, பத்து படம் பண்ணின நடிகை மாதிரி மிரட்டியிருக்காங்க. இவங்க தவிர எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், ‘இவன் யாரென்று தெரிகிறதா’ விஷ்ணு, கிருஷ்ணதேவா, பிளாக் பாண்டி, சென்ராயன், மீரா கிருஷ்ணன்னு நிறைய நட்சத்திரங்கள்.

டெக்னீஷியன்ஸும் பக்காவா அமைஞ்சிருக்காங்க. ‘காஞ்சனா 2’, ‘யங் மங் சங்’ ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் இதுல கேமராவை கவனிக்கறார். ‘கூடை மேல கூடைவச்சு...’ பாடின வி.வி.பிரசன்னா, இசையமைப்பாளரா அறிமுகமாகிறார். பிரசன்னா என்னோட நீண்டகால நண்பர். மெலோடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கார். ‘ஸ்டன்னர்’ சாமின் ஸ்டன்ட்ஸ் பேசப்படும்.

மலையாள இயக்குநர்கள்கிட்ட ஒர்க் பண்ணியிருக்கீங்க... முதல் படம் அங்க பண்ணாம தமிழ்ல ஏன்?
கலைக்கு மொழியேது? பூர்வீகம் கேரளானாலும், படிச்சது வளர்ந்தது சென்னைலதான். நட்சத்திரா மூவி மேஜிக் செனித் கெலோத் சார்கிட்ட இந்தப் படத்தோட கதையை சொன்னதும் இம்ப்ரஸ் ஆகிட்டார். உடனே அடுத்த கட்ட வேலையை தொடங்கலாம்னு க்ரீன் சிக்னல் கொடுத்தார். கேரக்டருக்கு ஏத்த ஹீரோ அமைஞ்சார். இப்படி நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து செட் ஆச்சு.

நான் தமிழுக்கு வந்ததை சந்தோஷமா நினைக்கறேன். இந்த இண்டஸ்ட்ரிலதான் ஒரு புது இயக்குநருக்கான ஸ்பேஸ், ஸ்கோப் எல்லாம் அதிகமா இருக்கு. இங்க ‘கபாலி’யும் கொடுக்க முடியும், ‘காக்கா முட்டை’யும் பண்ண முடியும். நான் ஒர்க் பண்ணின இயக்குநர்கள் எல்லாருமே கதைதான் ஹீரோன்னு நினைக்கறவங்க. அவங்களை மாதிரியே நானும் நல்ல கதையோடு வந்திருக்கேன்!