விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 33

‘‘ஏன் நிறுத்திட்ட ஐஸ்... படி...’’ ஆதி வருகிறானா என்று பார்த்தபடியே கிருஷ்ணன் அவசரப்படுத்தினான். ‘‘இருடா. ஆரம்ப இடம் ரொம்ப குழப்பமா இருக்கு. இதை அப்படியே படிச்சனா உன் மண்டை வெடிச்சுடும். ஸோ, தொடக்கத்துல இருக்கறதை சுருக்கமா சொல்லிடறேன்...’’  ‘‘ம்...’’‘‘பஞ்ச பாண்டவர்கள் அஞ்சு பேரும் திரவுபதியை மணந்ததும் வருஷத்துக்கு ஒருத்தரோட அவங்க வாழணும்னு ஒரு வழக்கத்தை கொண்டு வர்றாங்க.

இதை மீறினா ஒரு வருஷம் அஞ்ஞானவாசம்...’’ ‘‘கேள்விப்பட்டிருக்கேன்...’’ ‘‘அதுபடி தருமரோட அவங்க இருக்கிறப்ப ஊர் மக்களைக் காப்பாத்த ஆயுதத்தை எடுக்க தன் அண்ணனோட மாளிகைக்குள்ள அர்ஜுனன் நுழையறார்...’’ ‘‘... விதியை மீறினதால ஒரு வருஷம் அஞ்ஞானவாசத்தை அனுபவிக்கப் போறார்... இதெல்லாம் தெரிஞ்சதுதானே ஐஸ்?’’

‘‘தேர் யூ ஆர்... இந்தப் பகுதியைத்தான் இந்தச் சுவடில முறுக்குப் பிழியறா மாதிரி சொல்லியிருக்காங்க...’’ ‘‘பரவால்ல. இதுக்குப் பிறகு வர்றதை எப்படி இருக்கோ அப்படியே படி...’’ குரலைத் தாழ்த்தியபடி ஐஸ்வர்யா வாசிக்கத் தொடங்கினாள்... ‘‘அர்ஜுனன் மேற்கொண்ட தீர்த்தயாத்திரையின்போது, மணிபுர மன்னன் சித்ரவாகனன் மகள் சித்ராங்கதாவை மணம் செய்து கொண்டான் (மகாபாரதம்: 7:11:3986;  1:215:7826).

மணி என்ற சொல், தமிழில் நீலமணியைக் குறிக்கும். பழைய சமஸ்கிருத இலக்கியங்களும், பழைய கரலவேலக் கல்வெட்டுகளும் பாண்டிய நாட்டு நீலமணியைப் பேசக் கேட்டுள்ளோம். ஆகவே மணிப்பூர் என்ற பெயர், அம் மணி கிடைக்கும் பாண்டியர் தலைநகர்க்குப் பொருந்திய பெயரே! பிறிதோர் இடத்தில் (ஆதி பர்வம்: 6:1:64) அர்ச்சுனனின் இம்மனைவி பாண்டவ அரசகுமாரியாக கூறப்பட்டுள்ளது...’’ சட்டென படிப்பதை நிறுத்திவிட்டு கிருஷ்ணனை ஏறிட்டாள்.

‘‘ஏன் நிறுத்திட்ட? படி ஐஸ்...’’ ‘‘இதுக்குப் பிறகு உலூபி வர்றாங்க..!’’ சில நொடிகள் ஒருவரும் பேசவில்லை. ஐஸ்வர்யாவை ஆதரவாக அணைத்தான். ‘‘கோ (அ)ஹெட்...’’ ‘‘சித்ராங்கதாவை மணம் செய்து கொள்ளுமுன் உலூபி என்ற நாகக் கன்னியை அர்ச்சுனன் மணந்து கொண்டான் (மகாபாரதம்: 1:214:7810).

தன்னுடைய தீர்த்த யாத்திரையின்போது அர்ச்சுனன் சென்ற இடங்கள், சீதையைத் தேடி வருமாறு தன் வானர வீரர்களை சுக்ரீவன் பணித்தது போன்ற நிலவியல் சார்ந்த நிலமைகளுக்கு மதிப்பு அளிக்காமலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. அவன் மணந்துகொண்ட உலூபி, கங்கைக்கரையில் அர்ச்சுனன் முன் திடுமென வந்து நிற்குமாறு செய்யப்பட்டாலும், அவள் பாண்டி நாட்டுக்கு அணித்தாக உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்தவளே..!’’

சுவடியை மூடினாள். ‘‘என்னடா... கடைசில உலூபியை பாண்டிய இளவரசினு சொல்றாங்க...’’ ‘‘இரு... நாகர்கள் பத்தி அதுல இருக்கானு பாரு...’’ சுவடியைப் புரட்டினாள். ‘‘இருக்குடா...’’ செய்கையால் படிக்கும்படி தூண்டினான். ‘‘நாகர்களை பாதாளத்தில் வாழ்பவர்களாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஆரியவர்த்தத்தின் மையப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ள நாடு எதுவும் பாதாளம்தான்.

அதாவது விந்திய மலைக்கு இந்தப் பக்கம் உள்ள அனைத்து மக்களையும் ஆரிய தேசத்தவர் நாகர்கள் என்றே குறிப்பிட்டனர். பத்துப்பாட்டில், கடல் அலைகள் கொண்டு வந்து கரைக்கு சேர்த்ததால் ‘திரையன்’ எனப் பெயர் சூட்டிப் பாராட்டப்பட்ட ஓர் இளவரசனைப் பற்றிய குறிப்பு வருகிறது. ‘அந்நீர்த் திரைதரு மரபின் உரவோன்’ (பெரும்பாணாற்றுப் படை 30 - 31).

இப்பாட்டின் உரையாசிரியர், நாகப்பட்டினத்துச் சோழ அரசன் ஒருவன் பாதாளம் சென்று, அங்கு ஒரு கன்னிகை மீது காதல் கொண்டான். அங்கு அவர்களுக்குப் பிறந்த மகனை அவள், அவன்பால் திரைவழியாக அனுப்பி வைத்தாள் என்ற ஒரு கட்டுக்கதையைக் கூறி இத்தொடருக்கு பொருள் கூறியுள்ளார்.

போலவே பத்துப்பாட்டுக் காலத்துக்கு பிற்பட்ட காலத்தை சேர்ந்த ‘மணிமேகலை’யில், மற்றொரு சோழன், ஈங்குக் காவிரிப்பூம்பட்டினத்துக் காவலன் நெடுமுடிக்கிள்ளி என்பான் தன் தலைநகரைச் சார்ந்த ஒரு சோலையில் ஒரு நாகக் கன்னிகையைக் கண்டு காதல் கொண்டான். ஒரு திங்கள் கழித்து அவள் மறைந்துவிட்டாள். சிலகாலம் கழித்து அவள் அவர்களுக்குப் பிறந்த மகனை கம்பளச்செட்டி என்ற வணிகனின் கலம் வழி அனுப்பிவைத்தாள்.

ஆனால், கலம் கடலில் கரை அருகே கவிழ்ந்து விட்டது. அது கேட்டு மகனைத் தேடி அரசன் அலைந்தான். அதனால் ஆண்டுதோறும் நிகழும் இந்திரவிழாவை மறந்தான். அதன் விளைவால் தலைநகரை கடல் கொண்டது என்ற கதை கூறப்பட்டுள்ளது (மணிமேகலை: 24:29 - 43: 25:178 - 192 பூரிதத்த ஜாதகக் கதைகளின்படி கம்பளர், அஸ்ஸதரர் இருவரும் பழங்குடியினர், எண்: 543).

இக்கதைகள் அனைத்தும் கிழக்குக் கடற்கரையில் இருந்த நாகர் உலகத்துக்கு கடல்வழித் தொடர்பு இருந்தது என்பதை உணர்த்துகின்றன...’’ ‘‘ஐஸ்... நாகர்கள் பத்தின விவரம் போதும். அகஸ்தியர் பத்தி சீக்கிரம் படி... ஆதி எப்ப வேணும்னாலும் நம்ம பக்கம் வருவான்...’’ சுவடியைப் புரட்டியபடியே வந்தாள்.

‘‘காட் படிக்கிறேன் கேளு. மகாபாரத காலத்துக்கு முன்பே இந்திய தீபகற்பத்தின் தென் கோடி வரை அகஸ்தியர்கள் பரவி வாழ்ந்திருந்தனர். பல்வேறு அகஸ்தியர்கள், பல்வேறு இடங்களில், பல்வேறு காலங்களில் வாழ்ந்திருந்தாலும் புராணங்களில் உள்ளது போலவே பாரத வீர காவியத்திலும் எல்லா அகஸ்தியர்களையும் ஓர் அகஸ்திய முனியாகவே கொண்டு பேசப்பட்டுள்ளது.

மகாபாரதம் பஞ்சவடியில் பழைய அகஸ்திய ஆஸ்ரமம் ஒன்றைக் குறிப்பிடுகிறது (மகாபாரதம்: 3:99:8632). கடல் இடையே சவூபத்ரா என்னுமிடத்தில், அகஸ்திய துறவி மடம் ஒன்றையும் அது குறிப்பிடுகிறது.ஐந்து நாரீ தீர்த்தங்களில் ஒன்றாக பாண்டிய நாட்டைச் சேர்ந்த அகஸ்திய தீர்த்தம் ஒன்றையும் குறிப்பிடுகிறது (மகாபாரதம்: 1:21646, 217, 78 - 77).

இவற்றில் இறுதியாகக் குறிப்பிடுவது தமிழ் மரபு வழிச் செய்திகளின்படி தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு அகஸ்தியர் தம்முடைய நிலையான  உறைவிடமாக வகுத்துக் கொண்ட பொதியமலையிலிருந்து வரும் அருவியாகலாம். நெல்லை மாவட்டம் பாபநாசம் நீர் வீழ்ச்சியாதலும்  கூடும்!’’ ‘‘போதும் ஐஸ்... நமக்கு வேண்டியது கிடைச்சுடுச்சு!’’ ‘‘எதைடா சொல்ற?’’ ‘‘விஜயனோட வில் இருக்கிற இடம்!’’

(தொடரும்) 

ஓவியம் : ஸ்யாம்