சூழல் போராளி
-ச.அன்பரசு
அண்மையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலுள்ள ஓபரா ஹவுசில் 28வது கோல்ட்மேன் சூழலியலாளர் விருது ஒடிஷாவைச் சேர்ந்த பிரஃபுல்லா சமன்தாராவுக்கு வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக இங்கிலாந்து கனிம நிறுவனமான வேதாந்தாவின் பாக்ஸைட் சுரங்கத்துக்கு எதிராக ஒடிஷாவின் டோங்கிரியா கோண்ட் பழங்குடி மக்களைத் திரட்டி நியமகிரி மலையில் அவர்களுக்கான வாழ்வுரிமை போராட்டம் நடத்தி வென்றவரின் அர்ப்பணிப்பிற்குத்தான் இந்த குளோபல் கௌரவம்.
 65 வயதான பிரஃபுல்லாவின் நீண்ட சட்டப்போராட்டத்தில் கடத்தல், குண்டர்களால் சித்திரவதை, மாவோயிஸ்ட் முத்திரை என கிடைத்த வலிகளும், அவதூறுகளும் எண்ணற்றவை. 2004ம் ஆண்டு அக்டோபரில்தான் பழங்குடி மக்களைத் தவிக்க வைக்கும் பிரச்னைக்கான விதை ஆழமாக விதைக்கப்பட்டது. அரசின் ஒடிஷா கனிம நிறுவனம் இங்கிலாந்தின் வேதாந்தா நிறுவனத்தோடு நியமகிரி மலையில் அலுமினியத்திற்கு மூலமான பாக்ஸைட்டை தோண்டியெடுக்க ஒப்பந்தம் செய்தது.
2 பில்லியன் டாலர் திட்டத்தில் 70 டன் பாக்ஸைட் தோண்டி எடுக்க பழங்குடிகள் 1660 ஏக்கர் நிலத்தை விட்டுத்தர வேண்டும் என்ற அரசின் நிபந்தனைதான் பிரச்னையின் தொடக்கப்புள்ளி. ‘‘வங்கப்புலிகள் மற்றும் யானைகள் அழிய காரணமே நியமகிரியிலுள்ள வேதாந்தாவின் பாக்ஸைட் சுரங்கம்தான். இங்கு நிலங்களை வளமாக்கும் பன்சதாரா, நாகபலி என்ற இரு ஆறுகளையும் இத்திட்டம் மாசுபடுத்தியுள்ளது.
 இந்த ஆறுகளை நம்பியுள்ள 5 மில்லியன் மக்களின் குடிநீர் தேவைக்கு யார் பொறுப்பு? தவிர டோங்கிரியா கோண்ட் பழங்குடி மக்களின் ஒரே வாழ்விடமான இப்பகுதியின் சூழல் அழியும்போது அவர்களும் விரைவில் காணாமல் போய்விடுவார்கள்...’’ என கண்களில் பெரும் தவிப்போடு பேசுகிறார் சமூக செயல்பாட்டாளர் சமன்தாரா.
எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த சமன்தாரா, தன் பால்யத்தில் நண்பர்களோடு விளையாடித் திரிந்த இடங்களில் தொண்ணூறுகளின் தாராளமயமாக்கத்தால் தொழிற்சாலைகள் உருவாகத் தொடங்கியதை கவனித்தார். ‘‘வளர்ச்சியின் பெயரில் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது இன்று நேற்றல்ல, 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.
 1990ல் கோபால்பூர் கடற்புறத்தில் டாடாவின் இரும்புத் தொழிற்சாலை சூழலை அழிக்கிறது என அதனை தடுத்து நிறுத்தினோம். மனிதர்களும் விலங்குகளுமாக ஒன்றிணைந்து வாழ்ந்த நியமகிரி மலையின் அழகை முதல்முறை தரிசித்தபோது மெய்மறந்து நின்ற தருணத்தை மறக்கவே முடியாது...’’ என தன் பால்யத்தின் பசுமை நினைவுகளில் புன்னகை மலர்கிறார் சமன்தாரா.
2003ம் ஆண்டு எதேச்சையாக நாளிதழைப் புரட்டும்போது, நியமகிரியில் நடைபெறும் பாக்ஸைட் சுரங்கம் தொடர்பான பொதுமக்களுக்கான கருத்துக்கேட்பு கூட்டம் பற்றிய செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்தார் சமன்தாரா. ஏனெனில் பக்கத்து மாவட்டத்தில் இதுபோலவே தோண்டப்பட்ட கனிம சுரங்கத்தினால் இயற்கை சீர்கெட்டதை முன்னமே அறிந்திருந்ததால், ஆங்கிலம் அறியாத, சாலை வசதியற்ற தம் மக்கள் சார்பாக தானே இதில் போராட முடிவெடுத்தது தங்கத்தருணம்.
மக்களிடம் சுரங்கத்தின் தீமை குறித்து பிரசாரம் செய்தவர், வேதாந்தா நிறுவனத்தின் சுரங்கத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தை நாடினார். ‘‘வனத்துறை சட்டம் 2006, பட்டியல் இனத்தவரின் நிலச்சட்டம் (PESA) ஆகியவை பற்றி பழங்குடிகளுக்கு ஏதும் தெரியாததால், அதை சாதகமாக்கிக் கொண்ட அரசும், வேதாந்தா நிறுவனமும் கைகோர்த்து முறையான தகவல்களை மக்களுக்கு கூறாமல் அவர்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக பறிக்க முயற்சித்தன.
எனவே, எங்களது உரிமைகளை நாங்களே பாதுகாக்க, உச்சநீதிமன்றத்தின் வனத்துறை பெஞ்சை அணுகினோம். இதில் ரித்விக் தத்தா, சஞ்சய் பாரிக் ஆகிய வழக்குரைஞர்களின் உதவி முக்கியமானது...’’ தீர்க்கமான குரலில் உறுதியுடன் பேசுகிறார் சமன்தாரா. 2013 ஆகஸ்ட் 19ல் கிராம சபை வாக்குகளின் மூலம் கனிம நிறுவனத்தின் செயல்பாட்டை தீர்மானிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியது.
வாக்கெடுப்பில் மக்கள் வேதாந்தாவிற்கு எதிராக இருந்தனர். அரசு மீண்டும் தொடர்ந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இப்போதைய வேதாந்தாவின் லான்ஜிகார் சுத்திகரிப்பு ஆலையின் விளைவாக, அப்பகுதி மக்கள் தோல்வியாதி, நாட்பட்ட நோயினால் இறப்பு ஆகியவற்றால் தவித்தாலும் இவை அரசின் ஆய்வுத்தரவில் இடம்பெறுவதில்லை.
பழங்குடிகளுக்காக போராடும் நியமகிரி சுரக்ஷா சமிதி (NSS) என்ற அமைப்பை உள்துறை அமைச்சகமே நக்ஸலைட் சார்பு என்கிறது. ‘‘இதுபோன்ற அவதூறுகள் எங்களுக்கு புதிதல்ல. டோங்கிரியா மக்களுக்கான ஆதரவு அமைப்புகளை முறித்துப்போட கனிம நிறுவனத்தோடு இணைந்து அரசு செய்யும் புறவாசல் நுட்பம் இது.
‘என்எஸ்எஸ்’ அமைப்பு அமைதியை லட்சியமாகக் கொண்டது.ஆனால், காவல்துறை, எம் மக்களை போலி என்கவுண்டரில் கொன்று வருகிறது. இப்போது காந்ததார் பல்லுயிர் மையத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்க டோங்கிரியா மக்களை திரட்டத் தொடங்கியுள்ளோம். இது எங்களின் காந்ததார் பகுதியை மட்டுமல்ல; இந்தியாவில் வன வளங்களை எங்கு சுரண்டினாலும் அதை தடுக்க உதவும். காந்ததார் சுரக்ஷா சங்கர்ம சமிதி அமைப்புக்கு இன்னும் அதிக ஆதரவு தேவை...’’ என்கிறார் பிரஃபுல் சமன்தாரா.
கனிம தேசம்
இந்தியாவின் கனிம உற்பத்தி மதிப்பு - 10,000 கோடி (2014 - 2015) கனிம வள மாநிலங்கள் + மதிப்பு - ராஜஸ்தான் (1,970 கோடி), ஒடிஷா (3,443 கோடி), சத்தீஸ்கர் (1,556 கோடி), கர்நாடகா (925 கோடி), ஜார்கண்ட்(828 கோடி)
கனிம மதிப்பு (டாலர்களில்)
தென் ஆப்பிரிக்கா (2.5 ட்ரில்லியன்) ரஷ்யா (794 பில்லியன்) ஆஸ்திரேலியா (737 பில்லியன்) உக்ரைன் (510 பில்லியன்) கினியா(222 பில்லியன்) (Wikipedia.org,telegraph.co.uk)
|