விண்ணைத்தாண்டி வருவாயா!



பெங்களூரு மாணவியின் பெயரை விண்வெளியிலுள்ள கோள் ஒன்றுக்கு சூட்டப் போகிறார்கள்!

-ச.அன்பரசு

சமூகத்தில் ஒருவர் செய்த சீர்திருத்தங்கள், அர்ப்பணிப்பான பணிகளைப் பாராட்டி அதிகபட்சமாக அவருக்கு என்ன அங்கீகாரம் கிடைக்கும்? சாலை ஜங்ஷனில் சிலை வைப்பார்கள். தெருவுக்கு பெயர் சூட்டுவார்கள். மணிமண்டபம் எழுப்புவார்கள். இதைத் தாண்டி அவரது புகழ் விண்ணைத் தாண்டாது.

இந்த சூழலில்தான் பெங்களூருவைச் சேர்ந்த 16 வயது சிறுமி செய்த ஆராய்ச்சி, அவருக்கு பால்வெளியில் அங்கீகாரம் தேடித் தந்திருக்கிறது! அமெரிக்காவின் டெக்ஸாஸிலுள்ள உலகளாவிய சுற்றுச்சூழல் பொறியியல் மாற்று ஆற்றல் அமைப்பின் தங்க மெடலை தன் பகுதியிலுள்ள வர்தூர் ஏரி மாசுபடுதலை கண்காணிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக பெற்றிருக்கிறார் சாஹிதி பிங்கலி.

அது மட்டுமல்ல. ப்ளஸ் 2 மாணவியான அவர், ஏரிகள் மாசுபடுதலை எளிதில் கண்காணிக்க உதவும் ‘app’ஐ உருவாக்கியதற்காக பால்வெளியிலுள்ள கோள் ஒன்றுக்கு அவரது பெயரை சூட்டப் போகிறார்கள்! ‘‘சூழல் குறித்த எனது ஆராய்ச்சிக்கு விருது கிடைக்கும் என நம்பினேன். ஆனால், விண்வெளியிலுள்ள கோளுக்கு பெயர் சூட்டும் அளவுக்கான அங்கீகாரத்தை நான் எதிர்பார்க்கவில்லை...’’  நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் சாஹிதி பிங்கலி.

கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மே மாதம் 14 - 19 ஆகிய தினங்களில் நடைபெற்ற இன்டர்நேஷனல் சயின்ஸ் எஞ்சினியரிங் ஃபேரை (Intel ISEF) முன்னிட்டு உலகப் பள்ளி மாணர்களுக்கான மிகப் பெரிய அறிவியல் போட்டி ஒன்றை இன்டெலும், எம்ஐடி லிங்கன் லேப்பும் இணைந்து நடத்தின.

இந்நிகழ்வில் 2 ஆயிரம் போட்டியாளர்களை கடந்து தனது ஏரி மாசுபடுதல் தொடர்பான பிரசன்டேஷன் மற்றும் அப்ளிகேஷன் கண்டுபிடிப்புக்காக இரண்டாம் பரிசை பெற்றிருக்கிறார் சாஹிதி பிங்கலி. இப்போட்டியில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் சார்பிலும், சவுதி அரேபிய மன்னர் அப்துல் அஸீஸின் நிறுவனம்மற்றும்‘USAID’ன் ஸ்பெஷல் விருது களையும் வென்றிருக்கிறார்! 

சரி. சாஹிதியை புகழ் பெற வைத்த அந்த அறிவியல் சோதனைதான் என்ன? ‘‘நான் அமெரிக்காவில் பிறந்தவள். பின் பெற்றோரோடு இந்தியாவிலுள்ள பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்துவிட்டோம். நாங்கள் வசிக்கும் வீட்டிலிருந்து கைகொண்ட்ராஹலி என்ற நீர்ப்பரப்பை தினமும் பார்த்துக் கொண்டிருப்பேன். அதில் மக்கள் குளிப்பதை வைத்துத்தான் அந்த ஏரி மக்கள் பயன்பாட்டிலுள்ளது என்பதை உணர்ந்தேன்.

ஆனால், அதை சோதித்தபோது அந்நீர் கடுமையாக மாசுபட்டிருந்தது தெரிய வந்தது. நம் நாட்டிலுள்ள 90% நீர்நிலைகள் சரியான கண்காணிப்பு இல்லாததால் குப்பைக்கிடங்காகவே மாறிவிட்டன...’’ என வேதனைப்படுகிறார் சாஹிதி. இதனைத் தொடர்ந்து பல்வேறு ஏரிகளில் செய்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மலிவான, அதேசமயம் எளிதில் நீர் மாசுபாட்டை கண்டறியக் கூடிய ‘app’ஐ கண்டறிய முற்பட்டிருக்கிறார்.

இந்த மொபைல் ஆப்புடன் வரும் சிம்பிள் அறிவியல் கிட் மூலம், மாசுபட்ட நீரின் தரத்தை நொடியில் அறியலாம். பெங்களூருவிலுள்ள இன்வென்ச்சர் அகாடமி மாணவியான சாஹிதி பிங்கலி, ‘நமது ஏரிகள் நமது குரல்’ என்ற பள்ளி ப்ராஜெக்டுக்காக செய்த ஆராய்ச்சிதான் ‘நீர்நிலைகளைக் கண்காணிப்பதில் மக்களின் பங்கு’ என்ற பிரசன்டேஷனாகவும் மொபைல் ஆப்பாகவும் மாறி வெற்றி மாலைகளை அவரது கழுத்தில் சூட்டியிருக்கிறது.

‘‘பெற்றோர் எனக்களித்த ஆதரவையும், பள்ளி தந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டேன். சூழல் காக்க என்னுடைய சிறிய முயற்சி இது...’’ மலர்ச்சியோடு உரையாடும் சாஹிதி, கடந்த டிசம்பர் மாதம் புனே நகரில் நடந்த IRIS அறிவியல் திருவிழாவில் ஏரியின் மாசுபடுதல் குறித்த ஆராய்ச்சிக்காக பரிசை வென்றுள்ளார். இப்போது மிச்சிகன் பல்கலையின் சுற்றுச்சூழல் மற்றும் நீராதார பொறியியல் மையத்தில் இன்டர்ன்ஷிப் செய்து வருகிறார் சாஹிதி பிங்கலி.

ISEF ஹிஸ்டரி!

1950ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகளாவிய அறிவியல் திருவிழா இது. பின்னாளில் ‘இன்டெல் உலகளாவிய அறிவியல் மற்றும் பொறியியல் போட்டி’ என பெயர் மாற்றம் பெற்ற இப்போட்டி, பிரபஞ்சத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்கான அறிவியல்திறனை அரங்கேற்றும் மேடையாக திகழ்கிறது.

ஆண்டுதோறும் மேமாதம் Society for Science & the Public என்ற வாஷிங்டன் டி.சி.யிலுள்ள தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைந்து இந்நிகழ்வை வழிநடத்துகிறது. 70 நாடுகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த அறிவியல் நிகழ்வில் பங்கேற்று பரிசுகளோடு, உதவித்தொகை, கல்விக்கட்டணம், அறிவியல் களப்பணி என பெறும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

40 லட்சத்து 70 ஆயிரம் டாலர்கள்! 2012ம் ஆண்டிலிருந்து இன்டெல் நிறுவனம் இப்போட்டிக்கு நிதியுதவி அளித்து வருகிறது. 2012ம் ஆண்டு நோபல் வென்றவர்களில் 7 பேர் ஐஎஸ்இஎஃப் போட்டியின் முன்னாள் வெற்றியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அழிவின் விளிம்பில் நீரும் நிலமும்!

* இந்தியாவில் சதுப்புநிலங்கள் அளவு - 38% (1991 - 2001).
* பெங்களூருவிலுள்ள ஏரிகள் உருவான காலம் - 16ம் நூற்றாண்டு.
* பெங்களூருவின் நகர்ப்பரப்பிலுள்ள ஏரிகள் - 105 (இதில் சிறப்பான நிலையில் இருப்பவை - 4). 
* ஆக்கிரமிப்பிலுள்ள ஏரிகள் - 98% (90% - கட்டிடக் கழிவுகள்; 80% - நீர் மாசுபாடு).
* (Energy and Wetlands Research Group, Wetlands_Treasures of Bangalore_CES_IISc_2016 அறிக்கைப்படி)