மகர லக்னம் - சனி - குரு சேர்க்கை தரும் யோகங்கள்
கிரகங்கள் தரும் யோகங்கள் - 97
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
‘மகரத்தார் நகரத்தை ஆள்வார்’ என்பது பழமொழி. அதுபோல இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களிடம் நல்ல நிர்வாகத்திறன் இருக்கும். இரண்டு ராஜ கிரகங்கள் சேர்க்கை பெறும்போது பெரும் மாற்றம் ஏற்படுகின்றது. குருவை சனியானவர் கட்டுப்படுத்த முயற்சிப்பார். ஆனாலும், குரு மேலெழுந்து வந்தபடி இருப்பார்.
 மிதமிஞ்சிய இரக்க சுபாவத்தால் பல இடங்களில் ஏமாறுவார்கள். தேவையற்ற இடங்களில் விட்டுக் கொடுத்துப் போவார்கள். பலபேர் இவர்களை தியாகி என்றே அழைப்பார்கள். இடம் பொருள் ஏவலறிந்து பேசினால் குருவின் கம்பீரத்தை பெறலாம். இல்லையெனில் தாழ்ந்து போக நேரிடும். பெரும்பாலும் கம்பீரமும், கருணையும் ஒருசேர இவர்களிடத்தில் கலந்திருக்கும்.
இவர்களைப் பார்த்தவுடனேயே உங்களிடம் எல்லா குறைகளையும் சொல்ல வேண்டுமென்று விரும்புவார்கள். செயற்கைத்தனமாக பேசுவது பிடிக்காது. நாலு வார்த்தை பேசினாலும் நறுக்குத் தெறித்தாற்போல பேசுவார்கள். எப்போதும் ஏன்? எதற்கு? எப்படி? என்கிற வினா எழுந்தபடி இருக்கும். புரட்சிகரமான சிந்தனை உண்டு. மனிதநேயத்தை பாதிக்கும் வறட்டு பக்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
 மேலே சொன்னவை பொதுவான பலன்கள். இனி, ஒவ்வொரு ராசியிலும் சனியும், குருவும் நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா? மகர லக்னத்திலேயே- அதாவது ஒன்றாம் இடத்திலேயே சனியும், குருவும் சேர்க்கை பெற்றிருந்தால் அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியில் அமர்வார்கள். இந்த அமைப்பு எதிலும் ஒரு நுணுக்கத்தை கொடுக்கும்.
அரசுக்கே ஆலோசனை கூறும் அளவிற்கு உயர்ந்த பதவிகளில் அமர்வார்கள். தோற்றப் பொலிவை விட அறிவுப் பொலிவிற்கே முக்கியத்துவம் தருவார்கள். எல்லா விஷயங்களையும் அறிந்தும், புரிந்தும் வைத்திருப்பதால் முகத்தில் ஒரு முதிர்ச்சியிருக்கும். பழைய கருங்கல் வீட்டைப்போல் புதுமையாகக் கட்டுவார்கள். பதவியை நேசிக்காமல் அதில் அமர்ந்திருக்கும் மனிதரை நேசிப்பார்கள்.
மகரச்சனி என்பதால் வேகமாக இருப்பீர்கள். எல்லாவற்றிலும் அதிக உரிமை எடுத்துக் கொள்வீர்கள். எல்லா விஷயத்தைப்பற்றியும் ஏதேனும் ஒரு கருத்து சொல்வார்கள். எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கவே விரும்புவார்கள். இரண்டாம் இடமான கும்பத்தில் சனியும், குருவும் சேர்ந்திருந்தால் இவர்களின் பள்ளி வாழ்க்கையில் ஆசிரியர்கள் எப்படியிருந்தாலும் இவர்கள் சிறப்பாகப் படித்து விடுவார்கள்.
தன் இனம், நாடு, மக்கள் என்றுதான் எப்போதும் பேசுவார்கள். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஈறாக பழைய உலக மொழிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். ஆசிரியரையே குறுக்குக் கேள்விகள் கேட்டு திகைக்க வைப்பார்கள். விடுதியில் தங்கிப் படிப்பது என்று முதல் பாதி இருக்கும். நான்காம் வகுப்பிலிருந்து கல்வியின் பக்கம் கொஞ்சம் திரும்புவார்கள். பயந்த சுபாவமெல்லாம் நீங்கும். படிப்பைவிட கவிதையில் ஈர்ப்பு இருக்கும்.
மூன்றாம் இடமான மீனத்தில் சனியும், குருவும் சேர்க்கை பெற்றிருந்தால் சரியான வேலைக்காரர்கள் அமையாமல் திண்டாடுவார்கள். பொதுவாகவே மகர லக்னமோ அல்லது மகர ராசியிலோ பிறந்தவர்களுக்கு மாமனார், மாமியாருக்குள் எப்போதும் ஏதேனும் பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கும்.
குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு கட்டுக்கட்டான கோப்புகளைப் பார்க்கும் இவர்கள், சாதாரண மக்களின் வாழ்க்கைப் போக்கையும் சந்தை நிலவரத்தையும் அறிந்து புதுத் திட்டங்களை வகுப்பதில் வல்லவர்கள். நான்காம் இடமான மேஷ ராசியில் சனியும், குருவும் சேர்க்கை பெற்றிருந்தால் பூர்வீகச் சொத்தில் ஏதேனும் பிரச்னை வந்தபடியே இருக்கும். முதல் முதலீடு கட்டிய வீடாக இருப்பது நல்லது.
அதேபோல, ‘‘ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி அண்ணன் கீழ இருக்காரு. நான் மேல இருக்கேன்...’’ என்பதெல்லாம் சரியாக வராது. அபார்ட்மென்ட்டில் வீடு வாங்கும்போது பொதுவான இடம் எவ்வளவு... வீட்டின் அளவு எவ்வளவு என்கிற விஷயத்தை சரியாகப் பார்த்து வாங்க வேண்டும். பத்திரப்பதிவுக்கு முன்பு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஏனெனில், அரசாங்க ரீதியாக பின்னால் தொந்தரவு வரும்.
கிராமம் எனில் புறம்போக்கு... பட்டா... கிராமத்து நத்தம் என்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருங்கள். தாயாருக்கு அடிக்கடி ஏதேனும் உடல்நிலையில் பிரச்னைகள் வந்தபடியே இருக்கும். சொந்த பெயரில் வாகனங்களை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பெற்றோர் பார்த்தாலும், பார்க்காது போனாலும், சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் சிஸ்டமேட்டிக்காக வேலையைப் பார்ப்பார்கள்.
சுய ஒழுக்கம் மிகுந்திருக்கும். இவர்கள் வாகனப் பிரியர்களாகவும், அடிக்கடி வாகனங்களை மாற்றிக் கொண்டிருப்பவர்களாகவும் இருப்பார்கள். ஐந்தாமிடமான ரிஷபத்தில் சனியும், குருவும் சேர்ந்திருப்பதால் தங்களது பிள்ளைகள் தொலைக்காட்சி மற்றும் திரையில் மிளிர வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.
இந்த லக்னத்துக்காரர்களின் பிள்ளைகள் புகழ் பெற்ற கட்டிட நிபுணர்களாகவும், ஆர்க்கிடெக்டாகவும் விளங்குவார்கள். சிலருக்கு நீர்க்கட்டி, ஹார்மோன் பிரச்னையால் குழந்தைப்பேறு தள்ளிப்போகும். குழந்தை பிறந்தவுடன் உங்கள் அந்தஸ்தும், வருமானமும் படிப்படியாக உயரும். பொதுவாகவே ஐந்தில் குரு நின்றால் தாமதமாக குழந்தை பாக்யம் கிட்டும். விடுதியில் தங்கி படிக்க நேரிடும். பெற்றோரின் அருமை தெரியாமல் நடந்து கொள்வார்கள்.
ஆறாம் இடமான மிதுனத்தில் சனியும், குருவும் சேர்க்கை பெற்றால் குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை இருந்தால் உடனடியாக சரி செய்து விடவேண்டும். முதலில் கொழுப்பு நீக்கிய எள் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தலாம். எள்ளுடன் வெல்லம் சேர்த்து மாதம் ஒரு சனிக்கிழமை சாப்பிடலாம். இவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று யாராவது சொன்னால் கொதித்தெழுவார்கள்.
எந்த உதவியாக இருந்தாலும் கேட்டதை அழகாக செய்து கொடுப்பார்கள். ஆறாம் அதிபதியான புதன் தூது, சாட்சி, சிபாரிசு கிரகங்களுக்கு உரியவராக இருப்பதால் உங்களை பலபேர் சுற்றிச் சுற்றி வருவார்கள். யோசிக்காமல் ஜாமீன், கேரண்டர் கையெழுத்தை போடாதீர்கள். யாருக்காவது கடனுதவி செய்ய வேண்டுமென்று வந்தால் புதன், சனி ஆளும் நட்சத்திரங்கள் உள்ள நாட்களாக வந்தால் தள்ளிப் போடுங்கள். அதேபோல நீங்கள் பிறந்த நட்சத்திரமாக இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏழாம் இடமான கடகத்தில் சனியும், குருவும் இருந்தால் திருமணம் தள்ளிப் போகும். தடை வந்தபடி இருக்கும். ஆனால், திருமணம் தாமதமாக நடந்தால் குழந்தை பாக்யம் உடனே கிட்டும். இவர்களின் வாழ்க்கைத் துணைவர் கலைகளில் மிகவும் ஈடுபாடு மிக்கவர்களாக இருப்பார்கள். மிகுந்த ரசனை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.
வாழ்க்கைத் துணைவர் வழியில் வந்த சொந்தங்கள் இவர்களால் பயனடைவார்கள். அதேபோல வேற்று மதத்தார் இவர்களோடு கூட்டு வியாபாரத்தில் ஈடுபட்டால் நன்றாகவே இருக்கும். வாழ்க்கைத் துணையோடு ஏதேனும் வாத விவாதங்கள் வந்தபடியே இருக்கும். புராதனச் சொத்து, பாட்டன் சொத்தையெல்லாம் காப்பாற்றி வைத்துக் கொள்வார்கள். ஏதேனும், பெரிய பதவியில் இருந்து கொண்டேயிருப்பார்கள்.
எட்டாமிடமான சிம்மத்தில் சனியும், குருவும் இணைந்திருந்தால் எவ்வளவு சம்பாதித்தாலும் காசு கையில் தங்காது. பூர்வீகத்தில் தாங்கள் வசித்த இடத்திற்கு மீண்டும் சென்று குடியேறக் கூடாது. இதுவரை யாராலும் கண்டுகொள்ளப்படாத துறையில் ஈடுபட்டு தங்களின் தனி முத்திரையைப் பதிப்பார்கள். ஆனாலும், ஒவ்வொரு யோசனையையும்- வெற்றியோ தோல்வியோ இவர்கள் முயற்சிக்க வேண்டும்.
இல்லையெனில் வெறுமே விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒன்பதாம் இடமான கன்னியில் சனியும், குருவும் சேர்க்கை பெற்றிருந்தால் தந்தையயை விட்டு அவ்வப்போது பிரிந்து வாழும் சூழ்நிலை வரும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து தந்தையைப் பிரிய வேண்டிய சூழல் தொடங்கும்.
அப்பாவுக்கும் உங்களுக்கும் அதீதமான பாசமெல்லாம் இருக்கும். அதேசமயம் கருத்து மோதல்களும் வந்துபோகும். அரசியல்வாதிகளின் தொடர்புகளை அதிகப்படுத்திக் கொள்வார்கள். அரசாங்கத்திற்கே ஆலோசனை கூறுபவராக விளங்குவார்கள். பத்தாம் இடமான துலாம் ராசியில் சனியும், குருவும் சேர்வதால் மெரைன் இன்ஜினியரிங், ஐ.டி., மருத்துவத்தில் இ.என்.டி., மனநோய் மருத்துவம் போன்ற துறையில் படித்தால் நிச்சயம் ஏற்றம் உண்டு. ஃபேஷன் டெக்னாலஜி, எம்.பி.ஏ. படிப்பில் பைனான்ஸ் போன்றவை உங்களுக்கு ஏற்றது.
தமிழ் இலக்கியம் படிக்க சமூக அங்கீகாரம் கிடைக்கும். உத்யோக ஸ்தானத்திற்கு துலாச் சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், தராசு சின்னத்தை தாங்கியிருப்பதாலும் எப்போதும் வியாபார சிந்தனையோடு இருப்பார்கள். துலாச் சுக்கிரன் பத்தாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால் மேலிடத்திற்கு யதார்த்தமான ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
கடைசி வரை ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வூதியம் வாங்குபவர்கள் இவர்களில் ஒருசிலரே. இவர்களில் சிலர், அறநிலையத்துறை, கல்வெட்டு ஆய்வாளர், பத்திரப்பதிவு, வழக்கறிஞர், மியூசிய காப்பாளர் போன்ற பணிகளில் அமர்வார்கள். பதினோராம் இடமான விருச்சிக ராசியில் சனியும், குருவும் இணைவதால் குறுக்கு வழியில் சென்று பணம் சம்பாதிக்க முயற்சிப்பார்கள்.
சேமிப்புகளை அவ்வப்போது எடுத்து செலவழித்து விடுவார்கள். ஏஜென்சி, புரோக்கரேஜ் போன்ற தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள். மூத்த சகோதரர்களை விட சகோதரிகள் மிகுந்த அனுசரணையாக இருப்பார்கள். பன்னிரெண்டாம் இடமான தனுசு ராசியில் சனியும், குருவும் இணைவதால் அதிபுத்திசாலியாக இருப்பார்கள்.
ஆனால், சம்பாதிக்கத் தெரியாது. பூஜை, மந்திரம் சொல்லுதல், மாந்திரீகத்தில் ஈடுபாடு என்றிருப்பார்கள். இரவுத் தூக்கமே இருக்காது. இந்த அமைப்பில் பிறந்த பெரும்பாலோர் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு கோயில்கள், ஜீவசமாதிகள் என்று திரிந்தபடி இருப்பார்கள். சனியும், குருவும் ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் பல சமயங்களில் எதிர்மறை பலன்களே கிட்டும். அதிக வாக்குவாதம் செய்து கொண்டேயிருப்பார்கள்.
கோபத்திலோ, ஆத்திரத்திலோ கொண்டு தள்ளும். கொஞ்சம் தன்னிலை இழக்க நேரிடும். இல்லறமா, துறவறமா என்கிற மனப்போராட்டம் இருந்தபடி இருக்கும். இதுபோன்ற நேரங்களில் மனதில் நிம்மதி பரவ ஞானிகளின் ஜீவசமாதிகளுக்குச் சென்று வணங்கி வருவது நல்லது. அப்படிப்பட்ட ஒரு தலமே திருவொற்றியூரில் அமைந்துள்ள பட்டினத்தார் ஜீவசமாதி. பட்டினத்தடிகளுக்கு பேய்க் கரும்பு இனித்த இடம் இதுவே. எனவே, தனக்குரிய இடம் இதுவே என்று அங்கேயே சமாதியானார். சென்னை - திருவொற்றியூர் கடற்கரையோரம் அமைந்துள்ள பட்டினத்தாரின் ஜீவசமாதிக்குச் சென்று தரிசித்து வாருங்கள்.
(கிரகங்கள் சுழலும்)
ஓவியம்: மணியம் செல்வன்
|