வனமகன்
-குங்குமம் விமர்சனக்குழு
பழங்குடியினரின் வீட்டையும், காட்டையும் அழிக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களை அழிப்பவனே ‘வனமகன்!’ அந்தமான் காட்டில் இயற்கையோடு இணைந்திருக்கிறது ஜெயம் ரவியோடு இருக்கிற ஆதிவாசிக்குழு. அந்த இடத்தை காற்றாலை நிறுவ சரியான இடமாக தேர்வு செய்கிறது ஒரு கார்ப்பரேட் நிறுவனம்.
 அதை எதிர்த்துப் போராடுகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். அதிகாரத்தோடு போலீஸ் இணைந்து அவர்களைத் துரத்த, ஓடும் ஜெயம் ரவியை சுற்றுலாவிற்குச் சென்ற கோடீஸ்வரி சாயிஷா காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வர, இங்கேயுள்ள நாகரீகம் கண்டு மிரள்கிறார் ரவி. சாயிஷாவின் குடும்ப நண்பரான பிரகாஷ்ராஜ், தன் மகனை அவருக்கு திருமணம் செய்து வைத்து சொத்துக்களை நிர்வகிக்க நினைக்கிறார். அந்தமான் போலீஸ் சென்னைக்கு வந்து ரவியை அள்ளிச் செல்கிறது.
மீண்டும் அந்தமான் வந்த சாயிஷா ரவியை மீட்டாரா... ஆதிவாசி மக்களை ரவியோடு இணைந்து காத்தாரா... என்பது க்ளைமேக்ஸ். இயற்கையை பரிபூரணமாக நேசிப்பது அவசியம், பழங்குடியினரை அவர்களின் இருப்பிடத்திலிருந்து அகற்றாதீர்கள் என்ற இரண்டு மெசேஜை எடுத்துக்கொண்டு, அதை வைத்தே ஒரு கமர்ஷியலை உருவாக்கிய விதத்திற்கே டைரக்டர் விஜய்யை பாராட்டலாம்.
மெரிலாண்ட் சுப்பிரமணிய காலக் கதைக்கு தனது பிரத்யேக மசாலா தூவி சென்டிமென்ட் கோட்டிங் கொடுத்திருக்கிறார் இயக்குநர். பழகிய கதை. அதுவும் பழைய கதை. ஆதிவாசியாக ஜெயம் ரவி. விறைத்து, முறைத்து ரகளையாக மிரட்டுகிறார். அதிகம் பேசாமல் பார்வையிலேயே ஊடுருவுகிறார். விலக்கப்பட்டவர்களாக, விளிம்பில் வாழும் பூர்வீகக் குடிமக்களை, அவர்களை ஆட்டுவிக்கும் அரசியலை அசலாக, அழுத்தமாக, அட்டகாசமாக பதிவு செய்வார்கள் என்று பார்த்தால்... பெரும் ஏமாற்றம்.
அறிமுகம் சாயிஷா அழகு. படத்தின் மொத்தமான ஆறுதல். பட்டர் மில்க் தேவதை. முகபாவனையிலும், காதல் வெளியீட்டின் அம்சங்களிலும் பேரழகு! பல இடங்களில் பரவச ஆச்சர்யம். ஆரம்ப பாடலில் அவர் போடுகிற ஆட்டம் அழகுப் பதிவு. ரொம்ப நாளைக்கு ஆளும், அசைவும் வந்து நிறைகிற இடங்கள். கொஞ்சம் மிகை என்றாலும் படத்தை கடத்துவதில் தம்பி ராமையா அருமையாக உதவுகிறார்.
சொத்தை நிர்வகிக்கிற கேரக்டர்களில் பிரகாஷ்ராஜ் முன்னரே தனது ‘பெஸ்ட்’ முத்திரையைப் பதித்துவிட்டதாலோ என்னவோ, இதில் சும்மா ஜஸ்ட் கடந்து செல்கிறார். ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படம். தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். ‘யெம்மா ஏ அழகம்மா...’, ‘பச்சை உடுத்திய காடு...’ மனதில் தங்கி ஈர்க்கின்றன; ஆனால், பின்னணியில் தோள் கொடுக்கத் தவறுகின்றன.
திருநாவுக்கரசின் கேமரா காட்டில் வானம்பாடியாக அலைந்து திரிகிறது. காதல் குளுமையும், மோதல் அனலும், லொகேஷன் அழகுமாக காக்டெயில் கலக்கலில் அவரது கேமரா அட்டகாசம். அவ்வளவு களேபரத்திலும் துளி மேக்கப் குறையாமல் இருக்கிறார் சாயிஷா. இறுதியில் ஆதிவாசிகளுக்கு சமர்ப்பிக்கிற டைட்டிலுக்காவது அவர்களது பிரச்னையை பேசியிருக்கலாம். இப்படியான காதல் சாத்தியமா? கேள்வி எழாமல் இல்லை. லாஜிக் மேஜிக் பார்க்காமல் இருந்தால் ரசிக்கலாம்.
|