கருத்தோட, மக்கள் சந்தோஷமா பார்த்திட்டுப் போற சினிமாவா உருவாக்கி இருக்கேன்!
-நா. கதிர்வேலன்
‘‘வாழ்க்கையே பெரும் பயணம்தான். அதில் நல்லவிதமாக செல்வதுதான் சவால். ரொம்ப சாமான்யர்களைப் பத்தின கதை. பணம்தான் நமது வாழ்க்கைக்கு பிரதானம். பணம் திடீர்னு வந்து சேர்ந்தால் மனுசனை அப்படிேய மாத்திப்போடுது. பணம்தான் எல்லாத்தையும் இழுக்கும்வேர்.
 விடிந்தால், எழுந்தால் மனிதர்கள் பணத்தைத் தேடித்தான் போகிறார்கள். அதன் அருமை பெருமையை ‘ரூபாய்’ படத்தில் பேசியிருக்கேன். முந்தைய படமான ‘சாட்டை’ ரொம்ப நேரடியாக கல்வியின் அவலம் பத்திச் சொன்னது. குழந்தைகளைப் படிப்புங்கிற பேரில் படுத்தி எடுக்கிறதை சொன்னதை மக்கள் கொண்டாடினார்கள். என்றாலும் ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர முடிந்ததேன்னு சந்தோஷமாக இருக்கு.
‘ரூபாயில்’ திரைக்கதையை தரமாகவும், இன்னும் வியாபார ரீதியிலும் கலந்து கொடுத்திருக்கேன். என் படங்களின் உண்மைத்தன்மையை மக்கள் புரிந்து கொண்டதில் மகிழ்கிறேன்...’’ இயல்பாகப் பேசுகிறார் இயக்குநர் எம்.அன்பழகன். ‘சாட்டை’யில் சட்டென கவனம் ஈர்த்தவர்.
 ‘ரூபாயி’ல் சொல்ல வருவது என்ன..? கருத்தோட, மக்கள் சந்தோஷமா பார்த்திட்டுப் போற சினிமாவாக உருவாக்கி வைச்சிருக்கேன். சில விஷயங்களைச் சொல்லியே ஆகணும். ஆனால், நிச்சயம் இனிப்பு கோட்டிங் கொடுத்தாகணும். அப்படித்தான் படம் அடுத்தடுத்து நகருது. பணம் முக்கியமானதுதான். இன்னும் சொன்னால் வெளியே வந்தால், அது இல்லாமல் அடுத்த அடி கூட வைக்க முடியாது. அளவுக்கு அதிகமாக பணத்தைச் சேர்த்து வைச்சிருக்கவங்களும், பையில் வைச்சுக்கவே பைசா இல்லாதவங்களும் இங்கேதான் அதிகம்.
பணம் நிம்மதியைத் தருகிறதான்னு ஒரு கேள்வி வைச்சிருக்கேன். டிரைவர்களான இரண்டு நண்பர்கள் எடுத்திருக்கிற வண்டிக்குத் தவணைத்தொகை கட்ட முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள். சென்னை கோயம்பேடுக்கு லோடுசவாரி கிடைக்கிறது. எல்லாம் முடிந்து திரும்புகிற நேரத்தில் கொஞ்சம் பணத்துக்கு ஆசைப்பட்டுவிட அகப்பட்டுக் கொள்கிறார்கள்.
 அந்தக் குழப்பத்திலிருந்து எப்படி மீண்டு திரும்பினார்கள் என்பதுதான் கதை. ‘சாட்டை’யில் ரொம்பவும் நல்ல பெயர் வாங்கினேன். வியாபார ரீதியாக பெரிய இடங்களுக்கு போவதும் சரிவிகிதத்தில் முக்கியம். ஒரு நல்ல விஷயத்தைச் சொல்வதற்கு சினிமா என்ற கலையின் அதிகபட்ச சாத்தியங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் எனக்குக் குறி.
இங்கே பொதுவான சினிமாக்களில் மனிதர்களின் புற உலகமும், மகிழ்ச்சியான கணங்களும்தான் சித்தரிக்கப்படுகின்றன. அவர்களின் வாழ்க்கையின் வேதனைகள், வலிகள், பாடுகள், மனத்தாங்கல்கள், உறவுச் சிக்கல்கள் என எல்லாவற்றையும் நாம்தான் கொண்டு வர வேண்டும்.
‘கயல்’ படத்தில் நடிச்சவங்க இருக்காங்க... அவங்களே என் கதைக்கும் பொருத்தமாக வந்தாங்க. எனக்கு என்னன்னா என் படத்தில் உங்களையே நீங்க அடையாளம் காணணும். என்னுடைய வெற்றி அங்கேதான் ஆரம்பம். நான் பாதிக்க வேண்டிய இடம் உங்க இதயம்தான். அப்படிப் பார்த்தால் சந்திரன், கிேஷார் ரவிச்சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த், ஹரிஷ், உத்தமன் என இந்த ஐந்து பேரைச் சுற்றி நிகழ்கிறது கதை.
நாம் இருந்திட்டுப் போகிற, அனுபவித்துத் திரிகிற வாழ்க்கையைப் பற்றி ஒரு அழகான தரிசனத்திற்கு முயற்சி பண்றேன். கண்ணாடி முன்னாடி நின்னா நாம் தெரிகிற மாதிரி... இதில் நீங்களும் இருப்பீங்க. அப்படித்தான் இந்த ஐந்து பேரும் படத்தை அழகா சுமந்து நிற்கிறாங்க.
இந்தப் பொண்ணு ஆனந்தி... ஒரு துளி பந்தா இல்லை. நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி சகஜமா இருக்காங்க. ரோடுகளில் எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் எனக்கு ேகரவன் வேணும்னு அடம் பிடிச்சதில்லை. அதற்கு சினிமா மேலான காதல் தவிர வேறில்லை. சந்திரன், கிஷோர் ரவிச்சந்திரன் இரண்டு பேரும் அசலாக நடிச்சிருக்காங்க. எனக்கு படத்தில் மண்ணின் வாசமும், சக மனிதனின் சாயலும் இருக்கணும்.
புது மழை பெய்த மாதிரி வாசனையை படம் பார்க்கும்போதே உணரணும். அப்படித்தான் இருக்கும் ‘ரூபாய்’. வேகமும், காலமும், மனுஷங்களும் போய்க்கிட்டே இருக்காங்க. அவ்வளவு வேலைகள், யோசனைகள்னு மருகிக்கிட்டே இருக்கோம். அப்படிப்பட்ட நல்ல இடங்களில் மனிதனாக நின்று நிலைமையைச் சொல்லியிருக்கேன்.
பிரபு சாலமன், இமான் கூட்டணின்னு சொன்னாலே அதில் பளிச்சின்னு பாடல்கள் வருமே... உண்மைதான். ‘மைனா’ பாடல்கள் இன்னும் ஞாபகத்தில் வருதே. இதில் நான்கு பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கார். அவ்வளவு நேர்த்தியாக, மனதில் ஒட்டிக்கொள்கிற மாதிரி வரிகள். கதையின் கருவை அழகா புரிஞ்சுக்கிட்டு இமான் மியூசிக் போட்டிருக்கார். ஊர் மக்களே ஒத்துழைச்சு நடத்தித் தந்த முளைப்பாரி திருவிழா பாட்டும் அவ்வளவு பிரமாதமா வந்திருக்கு.
கொண்டாட்டமாக ஒரு குதூகலப்பாட்டு வேற இருக்கு. இமானும், யுகபாரதியும் சேர்ந்தா ஒரு காதல் பாடல் இருந்தால்தான் நிறைஞ்சு நிக்கும். அதுவும் இருக்கு. படத்தில் எளிய மனிதர்கள் மீதான புரிதல் இருக்கு. இந்தக் காதல் இருக்கே, அது எதிர்பார்த்தும் வராது. எதிர்பார்த்த சமயத்திலும் வராது. எதிர்பார்க்கிற ஆளோடும் வராது. இதையெல்லாம் அனுபவத்தில் தருகிற காதலும் இதில் இருக்கு. இது மக்களின் கதை என்பதால் கூடுதல் நம்பிக்கையோடு இருக்கிறேன். நல்ல சினிமாவிற்கான தேடலில் இருக்கிற தயாரிப்பாளர்கள் பிரபு சாலமன், ஆர்.ரவிச்சந்திரனுக்கு என் வந்தனங்கள்.
|