புறநகர் ரயில்
அறிந்த இடம் அறியாத விஷயம்
-பேராச்சி கண்ணன்
சென்னை மாநகர பேருந்தில் அலுவலகம் கிளம்ப காலை வேளையில் ஏறியவர்கள், நொந்து நூடுல்ஸாகி இறங்குவார்கள். கால்கடுக்க காத்திருந்து, அடித்துப் பிடித்து ஏறி, கூட்ட நெரிசலில் மூச்சு விடக்கூட வழியில்லாமல் சிக்கி, டிராபிக் ஜாமில் மெதுவாக ஊர்ந்து அரை கி.மீ. தாண்டவே அரைமணி நேரமாகிவிடும். அலுவலகம் போய்ச்சேரவே அரை நாள் ஆகிவிடும்.
 இந்தச் சூழலில் சென்னைவாசிகளுக்கு வரப்பிரசாதமாக இருப்பது புறநகர் ரயில்தான். இன்று சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் கலந்துவிட்டது ரயில் பயணம். புறநகர் ரயில் என்பதைவிட ‘எலெக்ட்ரிக் டிரெயின்’ என்றால்தான் பலருக்கும் தெரியும். முதலில், கும்மிடிப்பூண்டி.
வடசென்னை மார்க்க புறநகர் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டியிருக்கும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து இயக்கப்படுகின்றன. இங்கேயே இருவழித் தடத்திற்குமான டிக்கெட் கவுன்டர்களும் உள்ளன. இடதுபுறம் ஆவடி, வலதுபுறம் கும்மிடிப்பூண்டி பிளாட்பார்ம். கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அரைமணி நேரத்திற்கு ஒரு தடவையே ரயில்கள் உள்ளன. அதுவும் 176 கிமீ தொலைவிலுள்ள நெல்லூர் வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
 இங்கிருந்து பேசின்பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், மீஞ்சூர் என எட்டாவது நிறுத்தமான எண்ணூர் வரை சென்னை ஏரியா வருகிறது. பிறகு அத்திப்பட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி எல்லாம் திருவள்ளூர் மாவட்டமாகி விடுகிறது. தடாவிலிருந்து ஆந்திரா ஆரம்பம்.
ரயில் வரும் பிளாட்பார்ம் நம்பரை அங்குள்ள டிஜிட்டல் போர்டு காட்டிக்கொண்டே இருக்கிறது. அதற்கு முன்பு ஒரு கூட்டமே நின்று கவனித்துக் கொண்டிருக்கிறது. நம்பர் விழுந்ததும் பிளாட்பார்ம் நோக்கி ஓடுகிறது அந்தக் கூட்டம். அங்கிருந்து நகர்ந்து ரயில்நீர் பருகியவாறு கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலைப் பிடித்தோம். மெதுவாக பின்நோக்கி நகர்ந்தது ரயில்.
பேசின்பிரிட்ஜ் வந்ததும் நிறைய ஆந்திர இளைஞர்கள் ஏறுகிறார்கள். கட்டிட வேலைக்கு வந்திருப்பார்கள் போல! ‘‘உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்...’’ என கண்ணதாசனின் வரிகளை கண் தெரியாத ஒருவர் தாளம் போட்டபடியே பாடி பிச்சை கேட்டு வருகிறார். அவருக்குப் பின்னாலே ‘சம்சே... சம்சே...’ என சமோசாவை இழுத்து கூவி விற்கிறார் ஒருவர்.
 பிறகு, பிஸ்கட் விற்கும் வடஇந்திய இளைஞர்கள் வருகிறார்கள். கூடை நிறைய வட்டவடிவிலான தேங்காய் பிஸ்கட்கள். அப்பம் போல் இருக்கின்றன. நறுமணம் தூக்கல். அதற்குள் எண்ணூர் வந்திருந்தோம். சுற்றிலும் தொழிற்சாலைகள். ஓரத்தில், கடலோடு சேரும் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகத்திற்குள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
ரம்மியமாய் காட்சியளிக்கிறது இந்த ஏரியா. மீஞ்சூர் வந்ததும் அடுத்த கோச்சுக்கு நகர்ந்தோம். ஒரே தெலுங்கு வாசனை. இரண்டு பெண்கள் மாட்லாடியதைக் கேட்டுவிட்டு எதுவும் புரியாமல் ஓரமாக அமர்ந்தோம். ‘பலா சொள... ஏழு சொள... பத்து ரூபாய்...’ என பலா சுளை விற்கும் பெண்மணி வருகிறார். அவருக்குப் பின் ஐந்தாறு பெண்கள் கீரை விற்பனையில் பிஸியாக இருந்தார்கள்.
 இரண்டு கோணிப்பைகள் நிறைய அரைக்கீரை, சிறுகீரை, வல்லாரை என விதவிதமாக வைத்திருக்கிறார்கள். இதனை வாசல் ஓரமாக நின்று கொண்டு மூன்று பெண்கள் எடுத்துக் கொடுக்க மற்ற இருவரும் விற்று வருகிறார்கள். ஒரு கட்டு விலை அஞ்சு ரூபாய்தான். ‘‘சென்னைக்குள்ள கிடைக்காத கீரைகள் கூட இந்த ரயில்ல பார்க்கலாம் சார்...’’ என்கிறார் பயணி ஒருவர். பொன்னேரி வந்ததும் ஏரியாவே பச்சைப்பசேலென்று காட்சியளிக்கிறது.
நாற்று நடும் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்ததை ஜன்னல் வழியாக ரசித்தோம். கும்மிடிப்பூண்டி வரை போய்விட்டு மீண்டும் சென்ட்ரல் வந்தோம். அடுத்து, திருவள்ளூர் மார்க்க பயணம். இந்த வழித்தடத்தில் அரக்கோணம், திருத்தணி என ஆந்திராவின் ரேணிகுண்டா வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. வியாசர்பாடி, பெரம்பூர், அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி, திருவள்ளூர் என சென்னைக்குள் தினந்தோறும் வரும் மக்களால் இந்த வழித்தட ரயில்கள் நிரம்பி வழிகின்றன.
 இங்கே நிறைய பேர் காதில் ஹெட்செட்டோடு நிற்கிறார்கள். இசையைக் கேட்டபடியும், வாட்ஸ் அப்போடும் பயணத்தை அனுபவிக்கிறார்கள். சிலர் யூ டியூப்பில் வடிவேல் காமெடியை ரசித்து சிரிக்கிறார்கள். பெண்கள் டிவி சீரியல்களை அலசுகிறார்கள். திடீரென வந்தது ஒரு கைதட்டல் சத்தம். திரும்பினோம். திருநங்கை ஒருவர் பணம் கேட்டு கை தட்டிபடி நின்றார்.
அவருக்கு பத்து ரூபாய் கொடுத்தார் பயணி ஒருவர். உடனே பணம் கொடுத்தவரின் தலையில் கை வைத்து ஆசி வழங்கிட்டு அடுத்த சீட் நகர்ந்தார் அவர். தொடர்ந்து ஆவடி வரை ஒரு சுற்று முடித்துவிட்டு மீண்டும் பூங்கா நகர் ரயில்நிலையம் வழியாக தாம்பரத்திற்கு படையெடுத்தோம். அப்போது நேரம் மாலை 3.
 பீச், கோட்டை ரயில்நிலையங்களைத் தாண்டி வந்த ரயிலில் எங்களை நுழைத்துக் கொண்டோம். கூட்டம் அவ்வளவாக இல்லை. பீக் அவரில்தான் நின்று கொண்டு பயணிக்க வேண்டும். மற்ற நேரங்களில் எல்லோரும் அமர இடம் கிடைக்கும். இருந்தும் சில இளைஞர்கள் வாசற்படிதான் என உறுதியாக நிற்கிறார்கள். மாலை நேரப் பயணத்தில் எல்லோர் முகத்திலும் ஒருவித களைப்பைப் பார்க்க முடிகிறது. அரசு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறவர்கள் மருத்துவமனை பற்றி உடன் வந்தவர்களிடம் பேசுவதைக் கேட்டபடி இருந்தோம்.
அதற்குள் எழும்பூர் ஸ்டேஷன் வந்துவிட்டது. வெளியூர் செல்பவர்கள் இறங்கிக் கொண்டனர். தொடர்ந்து சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் வழியாக மாம்பலம் சென்றோம். பரபரப்பான ரயில்நிலையம். இடதுபக்கம் தி.நகர் ரங்கநாதன் தெரு. அதனால், எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஒரு குழந்தை டான்ஸ் ஆடிக் கொண்டே பிச்சை எடுத்து வருவதைப் பார்க்கிறோம்.
ரயிலின் குலுங்கலைப் பொருட்படுத்தாமல் வில்லாக வளைந்து நிற்கிறது அந்தக் குழந்தை. அவளது அம்மா வாசற்படியில் உட்கார்ந்து கொள்கிறார். அவளும், அவள் இரண்டு வயது தம்பியும் கையேந்தி நிற்பது பரிதாபமாக இருக்கிறது. சைதாப்பேட்டை தாண்டி கிண்டி வந்தது. மெயின் ஜங்ஷன். இங்கேயும் கூட்டம் அள்ளுகிறது. செயின்ட் தாமஸ் மவுண்ட், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் என 18 ரயில்நிலையங்கள் கடந்து மீண்டும் பீச்சிற்கு வந்து சேர்ந்தோம்.
இப்போது எம்.ஆர்.டி.எஸ் எனப்படும் சென்னை மாஸ் ரேபிட் ட்ரான்ஸிட் சிஸ்டத்தில் பயணம். சுருக்கமாக பறக்கும் ரயில். பீச்சிலிருந்து கோட்டை, பூங்கா நகர் வழியாக சேப்பாக்கம், திருவல்லிகேணி, மயிலாப்பூர், திருவான்மியூர் என வேளச்சேரி வரை இந்த ரயில் சேவையை அளிக்கிறது தென்னக ரயில்வே. ஒவ்வொரு ரயில்நிலையத்தையும் பிரமாண்டமாக கட்டி வைத்திருக்கிறார்கள்.
அதனாலேயே பல படங்களின் ஷூட்டிங் இந்த பறக்கும் ரயில் நிலையங்களில் எடுக்கப்படுவதாக சொன்னார் நம்மோடு பயணித்த பயணி ஒருவர். மாலை பேப்பரை மட்டுமல்ல... காலையில் வாங்கிய நாளிதழ்களையும் வாசித்தபடி வருகிறார்கள் ஐம்பதைக் கடந்தவர்கள். திருவான்மியூரில் இறங்கினோம். ஐ.டி இளைஞர்களும், இளைஞிகளுமாக ரயில்நிலையத்தை நிறைத்து நிற்கிறார்கள். சில காட்சிகளைக் க்ளிக் செய்துவிட்டு தரமணி, பெருங்குடி வழியாக அந்தப் பயணத்தை முடிக்கும் போது இரவாகியிருந்தது. சென்னை வரமுமல்ல சாபமுமல்ல. அது வாழ்க்கை.
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
புறநகர் ரயில் வரலாறு
* 1920ல் பிரிட்டிஷ் அரசு வர்த்தகம் நிறைந்த வடக்குப் பகுதியை குடியிருப்புகளால் ஆன தென்மேற்குப் பகுதிகளோடு இணைக்க திட்டமிட்டது.
* 1928ம் ஆண்டு தாம்பரத்துடன் துறைமுகத்தை இணைக்கும் இரண்டு மீட்டர் கேஜ் பாதைகளின் கட்டுமானம் தொடங்கியது. 1930களின் ஆரம்பத்தில் இதனை மின்சார ரயில் பாதையாக மாற்ற முடிவெடுத்து, எழும்பூரிலிருந்து பீச் வரை ஒரு புதிய பாதை அமைக்கப்பட்டதுடன் எழும்பூர் - தாம்பரம் பாதைகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டன.
* 1931ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பீச் டூ தாம்பரம் மீட்டர் கேஜ் எலெக்ட்ரிக் டிரெயின் இயக்கப்பட்டது. அப்போதைய சென்னை மாகாண கவர்னர் சர் ஜார்ஜ் பெடரிக் ஸ்டான்லி இதனைத் திறந்து வைத்தார்.
* அதுவரை 2 மணி நேரமாக இருந்த பீச் டூ தாம்பரம் ரயில் பயணம், 49 நிமிடங்களாகக் குறைந்தது.
* 1985ல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் வடபகுதிகளுக்கான புறநகர் ரயில்கள் தொடங்கப்பட்டன.
* நகரம் விரிவடைவதை கவனத்தில் கொண்டு 1991ல் பீச் டூ தாம்பரம் மீட்டர் கேஜ் பாதையை பிராட் கேஜ் ஆக மாற்ற திட்டம் வரையப்பட்டது. 1993ல் நான்கு பாதைகளில் ஒன்று மட்டும் பிராட் கேஜ் ஆக முழுவதுமாக மாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 2004ல் அனைத்து பாதைகளும் பிராட் கேஜ் சேவைக்குள் வந்து சேர்ந்தன.
பொதுத் தகவல்கள்
* காலை 4 மணிக்கு தொடங்கி இரவு 12 மணி வரை புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. * தாம்பரம் டூ பீச் வரை பீக் அவரில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒரு வண்டி இருக்கிறது. செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் வரை கூட சில ரயில்கள் இயக்கப்படுகின்றன. * ரயில் பாதைகள் வடக்கு, தெற்கு, மேற்கு, பறக்கும் ரயில்தடம் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளன. * வடக்குப் பகுதியில் 83 முறை ரயில் சர்வீஸ் நடக்கிறது. இந்தியாவில் மாநிலம் தாண்டி மாநிலம் இயக்கப்படும் புறநகர் வழித்தடம் இது ஒன்றுதான். * தென்பகுதியில் தினமும் 240 முறையும், வியாசர்பாடி வழியே திருத்தணி வரை போகும் மேற்குப்பகுதியில் 229 முறையும் ரயில் சர்வீஸ் வழங்கப்படுகிறது. * தினமும் சுமார் 18 லட்சம் பேர் இந்த ரயில் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். * பீச்சிலிருந்து தாம்பரம் வரைக்குமான மாதாந்திர சீசன் டிக்கெட் இரண்டாம் வகுப்பில் 105 ரூபாய்தான். 5 வயது முதல் 12 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு 60 ரூபாய். எஸ்.சி.,எஸ்.டி மாணவர்களுக்கு 30 ரூபாய். நாள் ஒன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
பறக்கும் ரயில்
* 1970ல் திட்டமிடப்பட்டு 1980களில் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், பத்தாண்டுகளுக்குப் பிறகே கட்டுமான வேலைகள் தொடங்கின. * 1995ல் பீச்சிலிருந்து சேப்பாக்கம் வரை முதல் ரயில் சேவை இயங்கியது. * 1997ல் இந்தப் பாதை மயிலாப்பூர் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. 2004ல் திருவான்மியூர் வரையிலும் 2007ல் வேளச்சேரியிலும் பாதைகள் முடிக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இப்போது செயின்ட்தாமஸ் மவுண்ட் உடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. * இந்த ரயில் பீச் டூ வேளச்சேரி வரை தலா 67 முறைகள் என தினமும் 134 முறை இயக்கப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
கோரிக்கைகள்
* இந்த ரயில் நிலையங்களில் போதுமான கழிப்பறைகள் இல்லாததை பொதுவான கோரிக்கையாக முன் வைக்கிறார்கள். சில ஸ்டேஷன்களில் குடிநீர் பைப்கள் இருந்தும் தண்ணீர் வருவதில்லை. அதுபோன்ற ஸ்டேஷன்களில் பாட்டில் குடிநீர் வாங்க ஸ்டால்களும் இல்லை என்பது குறை.
* சில பறக்கும் வழித்தடங்களின் கீழ்ப்பகுதியில் சமூக விரோதச் செயல்கள் நடப்பதாகத் ெதரிவித்தனர் நாம் சந்தித்த பெண் பயணிகள் சிலர். அதனால், இரவு நேரங்களில் இந்தப் பயணத்தை தவிர்ப்பதாக சொல்கின்றனர்.
|