இளைப்பது சுலபம்
வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?
அனுபவத் தொடர் - 1
-பா.ராகவன்
இந்த லட்டு, பூமி, அறுபது வாட்ஸ் பல்பு இதெல்லாம் எப்படித் தொடக்கத்தில் இருந்தே குண்டாகப் படைக்கப்பட்டதோ, அதேபோல் ஆண்டவன் என்னையும் உருட்டிப் படைத்தான். நான் பிறந்ததும், பிழைப்பது சிரமம் என்று வைத்திய சிரோன்மணி என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், கணிப்பு களைக் கதறியோடச் செய்கிற பிறப்பல்லவா நம்முடையது? பிழைத்துத் தொலைத்தேன்.
 இந்த சந்தோஷத்தில், என் அம்மாவானவர் என்னைப் போஷாக்காக வளர்க்கிறேன் பேர்வழி என்று புஷ்டியாக வளர்க்க ஆரம்பித்தார். நான் உண்ணப் பிறந்தவன் என்பது அவர் முடிவு. அது நல்ல கணிப்பு என்பதால் பொய்யாக்கத் தோன்றவில்லை. நினைவு தெரிந்த நாளாக என்னிஷ்டத்துக்குச் சாப்பிட்டு ஏகமாய் வளர்ந்துகொண்டிருந்தேன்.
நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும் அப்போது. ரொம்பப் புராதன நினைவாக உள்ளது இதுதான். குடும்பத்தோடு திருப்பதிக்குச் சென்றிருந்தோம். அது அநியாய பயங்கரக் குளிர்காலம். முழு ராத்திரிப் பொழுது கொட்டும் குளிரில் தவித்துவிட்டு, விடிந்ததும் தரிசனம் முடித்து வெளியே வந்தோம். தரிசனம் முடித்தால் அடுத்து என்ன? பிரசாதம்தான்.
 திருப்பதி பிரசாதம் என்பது அரை மணிக்கொருதரம் மாறிக்கொண்டே இருக்கும். வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சிறு லட்டு, புளியோதரை என்று என்னவாவது ஒன்று. வரிசை நகர நகர, காலியாகும் பிரசாதப் பாத்திரங்களை இழுத்து உருட்டிவிட்டு, அந்தக் கணம் வந்து சேரும் மாபெரும் புதிய அண்டாக்களில் இருந்து அள்ளி அள்ளிப் போடுவார்கள்.
அன்றைக்கு எங்களுக்கு அங்கு வாய்த்தது வெண் பொங்கல். இன்றுள்ள தொன்னை யெல்லாம் அன்றில்லை. அப்படியே இரு கைகளையும் குவித்து ஏந்தினால் பிரசாதம் வந்து விழும். கொதிக்கக் கொதிக்கக் கைநர்த்தனக் களிப்போடு கபளீகரம் செய்து முடித்துப் பத்து நிமிடம் ஆன பின்பும் அடித்தொண்டையில் ருசித்துக்கொண்டே இருந்தது அப்பொங்கல்.
 இன்னும் கொஞ்சம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. இன்னும் கொஞ்சம் நிறையவே கிடைத்தால் குடும்பத்தோடு ஹோட்டலுக்குச் செல்லும் செலவு மிச்சமாகுமே என்று என் அப்பாவுக்குத் தோன்றியிருக்க வேண்டும். எங்கோ போனார். யாரையோ பார்த்தார். திரும்பியபோது ஒரு பெரிய மந்தார இலை நிறையப் பொங்கலோடு வந்தார்.
என் நினைவில், முதல் முதலில் நான் பகாசுரனைப் போல் அள்ளி அள்ளித் தின்ற தினமாக அன்றுதான் பதிவாகியிருக்கிறது. முந்திரியும் மிளகும் நெய்யும் சரிவிகிதத்தில் கலந்த வெண் பொங்கல். உண்ணும் பதத்தில் சூடும், எண்ணிக் கிறங்கும் தரத்தில் மணமும் ருசியும் நிறைந்த பொங்கல். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும், ‘லட்டு கவுண்ட்டருக்குப் போயிட்டு வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு அப்பா கிளம்பிச் சென்றார்.
சில நிமிடங்களில் லட்டு வந்தது. அந்நாள்களில் லட்டுக்குக் குடும்பக் கட்டுப்பாடெல்லாம் கிடையாது. கேட்ட அளவு கிடைக்கும். சொற்ப விலை. பெரிய சைஸ். ருசியும் பிரமாதமாக இருக்கும் ‘பத்து இருக்கு; போதும் இல்லியா?’ உறவினர்களுக்குக் கொடுக்கச் சேர்த்துத்தான் வாங்கியிருப்பார். ‘ஓ, போதும்’ என்றபடியே அம்மா ஒரு முழு லட்டை எடுத்து என்னிடம் நீட்டினாள்.
சொருகு ஓடு மாதிரி அதில் ஒரு பெரிய முந்திரி முன்னால் துருத்திக்கொண்டு வசீகரித்தது. ஆசையாக அதை முதலில் கிள்ளித் தின்றேன். அபாரமாக இருந்தது. ஐந்து நிமிடங்களில் முழு லட்டையும் முடித்துவிட்டு ‘இன்னொண்ணு தருவியாம்மா?’ என்று கேட்டது நினைவிருக்கிறது. அன்று தொடங்கிய வேள்வி யானது, நான் வளர வளர வீரியமடைந்தபடியே இருந்தது. ஒரு கட்டத்தில் உண்பதை ஒரு பொழுதுபோக்காக்கிக் கொண்டேன்.
என்ன பிரச்னை என்றால், பொழுதுபோக்குக்காக நான் தனியே நேரம் ஒதுக்குவதில்லை. வேறு என்ன வேலை இருந்தாலும் அதனோடு இணைந்தே இதுவும் தன் பயணத்தை மேற்கொள்ளும். பொதுவாக ராத்திரியில்தான் என்னால் எழுத முடியும். மாலை ஆறு மணிக்குமேல் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்து, பிள்ளையார் சுழி போடப் பத்து மணியாகும்.
அதற்குள் இரவு உணவை முடித்திருப்பேன். அதனால் என்ன? பிள்ளையார் சுழி போட்டதும் கால்கிலோ மிக்சர், காராசேவு, வெங்காய பக்கோடா இவற்றில் ஏதேனும் ஒன்றோ, அல்லது எல்லாமோ உள்ளே போகவேண்டியது சாஸ்திரம். சில நாள் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் இருந்து நெய் ஜாங்கிரி வாங்கி வந்து வைத்துக்கொள்வேன். ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே ஒரு சேட்டுக் கடையில் மோத்தி சூர் லட்டு பிரமாதமாக இருக்கும்.
திருப்பதி லட்டைக் கழித்துவிட்டால் இந்த உலகில் ஆகச் சிறந்த லட்டிலக்கியம் படைப்பது சேட்டுகள்தாம். இந்த லட்டு, பக்கோடா வகையறாக்கள் இருந்துவிட்டால் போதும். எழுத்து ஊழியம் ஏகாந்தமாக நடக்கும். ஒரு நாள் இருநாளல்ல. பல்லாண்டுக் காலமாக இவ்வாறுதான் உண்டு களித்து உடல் வளர்த்துக்கொண்டிருந்தேன். சென்னை நகரின் ஹோட்டல்கள், மெஸ்கள், சந்துக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் அனைத்துக்கும் சிறு பத்திரிகைக்குச் சந்தா செலுத்துபவர்களைப் போல் விசுவாசமாகச் சென்றுகொண்டிருப்பேன்.
எங்கே எது சிறப்பு என்று உறக்கத்திலும் சரியாகச் சொல்ல முடியும் என்னால். விளைவாக ஒரு நல்ல நாளில் என் எடையானது 110.8 கிலோ என்று காட்டியது. ரத்த அழுத்தம் 180/110 என்றும் HbA1c என்னும் மும்மாத சராசரி ரத்த சர்க்கரை அளவு 6.8 என்றும் தெரிந்தது. அட எம்பெருமானே! இதை இப்படியே விட்டால் தமிழ்நாட்டின் எதிர்காலம் வீணாகிவிடாதோ? பயம்போல் ஏதோ ஒன்று எட்டிப் பார்ப்பதற்கு எனக்கு நாற்பத்தி ஐந்து வருடங்கள் தேவைப்பட்டன.
ஒன்றும் பிரச்னை இல்லை; பேலியோ டயட்டில் இதையெல்லாம் சரி செய்துவிடலாம் என்று என் மனைவி சொன்னார். இந்த டயட் என்பது எனக்குப் பிடிக்காத சொற்களுள் ஒன்று. முன்பொரு சமயம் குத்து மதிப்பாக டயட் இருந்து பார்த்துக் குழல் விளக்கு வாங்கிய அனுபவம் உண்டு என்பதால் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால், திரும்பத் திரும்ப பயம் காட்டிய எடையும், நின்றால் இருந்தால் கிடந்தால் நடந்தால் மூச்சிறைத்து முழி பிதுங்கிய அனுபவங்களும் யோசிக்க வைத்தன. பெரிய ஆர்வங்கள் இல்லாமல்தான் பேலியோவை அணுகினேன். எடுத்த உடனேயே அது அசைவ உணவாளர்களுக்கான டயட் என்றார்கள். அது கெட்டுது போ என்று உடனே அலுப்பாகிவிட்டது.
பார்ப்பதற்கு முட்டை என்னைப் போலிருக்கும் என்பது தவிர எனக்கு அசைவம் பற்றி வேறெதுவும் தெரியாது. ஒரு வடிகட்டிய தாவர பட்சிணியாகவே வாழ்வில் பாதி ஓடிவிட்ட பின்பு, எடையைக் குறைப்பதற்காக எப்படிக் கட்சி மாற முடியும்? அவசியமில்லை. பேலியோவையே சைவத்துக்கு மாற்றிவிட்டால்? மாற்றி வைத்திருந்தார் ஓர் உத்தமோத்தமர்.
இன்றைக்குச் சரியாகப் பதினொரு மாதங்களுக்கு முன்னால் பேலியோ டயட் உதவியுடன் என் எடைக்குறைப்பு முயற்சிகளை ஆரம்பித்தேன். முட்டைகூட இல்லாத முழுச் சைவ முயற்சி. என் வாழ்வைத் தலைகீழாகத் திருப்பிப் போட்ட அனுபவம் என்றால் சந்தேகமின்றி இதுதான். எதையும் இழப்பதற்கு யாருக்கும் பிடிக்காதுதான். ஆனால், எடையை இழக்க எனக்குப் பிடித்திருந்தது. பதினொரு மாதங்களில் 26 கிலோ.
(குறைக்கலாம்)
|