அப்பா
-த.சக்திவேல்
‘‘பா.... மழ நின்னுடுச்சுப்பா... பட்டாசு வெடிக்க போகலாம். வாங்கப்பா...’’ கதிரவனின் கையைப் பிடித்து மழலை மொழியில் கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஐந்து வயது லிஜி. எதையும் கண்டுகொள்ளாத மாதிரி சிலையைப் போல நாற்காலியில் அமர்ந்திருந்தான் கதிரவன். ‘‘வாங்கப்பா... நாளைக்கு தீவாளிப்பா. ஃப்ரண்ட்ஸ் எல்லாம் இப்பவே பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சுட்டாங்க...’’ பக்கத்து தெருவுக்கு கேட்கிற மாதிரி கத்தினாள் லிஜி.
 அப்போதும் கல்லைப் போல வெறுமனே அமர்ந்திருந்தான் கதிரவன். ‘‘அப்பாவால இப்ப வரமுடியாது செல்லம்... அம்மாவை கூட்டிட்டு போ’’ தொய்வான குரலில் கதிரவன் சொல்லச் சொல்ல அணுகுண்டின் வெடிச் சத்தம் காதைப் பிளந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு கதறிக் கதறி அழுதாள் லிஜி. வெளியே பல குழந்தைகள் ஆரவாரமாக பட்டாசு களை வெடித்துக் கொண்டிருந்தனர்.
அந்த சத்தத்துக்கு நடுவிலும் லிஜியின் அழுகை தனியாக கதிரவனின் காதுக்குள் துயர கீதமாக ஒலித்தது. மகளின் அழுகுரல் கேட்டு சமையலறையில் இருந்த கீதா அவசர அவசரமாக வெளியே ஓடி வந்தாள். ‘‘என்னங்க... எப்படி அழுறா பாருங்க. பட்டாசு வெடிச்சா குறைஞ்சா போயிடுவீங்க? நீங்களும் உங்க ...’’ கோபமாக வெடித்துவிட்டு, ‘‘வாடி செல்லம்... நைட்டு மாமா வந்துடுவார்... அவர் கூட பட்டாசு வெடிக்கலாம்...’’ லிஜியை சமாதானப்படுத்தி சமையலறைக்கு அழைத்துச் சென்றாள்.
கதிரவனால் அமர்ந்திருக்க முடியவில்லை. யாருடனுமே பகிர்ந்து கொள்ளாத அந்த சம்பவம் அவன் இதயத்தைக் குதறியது. அது அங்கிருந்து வெளியே வரத் துடித்தது. ஒரு நாள் தன்னுடைய நிலையை மகள் புரிந்துகொள்வாள் என்று அந்த சம்பவத்தை ஒரு கடிதமாக தன்னுடைய நாட்குறிப்பில் எழுத ஆரம்பித்தான்.
அன்பு மகள் லிஜிக்கு - உன் ப்ரிய அப்பா எழுதிக் கொள்வது. முதலில் என்னை மன்னித்துவிடு மகளே... உன்னுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாட எனக்கும் ஆசைதான். இதைவிட பெரிய சந்தோஷம் என்னஇருக்கப்போகுது? ஆனால், என்னால் முடியவில்லை. அதற்காக மறுபடியும் உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
உன்னைப் போல நானும் குழந்தையாக இருந்தபோது தீபாவளி அடுத்த மாதம் வரப்போகிறது என்றால் நண்பர்கள் அனைவரும் அதற்கு முன்பே பல திட்டங்கள் தீட்டுவோம். என்ன மாதிரியான துணி எடுப்பது, எந்த மாதிரியான வெடிகளை வாங்குவது... எந்த படங்களை முதலில் பார்ப்பது... என எங்கள் பட்டியல் நீளும். தீபாவளி எப்போது வரும்... எப்போது வரும்... என்று ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே காத்திருப்போம்.
தீபாவளி அன்று யார் முதலில் பட்டாசை வெடிப்பது என்று எங்களுக்குள் போட்டியே நிலவும். அதனால் தீபாவளிக்கு முந்தைய இரவில் யாரும் தூங்கவே மாட்டோம். எப்போது விடியும் என காத்திருப்பதில் தூக்கம் மறந்தே போய்விடும். இரவு 12 மணிக்கு மேல் அடுத்த நாள் என்று கூட எங்களுக்கு அப்போது தெரியாது. கொஞ்சம் வெளிச்சம் வந்தால் மட்டுமே எங்களைப் பொறுத்த அளவில் அடுத்த நாள்.
எதிர்பாராத விதமாக எங்கிருந்தோ பட்டாசு வெடிக்கும். ‘வெடித்தது நான்தான்’ என யாரோ வைத்ததை எங்களுக்குள் சொல்லிக்கொள்வோம். பிறகு தேங்காய் மூடிக்கு அடியில் பட்டாசை கொளுத்தி அது சுக்கு நூறாக உடைந்து சிதறுவதை ரசிப்பது, கல்லுக்கு அடியில் அணுகுண்டை வைத்து அதை பெயர்த்து பறக்க விடுவது, வயதானவர்களை பயமுறுத்த அவர்களுக்குத் தெரியாமல் பட்டாசை வைத்துவிட்டு வருவது, என்னுடைய வெடிதான் அதிகமாக சத்தம் எழுப்பியது என்று பெருமை கொள்வது...
இப்படி தீபாவளியை அணு அணுவா ரசித்துக் கொண்டாடியிருக்கிறேன். சில நேரங்களில் நாய்களுக்கு பக்கத்தில் பட்டாசை வெடிக்கவிட்டு ஏதும் அறியாத ஜீவன்களை தொந்தரவும் செய்திருக்கிறேன். உண்மையில் நாங்கள் தீபாவளியைக் கொண்டாடிய மாதிரி இப்போது யாருமே கொண்டாடுவதில்லை. சிறு வயதில் நான் அதிகமாக சினிமா பார்ப்பேன். அதனால் போலீஸ் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அப்போது எனக்கு ஆறு வயதிருக்கும். அப்பாவிடம் ‘தீபாவளிக்கு போலீஸ் யுனிஃபார்ம்தான் வேண்டும்’ என்று அடம்பிடித்தேன். நான் கேட்டு எதையும் அவர் மறுத்ததில்லை. தீபாவளிக்கு பத்து நாட்களுக்கு முன்பே போலீஸ் உடையை எனக்கு வாங்கிக் கொடுத்துவிட்டார். அந்த உடையை அணிந்து நண்பர்களுக்குக் காட்ட வேண்டும் என விரும்பினேன். ஆனால், ‘தீபாவளி அன்றுதான் புது டிரஸ்ஸை போட வேண்டும்’ என்று அப்பா சொல்லிவிட்டார்.
அவர் டீச்சராக இருந்தவர். ஆனால், கண்டிப்பானவர் அல்ல. அவர் வேலை செய்யும் பள்ளி என் வீட்டில் இருந்து வெகுதொலைவில் இருந்தது. அதனால் வேலை முடிந்து அவர் வீடு திரும்ப இரவு ஆகிவிடும். அடுத்த நாள் நான் பள்ளிக்கு செல்லவில்லை. அப்பாவுக்குத் தெரியாமல் அம்மாவிடம் கெஞ்சி அழுது கூத்தாடி போலீஸ் உடையை அணிந்து கொண்டு கம்பீரமாக நண்பர்களின் முன்னால் நின்றேன்.
அந்த நாளை இன்றும் நான் மறக்கவில்லை. இதற்கு அடுத்த தீபாவளிதான் நான் கொண்டாடிய கடைசி தீபாவளி. என்னை மிகவும் நேசித்த என் தந்தையுடன் கொண்டாடிய கடைசி தீபாவளியும் அதுதான். நான் பட்டாசு வெடிக்கும்போது அப்பா எப்போதும் கூடவே இருப்பார். அவர் திரியைக் கிள்ளிக் கொடுத்தபின்தான் நான் வெடிப்பேன். அவர் ஒரு பட்டாசைக் கூட வெடித்ததில்லை.
நானும் ‘நீங்களும் வெடிங்கப்பா’ என்று சொன்னதில்லை. அன்றைக்கும் அப்படித்தான் நடந்தது. அப்பாவும் நானும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடியபடி இருந்தோம். அப்பா, திரியைக் கிள்ளிக் கொண்டே, ‘வயிறு வலிக்குது. நாம வீட்டுக்குப் போகலாம்’ என்றார். ‘நீ மட்டும் போப்பா... நான் வெடிச்சிட்டு வர்றேன்’ என்றேன்.
‘வாப்பா... என்னால முடியல. என்கூட இருப்பா...’ அழுகிற மாதிரி அப்பா சொன்னார். அவர் பேச்சைக் கேட்காமல் பட்டாசு வெடிப்பதிலேயே மும்முரமாக இருந்தேன். ‘பாத்து வெடிப்பா.. .தீ கைல பட்ற போகுது...’ சொல்லிவிட்டு வீட்டுக்குப் போயிட்டார். பட்டாசு எல்லாம் தீர்ந்து போன பிறகு வீட்டுக்குச் சென்றேன். அப்பாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொல்லி பாட்டி அழுதார். மூன்று நாட்களுக்குப் பின் அவரது சடலம்தான் வீட்டுக்குத் திரும்பியது. அன்றிலிருந்து நான் பட்டாசு வெடிப்பதில்லை. இப்படிக்கு உன் ப்ரிய அப்பா - கதிரவன்.
பொழுது புலர்ந்தது. வெடிச்சத்தம், இனிப்புடன் தீபாவளியை மக்கள் வரவேற்றுக் கொண்டிருந்தனர். வீட்டுக்கு அருகில் இருக்கும் மலைக்குச் செல்வதற்கு கதிரவன் தயாராகிக் கொண்டிருந்தான். இப்படித்தான் கடந்த முப்பது வருடமாக தீபாவளி அன்று காணாமல் போய்விடுவான். கீதா வீட்டுக்கு வந்த உறவினர்களைக் கவனிப்பதிலேயே மும்முரமாக இருந்தாள்.
மலைக்குக் கிளம்புமுன் தூங்கிக் கொண்டிருக்கும் லிஜியின் முகத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டே நின்றான். தூக்கத்திலிருந்து கண் விழித்தாள். அவளுடைய சின்னஞ்சிறு விழிகளுக்குள் கதிரவன் தோன்றினான். படுக்கையிலிருந்த லிஜியை அப்படியே எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அந்த அரவணைப்பு அவனுக்குள் பல மாற்றங்களை நிகழ்த்தியது.
‘‘கீதா... லிஜியை குளிக்க வைச்சு, புது டிரஸ்ஸை போட்டு விடு...’’ சொல்லிவிட்டு அவசரமாக தன் அறைக்குள் புகுந்தான். புத்தம் புது ஆடையணிந்த லிஜியின்முன் பட்டாசு வெடிக்க கரிக்கட்டையுடன் வந்து நின்றான் கதிரவன். ஒவ்வொரு திரியாக அவன் கிள்ளிக் கொடுக்க... ஒவ்வொரு பட்டாசாக லிஜி குதூகலத்துடன் வெடித்தாள். அந்த சத்தத்தில் ஓர் ஆன்மா அமைதியடைந்தது. அது, கதிரவனின் அப்பா.
தள்ளிப்போகாதே என் அன்பே! இந்தோனேஷியாவின் புகிட் லாவாங் வனப்பகுதியில்தான் இந்த அன்பு பரிமாற்றம். பழம் கொடுத்த இளம்பெண்ணின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட குரங்கின் முரட்டு அன்பால் அப்பெண்ணும், காதலரும் டென்ஷனாகிவிட்டனர். 5 நிமிடம் நீடித்த இந்த மூர்க்கப்பிடி, பழம் கொடுத்ததும்தான் தளர்ந்திருக்கிறது.
 பழத்திற்குள் தோட்டா! அமெரிக்காவின் கொலராடோ நகரிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் அவகாடோ பழத்தை ஆசையாக வாங்கியுள்ளார் நிச்சே. வீட்டில் வந்து பழத்தை வெட்டினால் உள்ளே இருந்தது அசல் துப்பாக்கித் தோட்டா! மிரண்டு போனவரை, அணில் பழத்தை சாப்பிடும்போது, விவசாயி துப்பாக்கியால் சுட்டு விரட்டியிருப்பார் என ஆறுதல் சொல்லி பழத்தை சாப்பிட வைத்திருக்கிறார்கள்!
கடைக்குள் கார் பார்க்கிங்! கொஞ்சம் சிப்ஸும், யோகர்ட்டும் அவசரமாகத் தேவை. பார்க்கிங்கில் காருக்கு இடம் தேடி பர்ச்சேஸ் பண்ண சோம்பல். தடாலடியாக நேராக கடைக்குள்ளேயே வந்து காரை நிறுத்திவிட்டார் அந்த மர்ம மனிதர். சீனாவின் ஸென்ஜியாங் பகுதி சூப்பர் மார்க்கெட்டில் நடந்திருக்கிறது இந்த அவசர பர்ச்சேஸ் விவகாரம். சிசிடிவியில் பதிவாகிய வீடியோதான் இன்று ஆன்லைனில் காமெடி ஹிட்.
|