காட்ஃபாதர்



யுவகிருஷ்ணா - 12

நகரத்தை ஊடறுத்துக் கொண்டு ஓடும் மெதிலின் நதிதான் அப்போது கடத்தல் முதலைகளின் நீர்வழிப் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருந்தது. சாலைவழி கெடுபிடிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாய்வதைவிட, கூலியாட்களை வைத்து சிறு படகுகளில் சரக்கு எடுத்து வருவது சுலபமாக இருந்தது.

பெரும் செல்வந்தரான ரேஃபலிடம் சேர்ந்தபோது, ஆரம்பத்தில் பாப்லோவுக்கு தரப்பட்டுக் கொண்டிருந்தது எல்லாம் சில்லறை வேலைகள்தான். சரக்கு எடுக்க தன்னை ரேஃபல் அனுப்பாதது குறித்து அவனுக்கு ஆதங்கம் இருந்தாலும், அதை வெளிப்படையாக என்றுமே கேட்டதில்லை. தன்னுடன் சேர்த்துக் கொண்டபோதே பாப்லோவிடம் ரேஃபல் தெளிவாகச் சொல்லியிருந்தார்.

“நீ கோடி கோடியாக பணத்தை அறுவடை செய்ய சொல்லிக் கொடுக்கிறேன். நிறைய கோடிகளை கைவசம் வைத்திருக்கும் ஒருவனைப் பிடி. அவனது பாதுகாப்பை உறுதி செய். அவனுடைய நம்பிக்கையை முழுமையாகப் பெறும் வரை அமைதியாக வேலை செய். அவனே உனக்கு அத்தனையையும் கற்றுக் கொடுப்பான்...” “நான் எதற்கு புதுசாக ஒரு கோடீஸ்வரனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்? அதுதான் நீங்கள் இருக்கிறீர்களே?” சட்டென்று பதில் வந்தது பாப்லோவிடம்.

புன்னகைத்தவாறே பாப்லோவை தட்டிக் கொடுத்தார் ரேஃபல். அன்றிலிருந்து ரேஃபலை மட்டுமின்றி, அவருடைய தொழில் சாம்ராஜ்யத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை யாரும் கொடுக்காமல் தானே எடுத்துக் கொண்டார் பாப்லோ. இனிமேல் ‘ன்’ வேண்டாமே, ‘ர்’  விகுதியிலேயே மரியாதை கொடுப்போம்.

ஏனெனில், ரேஃபலிடம் சேர்ந்தபோதே பாப்லோ எஸ்கோபார், பாதி காட்ஃபாதர் ஆகிவிட்டார். ரேஃபலுடைய நிறுவனம் மெதிலின் நகரில் லாட்டரி வியாபாரத்தில் கொழித்துக் கொண்டிருந்தது. ரகளையான அடிதடி பிசினஸ் அது. வான் டட்டாக இந்த ஜீப்பில் வந்து ஏறிய பாப்லோ, சிறிய சலசலப்புகள் ஏற்படும் இடங்களில் எல்லாம் என்ட்ரி கொடுத்து, அதை பெரிய பிரச்னையாக ஆக்கி, வன்முறையாக இவரே தீர்த்துவைத்து தொடர்ந்து ரேஃபலிடம் சபாஷ் வாங்கிக் கொண்டிருந்தார்.

கொலம்பியன்கள் எல்லோரும் அப்போது ஊது ஊதுவென்று சிகரெட்டுகளை ஊதித்தள்ளிய காலம். ரேஃபல், சிகரெட் விற்பனையில் இறங்கியபோது - ஏற்கனவே தன்னிடமிருந்த மார்க்கெட்டிங் செட்டப்பை பயன்படுத்தி அந்த பிசினஸும் எதிர்பாரா அளவுக்கு லாபகரமாக நடக்க அச்சாணியாக இருந்தார் எஸ்கோபார்.

இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தன்னுடைய பாஸிடம் சபாஷ்களை குவித்துக் கொண்டிருந்த பாப்லோவுக்கு பெரும் பொறுப்பு ஒன்றைக் கொடுக்க திட்டமிட்டார் ரேஃபல். “இதுவரைக்கும் நீ சம்பளத்துக்குதான் வேலை பார்த்துக்கிட்டிருந்தே. கமிஷனா லட்சங்களை குவிக்கிற ஆஃபர் ஒண்ணு தர்றேன். செய்யமுடியுமா?” என்ன ஏதுவென்று விசாரிக்காமலேயே தலையை ஆட்டினார் பாப்லோ.

“வெளிநாடுகளிலிருந்து நிறைய சரக்கு வாங்குறேன். படகில் தொடங்கி கண்டெயினர் வரை பலவிதங்களில் அதை டிரான்ஸ்போர்ட் பண்ணி என்னோட கோடவுனுக்கு கொண்டு வர்றேன். ஆனா, எப்பவுமே இருபத்தஞ்சு பர்சென்ட் கம்மியாதான் சரக்கு வந்து சேருது. இடையிலே எவன் எவனோ எங்கெங்கோ ஆட்டையைப் போடுறான். என்ன முயற்சி பண்ணியும் இதை தடுத்து நிறுத்த முடியலை.

நான் கொள்முதல் பண்ண சரக்கு என்கிட்டே சேதாரம் இல்லாமே வந்து சேரணும். இந்த லாஜிஸ்டிக்ஸ் வேலையை நீ எடுத்துக்கோ. இதுலே நீ எனக்கு எவ்வளவு லாபம் கொடுக்கறியோ, அதுலே பத்து பர்சென்ட் உனக்கு கமிஷன்!” கிட்டத்தட்ட ஏஜென்ஸி மாதிரி. பாப்லோவுக்கு சந்தோஷம். குஸ்டாவோ உள்ளிட்ட தன்னுடைய நம்பகமான சகாக்களைப் பிடித்து ரகசியக் கூட்டம் நடத்தினார்.

“சீக்கிரமே கார்டெல் ஆரம்பிக்கிற நம்ம கனவு நனவாகப் போவுது. ரேஃபல் இறக்குற சரக்கு இனிமே அவரோட கோடவுனுக்கு எந்த செய்கூலி சேதாரமும் இல்லாம அப்படியே போகணும். இதுக்கு நாமதான் பொறுப்பேத்துக்கணும்...” சரக்கு கைமாறும் இடங்களை எல்லாம் கண்காணித்தார்கள்.

வயலுக்கு பாயும் தண்ணீர், எங்கோ புல்லுக்கும் பாய்கிறது. அந்த இடம் எதுவென்று கண்டுபிடிக்காமல் இந்த சிக்கல் தீராது. ரேஃபலின் கையாட்களிலேயே யாரோ ஒரு கருப்பு ஆடு இருக்க வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் சந்தேகித்தார்கள். ம்ஹூம். அப்படி ஒருவரும் இல்லை. மெதிலின் நகருக்கு வடக்கே 350 கிலோமீட்டர் தூரத்தில் டர்போ நகரம் அந்த கடலோர நகரத்தில்தான் சரக்குகள், ரேஃபலின்  கண்ட்ரோலுக்கு வருகிறது.

தன்னுடைய சகாக்களோடு அங்கே போனார் பாப்லோ. சரக்கு ஏற்றி இறக்கும் இடங்களை தொடர்ந்து ரகசியமாக கண்காணித்தார். ரேஃபலுக்காக சுமார் ஐம்பது சுமையேற்றும் தொழிலாளிகள் வேலை பார்த்தார்கள். அவர்களுக்கு ஒரு மேஸ்திரி. மிகக்குறைந்த கூலிக்கு வேலை பார்த்த இவர்கள்தான் லோடு ஏற்றும்போது லேசாக சேதாரத்தை உருவாக்குகிறார்கள் என்பதை பாப்லோ குழுவினர் கண்டுபிடித்து விட்டார்கள்.

குஸ்டாவோ டென்ஷன் ஆனான். “அந்த கூலிக்கார நாய்களை சுட்டுத் தள்ளிட்டு, நம்ம ஊருலே இருந்து ஆளுங்களை இறக்கலாம் பாப்லோ...” “நான்சென்ஸ். கம்யூனிஸம்னா என்னன்னு தெரியுமா உனக்கு? விடு. நான் பார்த்துக்கறேன்...” பாப்லோ, நேராக அந்த  தொழிலாளிகளிடம் போனார். அத்தனை பேருக்கும் உணவும், மதுவும் கொண்டு சென்றார்.

“தொழிலாளத் தோழர்களே, நான் நம்ம பாஸோட பிரதிநிதியா இங்கே புதுசா வந்திருக்கேன். இனிமே இங்கிருந்து கிளம்புற சரக்குகளுக்கு நான்தான் உத்தரவாதம் கொடுக்கணும். உங்களுக்கு எந்த தொல்லையும் நான் கொடுக்க மாட்டேன்னு மட்டும் முதலில் உறுதி சொல்லுறேன். ரொம்ப கம்மியா கூலி கொடுக்கறாங்க. இன்னையிலேருந்து அது அப்படியே டபுளா கொடுக்க முயற்சி பண்ணியிருக்கேன்.

அதுவுமில்லாமே நல்லா வேலை செய்யுறவங்களுக்கு வாராவாரம் இன்சென்ட்டிவ். இனிமே இங்கே வேலைக்கு வர்றவங்களுக்கு சாப்பாடு நம்ம கம்பெனியே இலவசமா போடும். சாயங்காலம் வீட்டுக்கு போறப்போ ஆளுக்கு ஒரு சரக்கு பாட்டில்…” பாப்லோ, திட்டங்களை அறிவித்துக்கொண்டே போக.. தொழிலாளர்கள் கைதட்டி வரவேற்றார்கள்.

“தொழிலாளர் தலைவன் பாப்லோ எஸ்கோபார் வாழ்க!” என்று கோஷமிட்டார்கள். பெரிய கடத்தல் மன்னனாக வருவதை லட்சியமாகக் கொண்ட தன்னை, டிரேட் யூனியன் தலைவர் ரேஞ்சுக்கு இவர்கள் மாற்றிவிடுவார்களோ என்று சட்டென்று பதறினார் பாப்லோ. “ஆனா, ஒண்ணு.

இனிமே இங்கே லோட் ஆகிற சரக்குலே ஒரே ஒரு கிராம் குறைஞ்சாகூட அதுக்கு காரணமானவன் அடுத்த நாள் கடலில் பிணமா மிதப்பான்!” இதைச் சொன்னபோது பாப்லோவின் கண்களில் தெரிந்த கொலைவெறி, தொழிலாளர்களை நடுங்க வைத்தது. 50 பர்சென்ட் அன்பு, 50 பர்செண்ட் வன்முறை-இதுதான் பாப்லோவின் சக்சஸ் ஃபார்முலா. இப்போதும்கூட உலகின் தலைசிறந்த கடத்தல் மன்னர்கள் பலரும் பாப்லோவின் இந்த ஃபார்முலாவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்