COFFEE TABLE
-குங்குமம் டீம்
சைலண்ட் கார்னர்
புரட்சியாளன் - ஆல்பர்ட் காம்யூ ப்ரெஞ்சிலிருந்து தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா (காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001. விலை: ரூ.475. தொடர்புக்கு: 9677778862)
 ஆல்பர்ட் காம்யூவின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நாம் வாழும் காலத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இன்று வரைக்கும் இந்த நூல் உதவிக் கொண்டே வருகிறது. நிச்சயமற்ற உலகில் வாழக்கூடிய அனைத்து சூழலையும் காம்யூ அவரின் வார்த்தைகளில் பிரத்யேகமாக எழுதிச் செல்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் அடுத்தடுத்த கணத்தில் ஒருமை கூடி நிற்கிறது.
மிகவும் கவனம் தேவைப்படுகிற நினைவையும் உணர்வையும் சேர்த்து ஒருங்கிணைந்து படிக்க வேண்டிய கட்டுரைகள். நம் வாழ்க்கையின் சாத்தியமின்மைகளை அக, புற காரணங்களோடு காட்டிச் சொல்கிறது. ஒரு லட்சிய சமூகம் உருவாகிவிடாமல் எப்படியெல்லாம் சிதறிப் போகிறது என்பதை மிகவும் தீர்க்கதரிசனத்தோடு எழுதுகிறார் காம்யூ.
 பிரெஞ்சுப் படைப்பாளிகள் உலக இலக்கிய வரலாற்றிலும், சிந்தனை வரலாற்றிலும் ஒரு பெரும் இடத்தை ஆக்ரமித்து இருக்கிறார்கள் என்றாலும் காம்யூவின் இடம் தனித்துவமானது. பிரதி செய்ய முடியாதது. தன் இயல்பானது. சமயங்களில் தியானம் போல செல்கிற உரைநடை, திடுமென கவனம் செதுக்கி படிக்க வேண்டியதாகிறது. மனித சமூகத்தின் மீதான பெரும் காதலில் காம்யூ தோய்ந்து இருப்பதால், அவரை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
நேரடி மொழிப்பெயர்ப்பில் நாகரத்தினம் கிருஷ்ணா ஆற்றியிருப்பது பெரும்பணி. சவால் தந்து உழைப்பைக் கோருகிற இந்த கட்டுரைகளை சுயம் கெடாமல் மொழிபெயர்த்திருப்பது சாதனை.
பிகினியில் ராதிகா ஆப்தே!
ஹாலிவுட்டில் நிர்வாண போஸ்... பாலிவுட்டில் டாப்லெஸ் ஸ்மைல் என ‘கபாலி’ ஹீரோயின் ராதிகா ஆப்தேவைப் பற்றிய கிளுகிளு சர்ச்சை ஸ்டில்கள் வந்து நாளாகிவிட்டதே என ஏங்கியவர்களுக்கான குட் நியூஸ் இது. கைவசம் இருந்த ஷூட்டிங் எல்லாம் முடித்து விட்டு ரிலாக்ஸ் ஆன ராதிகா ஆப்தே, தன் கணவர் பெனடிக்ட் டைலருடன் இத்தாலியில் ஹாலிடேயைக் கொண்டாடி வருகிறார். அங்குள்ள ரூஸ்கனி பீச்சில், டூ-பீஸில் கடலில் நீச்சலடிக்கும் அழகை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் தட்டிவிட, மீண்டும் வைரல் ரவுண்டில் முதலிடத்தில் இருக்கிறார் ஆப்தே!
லன்ச் பேக்கிங் ஐடியாஸ்!
அலுவலகம் செல்லும் அனைவருக்குமே அதிகாலை பரபரப்பு இயல்புதான். அந்த அவசரத்தில் அத்தியாவசியமான மதிய உணவை எடுத்துச் செல்லக்கூட போதுமான நேரம் இருப்பதில்லை என்பது அனுபவ உண்மை. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண முடியுமா? ஒரு வாரத்திற்குத் தேவையான லன்ச்சை முன்கூட்டியே திட்டமிட்டு, பேக் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் packed lunch ரெடி என்கிறது ஒரு வீடியோ.
விதவிதமான லன்ச் பேக்கிங் ஐடியாக்களை அள்ளி வீசுகிறது அந்த வீடியோ. ஃபேஸ்புக்கின் ‘tasty junior’ பக்கத்தில் ‘Tired of packing lunches every morning? Organize your fridges so your family can pack their own!’ என்ற தலைப்பில் அந்த வீடியோவை பதிவிட, 29 லட்சம் பேர் பார்த்து ரசித்தும், 5 லட்சம் பேர் ஷேர் செய்தும் படு வைரலாக்கியுள்ளனர்.
பால் எனும் எமன்!
பாலைப் பற்றிய நம் நம்பிக்கைகளுக்கு சில ஆய்வுகள் குண்டு வைக்கின்றன. ‘வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து கூட பாலில் கிடையாது. குறிப்பாக ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு பாலைக் கொடுக்கவே கூடாது. சருமத்துக்கு பால் நல்லது என்பதற்கு காரணம் பாலில் கலக்கப்படும் தண்ணீர்தான். ஆனால், இந்தத் தண்ணீரும் பாலில் கலக்கப்படும் பல்வேறு கலப்பட உணவுப் பொருட்களால் மாசடைந்து நம் சருமத்துக்கே உலை வைத்துவிடும்!’ என்கிறார்கள் நிபுணர்கள்.
ரீடிங் கார்னர்
கிம் கி டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் - ஜமாலன் (நிழல், 31/48, ராணி அண்ணா நகர், சென்னை - 78. விலை: ரூ.120. தொடர்புக்கு: 9444484868) உலகத்தின் சினிமா ரசிகர்களுக்கு கிம் கி டுக் இப்பொழுது நெருக்கமான பெயர். குறிப்பாக இளைஞர் சமூகத்திற்கு அவரே ஆகச் சிறந்த இயக்குநர். அவரைப் பற்றிய முழுதான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தவிர்க்க முடியாத அவரின் அரிதான நீண்ட நேர்காணல் காணக் கிடைக்கிறது.
திரைப்படத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கிற எல்லோருக்கும் இது கையில் இருக்க வேண்டிய புத்தகம். அவரது சினிமா வழக்கமான சினிமாக்களின் பழக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி நிற்கிறது. அவரது கதையுலகம் ஒரு கனவு போன்ற அனுபவம் கொண்டது. சமயங்களில் காதல் கதையாகவும், மர்ம நாவலாகவும், சுய கண்டுபிடிப்பின் சாகசமாகவும், அதீத கற்பனையாகவும், தேவதைக் கதையாகவும், வார்த்தைகளற்ற துக்கமாகவும், அபத்தத்தின் வெற்றியாகவும் உருக்கொள்கிறது.
அவரது படங்களின் பொருள் முன்பின் தொடர்ச்சி இல்லாதது. ஆண் பெண் உறவுகளின் முன்னிலைகளை உடைத்துப் போட்டவர். அவரது கதைமாந்தர்கள் பெரும்பாலும் தனித்து இருக்கிறவர்களாக, நிசப்தத்தின் கருக் கொண்டவர்களாக, மைய நீரோட்டத்தில் கலக்காதவர்களாக, மனக்காயங்கள் கொண்டவர்களாக, சொந்த வாழ்வில் வேரற்றவர்களாக இருப்பதைக் காண நேர்கிறது.
ஜமாலன் மொத்த கிம் கி டுக்கின் உலகத்தையும் சிரமேற்கொண்டு எழுதியிருக்கிறார். இது மாதிரியான குறிப்பிடத்தக்க ஆளுமைகளைப் புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் ஜமாலன் அருமையான மேடை அமைத்துத் தருகிறார். அவரது 20 படங்களின் ஆதார சுருதியும், மையமும் சிறப்பாக முன் வைக்கப்படுகிறது.
|