ஊஞ்சல் தேநீர்
யுகபாரதி - 31
தமிழ்ச்சூழலில் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்திற்குப் பிறகுதான் கோமல் சுவாமிநாதனைக் கூர்ந்து கவனிக்கும் நிலை ஏற்பட்டது. அதற்கு முன்பே அவர் தனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்த ‘ஸ்டேஜ் ஃப்ரண்ட்ஸ்’ எனும் நாடகக்குழு அரங்கேற்றிய, ‘நவாப் நாற்காலி’, ‘சந்நிதி தெரு’, ‘பட்டணம் பறிபோகிறது’, ‘வாழ்வின் வாசல்’, ‘யுத்த காண்டம்’, ‘அஞ்சு புலி ஒரு பெண்’, ‘கூடு இல்லா கோலங்கள்’, ‘ஆட்சி மாற்றம்’, ‘ராஜ பரம்பரை’ போன்ற நாடகங்கள், ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தின் வெற்றியால் மீண்டும் மீண்டும் மேடையேறின.
 ஒவ்வொரு நாடகமும் பலமுறை மேடையேறும் வாய்ப்பைப் பெற்றன. கருத்தும் செறிவும் நிறைந்த அவருடைய நாடகப் பிரதிகள் காலத்தின் கையேடுகள். அவ்வப்போதைய சமூகப் பிரச்னைகளை முன்வைத்து, அவரால் எழுதப்பட்ட நாடகங்களை, நவீன நாடகங்களின் தோற்றுவாயாகக் கருத இடமுண்டு. அவர் காலத்தில் இயங்கி வந்த ஏனைய நாடகக்காரர்களுக்கு பெரும் சவாலாக கோமல் சுவாமிநாதன் இருந்திருக்கிறார்.
சோ, விசு போன்றோர் நடத்தி வந்த நாடகங்களிலிருந்து முற்றி லும் வேறுபட்ட தொனியை கோமல் சுவாமிநாதனின் நாடகங்கள் கொண்டிருந்தன. அடர்த்தியாகச் சொல்லவேண்டும் என்பதற்காக அழகியலை அவர் நாடகங்கள் புறந்தள்ளிவிடவில்லை. உலக நாடகப் போக்குகள் குறித்த பார்வைகள் அவரிடமிருந்தன.
 அதே சமயத்தில் அன்றைக்கு நவீன நாடகங்கள் என்னும் பெயரில் நிகழ்த்தப்பட்டு வந்த கூத்துகளை ஒருபோதும் அவர் ஆதரித்ததில்லை. நாடகம் குறித்த தெளிந்த கருத்தோட்டத்தை வைத்திருந்தார். அரங்க அமைப்பிலும் கதாபாத்திரத் தெரிவிலும் அவருடைய தனித்துவங்கள் வெளிப்பட்டன. வாத்தியார் ராமன், சாமிக்கண்ணு, வீராச்சாமி போன்றவர்களை வெகுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவந்த சிறப்பு அவருடையது.
கோமல் சுவாமிநாதன், கேரளத்திலும் வங்கத்திலும் நிகழ்த்தப்படுவதைப் போல தமிழகத்திலும் மக்களின் குரலையும் மக்களுக்கான குரலையும் நாடகங்கள் கொடுக்க வேண்டும் என விரும்பியவர். அதற்காக இடையறாமல் உழைத்தவர். அவர், தம்முடைய நாடகங்களுக்குப் பெயரிடுவதில்கூட விசேஷ கவனத்தை எடுத்துக்கொண்டவர். குறிப்பாக, ‘சுல்தான் ஏகாதசி’, ‘செக்கு மாடுகள்’, ‘மனிதன் என்னும் தீவு’, ‘கல்யாண சூப்பர் மார்க்கெட்’, ‘நள்ளிரவில் பெற்றோம்’ ஆகிய நாடகங்களின் உட்கருவை அத்தலைப்புகளே மிகச் சரியாகப் பிரதிபலித்துவிடும்.
பெண்ணிய கருத்துகளையும் தலித் விடுதலையையும் அவர் நாடகங்கள் பிரதானப்படுத்தியவை. அரசியல் சமூகப் பிரச்னைகளை நாடகங்களாக ஆக்கி, அதை மேடையேற்றுவதில் ஆர்வமுடைய அவர், சக நாடகக் கலைஞர்களுடன் சுமுகமான உறவைக் கொண்டிருந்தவர். ஒருகாலம் வரை அவர் நாடகங்களைப் பார்ப்பதற்கென்றே தனிக்கூட்டம் கூடியிருக்கிறது.
தோழர் ஜீவாவும் வி.பி.சிந்தனும் தன்னுடைய நாடகங்களைப் பார்க்க வந்ததை, அவர் எழுதிய ‘பறந்துபோன பக்கங்கள்’ நூலில் பதிவு செய்திருக்கிறார். சக நாடகாசிரியர்களுடன் அவருக்கிருந்த நல்லுறவினால்தான் வெற்றிகரமான நாடக விழாக்களை சென்னையிலும் மதுரையிலும் அவரால் நடத்த முடிந்தது. தில்லியில் பிரசித்தி பெற்ற ‘யதார்த்தா’ நாடகக்குழுவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவரும் அவரே.
‘யதார்த்தா’ நாடகக்குழுவினர் நிகழ்த்திவந்த சி.சு.செல்லப்பாவின் ‘முறைப்பெண்’ நாடகத்தின் சிறப்பை அவர் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். அந்நாடகத்தை எழுதிய செல்லப்பாவையும் அவர்தான் மேடைக்கு அழைத்து பெருமைப்படுத்தினார். ஒரு நாடக ஆசிரி யனுக்கு ஏற்படும் நியாயமான கோபங்களைப் பொருட்படுத்தி, அவனைச் சாந்தப்படுத்தும் ஆற்றலைக் கோமல் பெற்றிருந்தார்.
நிஜ நாடகக் குழுவைச் சேர்ந்த மு.ராமசாமியின் ஒத்துழைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நிகழ்ந்த மதுரை நாடகவிழாவை கோமல் சுவாமிநாதன் தன் சொந்த விழா போலவும் வீட்டு விசேஷம் போலவும் நடத்திக் காட்டியதை நவீன நாடகக்காரர்கள் மறந்துவிடமாட்டார்கள். நாடகக் கலைஞர்கள் அத்தனை பேரையும் அரவணைத்து அவர்களின் தேவைகளை உணர்ந்து செயல்படும் பக்குவமுடையவராக அவருடைய செயல்பாடுகள் அமைந்தன.
ஆரம்பத்தில் தன்னால் எழுதப்பட்ட நாடகத்தைப் பார்க்க வரமறுத்த செல்லப்பாவை, கோமலின் அன்புதான் கூட்டி வந்ததென ‘யதார்த்தா’ பென்னேஸ்வரன் எழுதியிருக்கிறார். சக நாடக ஆசிரியர்கள்மீது கோமல் சுவாமிநாதன் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் அளவிட முடியாதது. யாரையும் தன்வயப்படுத்தும் தகுதியை அவர் எழுத்துகளும் அணுகுமுறைகளும் கொண்டிருந்தன.
என்றாலும், தன்னுடைய கருத்துகளைத் திணிக்கும் காரியத்தை அவர் எங்கேயும் எப்போதும் செய்ததில்லை. ஒருவரை அதே பலத்தோடும் அதே பலவீனத்தோடும் அங்கீகரித்துப் பழகியவர் அவர். நாடகக் கதாசிரியர், இயக்குநர், எழுத்தாளர், பத்திரிகையாளர், மேடைப் பேச்சாளர் என பன்முக அடையாளங்களைக் கொண்டிருந்த அவர், தேசிய விருது குழுவிலும் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
இந்தியாவின் உயரிய விருதான தேசிய விருது, யாருக்கு எப்படி வழங்கப்படுகிறது எனும் வேடிக்கைகளை அவர் ஒருவர்தான் வெளி உலகுகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். அவர் நடுவர் குழுவில் பங்கு வகித்த ஆண்டில்தான் பாரதி ராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ திரைப்படம் தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
அப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிவாஜி கணேசனுக்கு விருது வழங்கப்படும் எனவும் யூகிக்கப்பட்டது. கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக நடிப்புலகில் தனக்கான இடத்தை அகில இந்திய அளவில் சிவாஜிகணேசன் பெற்றிருந்த போதிலும் அவர் அத்திரைப்படத்தில் புதுவிதமான எதார்த்த நடிப்பைக் காட்டியிருந்தார்.
ஓவர் ஆக்டிங் செய்பவர் என்று சொன்னவர்கள்கூட ‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் அவர் நடித்ததை அசல் நடிப்பென்று ஆமோதித்தார்கள். ஆனாலும், அந்த ஆண்டும் அவருக்கு அவ்விருது வழங்கப்படவில்லை. ஏதேதோ காரணங்களைச் சொல்லி, சிவாஜி கணேசனுக்கான விருதை சசி கபூருக்கு அறிவித்தார்கள்.
ஜெயா பச்சனின் தலைமையில் இயங்கிய நடுவர் குழு, ‘சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியில் இருப்பதால், சிறந்த நடிகராக அவரைத் தேர்ந்தெடுத்தால், காங்கிரஸ் கட்சியின் சலுகையினால் அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புரளியைக் கிளம்பும் என்று புதுக்கரடியை அவிழ்த்துவிட்டதாக’ கோமல் குமைந்திருக்கிறார்.
‘ஒருவருடைய அரசியல் செயல்பாடுகளை வைத்து அவருடைய கலைச் செயல்பாடுகளைக் கணக்கிடுவது சரியா?’ எனக் கோமல் கேட்டிருக்கிறார். உடனே, அவர்கள் ‘சிவாஜி கணேசன் குண்டாயிருக்கிறார்...’ என்றிருக்கிறார்கள். ‘கிராம மக்களின் மரியாதைக்குரிய ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் குண்டாயிருந்தால் என்ன?’ என்று திரும்பவும் கோமல் கேட்டிருக்கிறார்.
‘அதுவும் சரிதான். ஆனால், நாங்கள் எல்லோரும் சசிகபூரைச் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்க விரும்புகிறோம்...’ என்றிருக்கிறார்கள். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில்தான் தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அந்த ஆண்டு தேசிய விருது பெறுவதற்குரிய அத்தனை தகுதியிருந்தும் தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக சிவாஜி கணேசனுக்குச் சிறந்த நடிகருக்கான விருது மறுக்கப்பட்டதாகக் கோமல் குறிப்பிட்டிருக்கிறார்.
அதே ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதை ‘சிந்து பைரவி’யில் நடித்த சுஹாசினியும், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை வைரமுத்துவும் பெற்றார்கள். தகுதி ஒருபுறம் இருந்தாலும் அதைப் பெற்றுத்தருவதில் கோமல் கொண்டிருந்த போர்க்குணம் குறிப்பிடத்தக்கது. சிவாஜிக்கு மறுக்கப்பட்ட விருதை எப்படியாவது பிறிதிருவர்க்குப் பெறும் நோக்கில், சுஹாசினிக்காகவும் வைரமுத்துக்காகவும் அவர் போரிட்டிருக்கிறார்.
அவரே, ‘மகாகவி பாரதிக்குப் பிறகு வைரமுத்துதான் என இருபது நிமிடங்களுக்கு மேல் என்னென்னவோ விவாதித்துதான் வைரமுத்துவுக்கான முதல் தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்தேன்...’ என ‘சுபமங்களா’வில் எழுதியிருக்கிறார். ஒருவர் எத்தனை தகுதிகளைக் கொண்டிருந்தாலும் அத்தகுதிகளை எடுத்துச் சொல்லவும், அதுவே உயர்ந்ததென்று அழுத்திச் சொல்லவும் இன்னொருவர் தேவைப்படுகிறார்.
இன்னொருவர் என்பதைவிட ஒருவராவது தேவைப்படுகிறார் என்பது இன்னும் பொருத்தம். கோமல் சுவாமிநாதனின் தந்தை அஞ்சல் துறையில் பணியாற்றியவர். அதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவருடைய வாசம் இருந்திருக்கிறது. பணி மாற்றலாகி ஒவ்வொரு ஊருக்குப் போகும்போதும் அந்த ஊரிலுள்ள இலக்கிய நாடகக்காரர்களை ஸ்நேகித்திருக்கிறார்.
மிகச் சிறிய வயதிலிருந்தே எழுத்துகளை வாசிப்பதில் அவருக்கிருந்த அலாதியான ஆர்வம், நல்ல எழுத்துகளை நோக்கி நகரவும் எழுத்தாளர்கள் மீதான நேசத்தை வளர்த்துக்கொள்ளவும் உதவியிருக்கிறது. தன்னுடைய கால்சட்டை பருவத்தில் தோழர் ஜீவாவை ரயில் பயணத்தில் சந்தித்திருக்கிறார்.
1956ல் கால்சிராயோடு தினமும் தன்னுடன் பயணிக்கும் அந்த பெரியவர்தான் ஜீவா எனத் தெரிந்து, எப்படியாவது அவரிடம் பேசிவிட வேண்டுமென ஏங்கியிருக்கிறார். அதற்காகவே ஒரு கேள்வியையும் தயாரித்துக் கொண்டு ஜீவாவிடம் அக்கேள்வியைக் கேட்டிருக்கிறார். ‘புரட்சிக்குப் பின்னான சோவியத் ரஷ்ய எழுத்தாளர்கள், புரட்சிக்கு முன்னிருந்த டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, செகாவ், துர்கனேவ் போல மாபெரும் இலக்கிய கர்த்தாக்களாக ஏன் உருவாகவில்லை? அப்படியானால் அது புரட்சிக்குப் பின்னான சோவியத் ரஷ்யாவின் தோல்விதானே?’ என்றிருக்கிறார்.
கேள்வியைக் கூர்ந்து கவனித்த ஜீவா, சிறுவனாயிருந்த கோமலைத் தட்டிக்கொடுத்துவிட்டு, ‘புரட்சிக்குப் பின்வந்த ரஷ்ய எழுத்தாளர்கள் யாரையாவது படித்திருக்கிறீர்களா?’ என்றிருக்கிறார். இல்லை என்றதும் அவரே ‘ஷோலக்கோவ்வை படியுங்கள்...’ என்றிருக்கிறார். ‘உங்கள் கேள்விக்கான பதில் மிக விரிவானது. குறிப்பாக, இலக்கியத்தின் வளர்ச்சி இரண்டு விதத்தில் இருக்கிறது.
பெர்பெண்டிக்குலர் குரோத், ஹரிசாண்டல் குரோத் என்று சொல்வார்கள். சீரழிந்த ரஷ்யாவின் இலக்கிய வளர்ச்சி என்பது பெர்பெண்டிக்குலர் வளர்ச்சிக்கு ஒப்பானது. புரட்சி மலர்ந்த ரஷ்யாவின் வளர்ச்சியோ ஹரிசாண்டல் வளர்ச்சியைப் பெற்றி வருகிறது...’ என பொறுமையாக விளக்கியிருக்கிறார்.
இலக்கிய வளர்ச்சியின் நீளத்தையும் அகலத்தையும் விளக்கிக்கொண்டே வந்த ஜீவா, கோமலுக்காக முந்தைய நிறுத்தத்திலேயே இறங்கி சில மணிநேரம் செலவழித்திருக்கிறார். ‘ஹரிசாண்டல் வளர்ச்சியைப் பொறுத்தவரை மிக நிதானமாகத்தான் நடைபெறும் என்பதால் தற்போதைய மாற்றங்களை உங்களால் யூகிக்க முடியவில்லை. யூகிக்க முடியாததை தோல்வியாகச் சொல்ல முடியுமா?’ என்றும் கேட்டிருக்கிறார்.
ஒரு மாபெரும் தலைவர், தன் முன்னால் வைக்கப்பட்ட ஒரு சின்னஞ் சிறுவனின் கேள்விக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை எண்ணி எண்ணி கோமல் சுவாமிநாதன் சிலாகித்திருக்கிறார். அதைப்போலவே காமராஜரும் பேர்சொல்லி அழைக்கும் இடத்தில்தான் கோமல் சுவாமிநாதன் இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த காலத்தில், காமராஜர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கியே கதராடைக்கு மாறியிருக்கிறார்.
காமராஜரைப் பொறுத்தவரை யாரையும் ஒன்றுபோல நடத்தக் கூடியவர். ஒருமுறை மதுரை மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில் கூட்டம். அது, ராஜாஜி மந்திரிசபை நடந்துகொண்டிருந்த காலம். அக்கூட்டத்தில் கலந்துகொள்ள காமராஜர் வருவதாக ஒப்புக்கொள்கிறார். காமராஜர் வருகிறார் என்றதும் ஊர்க்காரர்களுக்கு ஏக குஷி. தடபுடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
அவ்வூரில் முஸ்லிம் சகோதரர்கள் அதிகம் என்பதால் பறப்பன, மிதப்பன, ஊர்வன, உதைப்பன எல்லாம் உணவாகத் தயாராகியிருக்கிறது. தலைவர் வரும்வரை அக்கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க, கோமல் உள்ளிட்ட பிரமுகர்களும் மாவட்ட நகர கழக முன்னோடிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
(பேசலாம்...)
ஓவியங்கள்: மனோகர்
|