என் படத்தில் கேளிக்கைகளுக்கும், வேடிக்கைகளுக்கும் இடமில்லை!
-நா.கதிர்வேலன்
‘‘தேனி மாவட்டத்தில் கேரள எல்லையில இருக்குற மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம். அங்கி ருக்கிற மக்களின் ஆசைகள், கனவுகள், அதுக்குள்ளே இருந்து ஆட்டிப் படைக்கிற அரசியல் எல்லாத்தையும் கலந்து கொடுத்ததுதான் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படம். பிரசாரத்தைத் தவிர்த்திருக்கேன். இங்கே மலை தாண்டி கூலி வேலைக்கு கேரள எஸ்டேட்டுக்கு போறவங்க அதிகம். அங்கேயும் குளிர், அட்டைப்பூச்சி, முதலாளி இம்சைன்னு ஏகப்பட்டது இருக்கு. டைரக்டராக நான் பிறந்த மண்ணின் கதையைச் சொல்லணும்னு தோணிச்சு.
 ஒரு நல்ல படம் பார்க்கிற அனுபவத்தோடு முடிஞ்சிடக்கூடாது. அது வெளியே வந்த பிறகு பார்த்தவர் மனதில் தொடர்ந்து வளரணும். கஷ்டப்படுகிற அந்த மக்களை நோக்கி ஒரு புன்னகை, புரிந்துகொள்ளல், ஒரு கைப்பற்றுதலாவது நம்ம கிட்டே வரணும்ங்கிறதுதான் என் ஆசை...’’ உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் லெனின் பாரதி. பட விழாக்களில் கலந்து பாராட்டுப் பெற்ற பெருமை கொண்ட ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குநர்.
உங்க கதைக்கு நடிகர்கள் எப்படி அமைஞ்சாங்க... இதை தயாரித்த விஜய் சேதுபதியே கதையைக் கேட்டுட்டு நடிக்க முன்வந்தார். அவரின் ஆர்வம் புரிந்தாலும் நான் மறுத்துவிட்டேன். சேதுவின் உடல் அமைப்பு இதற்கு பொருந்தி வராது. கூலி வேலை செய்கிறவர்களின் உடம்பு இறுகி, குறுகியிருக்கும். அவர் மாதிரி பெரிய நடிகர்களின் பிம்பம் கதையைக் கெடுத்துவிடக் கூடிய வாய்ப்பும் இருக்கு.
 பெரும்பாலும் இந்த ஊர் மக்கள்தான் நடிச்சிருக்காங்க. நீங்க 10 அடி தூரம் தள்ளி நின்னு வேடிக்கை பார்த்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இந்தப் படம் இருக்கும். நான் இந்தப் படத்தில் வெளியே இருந்துகிட்டு இன்னாரு, இன்னாருன்னு அடையாளம் காட்டுகிறேன், அவ்வளவுதான். ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் சின்ன வேடத்தில் வந்த ஆண்டனிதான் கதை நாயகன்.
காயத்ரி கிருஷ்ணான்னு ஒரு பொண்ணு. நானே இரண்டு வருஷத்திற்கு முன்னே தேனிக்கு வந்து வீடு எடுத்துத் தங்கி, முன் தயாரிப்பு வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சிட்டேன். ஆண்டனியையும் உள்ளே இழுத்து, மலை ஏறி இறங்குகிற தினுசு, வேலை செய்கிற இடமெல்லாம் பழக்கப்படுத்தினேன்.
 காயத்ரி கிருஷ்ணாவை ‘எனக்குத் தெரிந்த பொண்ணு, வேலைக்கு வந்திருக்கு’னு எஸ்டேட்டுல சேர்த்துவிட்டுட்டு ஒரு வீடு எடுத்து கொடுத்திட்டேன். அதனதன் அழகோட அதெல்லாம் நடந்தது. ஆறு பாலா நடிக்கிறார். பெயர் பெற்ற அபு வளையம்குளம் இதில் நடிச்சிருக்கார்.
அப்புறம் 86 வயது சுடலை. அவரை இந்த ஏரியா மக்களுக்கு காலம்காலமா தெரியும். சினிமா சினிமான்னு ஆசைப்பட்டு, சினிமா தியேட்டரிலேயே வேலை பார்த்துட்டு இருந்தவர். அவர் மாடு பூட்டின வண்டியில கையில் சினிமா ேநாட்டீஸ் வைச்சுக்கிட்டு, படம் பார்க்க வரச் சொல்லி கூவுறது அவ்வளவு அழகா இருக்கும். அந்தக் குரல் எட்டுத் திசைக்கும் விட்டு எறியும்.
மொக்கைப் படத்தையும் அவர் விமர்சனம் பண்ணிக்கிட்டு போறதைப் பார்த்தால், பொண்டு பிள்ளைங்க சாயங்கால வேலையை அவசர அவசரமா முடிப்பாங்க. அப்படி ஒரு ரசிகர். அவரும் நடிச்சிருக்கார். சமீபத்தில் அவர் இறந்துபோயிட்டார். அவர் நடிச்ச சீன்களை தனியாகப் பிரிச்சு, அவரைக் கிடத்தியிருந்த இடத்தில் போட்டுக் காட்டினேன். ஊரே அழுதது, அவர் பார்த்திருந்தால் நான் குளிர்ந்திருப்பேன்.
இசை இளையராஜா... எப்படியிருக்கு..? எங்க அப்பாவும், இசைஞானியும் பால்ய சிநேகிதர்கள். இரண்டு பேரும் சேர்ந்து விளையாடி, நாடகம் போட்டு, பாட்டு பாடித் திரிஞ்ச காலங்கள் நிறைய. தோட்டத் தொழிலாளியாக இருந்த அப்பா சினிமா ஆசை வந்து எங்களைக் கூட்டிட்டு சென்னைக்கு வந்திட்டார். இளையராஜா அதற்கு முன்னாடியே பிரபலம். சினிமாவுல போராடிப் பார்த்திட்டு அப்பா இறந்துபோயிட்டார்.
இப்போதான் நான் இளையராஜாவைப் பார்த்தேன். ‘எந்த ஊரு’ன்னு கேட்டார். ‘கோம்பை’ ரெங்கசாமி பையன்னு சொன்னேன். ‘டல்லு’ ரெங்கசாமியானு கேட்டு, ‘எங்கே அவன்? நான் பார்க்கணும்’னு சொன்னார். இறந்துவிட்டதைச் சொன்னேன். இந்தப் படத்துக்கான இசையை இளையராஜா மட்டுமே செய்ய முடியும்.
கேமராமேன் தேனி ஈஸ்வரும் இந்த மண்ணின் மைந்தனே. மிகுந்த பிரயாசையுடன், ஆத்மார்த்தமாகவும் இதில் பங்கு பெற்றிருக்கிறார். தொழிலாளிகளின் வாழ்க்கையை குறுக்கு வெட்டுத் தோற்றமாய் வைக்கிற மாதிரி ‘அந்தரத்தில் தொங்குதம்மா...’ என்ற பாடலை எழுதியிருக்கிறார் இளையராஜா. காலத்திற்கும் நிற்கும்.
இவ்வளவு தீவிரமாக சினிமாவில் இயங்குகிறீர்கள்... சினிமா வணிகம் சார்ந்ததுதான். ஆனாலும் எழுதி இயக்குகிறவர்களுக்கு பொறுப்பு இருக்கிறது. நடிகர்கள் எதையோ சொல்லிவிட்டு, அது எத்தனையோ பேரை காலி பண்ணுகிறது. அஜித், விஜய்க்கு அப்பா, அம்மாவைவிட சப்போர்ட் பண்ணுகிறார்கள். புகழுக்காக, பணத்துக்காக மக்களைத் தூண்டிவிடுவது இங்கே நடக்கிறது.
என்னை தொந்தரவு செய்கிற விஷயங்களைத்தவிர வேறு எதையும் எடுத்துவிடக்கூடாது என உறுதியாக இருக்கிறேன். என் படம் மக்களுக்குப் பயன்பட வேண்டும். வாழ்க்கை மிகவும் சிறியது. அதற்குள் நான் கற்ற கலையை இந்த சமூகத்திற்கு பயனுடையதாக்க விரும்புகிறேன். அதற்கு என் வழி சினிமா. என் படத்தில் கேளிக்கைகளுக்கும், வேடிக்கைகளுக்கும் இடமில்லை. என் வேலை வெளிப்படையாக நீதிபோதனை செய்வதல்ல. நான் சந்திக்கிற மனிதர்கள், சூழல்கள், அனுபவங்கள்... அது உருவாக்கிய நியாயங்களை மட்டுமே என் படத்தில் முன் வைக்கிறேன்...
|