சிபிராஜிடம் என்னை சிபாரிசு செய்ததே விஜய் ஆண்டனிதான்!



நெகிழ்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

-மை.பாரதிராஜா

‘‘என்னோட முதல் படம், ‘சைத்தான்’ ஷூட்டிங்கில் பிஸியா இருந்தேன். அப்ப விஜய் ஆண்டனி சாருக்கு ஒரு போன் வந்துச்சு. எதிர்முனையில் சிபிராஜ். தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த அமானுஷ்ய த்ரில்லர் ‘ஷனம்’ படத்தோட தமிழ் ரைட்ஸ் அவர்கிட்ட இருக்கறதாகவும், அதை டைரக்ட் பண்ண ஒரு சாய்ஸ் சொல்லுங்கன்னு கேட்டார்.

விஜய் ஆண்டனி சார் கொஞ்சமும் யோசிக்காம சிபி சார்கிட்ட என் பெயரை ரெகமண்ட் செய்தார். உண்மைல இது எனக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட். ‘சைத்தான்’ ரிலீசானப்ப சிபியின் ‘சத்யா’ படத்தோட 50% படப்பிடிப்பை முடிச்சிருந்தோம்...’’ நம் கண்களின் ரியாக்‌ஷன் பார்த்து புன்னகைக்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

‘‘இது முழுக்க முழுக்க ஹீரோ சப்ஜெக்ட். சிபியோட கேரக்டர் பெயர் சத்யா. அதே பெயரில் டைட்டிலும் இருந்தாப்ளஸ்ஸா இருக்கும்னு எல்லாருக்குமே தோணுச்சு. உடனே கமல் சார்கிட்ட கேட்டோம். சந்தோஷமா கொடுத்துட்டார். அவரோட ‘சத்யா’வுக்கும் இதுக்கும் ஒரு  ஃபிரேம்ல கூட சம்பந்தம் கிடையாது.

இந்தப் படத்தை சத்யராஜ் சாரே தயாரிச்சிருக்கார். எங்க ஷூட்டிங் நடந்த டைம்ல அவர் ‘பாகுபலி2’ ஷூட்ல இருந்தார். எங்க ஸ்பாட் பக்கமே வரலை. படம் ரெடியானதும் பார்த்தார். அவருக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது...’’ ரிலீஸ் பரபரப்பிலும் நிதானமாகப்பேசுகிறார் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி. 

சிபியே உங்கள செலக்ட் பண்ணியிருந்ததால, ஃப்ளக்ஸிபிளா இருந்தாரா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க..! அவர் நல்ல பர்ஃபாமர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இருந்து வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர் கேரக்டர் பண்ணியிருக்கார். ‘நீங்க என்.ஆர்.ஐ. உங்க லுக்கை மாத்தணுமே’னு சொன்னேன். உடனே என்னை நம்பி, அதற்கான ஒர்க் அவுட்டை ஆரம்பிச்சார். படப்பிடிப்பு அன்னிக்கு ஸ்லிம்மா ஃபிட்டா அந்த என்.ஆர்.ஐ. கேரக்டராகவே வந்து நின்னார்.

அவ்வளவு ஒரு டெடிகேஷன். ரம்யா நம்பீசனோட ரொமான்ஸ்ல ஒரு லிப் லாக் வைக்கலாம்னு தோணுச்சு. ‘என்னோட குழந்தைங்களும் படத்தை பார்ப்பாங்க. வேணாமே’னு மறுத்துட்டார். அப்படி ஒரு சமூக அக்கறையோட நடிக்கறார். வெளிநாட்டு வாழ் இந்தியரோட குழந்தை காணாமல் போகுது.

அந்த குழந்தை எப்படி காணாமல் போச்சுனு தேட ஆரம்பிக்கும்போது நேரும் திக் திக் சம்பவங்களை காமெடி கலந்து சொல்லியிருக்கேன். சிபி தவிர ரம்யா நம்பீசன், வரலட்சுமி, நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், சதீஷ், யோகிபாபுனு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. ஒரிஜினல் தெலுங்கு படத்தோட ஜீவன் கெடாமல் படத்தை பண்ணியிருக்கோம்.

இதுல ரம்யா நம்பீசன் வந்தது எப்படி?
‘சைத்தான்’ படத்தோட கதையை முதலில் ரம்யாகிட்டதான் சொன்னேன். கொஞ்சம் தயங்கினாங்க. அதுக்கப்புறம் படம் பார்த்துட்டு, ‘சாரி சார்... நான் மிஸ் பண்ணிட்டேனே’னு ஃபீல் பண்ணினாங்க. ரம்யாவோட ப்ளஸ் அவங்களோட ஹோம்லி லுக்தான். அதனாலேயே ‘சத்யா’வுக்கு பொருத்தமா இருந்தாங்க. ஒரு சீன்ல வில்லன் கோஷ்டி துப்பாக்கியை வச்சு, அவங்க தலையில ஓங்கி குத்து விடணும்.

வில்லன் கை துப்பாக்கியை ரம்யா தலைக்கு அருகே கொண்டு வரும்போது, ரம்யா நகராமல் அந்த இடத்துல இருக்கணும். அதான் சீன். ஆனா, ரம்யா கொஞ்சம் நகர்ந்துட்டாங்க. அதுல அவங்க தலையில நிஜமாகவே துப்பாக்கி தாக்க... கிறுகிறுத்து அலறிட்டாங்க. அது டம்மி கன்தான். ஆனாலும் மெட்டல் கன். ஆனாலும் ரம்யா அதை பொருட்படுத்தாமல் அடுத்த சீனுக்கு ரெடியானாங்க.

அதே மாதிரி வரலட்சுமி. போலீஸ் அதிகாரியா நடிக்கறாங்க. நிஜமாகவே அவங்க போலீஸ் ஆஃபீஸர் மாதிரிதான் இருப்பாங்க. ஒவ்வொரு டயலாக்கையும் அதோட அர்த்தத்தை தெளிவு படுத்தின பிறகே நடிப்பாங்க. ஆனந்தராஜ் சார் சீரியஸான போலீஸா வர்றார். அவர் வர்ற இடங்கள்ல காமெடி கலகலக்கும்.

நல்ல டெக்னீஷியன்ஸ் அமைஞ்சிருக்காங்க. ‘ஆனந்தபுரத்து வீடு’ அருண்மணி, ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘555’ சைமன் இசையமைச்சிருக்கார். மிஸ்ட்ரி ஹாரருக்கு தேவையான பின்னணி இசை, பாடல்கள் எல்லாமே பிரமாதமா வந்திருக்கு. சென்னை தவிர, ஆஸ்திரேலியாவிலும் கொஞ்சம் ஷூட் பண்ணியிருக்கோம்.

நீங்க வெற்றிமாறனோட ஸ்டூடன்ட் ஆச்சே?
ஆமா. சென்னை லயோலாவில் டைரக்‌ஷன் படிச்சேன். நான் சினிமாவிற்கு வர காரணமே எங்க காலேஜ் பிரின்சிபல் ஃபிரான்ஸில் பீட்டர் ஃபாதர்தான். அவர் கொடுத்த நம்பிக்கையில் வெற்றிமாறன் சார்கிட்ட சேர்ந்தேன். ‘ஆடுகளம்’ ஒர்க் பண்ணினேன். அப்புறம் சன் டிவிக்கு நிறைய டாகுமென்ட்ரி இயக்கினேன்.

கிட்டத்தட்ட இருபது டாகுஃபிக்‌ஷன் பண்ணியிருப்பேன். அதன்பிறகே ‘சைத்தான்’ இயக்கினேன். எனது ரெண்டாவது படம் ரீமேக்னாலும் இது நான் எதிர்பாக்காம கிடைத்த வாய்ப்பு. ஒரிஜினல் கெடாம, அதே டைம்ல தமிழ் ரசிகர்களும் ரசிக்கற மாதிரி இயக்கறது சவாலான வேலை. அதை ‘சத்யா’வில் சிறப்பா செய்திருக்கேன்னு நம்புறேன்.