கவிதை வனம்



மறுபக்க மழை

வாழ்தலை எனக்கு எளிமையாக்கியவள் அவள்
சொட்ட நனைந்தபடி வந்தவள்
மழையை சபிக்கிறாள்
பொய்க்காத பருவ மழை திட்டாதே என்றேன்
பொய்க்காமல் பொழிஞ்சிருந்தா
நான் ஏன் பத்து தேய்க்கிறேன்
ஓடிப்போன கணவன்
நோய்மையில் வாடிப்போன பிள்ளை
எனத் துவண்டுபோய்விட்டாள் பாவம்
கொடுத்த நீரையும் மறுக்கிறாள்
குழந்தை சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு என்றாள்
எதற்கடி வந்தாய் என்றால்
உன்னாலே முடியாதே என்கிறாள்
இவள் போல் நல்லோர் இருப்பதால்
ஊரெல்லாம் மழை

- அனுராதா சாயிநாதன்

பொருளுடைமை

அவசர ஆசிக்கென
பாதம் தொடும் பேரனுக்கு
காசுக்கோ, பொம்மைக்கோ
வாய்ப்பற்ற உலர்ந்த முத்தமொன்றை
எஞ்சிய அன்பில் குழைத்து
கன்னம் பதித்த மறுநொடியே
இடக்கையால் அழித்துவிட்டு
அப்பா வாங்கிக் கொடுத்த
இயந்திர பொம்மையை
மார்பில் அரவணைத்தபடி
வந்தவர்களுக்கு பரிசளிக்கும்
அம்மாவிடம் இடம் பெயர்கிறது
வளரும் குழந்தை.

- சுபா செந்தில்குமார்