தண்ணீர் டாக்டர்!



-ச.அன்பரசு

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலேயே கர்நாடக விவசாயியான முனி நாகப்பாவுக்கு பயம் தோன்றிவிட்டது. தோட்டத்தில் பயிரிட்ட பழச்செடிகளுக்கு பாய்ச்ச 21 ஆழ்துளைக் கிணறுகளிலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. வேறு வழியின்றி காசு கொடுத்து நீர் வாங்கி வயலுக்கு பாய்ச்சவும் துணிந்துவிட்டார். அப்போதுதான் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியிருந்த நாகப்பாவின் மகன், கூட்டத்தில் கூறிய நீர் சேகரிப்பு முறைகளை முயற்சிக்கலாம் என்றார்.

எப்படியாவது பயிர்களைக் காப்பாற்றினால் போதும் என்ற நிலையில் நாகப்பாவும் தலையாட்ட, 3 நாட்களில் நீர் சேகரிப்பு அமைப்புகள் விறுவிறுவென அவர் நிலத்தில் உருவாயின. சில மாதங்களிலேயே நீர் சேகரிப்பு குழிகளில் நிறைந்த மழை நீரினால் நாகப்பாவின் ஆழ்துளைக் கிணறுகள் நிறையத் தொடங்கின. ஏறத்தாழ 4 கிணறுகளில் நீர் தளும்ப நிறைந்திருப்பதைப் பார்த்ததும் நாகப்பா நெஞ்சு நெகிழ்ந்து நன்றி சொன்னது கர்நாடகாவின் தண்ணீர் டாக்டரான அய்யப்பா மசாகிக்கு! 

நாகப்பா சின்ன உதாரணம்தான். இவரைப்போல கர்நாடகா மாநிலத்திலுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நீர் சேகரிப்பு திட்டங்களை வடிவமைத்துக் கொடுத்து, அவர்களின் வாழ்வை பசுமை செழிக்கச் செய்தவர் வேறு யாருமல்ல... அய்யப்பாதான். தனது நீர்சேகரிப்பு வடிவமைப்பு பணிகளுக்கான அங்கீகாரமாக 2014ம் ஆண்டு அசோகா விருது வென்ற அய்யப்பா, வடக்கு கர்நாடகாவின் கட்டாக் மாவட்டத்திலுள்ள வீரப்புரா கிராமத்தில் பிறந்தவர்.

‘‘அம்மாவோடு நீர் பிடிக்க அதிகாலையில் 3 மணிக்கு எழுவதுதான் நீர்பிரச்னை பற்றி நான் அறிய நேர்ந்த முதல் பதிவு. ஓர் ஆண்டு பெய்யும் மழையை சேமித்தால் 3 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்னையே இருக்காது...’’ என நம்பிக்கை பதிலால் ஆச்சரியப்படுத்துபவர் லார்சன் அண்ட் டூப்ரோவில் (பெங்களூரு) மெக்கானிகல் எஞ்சினியராக 23 ஆண்டுகள் பணியாற்றியவர். 2002ம் ஆண்டு தன் பணிக்கு விடை கொடுத்துவிட்டு இந்தியாவின் நீர் பற்றாக்குறைக்கான தீர்வுகளைத் தேடினார். 2005ம் ஆண்டு வாட்டர் லிட்ரசி பவுண்டேஷனை தொடங்கினார்.

மழைநீரைச் சேகரித்து சுத்திகரித்து, மண்ணில் சேமிப்பதுதான் இவரது ஃபார்முலா. ‘‘இன்றுள்ள விளைநிலங்கள் தட்டையாக இருப்பதால், மேலேயுள்ள மண்ணை மட்டும் மழைநீர் நனைத்துவிட்டு வழிந்தோடிவிடுகிறது...’’ என்று சொல்லும் அய்யப்பா இதற்கான தீர்வாக மழைநீர் சேகரிப்பு முறையினை விளக்குகிறார். ‘‘களிமண், மணல், மண், சரளைக்கல், பாறாங்கல் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட குழிகளை ஒரு ஏக்கருக்கு 8 என தோண்டிக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் கடும் மழைவெள்ள நீரும் கூட வீணாகாமல் குழியிலுள்ள சரளைக்கல், மணல் வழியாக கீழேயுள்ள மண்ணைச் சென்றடைந்து மொத்த நிலத்தையும் பொன் விளையும் பூமியாக்கும். இதில் மழைநீர் ஏதேனும் ஒரு குழியில் இறங்கிவிடுவதால் நீர் தேவையின்றி வீணாகாது...’’ என்கிறார். மழைநீர் சேகரிப்புக் குழிகளை அமைக்க விரும்பும் விவசாயியின் நிலத்தை நன்குஆய்வு செய்தபின் தேவையான பொருட்களைப் பட்டியலிடும் அய்யப்பா, பட்ஜெட்டைப் பொறுத்து 100க்கும் மேற்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டங்களை வடிவமைத்து தருகிறார். 

‘‘மழைநீர் கிடைப்பது சுற்றுச்சூழலைப் பொறுத்ததுதான். ஆனால் கிடைக்கும் 1 இன்ச் மழையையும் முறையாகச் சேகரித்தால் இந்தியாவில் தண்ணீர் பிரச்னையே இருக்காது. எளிய நீர் சேகரிப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் 2050ம் ஆண்டு நீர்வளம் நிறைந்த தற்சார்பு நாடாக இந்தியா நிமிர்ந்து நிற்கும்!’’ என பூரிப்பாகிறார்.               

தண்ணீர் டாக்டரின் கதை!

2014ம் ஆண்டு ஆந்திராவிலுள்ள சிலாமாத்தூர் என்ற வறட்சிப் பகுதியில் தன் நண்பர்களோடு இணைந்து 84 ஏக்கர் தரிசு நிலத்தை வாங்கினார் அய்யப்பா மசாகி. ‘ஒரே ஆண்டில் நீர்வளமான பகுதியாக இதை மாற்றிக்காட்டு’ என்பது தோழர்களின் சவால். 25,000 நீர் சேகரிப்பு குழிகளையும் நான்கு ஏரிகளையும் அமைத்து பொன்விளையும் பூமியாக அதை மாற்றி சவாலில் அய்யப்பா வென்றார்.

ஐந்து சிறு கிணறுகள் மூலம் தேவைக்கு நீரெடுத்து பயன்படுத்தியவர், ஏரியின் மேல்மண்ணை எடுத்து நிலத்தின் ஒரு பகுதியில் 60% அடர்த்தியான மரங்களை வனமாக வளர்த்தார். 40% பழமரங்கள், கூடவே தானியங்கள், காய்கறிகளும் விளைவித்து வருவாயைப் பெருக்கினார்.

அடுத்து பால் பண்ணை அமைத்து முழுமையான தற்சார்பு இயற்கைப் பண்ணையாக மாற்றவிருக்கிறார். மாநிலத்தில் 4,200 இடங்களில் நீர் சேகரிப்பு திட்டங்கள், 600 ஏரிகள், 11 மாநிலங்களுக்கான சூழல் பாதுகாப்பு திட்டங்கள் தீட்டி லிம்கா சாதனையிலும் (2012) இடம்பிடித்திருக்கிறார்.