இனி தற்கொலை குற்றமல்ல!



-ச.அன்பரசு

கடந்த திங்களன்று நாடாளுமன்றத்தில் மனநல மசோதாவை தாக்கல் செய்து, தற்கொலை குற்றமல்ல என்று இந்திய அரசு கூறியிருப்பது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. முந்தைய சட்டப்பிரிவு 309 படி தற்கொலைக்கு முயற்சிப்பவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை உண்டு. 2015ம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 623.

அதே ஆண்டு உலகளவில் தற்கொலை மரணங்கள் 8 லட்சம். அதாவது 40 நொடிகளுக்கு ஒரு தற்கொலை! தண்டனையை விட தற்கொலைக்கான சிகிச்சை அவசியம் என்பதை இம்மசோதா முன்மொழிந்துள்ளது. குறைந்த விலையில் தரமான மனநல சிகிச்சைகள், காப்பகங்கள், வறுமையிலுள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை, மனநல சிகிச்சை, மருந்துகளை இலவசமாக வழங்குவது ஆகியவை இம்மசோதாவின் முக்கிய அம்சங்கள்.

இந்திய அரசின் காலத்திற்கேற்ற இசைவான இப்புரிதலை பலர் வரவேற்கிறார்கள். தற்கொலை குற்றமல்ல என கனடா, ஜெர்மனி, எஸ்டோனியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.