Love 2500 Km!



-த.சக்திவேல்

‘‘என் வாழ்க்கையில் விதவிதமான மனிதர்களைச் சந்தித்து விட்டேன். ஆனால், இந்தியர்களைப்போல அன்பானவர்கள் இந்த உலகிலேயே இல்லை. முன்பின் அறிமுகமில்லாத என்னை தங்கள் வீட்டுக்கு அழைத்து உணவளிக்கிறார்கள். குடும்பத்தில் ஒருவனாக பார்க்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் எனக்குத் துணையாக பல கிலோமீட்டர்கள் நடக்கிறார்கள்.

அவர்களிடம் பழக மொழி ஒரு தடையாகவே இல்லை...’’ என்று அன்பின் மொழியைப் பேசுகின்ற பாட்ரிக், ஆதரவற்ற தெருக் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக நிதி திரட்ட 2500 கி.மீ நடைப்பயணம் செய்திருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபரில் ஆரம்பித்த அவரது பயணம் இந்த மாதத்தின் இறுதியில் முடியப்போகிறது. தினமும் ஆறு மணி நேரம் நடந்திருக்கிறார். தனது பயணத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட பலர் ஆதரவுக் கரங்களை நீட்டியிருக்கின்றனர்.

‘‘நிதி திரட்டத்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால், வழியில் சந்தித்த மனிதர்களும், அவர்களின் வாழ்க்கையும் என்னை முற்றிலுமாக மாற்றிவிட்டது. நான் சந்தித்த ஒவ்வொருவரும் எனக்களித்த அன்பை என் இதயத்தில் பற்றிக்கொண்டே நடந்தேன்!’’ உணர்ச்சிப் பெருமிதத்துடன் சொல்கிற பாட்ரிக்கின் வயது ஜஸ்ட் 63 தான்!