நிழல்கள் கரைவதில்லை...



-நா.கதிர்வேலன்

அசோகமித்திரன் மறைந்த செய்தி கேட்ட பிறகு, நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டுத்தான் போயிருக்கிறார், சரிதான் என மனம் ஒப்ப முடியவில்லை. அறுபதாண்டு காலமாக தொடர்ந்து நல்ல முறையில் பாந்தமாக மேலான தரத்தில் எழுதி வந்திருக்கிறார். எவ்வளவு சுட்டாலும் எவ்வளவு கசப்பானதாக இருந்தாலும் பொய்யான உணர்ச்சிகள், மிகைப்படுத்திய வெளிப்பாடுகள், வக்கிரமான சிந்தனைகள் என எதுவும் அவரது எழுத்தில் தலைகாட்டியதில்லை. ஒரு சிறுகதையை, சிறந்த சிறுகதையாகப் பரிணமிக்கச் செய்துவிடும்.

Master touchக்கான strokeகள் அவரிடம் நிறையவே இருந்தன. புனைகதைக்கு லாவகமானதொரு மொழியை கைவசம் வைத்திருந்தார். அதை யாராலும் பிரதி செய்ய முடியாது என்பதே உண்மை. அது புலமை சார்ந்ததும் இல்லை. ஒரு பகுதியின் வட்டார வழக்கும் இல்லை. கலைத்தன்மை கொண்ட புதுமொழியில் எழுதினார்.

மக்கள் சொல்ல விரும்பும் கதைகளையும், சொல்ல விரும்பாத கதைகளையும் அசோகமித்திரன் போன்ற படைப்பாளர்கள் காலம் காலமாகச் சொல்லிக் கொண்டே வருகிறார்கள். இவர்கள்தான் மக்களின் இணைப்புச் சங்கிலிகள். மறைவதற்குக் கொஞ்ச நாட்கள் முன்பு வரைக்கும் எல்லாத் துயர்களையும் முற்றாகக் களைவது சாத்தியமா என்பது பற்றியும், நமது அகத்திலும் புறத்திலும் உள்ள வேதனைகளை எல்லாம் போக்கிவிட முடியுமா எனவும் எழுத்தின் வழியே வினா எழுப்பிக் கொண்டேயிருந்தார்.
 
கதைகளின் வழியாக எளிய, கீழ், நடுத்தர மக்களின் வாழ்க்கையை ஆழ்ந்த தளத்தில், நுட்பமாகத் தேடினார். அதில் துரித மாற்றத்தை ஏற்படுத்தினார். தயவு செய்து இங்கே யாரும் அடுத்த அசோகமித்திரனைத் தேடிவிடக் கூடாது. அவரையும் விஞ்ச வேண்டியதுதான் அடுத்த தலைமுறையின் கடமை. அவரும் இருந்திருந்தால் அதைத்தான் விரும்புவார்.

அவருடைய எழுத்து தனிப்பட்ட கெட்டிக்காரத்தனம் கிடையாது. எனக்கு எல்லாம் தெரியும் என்ற மீசை முறுக்கல் அவரிடம் கிடையாது. ஒரு கதையைத் திடுமென ஒரு கோணத்தில், ஒரு காட்சியில் ஒரே ஒரு வார்த்தையில் தட்டிவிட்டு சும்மா இருந்துவிடுவார். அவரால் நாம் மேம்பட்டதுதான் அவர் நமக்களித்த பலன். அவரிடமிருந்தது எல்லாமே அனுபவ ஊற்று... இடையறாத மெய்மையறிதல்... உயிர்த்தழல்... அறமும், அன்பும், கருணையும் ஊற்றெடுத்த படைப்புகள்.

நல்ல வேளை, அவரது படைப்புத் திறமைக்கு சில மரியாதைகள் கிடைத்திருக்கின்றன. இன்னும் மகத்தான சிலர் போல் அவர் போய்விடவில்லை. கோர வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்ட நெஞ்சக் கசிவெல்லாம் இல்லை. எல்லாவற்றிலும் தேர்ந்து பணியாற்றிவிட்டு வெகுதூரம் பயணம் போயிருக்கிறார் என நம்புவோம். இந்தப் பயணத்திற்கு முடிவே கிடையாது. உண்மையான பயணிக்குத்தான், தான் எங்கு செல்கிறோமென்று தெரியாது. அதுவே அதன் பேரழகு.