ஆன்லைனில் படத்தை ரிலீஸ் செய்யச் சொல்வதும் திருட்டு டிவிடி வெளியிட கட்டளையிடுவதும் தமிழ் தயாரிப்பாளர்கள்தான்!-திலீபன் புகழ்

முதல்முறையாக மனம் திறக்கிறார் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்

‘‘படம் வெளியான சிலமணி நேரங்களிலேயே ஆன்லைன் பைரஸி மூலம் வீட்டிலிருந்தே பார்க்க முடிகிறது. திரையில் பார்க்கும் அனுபவம் வேண்டும் என்பவர்கள் மட்டுமே தியேட்டர் பக்கம் போகிறார்கள். ஒரு புதுப்படத்தை குறைந்தது நான்கு வாரங்களுக்கு தியேட்டரில் ஓட விடவேண்டும் என்ற விதியை கேரளா, கர்நாடகா, ஆந்திரா சினிமா சங்கங்களும், அரசாங்கமும் ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலை தமிழ்நாட்டில் இல்லை. அரசாங்கமும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து மற்ற மொழி சங்கங்கள் போல ஆன்லைன் பைரஸியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே தியேட்டர் வசூலைப் பெருக்க முடியும்...’’ இப்படிச் சொல்பவர் வேறு யாருமல்ல. ‘தமிழ் ராக்கர்ஸ்’, ‘தமிழ் விங்க்ஸ்’, ‘தமிழ் டாக்கீஸ்’ என இருபதுக்கும் மேற்பட்ட சர்வரை இயக்கும் அட்மினில் ஒருவரான வடிவேலு. இதுதான் அவர் பெயரா என்று தெரியாது. ஆனால், இந்தப் பெயருடன்தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இந்தப் பேட்டி எடுக்கப்பட்டதே சுவாரஸ்யமான கதை. தமிழ் சினிமாவின் தூக்கத்தைக் கெடுக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்மின்களின் பேட்டியை எடுப்போம் என்று முடிவு செய்ததும் வலை வீசி பலரைத் தொடர்பு கொண்டோம். ஒருவழியாக உள்வட்டத்தில் இருப்பவரின் எண் கிடைத்தது. அவரைத் தொடர்பு கொண்டோம். ‘கேட்டுவிட்டு சொல்வதாக’ச் சொன்னவர் திடீரென்று ஒருநாள் நம்மை அழைத்தார். ‘ஓர் எண் தரேன். பிசிஓ வழியா பேசுங்க...’ என்றார். அப்படி ‘பிசிஓ’ வழியாக எடுக்கப்பட்ட பேட்டி இது.

ஆன்லைன் பைரஸி எங்கிருந்து இயங்குகிறது..?
சினிமாத்துறைக்குள் இருந்துதான்! ‘ஒரு’ தயாரிப்பாளருக்கு ‘ஒரு’ நடிகர் மேல கோபம். அதன் விளைவுதான் ‘பைரஸி’. ‘சாதாரணமா வந்தவன் இன்னைக்கு இவ்வளவு சம்பாதிக்கறான்... அவனை எதுக்கு வளர விடணும்? அவன் படம் ரிலீசாகறதுக்கு முன்னாடியே நீங்க ஆன்லைன்ல வெளியிடுங்க’ என்று சில தயாரிப்பாளர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு வேண்டுகோள் வைக்கிறார்கள்.

உங்களுக்குத்தான் எங்கள் முகம் தெரியாது. யார் யார் அட்மின்களாக இருக்கிறார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தான் ரகசியம். ஆனால், ‘தமிழ் ராக்கர்ஸ்’, ‘தமிழ் டாக்கீஸ்’ என்றெல்லாம் இயங்கும் எங்கள் ஒவ்வொருவரின் தொடர்பு எண்ணும் அனைத்து தமிழ் சினிமா ஜாம்பவான்களுக்கும் தெரியும்! இதற்குமேல் விரிவாக என்னால் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று. எவ்வளவு முறை எங்களை ப்ளாக் செய்தாலும், எத்தனை முறை எங்கள் சர்வரை முடக்கினாலும் நாங்கள் திரும்பத் திரும்ப வருவோம்! எங்களை திரும்பத் திரும்ப தயாரிப்பாளர்கள் வரவைப்பார்கள்!

கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?
இதற்கும் மேலா?! தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள்தான் ‘எங்களை’ இயக்குகிறார்கள். சொல்லப்போனால் அவர்கள்தான் அட்மின்ஸ். ‘நாங்கள்’ ஊழியர்கள் மட்டுமே! எல்லோரும் எல்லோரையும் கார்னர் செய்ய விரும்புகிறார்கள். தமிழ் சினிமாவில் பொங்கி வழியும் பொறாமை, கோபத்தை நாங்கள் சேனலைஸ் செய்கிறோம். உலகின் எந்த மூலையில் இருந்தும் எங்களால் புதுப் படங்களை அப்லோட் செய்ய முடியும்!

இதன் வழியாக எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்..?
பெரியதாக ஒன்றும் இல்லை. இணையத்திலிருந்து வருகிற பார்வையாளர் தொகை மட்டும்தான் வருமானம். அதுவும் சிறு தொகைதான். இதுபோக ‘தங்கள் எதிரி’யை அழிக்க நினைப்பவர்கள் ‘தங்கத்தை’ எங்களுக்கு கொடுக்கிறார்கள்!

‘சீக்கிரமே உங்களுக்கு முடிவு கட்டுவோம்...’ என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொல்லியிருக்கிறாரே..?
அவர் மட்டுமா? பலரும் அப்படி நெஞ்சை நிமிர்த்தி பேட்டி அளித்திருக்கிறார்கள். ஆனால், ஒருவரும் செயலில் இறங்கி எதுவும் செய்யவில்லை. வெறும் வாய்ச்சவடால்தான். எப்படி பட வெளியீட்டுக்கு ஏரியா பிரிக்கிறார்களோ அப்படி ஆன்லைனிலும் பிரிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. இதை தமிழ் சினிமா தவிர்க்கவோ தள்ளிப் போடவோ முடியாது. ஏனெனில் இணையம்தான் எதிர்காலம். ஒவ்வொரு முறையும் திரைப்பட சங்கங்கள் ஒன்று கூடி நிறைய முடிவுகளை எடுக்கிறார்கள். திட்டங்களைத் தீட்டுகிறார்கள். ஆனால், கூட்டம் முடிந்ததுமே எங்களைத் தொடர்பு கொண்டு, ‘அதெல்லாம் சும்மா பேச்சுக்குதான். ‘அவன்’ படத்தை நீங்க வெளியிடுங்க.

தேவையான ‘தங்கத்’தை நாங்க கொடுக்கறோம்...’ என்பார்கள். இதைத்தான் நாங்கள் ‘சங்கம் செய்யாததைத் தங்கம் செய்யும்!’ என்கிறோம். இவர்களிடம் ஒற்றுமையும், வியாபார விஷயத்தில் நேர்மையும், நியாயமான விலைக்கு படங்களை விற்கும் பழக்கமும் இல்லை. இப்படி எல்லாம் இருக்கும் வரை பைரஸியை இவர்களால் ஒழிக்கவே முடியாது. ஏனெனில் ‘பைரஸி’யை ரத்தம் கொடுத்து வாழ வைப்பதே இவர்கள்தான்!

இதனால் தொழிலாளர்கள்தானே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்..?
உண்மை. நாங்கள் மறுக்கவில்லை. கண்டிப்பாக நாங்கள் செய்வது தவறுதான். ஆன்லைன் பைரஸி இருக்கக் கூடாது என்றுதான் நாங்களும் நினைக்கிறோம்; விரும்புகிறோம். இப்போது ‘சி-3’ படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ‘facebook live’ல் நாங்கள் ரிலீஸ் செய்தோம். இதனால் எங்களுக்கு ஒரு பைசா கூட லாபமில்லை. வியூவர்ஸ் அமவுன்ட் கூட வராது என்று தெரிந்தே செய்தோம். ஏன்? ‘எங்களை அப்படிச் செய்ய வைத்தார்கள்’. யார்? ‘இவர்கள்’தான்!

இது பாதிக்கப்பட்ட அந்த தயாரிப்பாளருக்கும் தெரியும். ஆனாலும் ஏன் அது குறித்து அவர் புகாரோ பேட்டியோ அளிக்கவில்லை? நாங்கள் வெறும் ஸ்லீப்பர் செல்ஸ்தான். எங்களை இயக்குபவர்கள் திரைத்துறையில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் போட்டியில் அப்பாவித் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

மலையாளத் திரையுலகை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மாநிலத்திலும்தானே இணையம் அதிகமாகப் புழங்குகிறது? ஆனால், அங்கு மட்டும் ஏன் தமிழ் சினிமா அளவுக்கு பைரஸி இல்லை..? அவர்கள் ஒன்று கூடி முடிவெடுக்கிறார்கள். நடிகர்கள் பெரிய அளவில் சம்பளம் வாங்குவதில்லை. திரையரங்கக் கட்டணமும் குறைவு. இதற்கு நேர் எதிராகத்தானே தமிழ் சினிமா இயங்குகிறது? எனவேதான் பைரஸியும் இங்கு தலைவிரித்தாடுகிறது.

எத்தனை பேர் இந்த பைரஸியில் பணிபுரிகிறார்கள்..?
துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால், உலகளவில் ஆன்லைன் பைரஸியில் அதிகம் ‘வேலை பார்ப்பவர்கள்’ தென்னிந்திய மொழிகளைச் சேர்ந்தவர்கள்தான்! இதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். இறுதியாக ஒரு கேள்வி. ‘தங்கம்’ தருவதாகச் சொல்கிறீர்களே... அதை எப்படித் தருகிறார்கள்? கட்டியாகவா நகையாகவா? அது தொழில் ரகசியம்!