தோழிகள்!



-மை.பாரதிராஜா

‘துள்ளி விளையாடு’ தீப்தி நம்பியார்

ஹீரோக்களின் காதலுக்கு காமெடியன்கள் உதவுவது போல ஹீரோயின் காதலுக்கு (படத்தில்தான் பாஸ்!) ஐடியாக்கள் அள்ளி வீசுவது... துள்ளி அணைப்பது... எல்லாம் தோழிகளின் வேலை! ஹோம்லி சல்வார் ஹீரோயினுக்கு அருகில் செம மாடர்ன் லுக்கில் அசத்துவார்கள். ஹீரோயின் கனவுகளுடன் திரைத்துறைக்கு வந்து கிடைத்த நண்பி கேரக்டர்களிலும் நல்ல ஸ்கோர் அள்ளும் அசத்தல் கேர்ள்ஸ் சிலரது மினி டேட்டா பார்ப்போமா?

‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் பூஜாவாக வந்த தீப்தியின் பளிச் லுக் ‘துப்பாக்கி’யில் விஜய்யின் தங்கையாக வந்தபோதுதான். நிறைய படங்களில் டயலாக் இல்லாத இடங்களில் கூட மனதில் பதியும்படி நடித்திருப்பார். ‘‘பூர்வீகம் புனே. படிச்சது, வளர்ந்தது அங்கதான். கேரள டி.வி. சேனல்கள்ல நிறைய ஸ்கோர் செய்திருக்கேன். வின்சென்ட் செல்வாவின் ‘துள்ளி விளையாடு’ படத்துல ஹீரோயின். ஆனா, அதுக்குப் பிறகு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கலை. நான் கிளாமரா நடிக்க மாட்டேன்னு சொல்லல. படத்துக்கு சம்பந்தம் இல்லாத கிளாமர்ல நடிக்கிறதைத் தான் வெறுக்கறேன்...’’ என்ற தீப்தி, அக்கட தேசத்தில் இப்போது நடித்து வருகிறார்.   

‘பைரவா’ பர்பி அபர்ணா வினோத்

‘பைரவா’வில் கீர்த்திசுரேஷின் தோழி வைசாலியாக மனத்தில் நின்றவர். கேரளாவின் காகாநாட்டில் பிறந்து வளர்ந்தவர். மலையாளத்தில் அறிமுகமான ‘கோஹினூர்’ இவரது விசிட்டிங் கார்ட். ‘‘விஜய் படத்துல நடித்த பிரமிப்பு இன்னும் குறையலை. ‘‘படத்துல என்னோட பேரன்ட்ஸா நடிச்சவங்களும் மல்லுவுட் ஸ்டார்ஸ்தான். ஸோ, ஷூட்டிங்ல மொழிப் பிரச்னை வரலை. ஆனாலும் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டேன். ஹோம்லி ரோல்ஸ் நிறைய பண்ணணும்...’’ என விரும்பும் அபர்ணாவுக்கு ‘பைரவா’வில் விஜய்யுடன் காம்பினேஷன் சீன் இல்லாததில் அன்லிமிட்டட் வருத்தம்!

I’m a happy person தன்யா பாலகிருஷ்ணா

‘ஏழாம் அறிவு’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு நண்பி. ‘ராஜா ராணி’யில் நயன்தாராவின் கல்லூரித் தோழி. ‘நீதானே என் பொன்வசந்தமி’ல் சமந்தாவின் ஃப்ரெண்ட். தெலுங்கில் இரண்டு டஜன் படங்களில் நடித்துவிட்டார். தெலுங்கில் கீர்த்தி சுரேஷுடன் நடித்த ‘நேனு ஷைலஜா’ சமீபத்திய ஹிட். ‘‘சின்ன வயசுல இருந்தே தியேட்டர் ஆர்ட்ஸ்ல ஆர்வம். சொந்த ஊர் பெங்களூர்.

ஸ்கூல் படிக்கும்போது நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். அப்புறம் நிறைய தியேட்டர் ஒர்க்‌ஷாப்ஸ் பண்ணியிருக்கேன். காலேஜ் படிக்கும் போது மாடலிங் செய்திருக்கேன். விளம்பரப் படங்கள்ல நடிச்சிருக்கேன். அந்த டைம்லதான் முருகதாஸ் சாரோட ‘ஏழாம் அறிவு’ சான்ஸ் வந்தது. தெலுங்கில் நான் நடிச்ச ‘சீதம்மா வகிட்லு மல்லி செட்டு’ நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. சினிமா மேல உள்ள passionனால எல்லா கேரக்டரும் பண்றேன். நான் ரொம்ப சிம்பிள். ஹேப்பி பர்சன். எனக்குனு சின்ன நட்பு வட்டம் இருக்கு. மத்தபடி தனிமை ரொம்ப பிடிக்கும்!’’ என்கிறார் தன்யா கூலாக!

பொக்கிஷப் பொண்ணு! மிஷா கோஷல்

‘‘இவங்க ஹீரோயின் ஃப்ரெண்ட் தானே..?’’ என மிஷாவைப் பார்த்ததும் சொல்லிவிடலாம். சேரனின் ‘பொக்கிஷம்’ படத்தில் அறிமுகமான மிஷா, தமிழில் பரிச்சயமான முகம். ‘வடகறி’யில் சுவாதியின் ஃப்ரெண்ட். ‘ராஜாராணி’யில் நயன்தாராவின் ஆபீஸ் தோழி. ‘‘ஸ்கூல் படிக்கும்போது நான் boy cut பண்ணியிருப்பேன். நான் நடிகையாவேன்னு என் ஃப்ரெண்ட்ஸுங்க யாரும் நினைச்சதில்லை.

சேரன் சாரோட ‘பொக்கிஷம்’ல அழகான கேரக்டர் பண்ணியிருக்கேன். ‘உன்னோடு கா’வில் பெரிய ரோல், ‘விசாரணை’க்குப் பிறகு வெற்றிமாறன் தயாரிப்புல இப்ப ‘லென்ஸ்’ போய்க்கிட்டு இருக்கு. நல்ல அழுத்தமான கதாபாத்திரங்கள்ல நடிக்க விரும்பறேன்...’’ என்கிறார் மிஷா.

மிஸ் கோவை பூஜா ராமச்சந்திரன்

பெங்களூரில் பிறந்து வளர்ந்த பொண்ணு. ‘மிஸ் கோவை’, ‘மிஸ் கேரளா’ ரன்னர் அப் என பியூட்டி குயின் பட்டங்கள் கொடுத்த பரிசு, டி.வி.காம்பியர். அங்கிருந்து மலையாளப் பட என்ட்ரி. ‘காதலில் சொதப்புவது எப்படி’ தமிழில் முதல் அறிமுகம். ‘நண்பன்’, ‘பீட்சா’, ‘காஞ்சனா 2’, ‘நண்பேன்டா’ என பூஜா தமிழில் நடித்த படங்களின் லிஸ்ட் கொஞ்சம் நீளும்.

‘‘எங்க அப்பா ஆர்மி ஆபீஸர். ஸோ, சின்ன வயசுலேயே நான் ஜம்மு காஷ்மீர் உட்பட இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன். காலேஜ்ல மூணாவது வருஷம் படிக்கும்போதே மாடலிங், விஜேனு கேரியர் ஆரம்பிச்சிட்டேன். ‘காதலில் சொதப்புவது எப்படி’ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகத்தான் அறிமுகமானேன். அப்புறம் ஃப்ரெண்ட், சப்போர்ட்டிங் ரோல்னு நிறைய வந்தாலும் தேர்ந்தெடுத்துதான் நடிக்கிறேன்...’’ எனச் சொல்லும் பூஜா, டோலிவுட்டிலும் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார்.