விவசாய பிரச்னைகளை நிச்சயம் ஐசிடி தீர்க்கும்!
-பேராச்சி கண்ணன்
நம்பிக்கையுடன் சொல்கிறார் ஐடி இளைஞர்
‘‘இப்பவரை இந்திய விவசாயிகளுக்கு ஒரு விளைபொருளை எவ்வளவு பயிடணும்... அதுக்கு நல்ல விலை கிடைக்குமாங்கிற தகவல் துளியும் தெரியாது. அதனாலதான் ஒரே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒரே விளைபொருளை அதிகமா உற்பத்தி பண்ணிட்டு விற்க முடியாம நஷ்டப்படுறாங்க. இது ஒரு பக்கம்னா இன்னொருபக்கம் உற்பத்தி குறையறதால விலையேறி நுகர்வோர்கள் கஷ்டப்படறாங்க.
 அப்படியொரு பிரச்னை இனி வரக்கூடாதுனுதான் இந்தத் தொழில்நுட்பத் திட்டத்தை பதினைஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி உருவாக்கினோம். ஆனா, இப்ப வரை இதை நடைமுறைப்படுத்த முடியலை. போராடிட்டு இருக்கோம்...’’ வருத்தமும் வேதனையுமாக வெடிக்கிறது திருச்செல்வத்தின் குரல்.
தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைப் பயன்படுத்தி விவசாயத்திற்காகவும், விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகவும் ஒரு முன்மாதிரி இணையத் திட்டத்தை உருவாக்கி இருக்கும் ஐடி இளைஞர் இவர். ‘‘விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்புனு மார்தட்டுறோம். ஆனா, தினம் தினம் விவசாயிகள் தற்கொலை செய்துட்டு இருக்காங்க.
 உணவுப் பொருட்கள் விலை ஏறிட்டு இருக்கு. இதைப் பத்தி ஆதங்கமும், கோபமும் காட்டறோமே தவிர தீர்வு குறித்து ஆராயறதில்லை. விவசாயிகளுக்கு வழிகாட்ட சரியான ஆட்களும் இல்ல. எங்க ஐ.சி.டி. திட்டம் நூறு சதவீதம் அவங்களுக்கு தீர்வளிக்கும்...’’ என்கிற திருச்செல்வம் இந்தத் திட்டத்திற்காக தனது ஐடி வேலையை உதறிவிட்டு முழு மூச்சாக செயல்பட்டு வருகிறார்.
‘‘சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பக்கத்துல ஆலம்பட்டு கிராமம். 1996ம் வருஷம் மதுரைப் பல்கலைக்கழகத்துல எம்சிஏ முடிச்சேன். நான், வெங்கடேஷ்குமார், உத்தம்குமார், ஜெயகுமார், விஜய்னு அஞ்சு பேரும் ஒரே சிந்தனை கொண்ட நண்பர்கள். சென்னைல வேலை பார்த்தப்ப, இன்டர்நெட் தொழில்நுட்பத்தின் ஆற்றலை உணர்ந்து, getbusticket.comனு ஒரு வெப்சைட்டை உருவாக்கினோம்.
 முதன்முதலா ஆன்லைன்ல பஸ் டிக்கெட் எடுக்கற முறையை உருவாக்கினது நாங்கதான்னு நினைக்கிறேன். சில காரணங்களால அதை தொடர்ந்து நடத்த முடியலை. இந்த நேரத்துல ஆந்திராவுல விலை வீழ்ச்சி காரணமா விவசாயிகள் தக்காளியை ரோட்டுல கொட்டி போராட்டம் பண்ணினதை பேப்பர்ல படிச்சேன். கஷ்டப்பட்டு நாலஞ்சு மாசமா விளைவிச்ச தக்காளியை, கிலோ 50 பைசானு கொடுக்க யாருக்குதான் மனசு வரும்? இதுக்கு ஏதாவது செய்ய முடியுமானு யோசிச்சோம்.
எங்க துறையின் அடிப்படையே பகுத்தாராய்தல்தான். அப்படி அலசினதுல கண்ட அடிப்படை உண்மை, ‘தேவைக்கு அதிகமா உற்பத்தி செய்தல்’னு புரிஞ்சது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயப் பிரச்னைக்கு தீர்வு தர முடியும்னு நம்பினோம். அப்படிதான் எங்க ஐ.சி.டி. புராஜெக்ட் உருவாச்சு. ஒரு தக்காளியைப் பத்தின செய்தி எங்க ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதா மாத்துச்சு. விவசாயம் சார்ந்த பல்துறை வல்லுநர்களோடு ஆலோசித்து நிலையான, எளிதில் விரிவாக்கம் செய்யக் கூடிய ஒரு மாடலை உருவாக்கினோம். இந்தத் திட்டத்தை அரசும் தனியாரும் சேர்ந்தால்தான் சிறப்பா செய்ய முடியும். அதற்கு காலதாமதம் ஆகலாம். அதனால, முழு நேர வேலையா இந்தத் திட்டத்தை நான் ஏத்துக்கிட்டேன். மத்தவங்க வேலைக்கு போய் எனக்கு பணம் அனுப்பணும்னு பேசினோம்.
கிட்டத்தட்ட 15 வருஷங்களா என் வாழ்க்கை இப்படிதான் ஓடிக்கிட்டு இருக்கு...’’ என்ற திருச்செல்வம், இந்த ஐ.சி.டி திட்டம் பற்றி விவரித்தார். ‘‘தேவைக்கேற்ப உற்பத்தி பண்றதுதான் இந்தத் திட்டத்தோட முதல் குறிக்கோள். இதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் அரசுடன் இணைந்து தனியார் தகவல் செயல் மையம் செயல்படும்.
இதுல இன்டர்நெட் வசதியோடு ஒரு கம்ப்யூட்டர், அதை ஆபரேட் செய்ய ஒரு கணினி பட்டதாரி, மையத்தை கவனிக்க பள்ளிக் கல்வி முடித்த உள்ளூர் இளைஞர் ஒருவர்னு ரெண்டு பேர் கொண்ட டீம் இருக்கும். இவங்ககிட்ட வேளாண்மை சார்ந்த துல்லியமான சமீபத்திய தகவல்கள், அரசின் சிறப்புத் திட்டங்கள், மானிய விவரங்கள், தான் பயிரிட விரும்பும் பயிர் எவ்வளவு ஏக்கர்களில் ஏற்கெனவே பயிரிடப்பட்டிருக்கிறது என்கிற விபரம், தனது நிலத்தில் அதிகபட்ச உற்பத்தி கிடைப்பதற்கான வழிகள், நோய் மற்றும் பூச்சி தடுப்பு பரிந்துரைகள்னு எல்லாத்தையும் உள்ளூர் விவசாயிகள் பெறலாம்.
அப்புறம், விதை, உரம், பூச்சிகொல்லி போன்ற இடுபொருள்களை ஒப்பீடு செய்தும் தேர்ந்தெடுக்கலாம். அதற்கான பணத்தை மையத்துல கட்டி சொந்த இடத்துலயே பெற்றுக் கொள்ளலாம். அடுத்து, ஊரில் வேலை ஆட்கள், எந்திரங்கள் கிடைக்கலைன்னா, அருகிலுள்ள இடங்களில் இருந்து ஒப்பந்தம் வழியா வரவழைக்கும் வசதியும் இதிலிருக்கு.
குறிப்பா, அறுவடைக்கு முன்பாகவே சந்தை விலை விபரங்களைத் தெரிஞ்சு, நேரடியாக கொள்முதல் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் விலை நிர்ணயமும் செய்துக்கலாம். மொத்தத்துல ஒரு விவசாயி தனது தேவைகளை எளிதா பூர்த்தி செஞ்சுக்கலாம். இதுக்கு ‘it-rural மாதிரி’னு பெயர் வச்சிருக்கோம்...’’ என்கிறார் உறுதிபட!
சரி, தமிழக அரசிடம் இந்தத் திட்டம் குறித்து பேசினீர்களா என்று கேட்டோம். ‘‘ஆரம்பத்துல, தமிழ்நாடு அரசுகிட்ட இந்தத் திட்டத்தைக் கொண்டு போனோம். சிறப்பா போயிட்டு இருந்த நேரம் 2001ல தேர்தல் வந்துச்சு. இதனால திட்டம் கவனம் பெறலை. இப்ப வரை முயற்சி பண்ணிட்டே இருக்கோம். இதுக்கிடைல 2003ம் வருஷம் என் நண்பர்கள்ல ஒருத்தர் ஹைதராபாத்துல வேலைக்குப் போனார்.
அப்ப அங்க முதல்வரா இருந்த சந்திரபாபு நாயுடு ஐடி வழியா நிறைய பணிகளைச் செய்திட்டு இருந்ததைக் குறிப்பிட்டார். அங்க போய் பேசினோம். அந்த நேரத்துல ஆந்திரால தேர்தல் வந்துடுச்சு. இன்னொரு நண்பர் மூலமா ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியைச் சந்திச்சோம். அவர், தேர்தல்ல ஜெயிச்சா நிச்சயம் இந்தத் திட்டத்தைக் கொண்டு வரலாம்னு வாக்குறுதி தந்தார்.
அவர் வெற்றி பெற்றவுடன், கடப்பா தொகுதிக்குள்ள புலிவெந்தலா ஏரியாவுல மட்டும் முப்பது கிராமங்கள்ல பரிசோதனை முயற்சியா இந்தத் திட்டத்தை செயல்படுத்துற வாய்ப்பு கிடைச்சது. 2004ல இருந்து 2006 கடைசி வரை ரெண்டரை வருஷம் சிறப்பா பண்ணினோம். இந்தத் திட்டத்தின் அனைத்து குறிக்கோள்களும் விவசாயிகளோட ஒத்துழைப்போட வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுச்சு.
முதல் முறையா சாத்துக்குடி, மாதுளை பழங்களை விவசாயிகளிடமிருந்து நேரடியா சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செஞ்சோம். இதனால, நிறைய விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் பிடிச்சுப் போச்சு. மத்திய, மாநில அரசின் உயர்மட்டக் கூட்டுக்குழுக்களும் இந்தத் திட்டம் இந்திய விவசாயத்துறையில் ஒரு புது பரிமாணத்தை ஏற்படுத்தும்னு பாராட்டி விரிவுபடுத்த அனுமதி வழங்கினாங்க.
மாநிலம் முழுவதும் கொண்டு போற நேரத்துல நிறைய தடங்கல்கள். இதுக்கிடைல 2009ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆரும் விமான விபத்துல மறைஞ்சிட்டார். அப்படியே இந்தத் திட்டமும் முடங்கிப் போச்சு. அதுக்கப்புறம், நிறைய பேசிப் பார்த்துட்டோம். எதுவும் நடக்கலை...’’ என்கிறார் வருத்தம் பொங்க.
‘‘ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு இப்ப இளைஞர்களும், மாணவர்களும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் நிறைய பண்ணணும்னு நினைக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உணவுத்தரம் பத்தின விழிப்புணர்வும் மக்கள்கிட்ட அதிகரிச்சிட்டு வருது. இந்த நேரத்துல விவசாயிகளுக்கு உதவற இந்தத் திட்டத்தையும் அரசின் கவனத்துக்கு கொண்டு போக முயற்சி செய்யறோம். இதுக்கு மட்டும் தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தா... நிச்சயம் விவசாயிகளின் வாழ்க்கை மேம்படும். தமிழகமும் விவசாயத்துல தன்னிறைவு பெற்று இந்தியாவுக்கே முன்னுதாரண மாநிலமா மாறிடும்...’’ நம்பிக்கையோடு சொல்கிறார் திருச்செல்வம்.
படங்கள்: சாமி
|