விஜயனின் வில்கே.என்.சிவராமன் - 20

‘‘மாஸ்டர்...’’ அலறிய ஆதியின் தோளை இறுகப் பற்றினார் மாஸ்டர். ‘‘பொறு...’’ ‘‘இதுக்கும் மேலயா? சித்திரக்குள்ளர்கள் தூக்கிட்டு போறது யாரையோ இல்ல. நம்ம கார்க்கோடகரை...’’ சொன்னவன் பதிலை எதிர்பார்க்காமல் காரை விட்டு இறங்கினான். ஹாபிட்ஸ்களை பின்தொடர்ந்து ஓட ஆரம்பித்தான்.

‘‘ஆதி நில்லு...’’ இறங்கிய படியே கத்தினார் மாஸ்டர். ‘‘அவங்களைப் பிடிக்காத. எங்க தூக்கிட்டு போறாங்கனு மட்டும் பாரு...’’ மேற்கு வாசலில் நடமாடிக் கொண்டிருந்த பக்தர்கள் அவரை விநோதமாக பார்த்தார்கள். ‘யாரைப் பிடிக்க வேண்டாம்னு சொல்றாரு..?’ ஒருவரையொருவர் பார்த்தபடியே தோளைக் குலுக்கினார்கள்.

ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டு தங்கள் வழியைப் பார்த்தபடி நடந்தார்கள். ஆதி புரிந்துகொண்டான். மாஸ்டர் சொன்னதை மட்டுமல்ல. நிகழ்ந்து வரும் விபரீதத்தையும். சித்திரக்குள்ளர்கள் மட்டுமில்லை... அவர்கள் கயிற்றினால் இறுகக் கட்டி சுமந்து செல்லும் கார்க்கோடகரும் அங்கிருந்த பக்தர்களின் கண்களுக்கு தெரியவில்லை.

இல்லாவிட்டால் இந்நேரம் சத்தம் போட்டு தடுத்து நிறுத்தியிருப்பார்களே... அப்படியானால் எதார்த்தமான உலகத்துக்குள்ளேயே மாயா உலகம் இயங்குகிறதா? அப்படித்தான் இருக்க வேண்டும். சித்திரக்குள்ளர்களைப் பிடிக்க வேண்டாம் என்று மாஸ்டர் உத்தரவிட்டதற்குப் பின்னால் நிச்சயம் வலுவான காரணம் இருக்கும்.

நம்மை விட பலசாலியாக அல்லது மாய வித்தை அறிந்தவர்களாக அவர்கள் இருக்கலாம். அவர்களைப் பிடிக்கப் போய் நாம் சாம்பலாகலாம். எல்லாமே ‘லாம்’தான். அறிய வரும்போது உண்மையான காரணத்தை அறியலாம். அதற்காக அதுவரை சும்மா இருக்க முடியாது. சித்திரக்குள்ளர்கள் எங்கு செல்கிறார்கள்? ஏன் கார்க்கோடகரை சிறைப் பிடித்திருக்கிறார்கள்? முக்கியமாக இறந்துவிட்ட கார்க்கோடகர் எப்படி உயிருடன் வந்தார்..? இதற்கான பதிலை கண்டு பிடிக்க வேண்டும்.

அதிகம் நெருங்காமல் அதே நேரம் சித்திரக்குள்ளர்கள் பார்வையை விட்டு விலகாமலும் ஆதி பார்த்துக் கொண்டேபின்தொடர்ந்தான். பொட்டில் அறைவது போல் ஓர் உண்மை உறைத்தது. எப்படி பக்தர்களின் கண்களுக்கு சித்திரக்குள்ளர்கள் தெரியவில்லையோ அப்படி சித்திரக்குள்ளர்களுக்கும் பக்தர்கள் தெரியவில்லை. அவரவர் உலகில் அவரவர்கள் சர்வசாதாரணமாக நடமாடுகிறார்கள்.

இரு உலகமும் ஒருசேர பார்வையில் படும் நாம்தான் எங்கே ஒருவருக்கொருவர் மோதி விடுவார்களோ என பயப்படுகிறோம்... எண்ணியபடியே வந்த ஆதி யார் மீதோ மோதினான். ‘‘சாரி பாஸ்...’’ சொன்னவன் அப்படியே சில நொடிகள் நின்றான். காரணம் விழுப்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் யார் மீது மோதினானோ அதே உருவத்தின் மீது இப்பொழுதும் அதேமாதிரி  மோதி இருக்கிறான். தோளை இடித்திருக்கிறான்.

அப்படியானால் இது தெற்கு வாசல். யார் இவன்? நம்மைப் போலவே சித்திரக்குள்ளர்கள் இவனுக்கும் இவனுடன் ஒட்டி நிற்கும் பெண்ணுக்கும் தெரிகிறார்களா? நரம்பை சுண்டி விட்டதுபோல் உடல் அதிர்ந்தது. தலையை உலுக்கிவிட்டு சித்திரக்குள்ளர்களைப் பின் தொடர்ந்து நடந்தான். வேகமாக கால்களை வீசினான். ஓடினான். ‘‘கிருஷ்...’’ ‘‘ம்...’’ ‘‘அவன் யாரு? ஏன் நம்மைப் பார்த்ததும் அவன் முகம் மாறுது?’’

‘‘நோ ஐடியா ஐஸ்... ஆனா, அவனை எங்கயோ பார்த்திருக்கேன். எங்கனு சட்டுனு நினைவுக்கு வரலை. பட், இப்ப விஷயம் அதில்லை. ஹாபிட்ஸ் அவன் கண்ணுக்கும் தெரியறாங்க! அவங்களோட சேர்ந்து ஓடறான். தட்ஸ் த பாயிண்ட்!’’ ‘‘இப்ப என்னடா செய்யறது?’’ ‘‘லெட்ஸ் ஃபாலோ...’’ ஐஸ்வர்யாவின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட கிருஷ்ணனின் பார்வை தன் முன்னால் ஓடிக்கொண்டிருந்
தவனின் முதுகை விட்டு விலகவேயில்லை.

ராஜகோபுரத்தைக் கடந்து தார் ரோட்டை அடைந்தவர்கள் அதன் பிறகு ஓட ஆரம்பித்தார்கள். காரணம் ஹாபிட்ஸ்களின் வேகம். ‘‘மூன்றடிதான். ஆனா, முப்பதடிக்கு பாயறாங்களே...’’ முணுமுணுத்த ஐஸ்வர்யாவுக்கு மூச்சு வாங்கியது. ‘‘முடியலடா...’’ ‘‘இன்னும் கொஞ்ச தூரம்தான். அங்க பாரு வலப்பக்கம் திரும்பறாங்க...’’ நிமிர்ந்து பார்த்த ஐஸ்வர்யா சட்டென்று அவன் கைகளைப் பிடித்தாள்.

‘‘என்ன ஐஸ்...’’ ‘‘சம்திங் ஃபிஷ்ஷி...’’ ‘‘வாட்?’’ ‘‘அங்க பாரு...’’ பார்த்தான். ஹாபிட்ஸும் தொடர்ந்து ஆதியும் பாழடைந்த கோயில் ஒன்றினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். ‘‘ஓல்ட் டெம்பிள். அதுல என்ன விசேஷம்?’’ ‘‘முட்டாள். ஆலமரத்தோட வேர்ல கோயிலோட சுவர்கள் இருக்கா?’’ ‘‘ஆமா...’’ ‘‘அந்த இடத்தைச் சுத்தி காவலுக்கு என்ன இருக்குனு பாரு...’’ ‘‘ஒண்ணும் தெரியலையே...’’ ‘‘உம் மூஞ்சி.

மேக்னடிக் வேவ்ஸால மூடப்பட்டிருக்கு!’’ அதிர்ந்தவன் தன் கூலிங் க்ளாஸை எடுத்து மாட்டினான். டெக்னோ கண்ணாடி துல்லியமாக மின்காந்த அலைவரிசைகளைக் காண்பித்தது. ‘‘மேக்னடிக் வேவ்ஸ் மட்டுமில்ல ஐஸ்...’’ ‘‘தென்?’’ ‘‘இட்ஸ் க்ரிப்டோ ப்ளேஸ்...’’ ‘‘...’’ ‘‘புரியலை? codeஐ பிரேக் பண்ணாம அந்த ஏரியாவுக்குள்ள நுழைய முடியாது...’’

கிருஷ்ணன் சொல்லி முடிக்கவும் சித்திரக்குள்ளர்களைப் பின்தொடர்ந்து ஓடிய ஆதி - மின்சாரம் தாக்கப்பட்டது போல் பின்னோக்கி எகிறி விழவும் சரியாக இருந்தது. அ்தை முழுமையாகப் பார்த்துவிட்டு புன்னகைத்தபடியே அந்த பாழடைந்த கோயிலுக்குள் மறைந்தான் ஒரு சித்திரக்குள்ளன் அலைஸ் ஹாபிட்!

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்

பெண்களை நோக்கி கற்கள்!

நார்த் கரோலினாவில் உள்ள ஆஷ்வில்லே. அங்கிருக்கும் ஸ்பைசர் க்ரீன் ஜுவல்லரி கடை சற்றே உணர்ச்சிவசப்பட்டு ஒரு காரியத்தைச் செய்திருக்கிறது. ‘சில சமயங்களில் பெண்களை நோக்கி கற்களை வீசுவது ஓகேதான்!’ என எழுதி பேனரை ரோட்டில் வைத்திருக்கிறது. அவ்வளவுதான். இது பெண்களுக்கு எதிரானது என்று சொல்லி மறுநாள் ஊரே கடை முன் திரண்டுவிட்டது. பிறகென்ன... ‘மன்னிச்சூ’ என கடைக்காரர் மக்களின் காலில் விழுந்துவிட்டார்!

அட்டகத்திக்கு 2 ஆயிரம் டாலர்!

சேஸிங்குக்கு தயாராக இருக்கிறார்கள் வர்ஜீனியாவின் வின்செஸ்டர் போலீஸ். பின்னே ‘பேட்மேன்’ ஹாலிவுட் பட வில்லன் ஜோக்கர், கத்தியோடு ரோட்டில் சுற்றுகிறார் என பலரும் மிஸ்டுகால் கொடுத்தால்..? ஒருவழியாக அந்த ஜோக்கரைப் பிடித்து இரண்டாயிரம் டாலர்கள் அபராதம் விதித்திருக்கிறார்கள். ‘சும்மா காமெடிக்கு சாமி. இது அட்டகத்தி...’ என ஜோக்கர் அலறியதை ஒருவரும் பொருட்படுத்தவில்லை.

நடுரோட்டில் ப்ரேக்ஃபாஸ்ட்!

ஃப்ளோரிடாவில் ப்ரூனெல் பார்க்வே சாலையில் ஓய்வாக பான்கேக் சாப்பிட்ட கியரான் தாமஸை போலீஸ் அரஸ்ட் செய்துவிட்டது. ஏனாம்? நடுரோட்டில் சேர் போட்டு பான் கேக் சாப்பிட்டால்..? அநேகமாக கியரான் தாமஸ் தனது லன்ச்சை போலீசுடன்தான் சாப்பிடுவார்!

இரு கிராமங்களை மூழ்கடித்த சரக்கு!

வியட்நாமின் ஹோவாவில் போதை தலைக்கேறிய குடிமகன்கள் செய்த வேலையால் 2 கிராமங்கள் (சன்குயின், சுயி பக்) மூழ்கியிருக்கின்றன. அத்துடன் 8 லட்ச ரூபாயும் நஷ்டம். அப்படி என்ன செய்தார்கள்? சரக்குக்கு மிக்ஸ் செய்ய நீர் வேண்டுமல்லவா? அதற்காக அணையின் வால்வை திறந்திருக்கிறார்கள்.

அரை லிட்டர் காற்றின் விலை ரூ.6500!

நம்ப முடிகிறதா..? சுவிட்சர்லாந்தின் பூர்வீகச் சொத்தும் உலகின் மிக அழகான மலையுமான ஆல்ப்ஸ் மலையில் தவழ்ந்து வரும் காற்றை பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். அதுவும் அரை லிட்டர், ஒரு லிட்டர், மூன்று லிட்டர் என்ற கணக்கில். மட்டுமா? “உங்கள் உயிர் காதலிக்கு ஆல்ப்ஸ் காற்றை அன்பளிப்பு செய்யுங்கள்... உங்கள் பிள்ளையின் பிறந்த நாள் ஆல்ப்ஸ் காற்றை சுவாசித்து கொண்டாடட்டும்...’ என்ற ரேஞ்சில் விளம்பரங்கள் தூள் பறக்கின்றன.

‘ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள காற்றைத்தான் பாட்டில்களில் அடைக்கிறோம். காற்றின் தூய்மைக்கு காரண்டி உண்டு...’’ என்று சொல்லும்  தயாரிப்பு நிறுவனம், தேவையான ஆவணங்களையும் பாட்டிலுடன் இணைத்துள்ளது. இதன் மூலம் வரும் வருவாயின் ஒருபகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு தரப் போகிறார்களாம்! ‘இதெல்லாம் தவறு... இயற்கையை இப்படியெல்லாம் விற்கக் கூடாது...’ என மறுபக்கம் சிலர் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்துள்ளனர்.

- சுதந்திரன்