தனுசு லக்னம் - குரு - சந்திரன் சேர்க்கை தரும் யோகங்கள்கிரகங்கள் தரும் யோகங்கள் - 84

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

லக்னாதிபதியும், சுகாதிபதியுமான குருவோடு அஷ்டமாதிபதியான சந்திரன் சேரும்போது திடீர் முடிவுகள் எடுத்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவார்கள். கடல் கடந்து போவதையே தம் வாழ்நாள் கனவாகக் கொள்வார்கள். மிகவும் பெருந்தன்மையாக நடந்துகொள்வார்கள்.

சிறிதளவுகூட தகுதியைக் குறைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆடம்பரமாக வாழ்வதையே பெரும்பாலும் விரும்புவார்கள். தாய் மீது அதீத பாசத்தோடு இருப்பார்கள். ஆனால், சில சூழல்களால் தாயாரை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலையும் வரும். மனிதநேயத்தைப் பாதிக்கும் பக்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்கள். பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பாற்றிக் கொண்டு செல்வீர்கள்.

பெரும்பாலும் பரம்பரைச் சொத்து உள்ளவர்களாகவே இருப்பீர்கள். வசீகரமாகவும், ஈர்ப்புச் சக்தியோடும் வளைய வருவீர்கள். ஆயிரம் பேர் இருந்தாலும் உங்களின் இருப்பு மட்டும் தனித்துத் தெரியுமாறு பார்த்துக் கொள்வீர்கள். தன்னைவிட அதிகாரத்தில் உள்ளவர்களின் மீது தனிக் கவனம் செலுத்துவீர்கள். சந்திரன் தேய்ந்து, வளர்ந்து, மறைந்து என்று பல தன்மைகளைக் கொண்டது.

அதனால் எல்லாவிதமாகவும் உங்கள் வாழ்க்கை மாறுவதால் அனுபவச் சுரங்கமாகத் திகழ்வீர்கள். மேலே குறிப்பிட்டவை பொதுவான பலன்களாகும். ஒவ்வொரு ராசியிலும் இரண்டு கிரகங்களும் சேர்ந்து நிற்கும் பலன்களையும் பார்ப்போமா! தனுசு ராசியான ஒன்றாம் இடமான லக்னத்திலேயே குருவும், எட்டாம் இடத்திற்குரிய சந்திரனும் இருந்தால் தீர்க்கமான கண்களும்,பொலிவான முகமும் பொருந்தியவர்களாக இருப்பார்கள்.

பயணங்களில் மிகுந்த விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். இந்த அமைப்பிலுள்ள குழந்தைகள் ஹைப்பர் ஆக்டிவ் கொண்டவர்களாக விளங்குவார்கள். எட்டுக்குரிய சந்திரன் தனக்கு ஆறாம் வீட்டில் மறைகிறான். இதுவொரு விபரீத ராஜயோகமாகும். ஆனால், அவ்வப்போது படபடப்பு மனோநிலையில் கிடந்துழல்வார்கள். மகர ராசியான இரண்டாம் இடத்தில் இந்த இரு கிரகங்களும் ஒன்றாக இருந்தால், வாக்கு சாதுர்யம் மிகுந்திருக்கும். பேசுகிற பேச்சு அனைத்துமே அனுபவச் சாற்றை பிழிந்தது போலிருக்கும்.

இங்கு குரு நீசமாவதால், சந்திரன் தன் முழுத்திறனோடு செயல்படுவார். பால்ய காலத்தில் அவ்வப்போது கல்வித்தடை இருக்கும். வீண் பேச்சு, அரட்டை, கலாட்டா என்றிருக்கும். வகுப்பில் பின்னிருக்கையில் அமர்பவர்களாக இருப்பார்கள். உயர்கல்வியின் போதுதான் பொறுப்புணர்வோடு செயல்படுவார்கள். கும்ப ராசியான மூன்றாம் இடத்தில் எட்டுக்குரிய சந்திரன் தனக்கு எட்டில் அமர்கிறான்.

நிச்சயம் இது சிறந்த யோகப் பலன்களை அளிக்கும். கடலில் விளையும் முத்துக்கள், ரத்தினச் சேர்க்கைகள் இருக்கும். பெரிய பதவிகள், ஆளடிமை, கீர்த்தி, புகழ், ஆயுள் கெட்டி என்றெல்லாம் சிறந்த பலன்கள் கிடைக்கும். சகோதர வகையில் மிகுந்த அனுகூலம் உண்டு. அவர்களோடு சேர்ந்து ஏதேனும் தொழில் செய்வார்கள். மீன ராசியான நான்காம் இடத்தில் இந்த இரு கிரகங்களும் அமர்ந்திருந்தால், தாயாருக்கு ஏதேனும் உடல்நிலையில் தொந்தரவு இருந்து கொண்டேயிருக்கும்.

இவர்களின் பெயரில் சொந்த வீடு இல்லாமல் இருப்பது நல்லது. தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி இருக்கும். வாகனங்களில் செல்லும்போது குறிப்பிட்ட வேகத்தைத் தாண்டாமலிருப்பது நல்லது. மேஷ ராசியான ஐந்தாம் இடத்தில் குருவும் சந்திரனும் இருந்தால், குழந்தை பாக்கியம் சற்று தாமதமாகக் கிடைக்கும். ஆனால், இவர்களின் உள்ளுணர்வு அசாதாரணமாக இருக்கும். ஏதேனும், கலைகளில் தேர்ச்சி பெறுவார்கள்.

இவர்களின் பிள்ளைகள் திரைத்துறையில் மிளிர்வார்கள். நல்ல பாடகராகவோ, பாடல் எழுதுபவராகவோ, நடிகராகவோ, இயக்குனராகவோ புகழ் பெறுவார்கள். லக்னாதிபதியும் சந்திரனும் சேர்ந்திருப்பதால் சிறந்த ஆடிட்டராகவும், சிற்பக் கலைஞராகவும், கட்டிட, வாகன வடிவமைப்பாளராகவும் விளங்குவார்கள். ரிஷப ராசியான ஆறாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் இணைந்திருந்தால் தீவிரமான சிந்தனை வயப்பட்டிருப்பவர்களாக இருப்பர். அதிகமாக செலவு செய்தபடி இருப்பார்கள். 

ஊதாரி என்று கூட பெயரெடுப்பார்கள். ‘எவ்ளோ நல்லது பண்ணாலும் கெட்ட பேரா கிடைக்குது’ என்று நொந்து கொள்வார்கள். உடம்பின் இடது பாகத்தில் அவ்வப்போது அடிபட்டுக் கொண்டேயிருக்கும். கண் புருவத்தில் சிறு தழும்பு இருக்கும். இவர்கள் கடன் வாங்குவதை பழக்கமாகக் கொண்டால் இறைவனால் கூட காப்பாற்ற முடியாது. சொன்ன சொல்லை எப்படியாவது நிறைவேற்றிக் கொடுப்பார்கள். வலது கண்ணில் தொந்தரவு வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மிதுன ராசியான ஏழாம் இடத்தில் இந்த இரு கிரகங்களும் இணைந்திருப்பின், காதல் திருமணத்திற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. மனைவிக்கு கர்ப்பச் சிதைவு பிரச்னை வந்து சரியாகும். இந்த அமைப்பிலுள்ளோருக்கு திருமணம் அதிக இடைவெளியில் தள்ளிப் போகக்கூடாது. இல்லையெனில் மத்திம வயதில்தான் திருமணமாகும். பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வாழ்க்கைத் துணைவர் வருவார். கலையுணர்வு மிக்கவராக இருப்பார். அதிலும் மரபார்ந்த இசை, நாட்டியம் என்றிருப்பார்.

எட்டாம் வீடான கடகத்தில் குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால் அனுபவ ஞானியாக இருப்பார்கள். தத்துவ ஞானத்தோடு திகழ்வார்கள். இந்திரனைப்போல வாழ்வார்கள். ஏனெனில், குரு இங்கு ஆட்சி அடைகிறார். வெளிநாடுகளுக்குப் பறந்த வண்ணம் இருப்பார்கள். மிகச் சிறந்த ஓவியராக வரும் வாய்ப்பு உண்டு. அடிக்கடி பிரயாணம் செய்தபடி இருப்பார்கள்.

பூர்வ ஜென்மங்களைக் குறித்து நிறைய ஆராய்ச்சி செய்வார்கள். சிம்மமான ஒன்பதாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால் தந்தையை விஞ்சுவார்கள். மனசாட்சிக்கு விரோதமில்லாது நடக்க வேண்டுமென்பதில் உறுதியோடு இருப்பார்கள். பூர்வ புண்ணிய சொத்தை இவர்கள் அனுபவிப்பார்கள். இயல்பாகவே ஏழைகளின் மீதும், வறுமையில் இருப்பவர்களின் மீதும் தயையோடு இருப்பார்கள்.

கன்னி ராசியான பத்தாம் இடத்தில் குருவும், சந்திரனும் இருந்தால் யாரிடமும் கைகட்டி வேலை பார்க்கப் பிடிக்காது. இதனாலேயே வேலையில் ஒரு நிரந்தரத் தன்மை இல்லாமல் இருப்பார்கள். வேலையையும் விட முடியாமல், வேறு வேலைக்கும் முயற்சி செய்யாமல் ஒரு விசித்திரமான மனோநிலையில் இருப்பார்கள். கல்வி நிறுவனங்கள், வங்கி, டுட்டோரியல், கல்லூரிகளில் பேராசிரியர் என்றெல்லாம் வேலை பார்ப்பார்கள்.

ஆனால், எந்த வேலையில் ஈடுபட்டாலும் ஒரு திருப்தியின்மை இருந்து கொண்டேயிருக்கும். எனவே, மத்திம வயதிற்குப் பிறகு சொந்தமாக ஏதேனும் தொழிலைத் தொடங்கி நடத்துவார்கள். துலா ராசியான பதினொன்றாம் இடத்தில் குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால் மூத்த சகோதரர்களால் மிகுந்த நன்மை இருக்கும். அநேக வழியில் வருமானங்கள் வந்தவண்ணம் இருக்கும். ரியல் எஸ்டேட் துறையில் பூமியாக இல்லாமல் வீடுகளாக கட்டிக் கொடுத்து சம்பாதிப்பார்கள்.

சேமிக்கும் குணம் இருக்கும். திடீரென்று செல்வச் செழிப்பு கூடும். பெண்களுக்கான ஃபேன்சி ஸ்டோர், துணிமணிகள் கடைகள் வைத்தால் நல்ல லாபம் அடையலாம். விருச்சிக ராசியான பன்னிரெண்டாமிடத்தில் குருவும் சந்திரனும் இருந்தால் திடீரென்று வளர்ச்சியும் சறுக்கலுமாக இருக்கும். பிழைக்கத் தெரியாத மனுஷன் என்று பெயரெடுப்பார்கள். இவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒரு கூட்டமே இருக்கும். தங்களைவிட பெரியோர்களிடம் நெருக்கமாகப் பழகுவார்கள்.

இலக்கிய ரசனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். சாத்திரங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பார்கள். குருவும் சந்திரனும் சேர்ந்தால் பெரும்பாலும் நற்பலன்களைத்தான் தரும். ஏனெனில், இரண்டுமே ஒன்றுக்கொன்று மிகவும் நட்புக் கிரகங்கள்தான். ஆனாலும், சில இடங்களில் குருபகவான் மறையும்போது எதிர்மறை பலன்களைத் தருவார். அப்போதெல்லாம் பெரியதாக எதுவும் பிரச்னை இல்லாவிடினும் மன உளைச்சலை அதிகப்படுத்துவார்.

எனவே, அதுபோன்ற சமயங்களில் நீங்கள் செல்ல வேண்டிய தலமே கர்நாடகா மாநிலத்திலுள்ள கொல்லூர் ஆகும். இந்தப் பகுதிக்குப் பாத யாத்திரையாக வந்த கோலன் என்கிற மகரிஷி இங்கு ஆசிரமம் அமைத்துத் தங்கியதால் கொல்லாபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் கொல்லூர் ஆனது. . ஆதிசங்கரரால் சக்ரம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தச் சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக ஐதீகம். மூகாம்பிகை கோயிலின் பூஜை முறைகள் அனைத்தையும் ஆதிசங்கரரே அருளினார். கர்நாடகா மாநிலம் மங்களூரிலிருந்து 140 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்