போர்விமானி vs டாக்டர்



A Love Story

-மை.பாரதிராஜா

‘‘‘பையா’வுக்கு அப்புறம் full love story பண்ணியிருக்கேன். முதன்முறையா ரஹ்மான் சார் மியூசிக். வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இசை. பாடல்கள் எல்லாமே ஆல்ரெடி ஹிட்...’’ உற்சாகமாய் வரவேற்கிறார் ஸ்மார்ட் அண்ட் ஸ்லிம் கார்த்தி. ‘‘நான் மணி சாரோட ஒர்க் பண்றது புதுசு இல்ல. ‘நான் நடிகனாகவே ஆகிடலை சார்... இன்னமும் உங்க அசிஸ்டென்ட்தான்’னு அவர்கிட்டேயே சொல்லியிருக்கேன்.

என் கேரியரிலேயே முக்கியமான ஒரு படமா ‘காற்று வெளியிடை’யை கொடுத்திருக்கார். லவ் சீன்ஸைப் பொறுத்தவரை மணி சாரை அடிச்சுக்கவே முடியாது. இந்தப் படமும் அதுக்கு ஓர் உதாரணமா இருக்கும். படப்பிடிப்பு முடிந்ததும், ‘வி.சி. ஸ்டிராங்கா தெரியுறான்’னு அவர்கிட்ட இருந்து ஒரு எஸ்எம்எஸ் வந்தது. ‘விசி’னு சார் குறிப்பிட்டது என் கேரக்டர் பெயரை. இதை நான் அதிகபட்ச பாராட்டா நினைக்கறேன்...’’ நெகிழ்கிறார் கார்த்தி.

மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் - கார்த்தி. காம்பினேஷனே கலக்குதே..?
பின்னே... மணி சாருக்குதான் தேங்க்ஸ் சொல்லணும். ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே நானும், துல்கரும் சேர்ந்து அவரோட படம் பண்ணியிருக்க வேண்டியது. அப்ப நான் ‘தோழா’, ‘காஷ்மோரா’வுல பிசியா இருந்ததால அது தள்ளிப் போயிடுச்சு. போன வருஷ தொடக்கத்துல சார் கூப்பிட்டார். ‘ஃபைட்டர் பைலட்டுக்கும் டாக்டர் பொண்ணுக்கும் இடைல ஒரு லவ் ஸ்டோரி.

பண்ணலாமா?’னு கேட்டார். ‘பண்ணுனு நீங்க சொன்னா நான் பண்ணப்போறேன் சார்’னு சந்தோஷமா அவர்கிட்ட சொன்னேன். ‘எனக்கு இந்த கார்த்தி வேணாம். I want a man. உடனே உன் வெயிட்டை குறை. ஃபிளையிங் கிளாஸ் போ’னு சொன்னார். இதுக்கு முன்னாடி நான் செய்த படங்களுக்கு எல்லாம் ரெஃபரன்ஸ் இருந்தது. ஆனா, போர் விமானி கேரக்டருக்கு எந்த ரெஃபரன்ஸும் கிடைக்கலை. ஸோ, சார் பர்மிஷனோட; அடுத்து வர்றவங்களுக்கு பிற்காலத்துல ரெஃபரன்ஸா இருக்கிறா மாதிரி இந்தப் படத்துல செய்திருக்கேன்!

ஸ்லிம் ஃபிட் பாடி, வித்தவுட் மீசைனு இளமை பொங்குதே..
Credit goes to மணி சார். ‘காஷ்மோரா’வில் வளர்த்த தாடியை எடுத்ததுமே வேற மாதிரி இருந்தேன். மீசையையும் எடுத்துட்டா ரசிகர்கள் ஏத்துப்பாங்களான்னு தயக்கம் இருந்துச்சு. ‘எடுத்துடு. ஷூட்டிங் போறதுக்குதான் டைம் இருக்கே. நல்லா இல்லைன்னா... அப்புறம் வளர்த்துக்கலாம்’னு அவர் சீரியஸாகவே சொன்னார். அவர்கிட்ட அசிஸ்டென்டா இருந்த காலத்துல மீசை இல்லாமதான் இருந்திருக்கேன்.

அதை நினைவுல வைச்சு எடுக்கச் சொல்லியிருப்பார் போல. என்னோட லுக் எல்லாம் சரியான பிறகு, ‘இந்த கேரக்டரை அண்ணனுக்கு கொடுத்திருந்தா கரெக்ட்டா இருந்திருக்குமே’னு தோணுச்சு! பாண்டிச்சேரில ஃபிளையிங் கோர்ஸ் முடிச்சதும், பெங்களூர்ல ஏர்போர்ஸ் மேஜர் ஒருத்தரை சந்திச்சேன். அதுக்குப் பிறகுதான் என் கேரக்டர் மேல இன்னும் பிடிப்பு இறுகுச்சு.

எந்த நேரமும் மரணத்தோட விளிம்புல இருக்கிற போர்வீரர்கள் நிலை பிரமிப்பா இருந்தது. மனதைரியம் இருக்கறவங்களாலதான் fighter pilot ஆக இருக்க முடியும். அப்படி ஒருத்தர் நார்மல் லைஃப்ல எப்படி இருப்பார்? அதுதான் ‘காற்று வெளியிடை’. காஷ்மீர்ல நடக்கற கதை இது. விஷுவல் மியூசிக் ஃபிலிம். ஏ.ஆர்.ரஹ்மான் சார் பிச்சு உதறியிருக்கார்!

ரவிவர்மன் பாலிவுட்ல பிஸியான கேமராமேனாச்சே..?
மணி சார்கிட்ட ஒர்க் பண்ணணும்ங்கறது அவரோட ரொம்ப வருஷத்து கனவு. ஷூட்டிங் போனதும்தான் இந்த விஷயமே தெரிஞ்சது. சார் ஆபீஸுக்கு போய் ‘உங்களோட ஒர்க் பண்ண விரும்புறேன்’னு ரவிவர்மன் கேட்டிருக்கார். ‘காற்று வெளியிடை’க்கு அவர் வந்தது அப்படித்தான். பிரமாதமான ஒரு கிளாஸிக் ஸ்டைல்ல பக்கா விஷுவல் ட்ரீட் கொடுத்திருக்கார்.

‘கார்த்தி... என்னை ஃபாலோ பண்ணிட்டே இருங்க... நான் எப்பவும் உங்க முகத்து எக்ஸ்பிரஷன்லயே இருப்பேன். அப்பதான் கதையை நகர்த்த உதவியா இருக்கும்’னு ஸ்பாட்டுல அடிக்கடி என்கிட்ட சொல்லிட்டே இருப்பார். ஒரு லெங்க்த்தி சீனை வழக்கமா ஒளிப்பதிவு பண்றவங்க பத்து ஷாட் எடுத்தால், இவர் மூணே ஷாட்ல பிரமாதப்படுத்திடுவார்.

ஹீரோயின் அதிதி ராவ் ஹைதரி... ரொம்ப ஃப்ரெஷ்ஷா தெரியறாங்களே..?
கதைப்படி ஹீரோயின், பார்க்க மென்மையா தெரியணும். ஆனா, உள்ளுக்குள்ள ஓர் அழுத்தம் வேணும். இதுக்கு அதிதி சரியான சாய்ஸா தெரிஞ்சாங்க. பாலிவுட்ல நடிக்கிறவங்க. அதனாலயே மணி சார் ஒருவாரம் தமிழ் டிரெயினிங் கொடுத்தார். ஒரு ஷெட்யூலுக்கான டயலாக்கை வாங்கிட்டு போய் மனப்பாடம் பண்ணிட்டு வந்திடுவாங்க.

பேஸிக்கா அதிதி டான்ஸர். பரதம் கத்துக்கிட்டவங்க. பர்ஃபாமென்ஸ்ல பின்னியிருக்காங்க. ஷூட்டிங் ஆரம்பிச்ச முதல் நாள்ல இருந்து பேக்கப் வரை குளிர்... குளிர்தான். நானாவது ஜெர்க்கின், ஜாக்கெட்னு சமாளிச்சேன். ஆனா, அதிதி அந்த குளிர்லயும் நைஸ் சேலை கட்டி நடிச்சிருக்காங்க!

மறக்கமுடியாத சுவாரஸ்யங்கள்..?
லடாக் பக்கம் ஒரு மலையுச்சில ஷூட்டிங். உச்சில ஆக்ஸிஜன்  குறைவா இருக்கும். அதனால இருபது நிமிஷத்துக்கு மேல அங்க யாரையும் மிலிட்டரிக்காரங்க  நிற்க விடமாட்டாங்க. ஆனா, நாங்க நாலுமணி நேரம் அங்கே ஷூட் பண்ணியிருக்கோம்!  லுப்ராவேலினு ஒரு ஏரியா. மலை மேல ஆறு, பள்ளத்தாக்குனு அருமையான இடம். அழகான லொக்கேஷன்ஸ் வெளிநாடுகள்ல மட்டும் இல்லை, நம்ம  நாட்லயும் இருக்குனு ஒவ்வொரு ஃபிரேம்லயும் நிச்சயம் ஃபீல் பண்ணுவோம்.  அப்படி அமேஸிங் பிளேஸஸ்ல ஷூட் பண்ணிட்டு வந்திருக்கோம்...

அடுத்து..?
‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்குற ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தோட ஷூட்டிங் போயிட்டிருக்கு. ‘சிறுத்தை’ல போலீசா நடிச்சப்ப அப்போதைய போலீஸ் அதிகாரியான ஜாங்கிட்டை சந்திச்சேன். அப்ப ஒரு சம்பவம் சொன்னார். அதையே இப்ப படமா செய்வேன்னு நினைச்சுக் கூட பார்க்கலை. வினோத் இந்தக் கதையைச் சொன்னதும், பிடிச்சிருந்தது. உடனே ஷூட்டிங் கிளம்பிட்டோம்.