கொடுங்கையூர்



அறிந்த இடம் அறியாத விஷயம்

-பேராச்சி கண்ணன்

அதிகாலை 6.30 மணி. சென்னை பேசின் பிரிட்ஜைத் தாண்டி டூவீலரில் விரைகிறோம். வழியிலேயே விர்ரென்று பாய்கிறது குப்பை லாரி. அதிலிருந்து வீசுகின்ற துர்நாற்றம் குடலைப் புரட்டுகிறது. ஒரு குப்பை லாரிக்கே போதும் போதும் என்றாகிவிட்டது நமக்கு! ஆனால், தினம் தினம் ஐம்பது, அறுபது லாரிகளில் வந்து கொட்டப்படும் குப்பைகளின் துர்நாற்றத்திற்கு நடுவே மூச்சுவிடும் பரிதாப மக்களின் நிலையை என்னவென்று சொல்வது? இதைவிட, இந்தக் குப்பைகளுக்காகவே காத்திருந்து, இந்தக் குப்பைகளைக் கொண்டாடும் ஆச்சரிய மனிதர்களை எப்படிப் புரிந்து கொள்வது?

இரண்டுக்கும் பதிலாக நிற்கிறது சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான ‘கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு’! சுமார் 85 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்ைனயில், வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைக் கழிவுகளை மாநகராட்சி வண்டிகள் எடுத்துச் செல்லும் காட்சியைப் பார்த்திருப்போம். ஆனால், இந்தக் கழிவுகள் என்னவாகும்? எங்கு கொண்டு செல்லப்படும்? என்பதெல்லாம் பலருக்கும் தெரியாது.

இதில், பெரும்பாலான கழிவுகள் கொட்டப்படும் இடம்தான் இந்தக் ‘கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு’! இதை நம்பி சுமார் ஐந்நூறு குடும்பங்கள் வாழ்கின்றன. ஆனால், அதைவிட சுற்றிலும் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் படும்பாடு சொல்லிமாளாது. மழைக்காலங்களிலும், குப்பைகள் எரியும் போதும் இங்கு மூச்சுவிடுவதே சிரமம். அதனாலேயே, இதை மூடச் சொல்லி நிறைய போராட்டங்கள்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அந்தக் குப்பைக் கிடங்கின் நுழைவு வாயிலில் பொன்னா லான பெயர் பலகை மின்னுகிறது. இருபக்கமும் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு நடுவே இருக்கும் 80 அடி சிமெண்ட் சாலை நம்மை வரவேற்கிறது. சாலையின் ஒரு பக்கத்தில் மட்டுமே லாரிகள் போய் வருகின்றன.

இன்னொரு பக்கத்தின் வழியே வேலைக்கு வேகமாக நடக்கிறார்கள் ஆண்களும், பெண்களும். இவர்கள் தவிர கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித நடமாட்டமேயில்லை. தூரத்தில் ஐந்தாறு நாய்கள் குரைத்தப்படி அலைகின்றன. ‘‘முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்த இடமெல்லாம் புற்செடிகளா இருந்துச்சு. எல்லாமே ஆளுயரத்துக்கு இருக்கும். அந்தப் பக்கம் பெரிய கால்வாய் ஓடும்.

இங்கிருந்த மாடுகளுக்குத் ‘தீனி’ இந்தப் புற்கள்தான். அதைப் பறிக்க மாட்டுவண்டிகள்ல வருவாங்க. அவ்வளவு அழகாக இருந்த இடம் இப்படி ஆகிடுச்சு...’’ என்று வேதனை பொங்கச் சொன்னார் அந்தப் பகுதியின் சமூக ஆர்வலர் ‘தேவை’ இயக்கத்தின் இளங்கோ. எங்கள் முன்னால் சென்ற பெண் ஒருவரிடம், ‘‘நிறைய பேர் வேலை செய்யிற இடம் எங்கிருக்கு?’’ என மெல்ல பேச்சுக் கொடுத்தோம்.

‘‘இப்போ, மூணு பாயிண்ட்ல குப்பை கொட்டுறாங்க. அதுக்குக் கொஞ்ச தூரம் நடக்கணும்’’ என்கிறவரிடம், ‘‘நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க?’’ என்றோம். ‘‘குப்பையில பிளாஸ்டிக் பொருட்கள பொறுக்குவேன். அதை எடைக்குப் போட்டா பணம் கிடைக்கும். நான் மூணு மாசமாத்தான் இங்க வேலைக்கு வர்றேன். உள்ள நிறைய பேர் இருக்காங்க. அவங்ககிட்ட கேளுங்க!’’ என்றவாறே நழுவிச் சென்றார்.

‘டர்ர்ர்...’ என அதிரடியாக வரும் வண்டிச் சத்தம். குப்பை லாரிகள் அணிவகுக்கின்றன. ஆங்காங்கே கண்காணிப்பு ஆட்கள் மாநகராட்சி சார்பில் நிறுத்தப்பட்டு லாரிகளுக்கு திசைகாட்டுகிறார்கள். ஒரு பெரிய குப்பை மேட்டில் நான்கைந்து பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அருகிலுள்ள எழில் நகர், கொருக்குப்பேட்டை ஏரியாக்களைச் சேர்ந்தவர்களாம்.

காலில் அழுக்கு ஷூவும், கையில் அழுக்குக் கையுறையும், உடலில் அழுக்குத் துணிகளையும் அணிந்திருந்தனர். குப்பைகளோடு குப்பைகளாக வரும் துணிகளையும் ஷூக்களையும் தேர்ந்தெடுத்து பாதுகாப்பு கவசமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதிலொருவர் துர்நாற்றத்தைப் பொருட்படுத்தாமல் சிறிய தூக்குவாளியில் பழைய கஞ்சியைக் குடித்துக் கொண்டிருந்தார்.

‘‘எனக்கு அஞ்சு பொண்ணு, ரெண்டு பையன். என்னை தனியா விட்டுட்டு எல்லாரும் அவங்க அவங்க வேலையைப் பார்க்கப் போயிட்டாங்க அதான் இந்தக் குப்பைமேட்டுக்கு வேலைக்கு வந்தேன். குடிநீர் கேன் டப்பா, மசாலா பொருட்களா பொறுக்குவேன்...’’ என்றவரிடம், ‘‘அதென்ன மசாலா?’’ என்றோம். ஒரு பிளாஸ்டிக் தேங்காய் எண்ணெய் டப்பாவை எடுத்துக் காட்டுகிறார்.

‘‘இந்த மாதிரி வர்ற பொருட்களைத்தான் நாங்க மசாலானு சொல்வோம். இதுமாதிரி பார்த்து பொறுக்குன்னா நல்ல விலை கிடைக்கும். ஒரு நாளைக்கு ரூ.300 சம்பாதிப்பேன்’’ என்றவரிடம் ‘‘எப்படி இந்த இடத்துல சாப்பிடுறீங்க?’’ எனக் கேட்டோம். ‘‘பழகிடுச்சு’’என்றார். அங்கிருந்து அரை கி.மீ நடக்கிறோம். ஒரு மேட்டுப் பகுதியில் லாரிகள் குப்பையைத் தட்டியபடி இருக்கின்றன. அதுவொரு பாயிண்ட்டாம். நுழைந்தோம்.

லாரி டிரைவரும், மண்டல வேலையாட்களும் நிற்கிறார்கள். ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் இரண்டு நபர்களை இங்கே வேலைக்கு வைத்திருக்கிறது மாநகராட்சி. அந்தப்பகுதி லாரிகள் வந்தால் வேகமாகச் சென்று பின் கதவைத் திறந்துவிடுவதும், பிறகு ‘போலாம் ரைட்’ என சிக்னல் கொடுப்பதும் இவர்களின் வேலை. 1994ல் இருந்து பணியாற்றும் ஒரு லாரி டிரைவர், ‘‘இதெல்லாம் பழகிடுச்சு... அதுக்குத்தானே, பாக்கு போடுறோம். சரக்கு அடிக்கிறோம்...’’ என்கிறார் அசால்ட்டாக.

அவரருகிலிருந்த லாரியின் பின்கதவைத் திறக்கும் நபர், ‘‘ஒரு நாளைக்கு 40 லாரிகள் வந்து போகும். காலைல 6 மணிக்கு வந்துடுவேன். சாயங்காலம் 7 மணி வரை வேலை...’’ எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் மண்டல லாரி ஒன்று வந்துவிட்டது. ‘‘கொஞ்சம் தள்ளி நில்லுங்க. சாம்பார் பாக்கெட் எல்லாம் கிடக்கும். கொட்டும் போது மேல தெறிச்சிடும்’’ எனச் சொல்லிவிட்டு வேகமாக ஓடுகிறார்.

அவரோடு குப்பை பொறுக்குபவர்களும் ஓடுகிறார்கள். அடுத்தடுத்து லாரிகள் குப்பைகளைக் கொட்டித் தீர்க்கின்றன. அதனைக் கொட்டும் போதே கிளறுகிறார்கள் குப்பை பொறுக்குபவர்கள். அவர்களோடு காக்கா கூட்டமும் தங்கள் ஐட்டங்களைக் குறி பார்க்கின்றன. மூன்று மசாலாப் பொருட்களை எடுத்துவிட்டு குப்பைகளோடு வந்த பாய் ஒன்றில் ஆசுவாசமாக அமர்ந்தார் பெண் ஒருவர்.

அவர் அருகில் நிற்கும் இன்னொரு பெண்மணி கணவரோடு சேர்ந்து குப்பை பொறுக்கிக் கொண்டிருக்கிறார். ‘‘நாங்க ரெண்டு பேருமா சேர்ந்துதான் இங்க வர்றோம். எங்களுக்கு ெரண்டு குழந்தைங்க. ஸ்கூலுக்கு அனுப்பிச்சிட்டு வந்துடுவோம். ஒரு நாளைக்கு இருநூறு முந்நூறு கிடைக்கும்....’’ என்கிறார் மெல்லிய குரலில்!

குப்பைக் கழிவில் நிற்கும் கூட்டத்திலிருந்து ஆரவாரம். எட்டிப்பார்த்தால், குப்பைக்குள்ளிருந்து பித்தளை விளக்கை எடுக்கிறார் ஒருவர். இன்று அவருக்கு யோகம்தான். இந்தக் களத்தில் இளைஞர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். ‘‘எனக்கு 34 வயசாகுது. பதினேழு வருஷமா இங்க வர்றேன். காலைல வந்தா ஒரு நாளைக்கு எண்ணூறு ரூபாய் வரை பார்த்திடுவேன்...’’ என்கிறவரிடம், ‘‘அதிகபட்சம் எவ்வளவு கிடைக்கும்?’’ என்றோம்.

‘‘சில நேரம் தங்கம், வெள்ளி கிடைக்கும். அன்னைக்கு செமயா இருக்கும். இரும்பு, செம்பு கிடைச்சாலும் நல்ல விலைக்குப் போகும். ஒரு தடவை ரூ.15 ஆயிரம் ஒரே கட்டா கிடைச்சிருக்கு. சிலர் பைக்குள்ள பணம் இருக்குறது தெரியாம குப்பையில போட்டிருப்பாங்க. அந்த மாதிரி வர்றது இது. ரொம்ப நேரம் வேலை பார்த்தா நல்ல அமவுண்ட் நிச்சயம்...’’ என்கிறார் அவர் நம்பிக்கையாக!

ஒவ்வொரு இடமாகப் போய்விட்டு அங்கிருந்து வெளியேறும் நேரம் மூன்று பேர் முதுகில் கேன்களைப் பொருத்தி கொசு மருந்து போல் குப்பைகளில் மருந்து தெளித்துக் கொண்டிருந்தார்கள். ‘‘ராவா வர்ற கழிவுகள் காய ஆறு மாசமாகும். இந்த மருந்து தெளிச்சா ஒன்றரை மாசத்துல காயஞ்சிடும். ஓவரா கப் அடிக்காது...’’

கொஞ்சம் ஆசுவாசமாக எதிரிலுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்குச் சென்றோம். ‘‘இது கொடுங்கையூர் இல்ல. கொடுமையூர்...’’ எனக் கொதிக்கிறார்கள் மக்கள். ‘‘இதுல வீட்டுக் குப்பைகள் மட்டுமல்ல... செத்துப் போன நாய், மாடுனு எல்லாம் வரும். ஆஸ்பத்திரி கழிவுகள் வேற. இதனால, மூச்சுவிட முடியலை. கொசுத் தொல்லையும் அதிகம். காய்ச்சல், மூச்சுத்திணறல், தோல்நோய், அலர்ஜி, ஆஸ்துமா, கேன்சர்னு நிறைய பேருக்கு இருக்கு.

சில நேரங்கள்ல குப்பைகள்ல இருக்கிற இரும்பு, செம்புக்காக தீ வச்சிடுவாங்க. அப்போ, புகை மண்டலமாகி கப் அடிக்கும்...’’ எனப் பிரச்னைகளை அடுக்குகிறார்கள். அங்கிருந்து எழில் நகரின் கடைசிப் பகுதியில் இருக்கும் கால்வாய் பக்கம் போனோம். அதைத் தாண்டி குப்பை மேடுகள். அந்தக் குப்பை மேட்டிற்குள் குடிசைகள் போட்டு 21 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் தொழில் குப்பை பொறுக்குவது. இந்த இடத்தின் பெயர் ‘பணக்கார நகர்!’      

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

கொடுங்கையூர் டேட்டா

* சுமார் 350 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கிறது இந்தக் குப்பைக் கிடங்கு.
* 1986ல் முதல்முதலாக மாட்டு வண்டிகளில் வந்து குப்பைகள் கொட்டப்பட்டன.
* மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், திரு.வி.க.நகர் ஆகிய ஆறு மண்டலங்களிலிருந்து தினமும் 28 லட்சம் கிலோ குப்பைகளும், 5 லட்சம் கிலோ கட்டிடக் கழிவுகளும் இங்கு கொட்டப்படுகின்றன.
* குப்பைக் கிடங்யகைத் தொடங்கும் போது 25 ஆண்டுகள் செயல்படுத்தலாம் என்றே தெரிவித்துள்ளது மாநகராட்சி. அந்தக் காலம் முடிந்தும் செயல்பட்டதால் ஐகோர்ட்டும், பசுமை தீர்ப்பாயமும் மூடச் சொல்லி உத்தரவிட்டன.
* 2015ம் வருடத்தோடு இதை மூடிவிடுவதாக அறிவித்து, மாற்று இடமாக மீஞ்சூரைத் தேர்வு செய்தனர். ஆனால், அங்கு போராட்டம் வெடிக்க, தொடர்ந்து இங்கேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கிடங்கின் வளர்ச்சிக்காக 48 லட்சம் ரூபாயும் மாநகராட்சி ஒதுக்கியது.
* 2013ம் ஆண்டு வார்டு தோறும் வீடுகளில் பிளாஸ்டிக் குப்பையைச் சேகரித்துக் கொடுத்தால், குலுக்கல் முறையில் அரை கிராம் தங்கம் மற்றும் கைக்கடிகாரம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது. ஆனால், அதை சரியாகச் செயல்படுத்தவில்லை
- எனப் பட்டியலிடுகிறார் இளங்கோ.

என்ன தீர்வு?

‘‘இன்றைய சூழல்ல யாரையும் பாதிக்காம குப்பையைக் கொட்டவே முடியாது. அரசு, ‘மக்குற குப்பைகளை மக்க வைக்கணும். மத்த குப்பைகளைக் குறைக்கணும்’னு சொல்லுது. இதை யார் கேட்குறா? இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுறாங்க. மக்கும் குப்பை, மக்காத குப்பைனு வீடுகள்ல தரம் பிரிச்சிட்டாலே குப்பையின் எடையை 80% குறைச்சிடலாம். மக்குற குப்பைதான் நம்ம கிட்ட அதிகம். அதனால, மக்கள் மனங்கள்லதான் எல்லாமே இருக்கு...’’ என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.