என்ன கொடுமை இது!



ரீடர்ஸ் வாய்ஸ்

தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மதிப்புமிக்க 16 பக்கங்களை ஒதுக்கிய ‘குங்கும’த்தின் உள்ளத்திற்கு தலைவணங்குகிறோம். தடுப்பூசி குறித்து அக்குவேறு ஆணிவேறாக பயனுள்ள விவரங்கள். ஆழமான சிந்தனைக்கு சாம்பிள். எட்வர்ட் தன் மகனுக்கே கிருமியைச் செலுத்திய ஆர்வமும் அர்ப்பணிப்பும்தான் நாம் நோயின்றி வாழவும், உலகமே அவரைக் கொண்டாடவும் காரணம்.
- லட்சுமிபுத்திரன், விழுப்புரம். நடராஜன், சிதம்பரம். மயிலை கோபி, அசோக்நகர். சண்முகராஜ், திருவொற்றியூர். மனோகர், கோவை.

என் உடல், என் உரிமை என நடிகைகள் உணர்வை சொன்னது சரி. அதற்கு இந்த மாதிரி படங்கள்தான் உமக்கு கிடைத்ததா? பெண்களின் உடலில் வளைவு நெளிவுகள் தெரிய ஆடை அணியக்கூடாது என்று சொல்லிவிட்டு ஆபத்து விளைவிக்கும் வளைவு நெளிவு படங்களைப் போட்டிருக்கிறீரே! என்ன கொடுமை சார் இது! பெண்கள் தம் அடையாளங்களை வெட்டவெளிச்சமாக்குவோம் என்பது சுத்த பைத்தியக்காரத்தனம்!
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை. சண்முகராஜ், சென்னை - 19. மாணிக்கவாசகம், கும்பகோணம்.

டுவிட்டர்ல பணத்த அள்ளலாம்னு படிச்சுப் பார்த்தா சுத்த பிராடுத்தனமா இல்ல இருக்கு. நான் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன். ஜூட்.
- பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்.

அம்மையால் பார்வையிழந்த சூர்யகலா, நா.பாவின் மகள் மீராவின் தூண்டுதலால் தாகூரின் ‘கீதாஞ்சலி’ கவிதைகளை கற்றுத் தேர்ந்தது சாதனைதான். அவரின் ஐஏஎஸ் கனவு பலிக்க வாழ்த்துவோம். கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதா உபதேசம் செய்ததுபோல மீரா, சூர்யகலாவுக்கு கீதாஞ்சலியைச் சொல்லி, தேர்வும் பெறச்செய்த கண்கண்ட தெய்வம் என்றே கூறலாம். அசத்திடும் சூர்யகலா பிரமிக்க வைக்கிறார். 
- மனோகர், கோவை. லட்சுமி நாராயணன், வடலூர். த.சத்தியநாராயணன், சென்னை - 72.

மரபுப்பயிர்களின் காவலனாகத் திகழும் டெபல் டெப் போன்றவர்களின் கைகளில்தான் எதிர்கால ஆரோக்கிய உணவின் சத்தே அடங்கியுள்ளது. இக்கட்டுரை ஒரு சமய சஞ்சீவி. இயற்கை உணவுகள் குறித்த ஆர்வம் அதிகரித்துவரும் சமயம் கவனம் ஈர்க்கும் கட்டுரை இது. 
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம். இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி. 

இத்தனை நாட்களாக ரங்கநாதன் தெருவில் இரட்டியப்பட்டி ஸ்வாமிகள் கோயிலை பார்த்ததேயில்லை. அண்ணாந்து பார்க்க வைத்த ‘குங்கும’த்துக்கு ஆயிரம் நன்றிகள். நெருக்கடி நிறைந்த தெரு குறித்த அறியாத தகவல்கள் அநேகம். 400 மீ.நீள தெருவில் தினமும் 20 ஆயிரம் பேரும், பண்டிகையில் லட்சம் பேரும் வருவார்கள் என்ற தகவல், அங்கேயே சென்று வந்த அனுபவத்தைக்கொடுத்தது.
- சிவமைந்தன், சென்னை - 78. என்.அத்விக், சென்னை - 83. லட்சுமிநாராயணன், வடலூர். ராமகண்ணன், நெல்லை.

பிரசுரமான எட்டு ஜோக்குகளும் அருமை. அத்தி பூத்தாற்போன்ற ஜோக்குகளை தொடர்ந்து வெளியிட்டு வாசகர்களை சிரிக்கவைக்கலாமே!
- லெ.நா.சிவகுமார், சென்னை - 33.