அப்பா வாங்கித் தருகிற காரைவிட நானே சொந்தமா வாங்கற சைக்கிளைத்தான் பெருமையா நினைக்கறேன்!



அழுத்தமாக சொல்கிறார் கபிலன் வைரமுத்து

-நா.கதிர்வேலன்

கபிலன் வைரமுத்து அடுத்த ஆட்டத்திற்கு ரெடி! அவர் இப்போ திரைக்கதை வசனத்திற்கு ப்ரமோஷன் ஆகியிருக்கிறார். ‘கவண்’ திரைக்கதையில் முக்கியப்பங்கு, வசனங்கள், அஜித்தின் ‘விவேகம்’ என கபிலனின் காட்டில் அடைமழை! அப்படியே அவர் அப்பா மாதிரி. யோசிக்காமல் ஆனால் நம்மை யோசிக்க வைப்பது போல பேசுகிறார்.

‘‘‘குங்கும’த்தில என் முதல் கவிதை வந்து இருபது வருஷம் ஆச்சு. அந்தக் கவிதையில ‘உன் திசைக்கு நீதான் சூரியன்’னு ஒரு வரி வரும். என்னுடைய திசை தேடுற பயணமாக இந்த இருபது வருஷம் இருந்திருக்கு. சாப்ட்வேர் எஞ்சினியர், கல்லூரிப் பேராசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்னு வெவ்வேறு பணிகளில் இருந்தாலும் எழுத்துங்கிற நெருப்பு எப்பவும் எனக்குள்ள எரிஞ்சுகிட்டே இருந்திருக்கு. இப்பதான் எழுத்தை முழுநேரப் பணியா மாத்தியிருக்கேன். கதை, திரைக்கதை, வசனம் எழுத ஆரம்பிச்சதும் அந்த மாற்றத்தோட விளைவுதான்...’’ என்கிறார் கபிலன்.

கே.வி. ஆனந்தோடு சந்திப்பு எப்படி...
எந்தப் புத்தகம் வெளியிட்டாலும் அதை சில மூத்த கலைஞர்கள்கிட்டே கொடுத்து அவங்க விமர்சனம் பெறுவது என்னோட வழக்கம். அதே மாதிரி என்னோட ‘மெய்நகரி’ நாவலை கே.வி.ஆனந்திடம் கொடுத்தேன். அதுக்கு முன்னாடி ‘அனேகன்’ படத்துல ‘தெய்வங்கள் இங்கே...’ பாட்டு எழுதினதுதான் அவருடனான என்னோட முதல் தொழில் உறவு. ‘மெய்நகரி’யை அவர் ரசிச்சிருக்கார்.

என்னால சினிமாவில் ஒரு எழுத்தாளராக பங்களிக்க முடியும்னு அவருக்கு நம்பிக்கை வந்திடுச்சு. ‘மெய்நகரி’தான் ‘கவண்’ படத்தின் தொடக்கப் புள்ளி. இந்தக் களத்தில் ஒரு படம் பண்ணலாம்னு அவருக்குத் தோன்றிவிட்டது. என்னையும் எழுத்தாளராகச் சேர்த்துக் கொண்டார். நாவலின் ஒருசில அம்சங்களை படத்திற்கு பயன்படுத்தியிருக்கோம்.

கே.வி. ஆனந்தோடு வெகு காலமா பயணம் செய்கிற சுபா என்ன சொன்னாங்க..?
மூத்த எழுத்தாளர்கள் வளரும் எழுத்தாளரை அரவணைக்கிறது பெரிய பெருந்தன்மை. ரொம்ப மென்மையானவர்கள். என் வயதிற்குரிய அதீத ஆர்வத்தோட பேசும்போது அவங்க வயசுக்குரிய நிதானத்தோடு விவாதம் செய்வாங்க. ஒவ்வொரு காட்சியையும் நுட்பமா அணுகுகிற அவங்க அணுகுமுறை எனக்குப் படிப்பினை.

டி.ஆருக்கு வசனம் எழுதுவது கஷ்டமாச்சே?
கலைஞர் ‘மனோகரா’விலும், ‘பராசக்தி’யிலும் எழுதிய மாதிரி சினிமாவில் வலிமையான வசனங்கள் எழுதணும்னு எனக்குள் ஒரு கனவு உண்டு. அதுக்கு ‘கவண்’ ஒரு தொடக்கம். படத்தின் மூன்று முக்கிய கதாபாத்திரங்களான விஜய் சேதுபதி, டி.ஆர், விக்ராந்த் ஆகியோர் வெவ்வேறு வகை. இவங்களுக்கு வசனம் எழுதினது மறக்க முடியாத அனுபவம். அதுவும் டி.ஆர்.க்கு அவர் பாணியிலே வசனம் எழுதினது பெரிய சவாலா இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் வசனம் பேசி நடிக்கும்போது கை தட்டாத ஆளே இல்லை.

உங்கள் சினிமா முயற்சியில் பெற்றோர்களின் பங்கு என்ன?
என்னுடைய முதல் புத்தகத்திற்கு அப்பாவும் அம்மாவும் எழுதின முன்னுரை இன்றும் மனசில பசுமையா இருக்கு. சோர்வாக இருக்கிற நேரங்களில் அந்த முன்னுரையை நினைத்துப் பார்ப்பேன். எழுத்துக்கு உற்சாகம் அவங்ககிட்டே நிறைய கிடைக்கும். என்னுடைய பாதையை நானே உருவாக்க முடியும்னு நம்பிக்கை அவங்களுக்கு நிறையவே இருக்கு.

கல்லூரி, வேலைவாய்ப்புன்னு என்னோட ஒவ்வொரு விஷயத்தையும், என்னுடைய சுய உழைப்பால் மட்டுமே அடைஞ்சிருக்கேன். அதுதான் நிலைத்து நிற்கும்னு நம்புகிறேன். அவர்கள் எனக்கு ஒரு கார் வாங்கித் தருவதைவிட நானே ெசாந்தமாக வாங்குகிற ஒரு சைக்கிளையே பெரிதாக நினைக்கிறேன். அப்பாவுக்கு இன்னிக்கு உலகம் முழுக்க விசிறிகள் இருக்காங்க. ஆனால், ஒரு மின்விசிறி கூட இல்லாத ஒரு வாடகை வீட்டிலதான் அவங்களோட வாழ்க்கை தொடங்கியது. அவங்களோட வாழ்க்கையே எனக்கு உணர்வுபூர்வமான பாடம்.

உங்கள் மனைவி உங்க கவிதைகளை ரசிக்கிறார்களா?
என் மனைவி ரம்யா ஒரு மகப்பேறு மருத்துவர். அவங்களோட உலகம் வேற. அரக்கப் பரக்க உழைக்கிற இடம் அவங்களோடது. அதற்கு நடுவிலும் என்னோட எழுத்தையும் படிப்பாங்க. அவங்க பார்வை எப்போதும் ெவகுஜனப் பார்வை. அவங்களுக்கு ஒரு பாட்டோ கவிதையோ பிடித்துவிட்டது என்றால் அது எல்லோருக்கும் பிடிக்கும். அவங்களுக்கு என் எழுத்தை பிடிக்க வைக்க கடுமையாக முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

‘கவண்’ எப்படி இருப்பான்?
பள்ளி மாணவர்களை எதுவும் சொல்லாமல் சுற்றுலா கூட்டிட்டுப் போனால் அவங்க அதை நன்றாக அனுபவிப்பாங்க. அதுவே பிக்னிக் முடிந்ததும் எல்லோரும் உங்கள் அனுபவம் பத்தி ஒரு கட்டுரை எழுதணும்னு முன்கூட்டியே சொல்லிட்டு கூட்டிக் கொண்டு போனால் எல்லோருடைய மனசிலும் கட்டுரை பத்தின கவலைதான் இருக்கும். சுற்றுலாவை அனுபவிக்க முடியாது. அதே நிலைமையை இன்னிக்கு சினிமா தியேட்டரில் பார்க்க முடியுது.

படம் பார்த்திட்டு உடனே சோஷியல் மீடியாவில் நாலு வரி விமர்சனம் எழுதணும்ங்கிற ஒரு முன் முடிவோட பலர் படம் பார்க்கிறாங்க. இந்த முன்முடிவு அவங்களை படத்தை ரசிக்க விடாமல் தடுக்கிறது. விமர்சகரை வெளியே விட்டுட்டு ரசிகரா மட்டும் தியேட்டருக்குள் போனால் எந்த ஒரு கலை படைப்பையும் முழுமையாக ரசிக்க முடியும். அந்த கண்ணோட்டத்தில் பார்த்திங்கன்னா ‘கவண்’ நிச்சயம்
கவர்வான்.