COFFEE TABLE



-குங்குமம் டீம்

சைலன்ட் கார்னர்


சொல்வது நிஜம்மணா

[சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2 (8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை - 600 017. விலை ரூ.166/- தொடர்புக்கு: 72000 50073) குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர் மணாவின் நேரடி ஊடக அனுபவங்கள். பத்திரிகையாளர் பணி, அதுவும் புலனாய்வு பத்திரிகையாளர் பணி என்பது எளிதல்ல. சாமர்த்தியமும், தேடலும், உண்மையான புரிந்துணர்வும் தேவைப்படுகிற இடம் இது.

மணா தமிழகமெங்கும் சுற்றித் திரிந்து ஆய்வு செய்து, களத்தில் இறங்கி செய்த பணிகள் மற்றும் அவரது பத்திரிகை அனுபவங்கள் என பறந்து விரிகிறது இந்தப் புத்தகம். மணா இதில் எடுத்துக் கொள்ளாத விஷயம் இல்லை. பகிர்ந்து கொள்கிற உண்மைகள் அதிகம். சமூக அக்கறையை தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் இதெல்லாம் சாத்தியமே இல்லை.

செங்கல் சூளைகளில் வதைபடுகிற சிறுவர்களை, பெண்களைப் பற்றிச் சொல்லும்போது ஆழமான துக்கம் அடியோட்டமாக இருக்கிறது. தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், சிவாஜி, ப.சிங்காரம், ஜெயகாந்தன், எம்.எஸ்.சுப்புலட்சுமி என மணா செய்தி சொல்லுகிற பிரபலங்கள் நிறைய! மணாவின் அவதானிப்புகள், எழுதிச் செல்கிற பாங்கு எல்லாமே வசீகரம்! அதே நேரம் வெடித்துச் சிதறும் கோபத்திலும் கட்டுரைகள் இருக்கின்றன. புத்தகத்தை படித்து முடித்துவிட்டு யோசிக்க வைப்பது பெரும் காரியம். அதை மணா சாதித்திருக்கிறார்.

பத்து லட்சம் ஃபாலோயர்ஸ்!

டோலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோயின் ரகுல் ப்ரீத்சிங் இப்போது ஏகப்பட்ட குஷியில் மிதக்கிறார். ‘‘Feeling blessed... life is good... thank you so much for all the love...’’ என நெகிழ்வும் மகிழ்வுமாக ட்விட்டியிருக்கிறார். ரகுலை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தொட்டிருப்பதுதான் இதன் காரணம். ரகுல், இனிமேல் food, fitness, selfie என குல்ஃபி ட்வீட்டுகளை முழு உற்சாகத்தோடு பதிவிடுவார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ரீடிங் கார்னர்

பூனைகள் நகரம் ஹாருகி முரகாமி / தமிழில்: ஜி.குப்புசாமி (வம்சி புக்ஸ், 19, டி.எம். சாரோன், திருவண்ணாமலை - 606 601. விலை ரூ.250. தொடர்புக்கு: 94458 70995) சிறுகதைகள் என்று சொல்லிக்கொண்டு வருகிற நெடுங்கதைகள். பெரிதான கதைக்களன், உரையாடல்கள் என ஏதுமில்லை. போகிற போக்கில் ஒரு காதலுறவு கீறப்பட்டு மென்மையாக ஏதேதோ நிகழ்கிறது.

நினைவுகளும், விருப்பங்களும், பகிர்வுமாக பெருகச் செய்கிறது முரகாமியின் எழுத்து. அலுப்பூட்டும் விவாதங்கள், விசாரணைகள் என ஏதுமில்லை. அதிக கவனக் குறிப்பு தேவைப்படும் நூலும் அல்ல. ஆனாலும் முக்கியமான படைப்புத்திறனுக்கு இலக்காகிறது. இந்தக் கதைகளின் எல்லை ஜப்பானுக்குள்ளே இருந்தாலும் எல்லாருக்குமான மன விசாலங்கள் காணக் கிடைக்கின்றன. தனிமனித வாழ்க்கையின் சிடுக்குகள் களையப்படுகின்றன.

எளிமையும், கனமும் சேர்ந்து காணக்கிடைப்பதுதான் கலையின் அபூர்வ மகத்துவம். அது முரகாமிக்கு கைவந்து உலகின் முக்கிய எழுத்தாளராக்கிவிட்டது. ஹாருகி முரகாமியை மொழிபெயர்ப்பது ஜி.குப்புசாமிக்கு சுலபமான வேலைதான். காரணம், அவருடைய தொகுதிகளை ஏற்கனவே தொடர்ந்து மொழிபெயர்த்ததில் முரகாமியின் கைவண்ணம் தெரிய வந்திருக்கலாம். அல்லாமல் இவ்வளவு லாவகம் வாய்த்திருக்க வாய்ப்பில்லை.

ஜேஸன் டெருலோவின் அடுத்த அதிரடி!

அமெரிக்க  பாடகர் டான்ஸர் ஜேஸன் டெருலோவின் லேட்டஸ்ட் வீடியோ ஆல்பம் ‘swella’ யூ டியூப்பில் வைரலாகியுள்ளது. ‘Wiggle’, ‘Talk Dirty’, ‘In My Head’, ‘Whatcha Say’ ஆல்பங்களைத் தொடர்ந்து ‘ஸ்வெல்லல்லோ’ பாடல் ரசிகர்களிடையே லைக்குகளை அள்ளுகிறது. யூ டியூப்பில் 61 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ள ஜேஸனின் இந்த  ஆல்பத்தை ஒரு கோடிப் பேருக்கும் மேல் பார்த்துள்ளனர். இரண்டரை லட்சம் பேர் லைக்கிட்டுள்ளனர். ஆல்பத்தில் டூபீஸ் கேர்ள்ஸ்களின் ஓவர் டோஸ் குத்தாட்டத்துக்கு 50 ஆயிரம் டிஸ்லைக்குகளும் தெறிக்கின்றன.

பின்னடைவு!

இந்தியா மகிழ்ச்சியில் பின்தங்கியிருப்பதைப் போல மனித ஆயுள், கல்வி, வருமானம் போன்ற மனித வளர்ச்சியிலும் கடைசி இடங்களில்தான் இருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை ஐ.நா.சபையின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மனித வளர்ச்சி சம்பந்தமாக 188 நாடுகளில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது.

இதில் இந்தியா 131வது இடத்தில் இருப்பதாகவும், ‘இது கடந்த ஆண்டைவிட ஓர் இடம் பின்தங்கியிருப்பதாக’வும் ஐ.நா சொல்கிறது. மட்டுமல்ல. ‘மிகச் சிறிய நாடுகளான இலங்கை மற்றும் மாலத்தீவைவிட இந்தியாவின் மனித வளர்ச்சி சுமாராகத்தான் இருக்கிறது’ என்றும் கரும்புள்ளி வைக்கிறது. இன்னொரு பக்கம் ‘இந்தியாவின் உண்மையான மனித வளர்ச்சியை சரியாக ஐ.நா.ஆய்வு செய்யவில்லை’ என சில வல்லுனர்கள் சாடியிருக்கிறார்கள்.