மங்களகரமான பெயர் எப்படி ஹாரருக்கு பொருந்தும்?



-நா.கதிர்வேலன்

‘‘‘தம்பி வெட்டோத்தி சுந்தரத்’திற்கு நல்ல பெயர் கிடைச்சது. கேரளாவிற்கு நெருங்கி பக்கத்தில் போய் கதையைச் சொன்னது தமிழ் சினிமாவிற்கு அப்போ புதுசா இருந்தது. அந்த நல்ல பெயரை ‘சவுகார்பேட்டை’யில் தக்க வைக்கலை. இப்ப கதையிலிருந்த குற்றம் குறை எல்லாம் நீக்கி, நல்ல கதையை மட்டுமே நம்பி செய்திருக்கிற படம்தான் இந்தப் ‘பொட்டு’.

எனக்கென்னவோ நம்மோட இருக்கிறவங்க மறைகிறபோது அவங்க நம்மை விட்டு போறதில்லை. எங்கேயோ நின்னு நம்மை பார்த்திட்டு இருக்காங்கன்னு நம்புறேன். புராணத்தை புரட்டினாலும், யாரும் பிரபஞ்சத்தை விட்டு விடுபட்டு போக வாய்ப்பே இல்லைன்னு தோணுது. அப்படி இருக்கிறதால்தான் நாம் பத்திரமாக இருக்கிறோம்னு நினைக்கிறேன். இதையெல்லாம் ஆழமாக பார்த்து எடுத்திருக்கிற படம்தான் ‘பொட்டு’. நிறைய உள்ளுணர்வோடு நான் செய்த படமாகவும் இதை முன்னெடுத்து வைக்கிறேன்...’’ யதார்த்தமாகப் பேசுகிறார் இயக்குநர் வடிவுடையான்.

டிரைலர் பயமுறுத்துகிறது. ஏகப்பட்ட சஸ்பென்ஸ் வச்சிருக்கீங்க போல...
எந்த பயமுறுத்தலுக்கும் சரியான இடங்கள் இருக்கு. எனக்குத் தெரிந்த ரிடையர்ட் ஆன ராணுவ வீரரின் வாழக்கையின் சில அம்சங்களை வைச்சு கதை எழுதியிருக்கேன். கற்பனைக்கு இருக்கிற அங்கீகாரத்தைவிட உண்மைக்கு எப்பவும் ஆயுசு அதிகம். மக்களால் இன்னும் அதிக தூரம் அதில் ஒன்ற முடியும். இருட்டும், பயமுறுத்தலும் மட்டும் விஷயமில்லை.

ஆழமான கதையும் இருக்கிறதுதான் இதில் விசேஷம். இதுவரைக்கும் ஹாரர்னு ெசால்லி பார்த்திருக்கிற அம்சங்களிலிருந்து நிச்சயம் வித்தியாசப்பட்டு செய்திருக்கேன். நினைவு தெரிஞ்ச வரைக்கும் எத்தனையோ ஹாரர் ஃபில்ம் பார்த்திருக்கோம். வெவ்வேறு காலம் தொட்டு இருக்கிற முன்னேற்றமான படங்கள் உண்டு. இறுக்கிச் சொன்ன கதையில் ரொம்பவும் நம்பகமாக ஹாரர் சொல்லியிருக்கேன். எனக்கு அவ்வளவு இதமா பதமா ஒத்துழைப்பு தந்த புரடியூசர் ஜான் மேக்ஸுக்கு என் வந்தனம். அவருக்கு ‘மைனா’, ‘சாட்டை’னு நல்ல படங்களைத் தயாரித்த அனுபவம் உண்டு.

‘பரத்’ கெட்டப் ஒவ்வொன்ணும் வேற வேற விதங்களில் இருக்கு!
பார்த்தீங்களா... எப்படியிருக்கு! பரத் எங்களுக்கு கிடைச்சதும் அவரை வித்தியாசமான பின்னணியில் கொண்டு வர நினைச்சேன். அவருக்கே இந்தக் கதை புதுசு. இப்படிப்பட்ட படங்களில் இதுக்கு முன்னாடி அவர் நடிச்சதில்லை. எப்படிப்பட்ட ெகட்டப்புக்கும் ஆள் ரெடியாக இருந்தார். பெரிய மீசை வைத்து, விரிந்து பரந்த மார்பு தெரியும்படி வந்து நிக்கும்போது எங்களுக்கே அவர் புதுசா இருந்தார்.

ஒவ்வொரு படமும் நடிகனுக்கு வித்தியாசம் கொடுக்கிற மாதிரிதான் அமையணும். உலக சினிமாவை பாக்கெட் மணியிலே பார்க்க முடிகிறபோது, வித்தியாசப்படுத்தினால் மட்டுமே இனிமேல் இங்கே நீடிக்கலாம். அதை நடிப்பிலும் பின்பற்றுகிறார் பரத். சளைக்காமல் ஒவ்வொரு கெட்டப்பிற்கும் அவர் தந்தது பெரும் உழைப்பு;

உழைக்கிறதில் ஒரு த்ரில் இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்வதில் அவருக்கு நிகர் அவர்தான். நடிப்பு வாழ்க்கையில் மேடுபள்ளங்கள் பார்த்து வந்தாலும் எல்ேலாருக்கும் பிடிக்கிற மாதிரி நேசிப்போடு இருக்கிற மனுஷன். அவருக்கான நல்ல இடங்கள் படத்தில் நிறையவே இருக்கு. இந்தப் படத்தில் நடித்தவர்கள் எல்லோருக்குமே படத்தில இடம் பெற்றதற்காக சந்தோசப்பட காரணங்கள் இருக்கு.

நமீதா, சிருஷ்டி டாங்கே, இனியானு இளமை அள்ளுதே!
கண்ணு வைக்காதீங்க பிரதர்! அட, அப்படியும் சொல்ல முடியாது. நீங்க எல்லாம் கண்ணு வைச்சால்தானே எங்களுக்கு நல்லது. நமீதாவை கவர்ச்சியில் மூழ்கடிச்சுத்தான் இதுவரை பார்த்திருக்கோம். அப்படிப்பட்டவங்களை கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாத்திக் காட்டியிருக்கேன். அவங்களும் அப்படியே அழகா மாறிக் காட்டினாங்க. 

இனியாவிற்கும் நல்ல வேடம். சிருஷ்டி டாங்கேவிற்கும் படத்தில் குறிப்பிடத்தக்க இடம் இருக்கு. இவ்வளவு பொண்ணுகளை வைச்சுக்கிட்டு, பிரச்னையில்லாமல் படம் எடுக்க முடிஞ்சதான்னு நீங்க அடுத்த கேள்வியை வீச ரெடியாக இருப்பீங்க... அதற்கு முன்னால பதில் சொல்லிவிடுகிறேன். இப்ப இருக்கிற பொண்ணுங்கள் ரொம்ப புத்திசாலிகள்.

நமக்கு கொடுத்த இடத்தில் நின்னு விளையாட வழிகள் என்னென்ன இருக்கு என்பதில் மட்டுமே உழைப்பைக் காட்ட ரெடியாக இருக்காங்க, ஹீரோக்கள் மட்டுமில்லை, ஹீரோயின்களும் நேசமாக, பாசமா பழகிக் கொண்டிருக்கிற இடம் வந்தாச்சு. எல்லா கேரக்டரும் ஒவ்வொரு இடங்களில் டாமினேட் செய்ய அனுமதிப்பதால், எல்லோருக்கும் திருப்தி வந்து விடுகிறது.

இசை பற்றிச் சொல்லுங்க...
அம்ரிஷ். ஜெயசித்ராவின் மகன். இசையின் நுணுக்கமான இடங்களை ஈஸியாக கடந்து போகிறார். ‘அடி போடி சண்டாளி’ன்னு ஒரு பாட்டு இருக்கு. பின்னியெடுக்கும். இம்மாதிரி படங்களுக்குன்னு ஒரு சட்ட திட்டம் இருக்கில்லையா, அதற்கு குறிப்பாக பின்னணியில் அவ்வளவு விஷயங்கள் இருக்கு. அருமையாகச் செய்திருக்கார். ஒளிப்பதிவில் கண்ணில் வைத்து ஏந்துகிற மாதிரியும், பயமுறுத்துவதிலும் நின்று விளையாடுறார் இனியன். ‘பொட்டு’ன்னா மங்களம்தான். அதை எப்படி ஒரு ஹாரர் படத்திற்கு பயன்படுத்தியிருக்கேன் என்பதுதான் அல்ட்டிமேட் விஷயம்!               

Behind the scenes

* தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
* பரத் பெண்ணாகவும் நடித்திருக்கிறார்.
* நமீதா பிளாக் மேஜிக் செய்கிற பெண்ணாக நடிக்கிறார்.
* படத்தின் பெரிய பகுதி ஒன்றை கொல்லி மலையில் 2000 அடி உயரத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.
* மலேசியாவில் பாடல்கள் வெளியீடு நடந்தது.