ஆண்களின் கவனத்துக்கு



கவிதை வனம்

நெரிசலான பேருந்துப் பயணத்தில்
இடித்துக்கொண்டே நின்ற சிறுமியை
திட்டுவதற்காய்த் திரும்புகையில்
பின்னால் நிற்பவனைப் பார்த்து
அவள் மருண்டு நிற்பதைக் கண்டபோது
நொறுங்கிப்போனது

உன் மீதான அத்தனை நம்பிக்கையும்
முன்னால் நிற்கும் கணவனுக்கும்
பின்னால் நிற்பவனின் கரங்களுக்குமிடையில்
பயந்து தவித்த பெண்ணைப் பார்த்தபோது
உடைந்துபோனது
உன் மீதான அத்தனை எதிர்பார்ப்பும்
உன் அம்மா வயசுப்பா எனக்கு என்று
பின்னாலிருப்பவனைப் பார்த்து
அந்த நடு இரவில் அழுத பெண்மணியைப் பார்த்தபோது
மடிந்துபோனது
உன் மீதான அத்தனை மரியாதையையும்
அந்த பயம்
அந்த தவிப்பு
அந்த அழுகை
மாற்றவில்லையெனில்
எது மாற்றிவிடக்கூடும் உன்னை?

- சத்யா வேலுச்சாமி

நினைவெனும் அரளிவிதை

நேசத்துடன் பரிசளிக்கப்பட்ட
நினைவெனும் அரளிவிதைகளை
என்னுள் விதைக்கிறேன் சிறுமுறுவலுடன்
உதிரம் உறிஞ்சி
வேர்கள் நரம்புகளுடன் பிணைந்து
வளரத்தொடங்கியதும்
முதல் பூ தலையில் மலர்கிறது
புத்தனாகி பின் அரளிச் செடியானேன்
இளஞ்சிவப்பு மஞ்சள் வெள்ளையென
பல வண்ணங்களில் பூக்கள்
பூத்துக்குலுங்குகின்றன உன் முற்றத்தில்.

- பழ.மணிவண்ணன்